தமிழ் ட்விட்டர் விருதுகள் மே’11 (#TTA)


வாரந்தோறும் ஏதோ ஒரு பாராட்டு விழாவைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போன நமக்கு, இப்போதெல்லாம் விருது வழங்கும் விழாக்களோ, பாராட்டு விழாக்களோ இல்லாதது பெரும் ஏமாற்றமே. இதற்காக நமக்கு நாமே திட்டத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டதே இந்த #TTA – தமிழ் ட்விட்டர் அவார்ட்ஸ்  மே’2011.

சிறந்த போழுதுபோக்கு கீச்சர் ( Best Twitter Entertainer) -  @Rajanleaks
பிரபலமான தமிழ் கீச்சர் (Most Popular Tamil Tweeter) -  @iamkarki
சிறந்த வலைபாயும் கீச்சர்(Best Twitter for VA.PAA) -  @kolaaru
தமிழ் ட்விட்டர் என்சைக்ளோபீடியா (The Information Provider) -   @mankuthirai & @nchokkan
சிறந்த வளரும் கீச்சர் ஆண் (Best Emerging Twitter Male) - @Cheethaa & @selvu
சிறந்த வளரும் கீச்சர் பெண் (Best Emerging Twitter Female) -  @arattaigirl
சிறந்த கீச்சர் கவிஞர் ஆண் (Best Poet In Twitter Male) - @arasu1691
சிறந்த கீச்சர் கவிஞர் பெண் (Best Poet In Twitter Female) - @umakrish & @arattaigirl
சிறந்த இசை சார்ந்த கீச்சர் (Best Musical Twitter) -  @kanapraba & @lalitha_ram
சிறந்த கீச்சர் தத்துவஞானி(Best Philosophy Tweets) -  @minimeens
சிறந்த சமூக ஆர்வலர் கீச்சர் (Social Interest-Eco-care) - @karaiyaan
சிறந்த கீச்சர் பட்சி(Best Predictor,Info Provider on secrets) - @mayavarathaan
சிறந்த கீச்சர் குழு(Best Twitter Group) -        @DrTamil
கீச்சர் ஸ்டார் விருது(Twitter Star Award) -   @karaiyaan
சிறந்த தமிழ் பட்டி (Best Tamil Hash Tag) - #TNFishermen

உங்கள் ஆதரவு தொடர்ந்தால் இவ்விருதுகளை மாதமொருமுறை கடைசி நாள், அந்த மாதம் சிறப்பாய் கீச்சியவர்களுக்கு வழங்கலாம். விருதுகளில் இடம் பெற புதியவர்கள் நன்றால் கீச்சினால் போதுமே..!

3G மூன்றாம் தலைமுறை

இந்த பதிவிற்கு “அவஸ்தை” என்னும் தலைப்பு பொருத்தமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆம், இந்த பதிவில்(பதிவுகளில்) நான் சொல்ல விழைவது என்னவோ நானும் என் போன்ற இளைஞர் சமுதாயத்தில் உட்படும் ஒரு சாராரின் இழந்தவையையும் இயலாமையையும் பற்றித்தான். இந்த கார்ப்பரேட் உலகில் பணமுதலைகளுக்கு மத்தியிலும், ஏறி வரும் விலைவாசி, குடும்ப சூழல் காரணமாக திசை மாறி பயணித்து, பணம் என்னும் பதில் தேடி  திக்குத் தெரியாமல் எங்கோ வந்து மாட்டிக்கொண்டு முழிக்கும் என் போன்ற நவ நவீன இளைஞர்களின் கஷ்டம், இயலாமை மற்றும் ஒரு தேடல்.
  1.  நினைவுகள் (பள்ளிப்பருவம்)
நாங்கள் சிறுவர்களாய் இருந்தபோது இருந்த உலகல்ல இப்போது நாங்கள் தினம் போராடும் இவ்வுலகு. பதினைந்து வருடங்களுக்கு முன்னர் தொழில்நுட்பம் என்பது இவ்வளவு வளர்ந்திருக்கவில்லை, தொலைத்தொடர்பும் தான். எங்கள் வீட்டிற்கு ஏதேனும் அவசர செய்தி சொல்லவேண்டி இருந்தாலும், நாலு வீடு தள்ளி இருக்கும் தபால் நிலையத்திற்கு அழைப்பு வரும். அங்கிருக்கும் போஸ்ட் மேன் யாருக்கு என்ன செய்தி என்பதை குறித்து வைத்துக்கொள்வார். எவ்வளவு அவசரச்செய்தி ஆனாலும் அவருக்கு நேரம் கிடைக்கையில் வந்து சொல்லி விட்டுப் போவார். அதற்கு அம்மா அவருக்கு ஒரு டீயோ, காப்பியோ இல்லையென்றால் ஒரு ஐந்து ரூபாயோ கொடுத்தனுப்புவார்.  அப்போதெல்லாம் யாருக்காவது தொலைபேசி எண் ஐ கொடுக்க வேண்டிவந்தால்  “PP” என்றெழுதி தபால் நிலைய எண்’ணை கொடுப்பார்கள், அப்போதைய என் புரிதல் “PP” என்றால் “Postoffice Phone” என்று தான். கைப்பேசி என்பது அந்த வயதில், நீளமான நூலின் இரு நுனிகளிலும் ஓட்டையிடப்பட்ட தீப்பெட்டிகளை இணைத்து ஜன்னல் வழியே ஒருவன் வீட்டிற்குள்ளிருந்தும், மற்றொருவன் வீட்டிற்கு வெளியிலிருந்தும் பேசி விளையாடுவது தான்.

