தமிழ் ட்விட்டர் விருதுகள் ஜூன்’11 (#TTA) முடிவுகள்

ஜூன் மாதம் சிறப்பாக ட்விட்டிய ட்விட்டர்களுக்கான விருதுகள்.1.        பிரபலமான தமிழ் ட்வீட்டர் (Popular Tamil Twitter)?
@nchokkan with 55% of Votes
2.        பிரபலமான தமிழ் ட்வீட்டர் பெண் (Popular Tamil Tweeter- Female) ?
@NVaanathi with 51% of Votes
3.        சிறந்த பொழுதுபோக்கு ட்வீட்டர் (Best Entertaining Tweeter) ?
@mayavarathaan with 59% of Votes
4.        சிறந்த பொழுதுபோக்கு ட்வீட்டர் பெண் (Best Entertainer Tweeter -female) ?
@umakrishh with 39% of Votes
5.        தமிழ் ட்விட்டர் என்சைக்ளோபீடியா (The Best Information Provider) ?
@mayavarathaan with 57% of Votes
6.        சிறந்த வளரும் ட்வீட்டர் (Best Emerging Tweeter) ?
@jroldmonk with 32% of Votes (Tough competition)
7.        சிறந்த ட்விட்டர் கவிஞர் (Best Poet in Twitter Tamil) ?
@itsbritto & @nithu_ji both share the award with 36% of Votes
8.        சிறந்த தமிழ் ட்விட்டர் பட்டி (Best HashTag)?
#june26candle with 71% of Votes
9.        சிறந்த நடிநிசி ட்வீட்டர் (Best XXX Tweeter)?
@kolaaru with 63% of Votes
10.     சிறந்த சமூக மாற்ற ட்வீட்டர் (Best Social Reforming Tweeter) ?
@Karaiyaan with 35% of Votes
11.     சிறந்த ரீ-ட்வீட்டர் (Best ReTweeter) ?
@bharathiee with 49% of Votes
12.      சிறந்த தமிழார்வலர் (Best Tamil activist Tweeter) ?
@Karaiyaan with 48% of Votes 

#TTA வை இன்னும் சிறப்பாக செய்ய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. #TTA வின் முக்கிய நோக்கம் புதிய தமிழ் ட்விட்டர்கள் உருவாகவேண்டும் மற்றும் ஏற்கனவே ட்விட்டுபவர்கள் அவர்களின் சிறப்பான ட்விட்டுகளை ட்விட்டர் உலகத்திற்கு தர வேண்டும் என்பதே. குற்றங்கள் இருந்தால் பொறுத்தருள்க!

ட்விட்டரும் நானும்.
நிகழ்காலத்தில் ட்விட்டி கொண்டிருக்கும் அனைவரையும் போல, நானும் விகடனில் வெளிவரும் “வலைபாயுதே” பகுதியைப் பார்த்து ட்விட்டர் உலகிற்கு வந்தவன் தான். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் @kolaaru @minimeens @iamkarki இவர்களின் ட்வீட்’களால் கவரப்பட்டு தான் இவ்வுலகிர்க்குள் நுழைந்தேன். இவர்கள் தான் என் மானசீக குருக்கள். ட்விட்டர் உலகில் நாம் சொல்லும் கருத்துக்களை விட, கருத்துக்களுக்கு ஏற்றார்ப்போல் ஒரு பெயர்(Handle) தேவைப்பட்டது. அவ்வேளை அர்ஜுன் @vedhalam ஆக மாற்றப்பட்டான். அதிலிருந்து ட்விட்டுகளும், நண்பர்களும், ஃபால்லோயர்களும் குவியத்தொடங்கின. நானே எதிர்பார்க்காத வேகம் என் சிந்தனை, செயல், ட்வீட் அனைத்திலும். என் ட்வீட்’கள் வலைபாயுதேவில் அதிகம் இடம் பெறாவிட்டாலும், நண்பர்களின் ரீ-ட்வீட்கள் மூலம் பலரையும் சென்றடைந்தது மகிழ்ச்சியே. ட்விட்டரின் உதவியால் பல பெரியோர்களின் நட்பையும் பெற்றேன். ‘கார்ப்பரேட் கனவுகள்’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்திருந்த @rsgiri அவர்களின் உதவியால் @nchokkan அவர்களின் நட்பு கிடைத்தது. பதிவுலகம் என்பது எனக்கு அறிமுகமானதே அப்போதிலிருந்துதான்.

