மழைக்காதல் (A cute love in rain)


காலண்டரில் தேதி கிழிக்க மறந்து பலநாள் ஆன ஏதோ ஒருநாள். நாள் தேதி கிழமை அறியா கல்லூரிப்பருவம். படியச்சீவாத தலை, முகமெங்கும் சிறு தாடி, ஒரு வாரமாய் உடுத்தும் அதே லுங்கி. காலை விடிவது என்னவோ ஒன்பது மணிக்கு தான். அன்றும் அதே போல் தான். ஆனால் வாழ்வின் சுகமான திருப்பம் காண மனதில் ஏதோ ஒரு ஆயத்தத்துடன்.

அறை நண்பர்களுடன் சாலையோரத்தில். உடலையும் மனத்தையும் சுறுசுறுப்பாக்கிக் கொள்ள ஒரு டீ. வானம் சிறு தூரல்களுடன் விசும்பிக்கொண்டிருக்கும் அந்த வேளையில், அன்று அந்த டீயின் சூடு உடல் குளிருக்கு இதமானதாக இருந்தது. நேற்றிரவு முடிந்த கிரிக்கெட் பற்றிய விவாதம், என் நண்பர்களுக்குள். அனால் என்றும் கலகலப்பாய் கலாய்க்கும் எனக்குள் அன்று ஏனோ ஒரு மௌனம், மனதில் சிறு தவிப்பு. தினமும் அந்த நேரத்தில் என்னைக் கடந்து செல்லும் பேருந்து, என்னைத் தவிப்பிற்கு உள்ளாக்கும் என் எண்ணும் அளவுக்கு நான் பக்குவப் பட்டிருக்கவில்ல்லை

என்றும் சற்று தள்ளியே நிற்கும் அந்த பேருந்து இன்று சற்று அருகிலேயே நின்றது. பேருந்திலிருந்து தெறிக்கும் அந்த நீர்த்துளிகள், மேலும் உடலை குளிராக்கின. புயல் காற்று வீசும் அந்த சமயத்தில் நான் அந்த தென்றலை சற்றும் எதிர்பார்த்திருக்க வில்லை.


ஜன்னலோரத்தில் அமர்ந்து கொண்டு, கையில் துப்பட்டாவுடன் மழையுடன் போராடிக்கொண்டிருக்கும் அவளைக் கண்ட கண்களும் இமையை வெறுத்தன. "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் நல்ல அழகியென்பேன்" பாடல் முடிந்து "உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே" பாடல் ஆரம்பித்திருந்தது, டீக்கடை ரேடியோவில் மட்டுமல்ல, என மனத்திலும்.


அவள் வைத்திருந்த சிறு குங்குமும் சந்தனமும், தலையை அலங்கரித்த மல்லிகையும் கண்டால் எங்கேயோ படித்த தேவதைக்கதைகள் கண்முன்னே வந்து சென்றது. அவள் உதட்டோரம் படிந்திருக்கும் மழைத்துளியாய் மாறமாட்டேனோ என மனம் துடித்தது. நான் உற்றுக்கவனித்த அவளின் கண் அசைவுகள் என் இதயத்துடிப்பை அதிகரிக்கச்செய்தது. அவள் முகத்தில் படிந்திருந்த நீர்த்துளிகள், ரோஜா இதழில் படிந்திருக்கும் பனித்துளிகளை நினைவூட்டின. பேருந்து கடந்து சென்ற பின்பும், அந்த திசையை விட்டு கண்கள் அகலவில்லை. எழுந்து செல்ல மனமில்லாமல்  அங்கேயே அமர்ந்திருந்தேன்.