தொலைக்காட்சிப்பெட்டி என்பது எங்கள் ஊரிலேயே இரண்டோ,மூன்றோ தான் இருந்தது. ஞாயிறு “ஒலியும் ஒளியும்”, ”சக்திமான்”, அப்புறம் எப்போதாயினும் “கிரிக்கெட்”. ஆளுக்கு ஐம்பது பைசாவோ, ஒரு ரூபாயோ போட்டு ஒரு பந்தை வாங்கிக்கொண்டு தென்னைமட்டையில் செய்த ஒரு பேட், மூன்று நீளமான சுள்ளிகளை விக்கெட் ஆகவும் வைத்து ஆசை தீர விளையாடுவோம்.  கிரிக்கெட் மீதான தீராக்காதல் காரணம், தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பதற்கேன்றே, அந்த வீட்டு சிறுவர்களை நண்பர்களாக்கிக்கொண்டு, எங்களுக்கு அம்மா செய்துகொடுக்கும் சீடை,முறுக்கு, அப்பா வாங்கிக்கொடுக்கும் பார்லே-ஜி பிஸ்கட்டின் “சக்திமான்” ஸ்டிக்கர், சச்சின், கங்குலி படம் போட்ட நோட்டு புத்தக லேபிள் போன்றவற்றை அவர்களுக்கு பரிசு கொடுத்து முன் வரிசையில் இடம் பிடிப்போம்.

மேலும் ஓர் விளையாட்டு கிரிக்கெட் மீதான எங்கள் நெருக்கத்தை அதிகரிப்பதாய் இருந்தது. பூமர் சுவிங்கத்துடன் இலவசமாக தரப்படும் கிரிக்கெட் கார்டுகள் எனப்படும் “Statistics” அட்டைகளை வைத்து “சோடி போட்டு” விளையாடுவோம். இருவரும் கைகளில் கார்டுகளை மறைத்து வைத்துக்கொள்ள, ஒருவர் அவரிடமுள்ள கார்டின் ஒரு மதிப்பை சொல்ல வேண்டும், அதை விட எதிராளியிடம் குறைவாக இருப்பின் அந்த கார்டு இவருக்கு சொந்தமாகிவிடும், இல்லையேல் இவரின் கார்டை அவருக்கு தாரை வார்க்க வேண்டி இருக்கும். இந்த விளையாட்டின் காரணம் சச்சின்,கங்குலி,வால்ஷ்,அசாருதீன் போன்றோருக்கு எங்கள் மத்தியில் பெரும் மவுசு. ஏனென்றால் அவர்களின் “Statistics” மற்றும் சாதனைக் கொண்டு மற்றவரின் கார்டுகளை எளிதில் புடுங்கி விடலாம். இவ்விளையாட்டில் நான் ஓடியாடி சேர்த்த இரண்டாயிரத்து சொச்சம் அட்டைகளை, சில வருடங்களுக்கு முன் என் அம்மா தீக்கிரையாக்கிய போது கொஞ்சம் கலங்கித்தான் போனேன்.

புரட்டாசியிலிருந்து மார்கழி வரையிலான காலங்களில் ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். எப்போதும் ஏதாவது ஒரு திருவிழா, விசேஷம் என்று புத்தாடைகள், பலகாரங்கள் என்று ஜமாய்க்கும் மாதங்கள். கேரளாவின் விஷேச பண்டிகையான ஓணம் தொடங்கி தமிழர் பொங்கல் வரையிலான பண்டிகைகள் புது புது நண்பர்களையும் புது மக்களையும் பல்வேறு கலாச்சாரங்களையும் கொடுத்தது. எங்களின் இந்த கொண்டாட்டங்கள் பெரும்பாலும் ஓணம் பண்டிகையிலிருந்தே தொடங்குகின்றன.

