எழுத்தாளன் ஆவது எப்படி..? (How to become a WRITER)என்னடா இவன் இப்படி ஒரு வெயிட்டான தலைப்போட எழுதிருக்கானே, ஒருவேள பெரிய அப்பாட்டக்கரா இருப்பானோன்னு நினைச்சுடாதீங்க. நான் ஒரு எழுத்தாளனே அல்ல என்பதை தொடக்கத்திலேயே சொல்லி விடுகிறேன். இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருப்பது கதையா, கட்டுரையா என்பது போலும் நான் அறியேன். இலக்கணம் இலக்கியம் என்பவற்றை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண்களுக்காக மட்டுமே அறிந்து வைத்திருந்தவன் நான். இந்நிலையில் என்னுள் ஏற்பட்ட ஏதோ ஒரு பருவ மாற்றத்தில், எப்போதோ எங்கேயோ போகும் வழியில், எங்கேயோ போய்க்கொண்டிருக்கும் இளம் பெண்களினின் கண்கள் மனதில் பதிந்து, அப்போது திடீரென எப்போதோ எங்கேயோ படித்த காதல் கவிதைகளின் நாலு வார்த்தைகள் நினைவுக்கு வந்து எதோ ஒரு காகிதத்தில் கிறுக்க ஆரம்பித்தபோது, ஆரம்பித்தது என் எழுத்து (ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல...)

என் நேரத்தை வீணாக்கும் நண்பர்களின் பிடியிலிருந்து தப்பவும், என் தனிமையை போக்கிக்கொள்ளவும் கையில் கிடைத்த எதையாவது படிக்க ஆரம்’பித்து, பின் அதுவே பித்து ஆகுமளவு வாசிப்பதில் நாட்டம் சென்றது. ஒரு படிப்பாளி எப்படியாவது படைப்பாளி ஆகி விடவேண்டும் என்ற ஒரு சிறு பொறி மனதில் தோன்ற, எப்படியாவது ஒரு சிறுகதையை எழுதி ஒரு எழுத்தாளன் ஆகி விடவேண்டும் என்ற முனைப்பில்,என் முதற் கதையை எழுத தொடங்கினேன்.

என் கதை நன்றாக எழுதி முடிக்கப்பட்டதோ இல்லையோ, நான் எழுதியதால் எனக்கு ஒரு எழுத்தாளனின் கஷ்டம் புரிந்தது. இது மொழியினாலோ, எழுத்தினாலோ வந்த கஷ்டம் அல்ல, எழுதுவதினால் நேர்ந்த கஷ்டம். தவறு செய்யாதவன் மனிதனே இல்லை என்பதைக் கேட்டுக்கேட்டு எந்தவொரு விஷயத்தையும் தவறில்லாமல் செய்ய முடியாமல் போன ஒரு சமூகத்திலிருந்து வந்த ஒருவனான நான் மட்டும் இதற்கென்ன விதிவிலக்கா என்ன? “எதுவோ உட்கார பனம்பழம் விழுந்த” கதையாய், கதை எழுத தொடங்கிய எனக்கு கிட்டியதோ ஓர் அனுபவம். ஒரு நல்ல அனுபவம் என்றும் சொல்லலாம்.  இதோ அந்த அனுபவம் உங்களுக்காக...

எழுத்தாளன் ஆவது எப்படி....

கல்லூரி விடுதியில் ஏற்ப்பட்ட தனிமையில் நொந்து போய்க்கிடந்த என்றோ ஒருநாள் என்னிலையைப் பார்த்த ஒரு புண்ணியவான் நாலு புத்தகங்களை கொடுத்து “சும்மா இருக்குற நேரத்துல பசங்களோட ஊர் சுத்தாம இதையெல்லாம் படி” ன்னு அறிவுரைத்து சென்றதில் ஆரம்பித்தது என் வாசித்தல்(அவன் மட்டும் என் கைல கிடச்சான்...). நம்ம ஊரில் யாருக்குத் தான் அறிவுரை பிடிக்கிறது, அன்றே அந்த புத்தகங்களை மூட்டை கட்டியிருந்தாலும், என்னை விடாது துரத்தும் தனிமை அந்த மூட்டையை அவிழ்த்துவிடச் செய்தது. கல்லூரி சிலபஸ்’களினால் ஏற்பட்ட வெறுப்பில் படிப்பது என்பது என் வயதொத்தவர்களுக்கு எட்டிக்காய் தான். இருந்தாலும் வேறு வழியில்லாததால் வாசித்தலைத் தொடர்ந்தேன்.