அன்றிரவு, தூறல் சற்றே நின்றிருந்தது. இமை மூடினால் அவள் முகம், தூக்கம் அற்றுக்கிடந்த அந்த இரவு மனதெங்கும் சிறு தவிப்பு. நட்சத்திரங்களை தொலைத்த அந்த வானில் அன்று முகிலோரம் முகம் மறைத்த நிலவு மட்டும். அந்த நிலவு என்னவளைக் கண்டிருக்கும் போலும், கார்மேகத்தினூடே முகம் மறைத்திருந்தது வெட்கத்தில், அழகின் ஆணவம் அழிந்த வருத்தத்தில். அந்த நிலவில் நான் கண்ட கலங்கங்களும் அவள் பருக்களை நினைவூட்டின. நிலவை மறைத்து கடந்து சென்ற மேகங்கள் என் மனத்தினையும் சற்றே வருடிச்சென்றது.

அடுத்த நாள் எனக்கு மிகச்சீக்கிரமே விடிந்திருந்தது. பணம் பற்றாக்குறையிலும் ஐந்து ரூபாய் கொடுத்து அயர்ன் செய்த சட்டையை அணிந்திருந்தேன்தலை படியச்சீவப்பட்டிருந்தது. டக்-இன் செய்யப்பட்டிருந்த உடை என்னை ஒரு கல்லூரி மாணவனாய் அடையாளம் காட்டியது. சாலையோரம் பிள்ளையாரை வழிபட்டுச்செல்லுவேன் என்று நானே எதிர்பார்த்திருக்கவில்லை.என்னுள் ஓர் மாற்றம் அது எனக்கே தெரிந்திருந்தது. கடிகாரத்தையும் ரோட்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தேன் ஒரு தவிப்புடன். என்றும் சரியான நேரத்திற்கு வரும் அந்த பேருந்து அன்று மட்டும் என்னை தவிக்க வைப்பதற்காகவே சற்று லேட்டாக வந்தது. என் கண்களில் ஏக்கம், தவிப்பு, ஒரு தேடல். Anna University ரிசல்ட் வரும்போது கூட இந்த அளவு பதற்ற பட்டிருக்க வில்லை.அன்றும் அதே இடத்தில் என்னவளைக் கண்டேன்.ஆயிரம் ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகள் என் எண்ணத்தினுள். முகத்திற்கு முன் விழுந்த சில முடிகளை இடக்கையால் சரி செய்த அந்த அழகும், மை பூசப்பட்ட அந்த கண்கள் பேசும் மொழியும், காதோரம் சிலாகிக்கும் அந்த ஜிமிக்கியின் அழகிலும் நான் என்னையே தொலைத்து விட்டேன். சத்தியமாக எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை அவளை வர்ணிக்க. அந்த இருபது வினாடிகள் எனக்கு இரு புது யுகமாய்த் தோன்றியது. பலத்த மழையினால் ஏற்பட்ட குளுமையும், அந்த ஈரமும் என் மனத்திலும் சற்று பரவி இருந்தது ஒரு நெகிழ்ச்சியுடன்.

அன்றிலிருந்து நானும் அந்த பேருந்தின் ரெகுலர் passenger. இரண்டு மாதங்கள் கழித்தும் கூட அந்த மழைக்காலம் இன்னும் முடிவடைந்திருக்கவில்லை.தினமும் அந்த பேருந்திற்காக காத்திருப்பதும், பின் அவள் பின்னால் நின்று அவள் அழகை ரசிப்பதும் வாடிக்கையாகிப்போனது.அதுவும் மழைத்தூறலில், மழைச்சாரலோடு கொஞ்சிப் போராடும் அவளின் சிறு சேஷ்டைகள் ரசிக்க வைத்தன. அவளைக் காண்பதால் வரும் புத்துணர்ச்சியும், புது தெம்பும் என்னாலேயே அவற்றை உணர முடிந்திருந்தது. அவளையே ரசித்துப் பயணம் செய்யும் எனக்கு சில நேரங்களில் அவள் புன்னகையும் பரிசாகக் கிடைத்ததுண்டு. இந்த இரண்டு மாத காலங்களில் நான் தூங்கிய நாட்களை விட, அந்த புன்னகையை நினைத்து தூங்காத நாட்கள் தான் அதிகம். என் தூக்கம் கெடுக்கும் அவள் புன்னகை- அடடா எட்டாவது அதிசயம். பல நாட்களில் படிக்கட்டுகளில் நின்று கூட அவள் அழகை ரசித்ததுண்டு. அப்படி என்றோ ஒரு நாள் எனக்காக அவள் எடுத்துக்கொடுத்த டிக்கெட் எனது டைரியை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. எனக்கு முன்பே அவள் மடியில் இடம் பிடித்த அந்த புத்தகங்களை பார்க்கும் போது சற்று பொறாமையாகத்தான் உள்ளது.

