என்னவள் (... An Expectation)


நிலவே தோற்கும் வசீகரம்-வான்
நட்சத்திரங்களும் மயங்கும் கண்சிமிட்டல்.
காற்றில் அலைபாயும் கூந்தல்-அதில்
அவள் சூடியிருக்கும் ஒற்றை ரோஜா.

வானவில்லாய் வளைந்திருக்கும் புருவம்
சிவப்பு குங்குமமிட்ட அழகிய நெற்றி.
கொலை செய்யும் கண்கள்- அதன்மேல்
பல கதை பேசும் இமைகள்.

செக்க சிவந்த இதழ்கள்- பளிச்சிடும்
வெண்முத்துப் பற்கள்.
மிருதுவான கன்னம்-அதில்
புன்னகையால் சிறு குழி.

கொடுத்துச் சிவந்த கரங்கள்- அதில்
ரோஜா நிறத்தில் உள்ளங்கை.
மருதாணி ஓவியம்- என்னவள்
கை அசைவுகளே அழகிய காவியம்.

பூமியை விஞ்சும் பொறுமை- அந்த
நாணலும் தோற்கும் அவளின் நாணம்.
மிதந்து செல்லும் பாதம்- அதில்
மெல்லிசையாய் கொலுசின் ஓசை.

கவிதையைப் பற்றி கவிதை எழுத
கவிஞனாலும் முடியாது.
என்னாவளை வரைந்து விட
ரவிவர்மனாலும் இயலாது.

என்னவள்,
என்னுள் கலந்து விட்டால்,
என் நிழலிலும் சிரிக்கிறாள்,
என் கனவிலும் நிலைக்கிறாள்.

இறைவா,
ஒரு வரம் கொடு,
நான் உயிர் வாழ,
என்னவளுடன்....
.... என்னவளுக்காக.

2 comments:

Mahan.Thamesh said...

ரொம்ப ரொம்ப அருமை

! ♥ பனித்துளி சங்கர் ♥ ! said...

நல்ல ரசனை ஆனால் புகைப்படத்தில் இருக்கும் பெண் கருப்பு போட்டு அல்லவா வைத்திருக்கிறாள் .