அன்றிலிருந்து பதிவுகளினால் ஈர்க்கப்பட்டு சொக்கன்,கிரி,அதிஷா,லக்கி இன்னும் பல பதிவுகளைத் தொடந்து படிக்கலானேன். பதிவெழுதும் ஆசை மெல்ல வெளிவர நானும் தோன்றியதை எழுதத் தொடங்கினேன். என் கிறுக்கல்’களாய் ஆரம்பித்தது வண்ணநிழலாய் உருமாற்றம் அடைந்தது www.sriarjunan.blogspot.com. ட்விட்டரில் @arasu1691 அவர்களின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு கவிதை என்று எதையெல்லாமோ கிறுக்கத்துவங்கினேன், நமக்கேன்றுதான் இப்போது ஒரு ப்ளாக் இருக்கிறதே. நம்மை யார் கேட்பார்? என்ற நம்பிக்கைதான் எல்லாவற்றிற்கும் காரணம்.

ட்விட்டரினால் பல நண்பர்கள் கிடைத்தனர்.#TPL(@_ctcc) மூலம் கிரிக்கெட் விளையாடச் சென்றதில் பலரும் நட்பாகினர். அதுமட்டுமல்லாது ஒருமுறை கூட பார்த்திராத @olivarsham @omakuchchi @raz_funs @I_santhosh , மேலும் பலரும் நல்ல நண்பர்களாகினர். @cheethaa @arattaigirl @settaikaaran @kaniyen @rajanleaks @mayavarathaan @tirumaranth இவர்களைப் போலெல்லாம் ட்விட்ட முடியவில்லையே என்று ஏங்கியிருக்கிறேன். @umakrishh @itsbrito @gpradeesh @kuumuttai @iyyanars @say_satheesh இவர்களின் ட்வீட்களை மிகவும் ரசித்திருக்கிறேன். @karaiyaan @TBCD போன்றோரின் தமிழார்வம், சமூகத் தொண்டு இவற்றினால் ட்விட்டரில் இயங்கிக் கொண்டிருக்க பெருமைப் படுகிறேன்.

இவை அனைத்திற்கும் காரணம் ட்விட்டர்.
127 நாட்கள், 4200+ ட்வீட்டுகள், 400 Following மற்றும் 1000 FOLLOWERS, உண்மையில் இதை என் வாழ்வில் மிகப்பெரும் சாதனையாகத்தான் கருதுகிறேன். என் உயிரினும் மேலான ட்விட்டர் பெருமக்களுக்கு, நண்பர்களுக்கு, நன்றி என்ற சொல் இதற்கென்றும் ஈடாகாது. இருந்தாலும் என்னை உங்கள் அபிமான நண்பனாக,ட்விட்டராக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

இதை ஒரு வெற்றியாகவே நான் கருதுகிறேன், ஆனால் “எல்லாப் புகழும் என் மூன்று குரு’க்களுக்கே”.


என் அநாதை அம்மா


எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து, அம்மாவின் சேலைத் தலைப்பிலேயே வளர்ந்து, அவள் நிழலில் படித்து ஆளாகி, பிழைப்புக்காக எங்கோ நாடு கடத்தப்பட்ட மக்களில் நானும் ஒருவன். ஒருவேளை நீங்களும் இப்படிப்பட்டவரானால் இங்கே நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கு பிடிக்கும். உங்கள் மனசாட்சியையும் உங்களிடம் பேச வைக்கும்.