சிறிது நாட்களுக்குள் வாசித்தல் எனக்கு பிடித்துப் போயிருந்தது. அதே நேரம் பல சொற்ச்சுவைகளையும் கேட்க வேண்டியிருந்தது. யாருக்காவது எதையாவது சொல்ல நேர்ந்தால் “ஹாரிபாட்டர் ஆல்சோ டீல்ஸ் வித் த சேம் ப்ராப்ளம்” என்ற ரேஞ்சில் என்னை பார்த்தார்கள். நமக்கொன்றும் இது புதிதில்லையே, வாசித்தல் தொடர்ந்தது.

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வந்த உடனேயே சீனியர் என்ற ஒரு சின்ன கெத்து. கொஞ்சம் பயத்தோடு, பவ்யமாய் மிதந்தோடும் சில ஜூனியர் தேவதைகள் கனவில் வர, அந்த சமயம் பார்த்து அதுவரை படித்திருந்த காதல் கவிதைகளும் நினைவில் வர, இரண்டும் ஒன்றர கலந்த அந்த நொடி தான் நான் ‘அந்நியன்’னாய் மாறிய தருணம். அர்த்த ராத்திரியிலும் மிதமான ஒளியுடன் எரியும் விடுதியின் மொட்டை மாடி விளக்கினோளியில்தான் என்னுள் இருக்கும் கிறுக்கன் தட்டி எழுப்பப்பட்டான். கவிதையாய் எழுதியிருந்தால் கவிஞன் எனலாம், கண்டதை கிறுக்கியவன்தானே நான்.

அன்று முதல் எழுத்தில் ஒரு ஆர்வம்., ஆர்வக்கோளாறு. எழுதுபவன் எல்லாம் எழுத்தாளன் என்ற நினைப்பு, அறியாப்பருவத்தில். எழுத்தாளன் என்பவன் எழுத்தாளுணன் என்பதை அறிந்திருக்கவில்லை அந்த வயதில். அன்றிலிருந்து ஏதோ கிறுக்கல் கவிதைகளின் மூலம் கல்லூரியில் கொஞ்சம் பிரபலமாகியிருந்தேன். நண்பர்கள் சிலரின் காதலுக்கு கவிதை எழுதப்போய், அவர்களின் காதலிகள் கவிதையைக் காதலித்ததால் வந்த குழப்பங்கள் சுவாரஸ்யம். ஏதோ சில கவிதைகள் சில இளம்பெண்களால் ரசிக்கப்பட, அங்கு ஆரம்பித்தது என் முதல் கற்றல்(கதறல்...).
“என்னடா சீன் போடுறியா?” என்று சக மாணவர்களின் இயலாமையும்,
“அவள கரெக்ட் பண்றியா?” என்று சக மாணவிகளின் கிசுகிசு ‘களும்,
“நீ எதுக்கு அந்த வித்யா கிட்ட அடிக்கடி பேசுற, பாத்துக்க, அப்புறம் பஞ்சாயத்து ஆயிடும்”ன்னு சும்மா நடக்குற சண்டைக்கு மேலே தொங்கும் பல்பை உடைக்கும் சீனியர் சூர்யாக்களின் மிரட்டல்களும் மனதிற்குள் சற்றே நெருடலைத் தர ஆரம்பித்தன. “எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு” என்றும் பல தடவை மனதில் தோன்றி இருந்தது. இருந்தாலும் யாரும் அறியாமல் எழுத்தை தொடர்ந்தேன்.

அன்றுணர்ந்த விஷயம்- எழுத்தாளனுக்கு பயம்,தயக்கம் கூடாது.