இடைவிடாத மழையிலும், அன்றும் எட்டேமுக்காலுக்கே வந்து பேருந்திற்காக காத்திருந்தேன். ஆனால் இன்று அந்த பேருந்து அவள் வருகையை இழந்திருந்தது.பேருந்து முழுவதும் தேடிய பின்னும் அவள் முகம் காண முடியவில்லை. என்றும் அவள் அமரும் இடத்தில் வேறொரு பெண் பர்தா அணிந்து அமர்ந்திருந்தார். அவளை காணாது எதோ இழப்பு மனதில். அந்த சிறு அதிர்ச்சியும் பாதித்திருந்தது என்னை. அருகில் அமர்ந்திருந்த அவள் தோழியிடம் "ஏங்க, அவங்க வரலையா?" எனக்கேட்டதுக்கு "அவளைப் பொண்ணு பார்க்க வந்துருக்காங்க, இனிமே அவ வரமாட்டா" என்று அவளின் தோழி சொன்ன பதில் பேரிடியாய் அமைந்தது. கலங்கிய கண்களுடன் இடிந்து பொய் நின்றிருந்தேன். என் கல்லூரி ஸ்டாப் வந்தும் நான் இறங்கவில்லை. அவள் இல்லாத நாளை சிறிதும் எதிர் பார்த்திருக்கவில்லை. எதையோ இழந்து விட்ட ஒரு தவிப்பு, உள்ளூர ஒரு அழுகை. அவள் தினமும் இறங்கும் ஸ்டாப்பில் நான் இறங்கி நிழற்க்குடையின் இருக்கையில் இடிந்து போய் அமர்ந்திருந்தேன். அந்த சமயத்தில் மற்றுமொரு அதிர்ச்சியை நான் எதிர் பார்த்திருக்கவில்லை.அது ஒரு இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது, அந்த கல்லூரி வாசலில். முகத்திரை நீக்கி என்னைப் பார்த்து புன்னகைத்த என்னவளைக் கண்டபின்பு என்னால் என்ன பேச முடியும்.
-------------------------------------------------------------------------------------------------------
பர்தா அணிந்திருந்தது என்னவள் தான் என்பதை நான் ஊகித்திருக்கவில்லை. என்னைத் தாக்கிய இன்ப அதிர்ச்சியிலிருந்து உடனடியாக மீண்டு வர என்னால் முடியவில்லை. உலகமே ஓர் நிமிடம் ஸ்தம்பித்ததாய் உணர்ந்தேன். அவள் கண் அசைவுகளை தவிர வேறொன்றும் புலப்படவில்லை. நொடிக்கொருமுறை என்னைத் திரும்பிப் பார்த்துச்சென்ற, அவள் கடந்து செல்லும் வரை பிரம்மிப்புடன் அமர்ந்திருந்தேன். வேகமாய்த் என்னைத் தாக்கிய சாரல் என்னை இயல்பு நிலைக்கு எடுத்துச் சென்றது.