கேரள மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழும் பாலக்காட்டில் மலையாள பண்டிகைகளும், தமிழ் பண்டிகைகளும் சமமாகவே கொண்டாட படுகின்றன இரு வேறு மக்களாலும். ஓணம் என்பது பத்து நாட்கள் “அத்தம்” முதல் “திருவோணம்” வரை இந்த பத்து நாட்களும் வாசலில் பூக்களால் ஆன கோலமிட்டு மகாபலி ராஜாவை எதிர்பார்த்து காத்திருப்பார்கள், மேலும் தினமும் பல்வேறு விருந்துகளுடன், பக்கத்து வீட்டுக்காரர்களை  உணவிற்கு அழைத்து விருந்தோம்பல் செய்யும் பழக்கமும் அங்கே இருக்கிறது. இதனால் பல மலையாளி நண்பர்களின் பழக்கம் கிடைத்தது. ஓண காலங்களில், ஓணம் பட்டுடுத்தி, ஈரக்கூந்தலோடு, பளிங்கு முகத்தில் சந்தனமிட்டு, கையில் விளக்கோடு கோவிலுக்கு செல்லும் மலையாளி பெண்களைப் பார்க்க கண்கோடி வேண்டும். அவர்களையும் எங்களுக்கு தோழியர் ஆக்கி கொடுத்தது இந்த பண்டிகைகளே. அத்தம் கறுத்து ஓணம் வெளுத்ததுமே அடுத்தது தீபாவளி தான்.

ஐப்பசியில் பழைய துப்பாக்கிகளை எண்ணை இட்டு துடைத்து தீபாவளிக்கு தயாராகியிருப்போம். பல வல்லரசுகளும், வாஞ்சிநாதன்களும்  உருவாகி இருப்பார்கள். தூக்கத்திலும் “டிஷ்யூம் டிஷ்யூம், அவன விடாத புடி, டுமீல், டமால்” என போலீசாக மாறிக் கிடப்போம். தீபாவளியின் தாக்கத்திலிருந்து வெளிவர பல நாட்கள் ஆகும் எங்களுக்கு. கார்த்திகை தொடங்கினால் “சபரிமலை” சீசன் தொடங்கி விடும். எந்த குறும்புத்தனங்களும் இல்லாமல், பஜனைகளுக்கு மத்தியில், பய பக்தியோடே அந்த மாதம் கரைந்து விடும். இவை எல்லாவற்றையும் விட கொண்டாட்டங்கள் நிறைந்தது ஊர் திருவிழாக்கள் தான்.

மார்கழியில் எங்கள் ஊர் “பத்திரகாளி” அம்மன் கோவில் திருவிழா. கம்பம் நாட்டுவது முதல் கொடி கட்டுவது வரை அனைத்திலும் “ராமருக்கு அணில் போல” எங்கள் பங்கும் கொஞ்சம் இருக்கும். கரகாட்டம், ஆர்கெஸ்ட்ரா என ஊர் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். பெரும்பாலும் இந்த விழாக்களில் மலையாளிகளை எங்கள் வீட்டிற்கு அழைத்து விருந்தோம்பல் செய்வது வழக்கம். “நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என எல்லாமே விருந்தில் இருக்கும். ஒருவழியாக திருவிழாவை முடிப்பதற்குள், சட்டியில் பொங்கல் பொங்க தயாராக இருக்கும். அடுத்தென்ன பொங்கலோ பொங்கல் தான்.

வீட்டில் இருக்கும் ஆடு மாடு TVS-50 என எல்லாவற்றையும் கழுவி சுத்தம் செய்யத்தொடங்குவதில் பொங்கல் பண்டிகை ஆரம்பித்திருக்கும். பட்டிப்போங்கல், தைப்பொங்கல் என பல பொங்கல்களை சுவைத்த பின் ஆழியாறு அணையில் பூப்பொங்கல் முடிந்திருக்கும். ஆனால் இக்கொண்டாட்டங்களை முடித்ததும் தான் எனக்கும் நண்பர்களுக்கும் பெரிய அதிர்ச்சியும், பயமும் கூடிய அனுபவங்கள் காத்துக்கொண்டிருக்கும். தேர்வு காலம் நெருங்க நெருங்க பந்துகள் ஒளித்து வைக்கப்படும், பேட்’டுகள் தண்ணீர் காய வைக்க உபயோகிக்கப்படும், ஸ்டாம்புகள் “விளையாட போவியா, போவியா” என எங்களை அடித்தே உடைக்கப்படும். பெரும் போராட்டத்திற்கு பிறகு “ஓம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை” என்ற முதல் வரியோடு தேர்வுகள் வெற்றிகரமாக “எழுதி முடிக்கப்படும்”. பிறகென்ன “அவுத்து விட்ட கழுதைகள்” என்ற அடைமொழியோடு “வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி.. வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே...”.