கவிதை எழுதுவதால் தான் இந்த பிரச்சினை எல்லாம் என்று ஏதோ ஒரு பயத்தில், சிறுகதைகளின் மேல் நாட்டம் சென்றது. ஒவ்வொரு செமஸ்டர் தேர்விலும் எழுதும் விஷயம் தான் என்றாலும், சிறுகதை மீதான ஆர்வம் தனித்தோங்கிப் போயிருந்தது. வாசித்தலில் ஒரு புதுப்பாதை. கவிதைகள் போலல்லாமல் சற்றே பெரிதாய் நீளமாய் இருந்ததால் தொடக்கத்தில் பிடிக்காமல் போயிந்தாலும், அவை சொல்லும் ஆழமான கருத்துக்களால் கவரப்பட்டிருந்தேன். அன்றிலிருந்து வாசித்தலில் தீவிரம் கொஞ்சம் கூடியிருந்தது. வீட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தில், சாப்பிடாமல் இருந்து கூட சில புத்தகங்கள் வாங்கி படித்தேன். “ஏன் உனக்கிந்த வேல, நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இதல்லாம் தேவ தானா?” என்ற அறைத்தோழர்களின் கிண்டல் செவி எட்டியிருந்தது. இருந்தாலும் விட முடியவில்லை, வாசிப்பை.

ஒரு சமயத்தில், அறிவுக்கருவூலத்தில் போதுமான வார்த்தைகள் சேர்ந்துவிட்டதாய் ஒரு தோன்றல், எழுதித் தான் பார்க்கலாமே என்ற ஒரு நப்பாசை. இந்த சமயம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாய் விடுதியில் எழுதவில்லை, ஏதோ ஒரு வார இறுதியில் கல்லூரிக்கு கொஞ்சம் தொலைவிலிருக்கும் ஒரு அணைக்கட்டிற்க்கு சென்று எழுதலாம் என்று முடிவெடுத்து அங்கு சென்றேன். அணைத்து’கட்டி அமர்ந்திருக்கும் காதலர்களைக் கண்டு மனமுடைந்து(வயிறெரிந்து) ஏதோ ஒரு ஓரத்திற்கு சென்றமர்ந்து எழுதத் தொடங்கினேன்.
“இதல்லாம் எங்க உருப்படப் போவுது..” என்று காது படவே பேசிப்போன பெரிசுகளின் பேச்சிலிருந்து நான் என்னவோ காதல் கடிதம் எழுதிக்கொண்டிருப்பதாய் ஒரு தோன்றல் ஏற்பட்டிருப்பது புரிந்திருந்தது. மேலும் தொடர மனமில்லாமல் கிளம்பி என் அறைக்கு கிளம்பினேன். போகும் வழியில் என் மன மேகத்தில் வார்த்தைகளை சேகரித்தவாறே சென்றேன். அறையை அடைந்தவுடன், சரி எழுதலாம் என்று மேகத்தில் கோர்த்த வார்த்தைகளை பேனாவுக்கு “Transfer” செய்யலாம் என்றமர்ந்தேன். சமயம் பார்த்து காத்திருந்தது போல் என் அறை’வாசிகள் உச்ச சத்தத்தில் தொலைக்காட்சியில் பாடல் கேட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தனர். கோபத்தில் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு படுத்து விட்டேன்.

அன்று கற்றுக்கொண்ட விஷயம் எழுத்தாளனுக்கு பொறுமை அவசியம்.


அன்றிலிருந்து பகலில் படிக்கவோ எழுதவோ பிடிக்கவில்லை. இரவில் பதினோரு மணிக்கு மேல் அனைவரும் உறங்கிய பின் எழுதலாம் என்றால், கல்லூரியில் இரவு நேரத்தில் காதல் என்ற பெயரில் குடும்பம் நடத்தும் பல கூட்டங்கள் இருக்கத்தானே செய்கிறதே. போர்வைக்குள் இருந்து வரும் இச் இச் இச் சத்தங்கள், வெறுப்பேற்றுபவை. அப்புறம் எப்படி எழுத?

எழுத்தாளனுக்கு சகிப்புத்தன்மை மிக முக்கியம்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவிலும் பார்க்கும் சில காட்சிகளில் கதைக்கு தேவையான ஏதாவது ஒரு “கச்சாப்பொருள்” கிடைக்கும், ஆனால் கல்லூரி/அலுவலக டென்ஷனிலும் வாழ்க்கை ஓட்டத்திலும் அவை மறந்தே போயிருக்கும். மறுபடி யோசிக்கும்போது தலைவலியே மிஞ்சும்.