அன்றிரவு...
நாளை எப்படியாவது அவளிடம் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பில் கடிகாரத்தை நொந்து கொண்டிருந்தேன். காதல் கடிதம் எழுத வேண்டும் என்று நான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்றதை கசங்கி கிடந்த தாள்கள் தெளிவாய் உணர்த்தின. அவள் பெயர் கூடத் தேரியாத நான் எப்படி சிறப்பாய் ஒரு கடிதம் வடிக்க முடியும். ஏதோ நம்பிக்கையில் அழகாய் வரையப்பட்டிருந்த ஒரு greeting card உடன் அவளைக் காண்பது என முடிவெடுத்து 'கண் அயர்ந்தேன் '.

அடுத்த நாள் ஒவ்வொரு செயலிலும் கனவிலே மிதப்பது போல தோன்றிற்று. என்னைப் புரிந்து கொண்டு அந்த பேருந்தும் ஐந்து நிமிடம் முன்னதாய் வந்திருந்தது. ஒரு நிமிடம் மெய் மறந்தே விட்டேன். கருப்பு சேலையில் ஒரு வெண்ணிலவை நான் அதுவரை பார்த்திருக்கவில்லை, அழகு பேரழகு என்று புத்தகத்தில் படித்திருக்கிறேன், அன்று நேரிலும் கண்டு கொண்டேன். அன்று நானும் கருப்பு நிற உடை அணிந்திருந்தது என்னை மேலும் மகிழ்வுரச் செய்தது. எனக்கு முன்பே எனது கல்லூரி ஸ்டாப்பில் அவள் இறங்கியது எனக்கு சற்று குழப்பத்தை உருவாக்கியது, ஆனால் நல்ல சந்தர்ப்பம் அமைந்ததில் ஒரு மகிழ்ச்சி.

மனத்திலே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நேராய் அவளிடம் சென்றேன்.
 "என்னங்க.. உங்ககிட்ட கொஞ்சம் தனியாப்பேசனும்., உங்கள எனக்கு....." இப்படி prepare பண்ணியிருந்த பேச்சும் அந்த நடுக்கத்தில் மறந்திருந்தது. அவளிடம்
"என் பேரு அர்ஜுன், நீங்க ரொம்ப அழகா....."
நான் சொல்லி முடிப்பதற்கு முன்பே நடுவில் நிறுத்திய அவள்
"நீங்க என்ன follow பண்றத என் அண்ணன் பாத்துட்டான், வீட்ல ஒரே பிரச்சினை, நீங்க யாருன்னு கேட்குறாங்க, தயவு செய்து போயிடுங்க"
என அழும் குரலில் அவள் கூறியதில் என் திட்டம் அனைத்தும் தவிடு பொடியானது.
"இல்லைங்க நான் என்ன சொல்ல வர்றேன்னா?..."
-மீண்டும் என்னை தடுத்து நிறுத்தினாள்.

இப்போது அவள் முகத்தில் புன்னகை படர்ந்திருந்தது.
"பேசாதிங்க" என்று சொல்லி விட்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்த அவளின் செய்கை எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. மீண்டும் பேச எத்தனித்த என்னைத் தடுத்த அவள்,
"எதுவும் பேசாத.. நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்குத் தெரியும் "
என்று அவள் கூறிய வார்த்தைகள் என் குழப்பத்தை மேலும் அதிகரித்தது.

திடீரென என் கண்களை மூடச்சொல்லி என் கையில் ஏதோ எழுதினாள். பிறகு என்னைக்கிள்ளி "இது கனவல்ல, நிஜம்" என்று கூறி சிட்டாய் பறந்து போனாள், நான் வைத்திருந்த card பிடிங்கிக்கொண்டு. பெரும் ஆர்வத்தை அடக்கிக் கொண்டு என் கையை விரித்தேன், அதில் அவள் தன காதலை தெளிவாக எழுதி இருந்தால் " I LOVE YOU "  என்று. என்னைத் தவிக்க வைத்து அதை ரசிக்கும் அவளின் அந்த குறும்புத்தனம் அவள் மேல் கொண்ட காதலை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தது. அப்போது திடீரென பெய்த மழை என் மகிழ்ச்சித் துள்ளலை அதிகரித்திருந்தது. செய்வதறியாது திகைத்து நின்றேன் தவிக்கும் மனத்துடன். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது.
"அவளைக் காணக் காரணமான மழையே, அவளை என்னுடன் சேர்த்து வைக்க வந்திருந்தது அந்த நேரத்தில்".