<தொடரும்>
    -1-

வானம் - விமர்சனம்


பணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையையும் எப்படி பாதிக்கிறது, கடவுள்கள் வேறுபடுத்தப்பட்ட இவ்வுலகில் மனிதம் எப்படி மதிக்கப் படுகிறது என்பதை சொல்ல போராடும் படம்-வானம்.

படத்தில் மொத்தம் ஐந்து டைம்-லைன்கள்.
வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பணக்காரப் பெண்ணைக் காதலிக்கும் கேபிள் ராஜா சிம்பு,
ஒரு முஸ்லிமாக பிறந்து விட்டதால் போலீஸின் அராஜகத்தில் தன் தம்பியைத் தொலைத்து விட்டு தேடும் அண்ணன் பிரகாஷ்ராஜ்,
சொந்தமாக கம்பெனி(??) ஆரம்பிக்க போராடும் பாலியல் தொழிலாளி சரோஜா அனுஷ்கா,
எப்படியாவது லைவ் கன்செர்ட் பண்ணிவிட வேண்டும் என்று போராடும் கிடாரிஸ்ட் பரத்,
கிட்னியை விற்றாவது வாங்கிய கடனை அடைத்து தன் மகனை படிக்க வைத்து விட வேண்டும் என்று போராடும் சரண்யா.
இந்த ஐந்து டைம் லைன்களும் ஒன்று சேரும்போது என்ன நடக்கிறது என்பது கதை.

தெலுங்கிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்ட அனுஷ்கா சம்பந்தப் பட்ட காட்சிகள் லிப் சின்க் இல்லாததால் எரிச்சலூட்டுகின்றன. மனதில் ஒட்டாத கதா பாத்திரங்கள், இரைச்சலான பாடல்கள், மாறி மாறி பயணிக்கும் திரைக்கதை என்று அனைத்திலும் சொதப்பல். 

ஒரு அடி பட்டவுடன் தீவிரவாதி ஆகும் பிரகாஷ்ராஜின் தம்பி, நூறு பேரைக் கொல்லவேண்டுமேன்றால் உடனே இஸ்லாமிய ஜிகாத் தானா? இன்னும் எத்தனை படங்களில் தான் இதையே காட்டுவார்களோ. 

“உங்க லட்சியத்த என்மேல திணிக்காதிங்க” என்று பரத், “அடுத்தவங்களுக்கு உதவுதற விட பாட்டு தான் முக்கியமா?” என்று வேகா, “வாழ்க்கைனா என்னன்னு ஒரு சாவு காட்டிருச்சு” என்று அனுஷ்கா, என எல்லோரும் கிடைத்த வாய்ப்பில் மெசேஜ் சொல்லி எரிச்சலூட்டுகறார்கள். “என்ன வாழ்க்கை டா இது?” என்று சிம்பு சொல்லுவது வெறும் வசனமாக மட்டுமே உள்ளதே தவிர அதில் ஒரு உணர்ச்சி இல்லை.

கடைசி வரை என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று புரியாதது பெரிய மைனஸ். அதை விட தீவிரவாதிகள் ஜஸ்ட் லைக் தட் ஆக தப்பிப்பதும், கடைசியில் பரத் கையை இழந்து தியாகி ஆவதும் காதுல பூ, ரொம்ப ஓவர்.

கொஞ்சி கொஞ்சி பேசும் பப்ளி ஜாஸ்மின், சந்தானத்தின் டைமிங் காமெடி இவை மட்டுமே படத்திற்கு பிளஸ். கடைசியில் திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டு அனைவரையும் காப்பாற்ற போராடும் போது மட்டுமே சிம்பு நடித்திருக்கிறார்.

எவண்டி உன்ன பெத்தான் பாடல் ஆட்டம் போட வைத்திருக்கிறது. ஆனால் மற்ற பாடல்களில் யுவன் ஷங்கர் ராஜா ஏமாற்றி இருக்கிறார். 

அனுஷ்காவிற்க்காக மட்டுமே படம் பார்க்க செல்பவர்களுக்கு ஏமாற்றமே!
அழுத்தமான கதையோடு, அனுஷ்கா,பரத் கதாபாத்திரங்களையும் கொஞ்சம் மெருகேற்றியிருந்திருக்கலாம்.