எழுத்தாளனுக்கு ஞாபகசக்தி முக்கியம், எழுதுவதற்கான சூழ்நிலை மிக முக்கியம்.

ஒரு எழுத்தாளன் கிரிக்கெட்டுக்கு மட்டும் அடிமையாய் இருந்தால் அதோகதிதான். எந்த ஒரு எழுத்தாளனுக்கும் வரக்கூடாத நிலைமை. கிரிக்கெட்டா எழுத்தா என்ற குழப்பத்திலேயே பல மனித்துளிகள் வீணாய்ப் போயிருக்கும். எழுதும்போது கிரிக்கெட்டும், கிரிக்கேட்டின்போது எழுத்தும் வந்து கொல்லாமல் கொல்லும்.

எழுத்தாளன் எழுத்திற்க்கே அடிமையாயிர வேண்டும்.

இதை விட ஒரு கொடுமையான விஷம்(விஷயம்), நம் மனதில் இருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காமல் போவது. இதற்கு ஒரே தீர்வு வாசித்தல் மட்டுமே. இது தொடக்கநிலை எழுத்தாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

எழுத்தாளன் நல்ல வாசிப்பாளனாக இருக்க வேண்டும்.

இவை மட்டுமல்ல, இன்னும் பல... வீட்டு சூழ்நிலை, நண்பர்கள், பணம், காதல், தோழிகள் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். எனவே சும்மா எழுதுறவங்க எல்லாரும் எழுத்தாளன்(ர்) ஆகி விட முடியாதென்பதே எந்தன் தாழ்மையான கருத்து, முடிவு.

ஊக்கம் & நன்றி : @மண்குதிரை, கிரி, சொக்கன், @மினிமீன்ஸ், @கோளாறு, கார்க்கிபவா, @ஒளிவர்ஷம்(அருண்), @ஓமக்குச்சி(சதீஷ்),சின்ராஸ் மற்றும் வினோத்.

நன்றியுடன்,
வேதாளம் எ அர்ஜுன்

17 comments:

விக்ரமாதித்தன் வேதாளம் said...

வெண்பாம்ஸ், கமெண்ட்ஸ் ப்ளீஸ். சகாக்களே.
நீங்க போடுற கமெண்ட்ஸ் தான் எனக்கு பூஸ்ட்.

"ஸஸரிரி" கிரி said...

வலைப்பதிவாளன்'னு உங்களை சொல்லிக்கோங்க. எழுத்தாளன் பட்டத்தை எல்லாம் சுமந்தா அது ரொம்ப வெயிட்டா இருக்கும். நெறைய பேருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். நமக்கு அதுக்கெல்லாம் நேரம் இருக்காது.

I guess this is too early for you for this subject...

Anyway, நடையில அங்கங்கே "நச்" காட்டியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

வேதாளம் said...

மிகச்சரியே.. வேணும்னா "வலைப்பதிவாளன்" ஆவது எப்படின்னு வெச்சுக்கலாம் சார். எப்போதும் முதலாய் பின்னூட்டம் இடுவதற்கு நன்றி.

Meens said...

சற்றே நீளமாய் இருந்தாலும் ஒருவனுக்குள் எழுத்தாளன் பிறப்பதை சுவையாய் பதிவு செய்ததில் வெற்றி பெற்றுள்ளீர் வேதாளம்.!

கடைக்குட்டி said...

நீளம்....................................................


அத தவிர.. காலேஜ்ல காதல் கவிதைகள் அடுத்தவனுக்கு எழுதிக்குடுத்து ஸ்டார்ட் ஆச்சுன்னு சொல்லி இருக்கீங்க.. நம்ம முடியல மக்கா... உண்மைய சொல்ல ஏந்தான் இந்தப் பசங்க பயப்புடுறாங்களோ..? (இன் ஃபாக்ட்.. நானும் அடுத்தவனுக்காகத்தான் எழுத ஆரம்பித்தேன் :))

மொத்தத்தில் போஸ்ட் ஓகே.. உங்க அனுபவத்த கோர்த்து எழுதி இருக்கீங்க..

ஆனாலும் நாமலாம் போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கு சகா.. தீயா வேல செய்யனும் !!