அவளைக் காதலிக்க ஆரம்பித்திருந்த அந்த சில வாரங்களில் என் நடை உடை பாவனை அனைத்தும் மாற்றப்பட்டிருந்தது, அவள் காதலால். "ரஞ்சனி" என்ற பெயர் ஸ்ரீராமஜெயமாய் மாறியிருந்தது எனக்கு. என்னவள் பெயர் கொண்ட குழந்தைகளை எங்கேனும் கண்டால் அனைத்து முத்தமிடுகிறேன். அவள் பெயர் கொண்ட கடைகளை வழியில் கண்டால் ஒரு நிமிடம் நின்று புன்னகைத்துச் செல்கிறேன். உணவில்லாமலும் வாழ முடிந்திருந்தது எனக்கு, முடியவில்லை அவள் நினைவில்லாமல் வாழ. கையெழுத்து அழகாகும் என்ற வைரமுத்து வார்த்தைகள் உண்மையாயின. புதுப்பழக்கமாய் கவிதை எழுதத் தொடங்கியிருந்தேன், தினம் ஆயிரம் பொய்கள் சொல்ல பழகியிருந்தேன். அந்த நாட்களில் நான் என்னையே மறந்திருந்தேன். என் சுயம் தொலைத்திருந்தேன். வாய் திறவாமல் பேசக் கற்றுக்கொண்டேன். அவள் விழியின் மொழிகளையும் புரிந்துகொண்டேன். என் வீட்டு ரோஜாச்செடியையும் அவள் பெயர் வைத்தே அழைத்து வருகிறேன். முன்னிரவிலிருந்து அதிகாலைக்கு முந்தைய நேரம் வரையிலான அந்த கைப்பேசி உரையாடல்கள் என் மனக்கடலினுள் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தின.

ஊருக்கு வெளியில் உள்ள கோவிலுக்கு என்னை அழைத்துச் செல்லுவாள். அவள் பெயரையும் என் பெயரையும் சேர்த்து அர்ச்சனைக்கு அவள் சொன்ன போது சற்று தள்ளியிருந்த நானும் அவளுக்கு மிக அருகில் சென்றேன், காற்றில் அலைபாயும் அவள் கூந்தல் என் முகம் வருடும் வரம் பெற்றேன். பயபக்தியுடன் சாமி கும்பிடும் அவளின் அழகில் மயங்கி கோவில் சிற்பங்களும் கண் அயர்ந்தன. என் நெற்றியில் திருநீறு பூசி பின் என் கண் மறைத்து ஊதி விட்ட அந்த நெருடலில் உடல் வெப்பமயமானதை உணர்ந்தேன். பிரகாரத்தைச் சுற்றி அவள் நடக்கும்போது அந்த சிலைக்கும் அவள் பாதம் நோக்கின, அவள் நடந்து செல்கிறாளா இல்லை மிதந்து செல்கிறாளா என்று. குளக்கரையில் அமர்ந்து கல்வீசும் அந்த அழகைக் காண கண்கோடி வேண்டுமே. என்னருகில் அமர்ந்து என் கை பற்றி பேசும் அவளின் உதட்டசைவுகளை மட்டுமே உணர முடிந்தது, கனவில் மிதந்து கொண்டிருந்த எனக்கு.