"ஸஸரிரி" கிரி said...

Well said Kadaikutti!

நாகராஜசோழன் MA said...

நல்லா சொல்லிருக்கீங்க சகா. நீங்க இப்போ எழுத்தாளன் ஆகிட்டீங்களா இல்லையா? :)

நந்தா ஆண்டாள்மகன் said...

நல்ல ஆரம்பம் கலக்குங்க வேதாளம்..வாழ்த்துக்கள்..

திருநாவுக்கரசு பழனிசாமி said...

தம்பி..உனக்குள்ள என்னமோ இருக்குப்பா :-)

சும்மா பேசலாம் said...

உங்கள் எழுத்துக்கள் ஒரு எழுத்தாளனை போலவே உள்ளது. நான் மிகவும் ரசித்தேன்.

கோமாளி செல்வா said...

இந்தக் கட்டுரை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு மச்சி.
நீங்க இவ்ளோ படிச்சிருக்கீங்களா ? வாசிப்பு அனுபவம் முக்கியம்கரத எல்லோரும் அடிக்கடி சொல்லிட்டே இருக்கீங்க.

உண்மைலேயே என்னோட வாசிப்பு அனுபவம் ரொம்பவும் குறைவா இருக்கு. அது எனக்கு மிகப்பெரிய குறை. இனிமேலாவது நிறையப் படிக்கணும்.

அப்புறம் கதை எழுதுறதுக்கு அமைதியான சூழல் முக்கியம்னு சொல்லிருக்கீங்க, அது உண்மைதான். ஆனா அமைதிளையும் சில நேரங்களில் ஒண்ணும் எழுத தோணாது. சில சமயங்களில் எழுதணும்னு தோணும். ஆனா வார்த்தைகள் , எங்க ஆரம்பிக்கிறது இது மாதிரி குழப்பங்கள் இருக்கும்.

உங்க அனுபவம் ரொம்ப நல்லா இருக்கு :-))
எழுத்தாளர் அர்ஜுன் வாழ்க :-))

வேதாளம் said...

எல்லாருக்கும் நன்றி. நீங்கள் கொடுத்த கருத்துகள் தான் எனக்கு தூண்டுதல். நன்றி. இனியும் என்னால் இயன்றவற்றை கிறுக்குவேன். அதையும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

englishkar said...

நல்லா இருக்கு அர்ஜுன்

Rathnavel said...

நல்ல பதிவு.
நிறைய படியுங்கள். உங்களை சுற்றி நடப்பதை நிறைய கவனியுங்கள் (observe).
உங்களை பற்றிய பின்னூட்டத்தைப் (negative comments) பற்றி கவலைப் படாதீர்கள்.
வாழ்த்துக்கள் அர்ஜுன்.

Venkat said...

சின்ன வயசுல பாட்டி சுட்ட வடை கதைய நானா கண்டு பிடிச்சு! சொன்னதுக்கு அப்புறம் இப்போதான் நாமலும் கிருக்க்கலாம்னு ஜஸ்ட் தோணுச்சு... உங்க அனுபவக் கதை நம்ம கூட கொஞ்சம் மின்கிள் ஆகி டச் பண்ணிடுச்சு ....
நல்ல தொடக்கம் பிரதர்.. really superb வாழ்த்துக்கள் ..

Venkat said...

சின்ன வயசுல பாட்டி சுட்ட வடை கதைய நானா கண்டு பிடிச்சு! சொன்னதுக்கு அப்புறம் இப்போதான் நாமலும் கிருக்க்கலாம்னு ஜஸ்ட் தோணுச்சு... உங்க அனுபவக் கதை நம்ம கூட கொஞ்சம் மின்கிள் ஆகி டச் பண்ணிடுச்சு ....
நல்ல தொடக்கம் பிரதர்.. really superb வாழ்த்துக்கள் ..

k.sivaraj said...

எழுதத்தாளர் ஆவது எப்படி? என என் மனக்கேள்விக்கு உங்கள் பதிவு மிக பொருத்தம், முதலில் 100 சிறந்த நாவல்கலை தேர்வு செய்து படி, பிறகு நீயே எழுத்தாளன் ஆவாய் என்ற கூற்று படி இப்போது முயல்கிறேன். உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.