விடுமுறை நாட்களில் அவள் முகம் காணாமல், அந்த நாட்கள் நகர்வதில்லை. அதற்காகவே அவள் வீட்டு எதிர்ப்புறம் உள்ள டீக்கடையில் நேரம் கடத்துகிறேன். அவள் வீட்டுக் கதவோரம் நின்று கொண்டு ஒற்றைக்கண்ணால் அவள் என்னை ரசிக்கும் அந்த அழகை நான் ரசிப்பதில் அந்த நாட்கள் விரைவாக கடந்து விடுகின்றன. எங்கள் காதல் வளரும் மற்றொரு இடம், ஊர் எல்லையில் இருக்கும் சிதைந்து போன அந்த பாலம். மாலை நேரத்தில் ஆதவன் மலைகளின் நடுவே முகம் மறைக்கும் தருணத்தில், பாலத்தின் கீழே பாயும் தண்ணீரின் மெல்லிய சலனத்தில், கூடுகளுக்கு திரும்பிய கிளிகளின் கீச்சுக்குரலுக்கு நடுவே, அந்த மழைச்சாரலில் என் தோளில் சாய்ந்துகொண்டு அவள் பேசும் வார்த்தைகள் என் இதயத்தை நேரடியாக சென்றடைந்தன. அந்த சமயத்தில் எந்தன் குழந்தையாக மாறிவிடும் என்னவள்- ஒரு கவிதை.
சுருக்கமாக சொல்லப்போனால்
"தீண்டலும் சீண்டலும் இல்லாதது தான் எங்கள் காதல்".


இந்த இடைப்பட்ட காலத்தில், அவளைப்பற்றியும் அவள் குடும்பம் பற்றியும் நன்கு அறிந்திருந்தேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே தந்தையை பறிகொடுத்த அவளையும் அவள் தாயையும் கவனித்துக்கொள்வது அவளின் தாய் மாமா தான். அவர் தான் தன்னை படிக்க வைப்பதாகவும் அவள் கூறியிருக்கிறாள். எங்கள் காதல் சிறப்பாய் வளர்ந்திருந்த அந்த காலத்தில் என்றோ ஒருநாள், இரண்டு நாட்களில் மாமா பையனுக்கு திருமணம் என்றும் அதற்காக ஊருக்கு செல்வதாகவும் கூறிவிட்டு சென்றிருந்தாள். அந்த இரு நாட்களை எப்படிக் கடத்துவது என்ற ஆராய்ச்சியிலேயே பல மணி நேரம் கடந்திருந்தது. அவ்வப்போது போனில் கேட்ட குரல் கொஞ்சம் ஆறுதல் அளித்தது. அவளின் நினைவுகளை அசை போட்டபடி மன வருத்தத்தில் அமர்ந்திருந்தேன். அப்படியே 'கண் அயர்ந்தேன்...'

...... அன்றிரவு திருமண மண்டபம் ஒரே பரபரப்பாய் இருந்தது. மணப்பெண் கல்லூரி காதல் காரணமாக திருமணத்திற்கு முந்தின நாள் கடிதம் எழுதிவிட்டு சென்று விட்டதாக அனைவரும் பேசிக்கொண்டார்கள், பரபரப்பாய். மண்டபமே சோகத்தில் மூழ்கியிருந்தது, மாப்பிள்ளையும், அவளுடைய தாய் மாமாவும் இடிந்து பொய் அமர்ந்திருந்தனர். மாப்பிள்ளை தற்கொலை முடிவிற்கும் துணிந்து விட்டான். ரஞ்சனியும் அவளின் தாயும் மாமாவை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர்.
"என் மானம் மரியாதை எல்லாம் போச்சே, நாளைக்கு வர்றவுங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்"
என்று அவளின் தாய்மாமா தலையில் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருக்க அவளின் தாய் அவரை சமாதானப் படுத்திக்கொண்டிருந்தார். திடீரென அந்த அதிர்ச்சியை அவள் எதிர் பார்த்திருக்கவில்லை.

அவர் அவள் கை பற்றி,
"என் மானம் மரியாதை எல்லாமே உன் கைலதான்மா இருக்கு, நீ தான் என் மகனை கல்யாணம் பண்ணிக்கணும்"
என்று கூறி காலில் விழ முயற்சிக்க அவள் அதிர்ந்து விட்டாள். பேச்சு வராமலும், அவர் பற்றியிருந்த கைகளை விடுவிக்க முடியாமலும் கண்களில் கண்ணீரோடு நின்றிருந்தாள். அப்போது அவளின் தாயார்
"அண்ணே! நீ இவ்ளோ நாள் எங்களுக்கு பண்ணினதுக்கு எப்படி கைமாறு செய்யப்போறேன்னு நானே யோசிச்சுக்கிட்டிருந்தேன், இப்போ நீ நல்ல சந்தர்ப்பத்த கொடுத்திருக்க, நீ சொல்றது தான்னே சரி, நாளைக்கு இவ கழுத்துல உன் மகன் தாலி கட்டுவான்"
என்று கூற அவர்களின் பாசத்திற்கும், மாமா மேலான மரியாதைக்கும் கட்டுப்பட்டு பேச்சு வராமலும் நின்றிருந்தாள்.

அழுது கொண்டே அவளின் தாயை அழைத்து என்னைப்பற்றியும், எங்கள் காதல் பற்றியும் கூற,
"நாளைக்கு இந்த கல்யாணம் நடக்கலேனா நான் செத்துட்டுவேன்", என்று கூறிய தாயின் மிரட்டலுக்கும் பயந்து திருமணத்திற்கு சம்மதித்திருந்தாள். இவை அத்துணையும் கண்ட அவளின் தோழி எனக்கு போன் செய்து கூற நான் அவசரமாய் கிளம்பிச்சென்றேன், ஒரு வித படபடப்புடனும் அழுகையுடனும்.

திருமணநாள்.... எங்கே எனது காதலியின் திருமணத்தை கண்டு விடுவேனோ என்ற பயத்தில் விரைந்து கொண்டிருந்தேன், திருமணத்தை தடுத்து நிறுத்த. அன்று மழை சற்று அதிகமாய் இருந்தது. நான் மண்டபத்தை அடையும் சமயம்., கெட்டிமேளம் முழங்கியிருந்தது, திருமணம் முடிந்திருந்தது.மணமக்கள் ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் அழைத்துச்செல்லப் பட்டனர். காரிலிருந்து அவள் என்னைக் கண்டதும் அழுத அழுகையில் எனக்கு நடந்ததனைத்தும் விளங்கி இருந்தது. அங்கேயே விழுந்து கதறி அழுதேன் கொட்டும் மழையில்.


"அவளைப் பார்க்க வைத்து, என்னுடன் சேரவைத்த மழையே அவளை என்னிடமிருந்து பிரித்து விட்டது அந்த தருணத்தில்"

என்னால் மூச்சு விட முடியவில்லை, எந்தன் இதயத்துடிப்பு எகிறியிருந்தது. தண்ணீர் குடித்தும் கூட அந்த படபடப்பு நீங்கவில்லை. பின்னிரவில் பேயறைந்தது போல அமர்ந்திருந்தேன்.
-------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------
பிறகு, இப்படிப்பட்ட கனவு வந்தால் என் நிலை என்னவாகும்?
ஆம், இது ஒரு கனவு என்பதை உணரவே எனக்கு சிலமணி நேரம் பிடித்தது. சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த அவளின் மொபைல் என் படபடப்பை மேலும் அதிகரித்தது.
காலை அவள் போன் செய்து "கல்யாணம் நல்ல படியா முடிஞ்சுது டா, நா கிளம்பிட்டேன், சாப்டியாடா செல்லம்" என்று சொன்னதில் தான் போன உயிர் திரும்பி வந்தது. அதிகாலை மழைச்சாரலில் முகம் நனைத்தபடி ஏன் சிரிக்கிறேன் என்று தெரியாத படி சிரித்துக்கொண்டிருந்தேன், அவளை மீண்டும் சந்திக்கும் தருணத்தை எதிர் நோக்கி.

A story By,