அம்மாக்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். நமக்கு எல்லாமுமாக இருப்பவள், நாம் என்ன தவறு செய்தாலும் பொறுப்பேற்பவள் என. எனினும் உலகத்தில் சில விஷயங்களை இது இப்படித்தான் என வரையறுத்திட முடியாது. அதில் முதலானது அம்மா எனும் உயிர். இப்படி உயிரான அம்மாவைப் பிரிந்து, எங்கோ சென்று பிழைக்கும் வாழ்க்கை தான் வாய்க்கிறது நமக்குள் பலருக்கும். இப்படிப் உயிர் கொடுத்தவளைப் பிரிந்து, எங்கோ நவ நாகரிக உலகில், அள்ள அள்ள கை நிறையப் பணம், வாழ்க்கையில் இதுவரை கண்டிடாத இன்பங்கள் என போலி போதைக்கு அடிமையாகி, நம் சுயத்தை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நமக்காக அங்கு ஒரு ஜீவன் துடித்துக் கொண்டிருக்கிறதே என்பதையும் மறந்து. இங்கே நாம் பிஸ்ஸா, பர்கர் என மேய்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில், “சாப்பிடுற நேரமாச்சே, புள்ள சாப்பிட்டானோ இல்லையோ” என ஏங்கித் தவித்து கால்வயிற்றுக் கஞ்சியும் அரை வயிற்றுக் கஞ்சியுமாய் குடித்து உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பவள்தான் அம்மா. நீங்கள் ஒவ்வொரு முறையும் ஊருக்குச் செல்லும்போது பல ஆயிரங்களை அவள் கையில் கொடுத்து வந்திருந்தாலும், ஒருமுறையேனும் ஒரு ஆயிரமாவது தபாலில்/மணி ஆர்டரில் அனுப்பிப் பாருங்கள், பிறகு தெரியும் அவள் மகிழ்ச்சி என்னவென்று. “என் புள்ள காசு அனுப்பிருக்கான்” என்று ஊரெல்லாம் பறைசாற்றிக் கொண்டாடுவாள் அவள் மகிழ்ச்சியை. எல்லா அம்மாக்களும் எதிர் பார்ப்பது இதைதான்.

இப்படி வாழ்க்கைச் சுழலில் கிராமத்தை விட்டு, அம்மாவை பிரிந்து தொழிலுக்காக எங்கோ போய் நடுத்தெருவில் நின்று கொண்டிருப்போம். என்ன கொஞ்சம் கவுரவம் மட்டும் சேர்ந்திருக்கும். கை நிறையப் பணம், கார் என ஆடம்பரம் எல்லாமுமே. எனினும் இவை அனைத்தும் நம் அம்மா கையிட்டு பிசைந்து தரும் ஒரு பிடி சோற்றிற்கு ஈடாகாது. வாழ்க்கைப் போராட்டத்தின் ஒரு கால கட்டத்தில் மீண்டும் அம்மா நினைவு வரும். உடம்புக்கு ஏதாவது வந்தாலோ, நம் பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆனாலோ அப்போது அம்மா தேவைப் படுவாள்.

இன்னும் கொஞ்சம் வயதாகிப் போனால், அம்மாவின் நினைப்பு இன்னும் அதிகமாகும். பிரிவின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க உறவின் ஆழமும் கூடுமே, அதுதானே நியதி. நம் அம்மா அணிந்திருப்பதைப் போல யாரேனும் உடையணிந்திருப்பதைக் கண்டாலோ, அவள் வயதொத்த, அவள் சாயல் கொண்ட பெண்களைக் கண்டாலோ ஒரு நிமிடம் மனசாட்சி கரையத்துவங்கும். வாழ்க்கையில் எதையோ இழந்து விட்ட தவிப்பு, இனம்புரியா அழுகை மனதில் பரவத் துவங்கும். அப்போது மனசாட்சி நிச்சயம் நம்முடன் பேசும், அம்மாவைப் பற்றி.

எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது. எனக்கொன்றும் அத்துனையையும் ஆண்டு அனுபவித்த வயதாகிவிடவில்லை. இருந்தாலும் பிரிவின் வலியை உணர்ந்தவன் நான். எனது “புண்ணியம்” பதிவைப் படித்த நண்பர் சண்முகவேல்(@kullabuji in twitter) அவருக்கும் அது மாதிரியான ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் விருப்பம் இருப்பதைத் தெரிவித்தார். இருவரும் முடிவு செய்து இந்த ஞாயிறு “குட் லைஃப் ஆதரவற்றோர் காப்பகம்” சென்றோம். நான் ஏற்கனவே அங்கு சென்றிருக்கிறேன், ஆதலால் பல குழந்தைகளும் என்னை அடையாளம் கண்டு கொண்டனர், என் பெயரையும் கூட நினைவில் வைத்திருந்தனர். அனைத்துக் குழந்தைகளும் எங்களுடன் ஓடிச்சாடி விளையாடி, அவர்களின் கதைகளையும், உடனிருப்பவர்களிடம் சண்டையிட்டதையும் விளையாட்டுத் தனமாய்ப் பகிர்ந்து கொண்டனர். காப்பகத்தில் புதிதாய்ப் பலரும் சேர்க்கப் பட்டிருந்தனர். அவர்களுடன் பேசுகையில் தான் நிகழ்ந்தது அந்த நிகழ்வு.

அந்தக் குழந்தைக்கு சுமார் பத்து, பதினோரு வயதிருக்கும். “நான் புதுசா வந்திருக்கேன் என்கூடயும் பேசுங்க” என்று கை பிடித்து அருகில் இருத்திக்கொண்டாள். இதற்கு முன் எங்கோ அவள் அம்மாவின் தோழி வீட்டில் இருந்ததாகவும், அப்பா இல்லையென்றும், தான் ஐந்தாம் வகுப்பு படிப்பதாகவும் அவளைப் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தாள். இந்த சின்ன வயதிலும் நல்ல ஆர்வம், அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பு என அனைத்தும் நிறைந்தவளான அந்தக் குழந்தைக்கு இப்படி ஒரு துன்பம் வந்திருக்கக் கூடாது என்று இறைவனிடம் சொல்லத் தோன்றிற்று. ஏற்கனவே அவள் சொன்னதில் கண்கலங்கி இருந்த நான், அவள் பெயரை சொல்லக் கேட்க கரைந்து விட்டேன். ஆம் அவள் பெயர் “விஜயலட்சுமி”, என் அம்மாவின் பெயர். ஏற்கனவே அம்மாவின் பிரிவில் தவித்துக் கொண்டிருக்கும் எனக்கு, அவள் பெயர் கொண்ட ஒரு அனாதை(ஆதரவற்ற)க் குழந்தையைக் கண்டவுடன் அழாமல் இருக்க முடியவில்லை. அவள் தன் துப்பட்டாவில் என் கண்ணீர் துடைத்து “என்ன ஆச்சு? ஏன் அழரிங்க” எனக் கேட்க, நான் காரணம் சொன்னேன். அதற்கு அவள் “அப்போ, வாரவாரம் என்னைப் பார்க்க வருவிங்கதானே அண்ணா?” என்று குழந்தை தனமாகக் கேட்க மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக் கொண்டு வந்திருக்கிறேன். உண்மையில் அவளை என் அம்மா’வாகத்தான் பார்த்தது மனது. அப்போது மனசாட்சி பேசியது, அம்மாவை எவ்வளவு இழந்து கொண்டிருக்கிறேன் என்று. அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றும் சொல்லியது. இந்த புதிய அனுபவத்தில் நண்பர் ஷண்முகவேலுவும் நெகிந்துதான் போனார், நிச்சயம் மாதமொருமுறையாவது வருவதை சொல்லி இருக்கிறார்.

விஜயலட்சுமியுடன் நான்: 


குழந்தைகள் சிலர்:


இனியும் அம்மாவைத் தவற விடக்கூடாது என்று நினைக்கிறேன், தினமும் அடிக்கடி அழைத்துப் பேசி விடவேண்டும். மனதில் உள்ள அனைத்தையும் கொட்டி விட வேண்டும் அவளிடம், அவள் மட்டுமே நிம்மதி தருபவள், ஏனென்றால் அவள் "அம்மா".


பி.கு: “அடுத்த தடவ வரும்போது நிறைய ஃப்ரெண்ட்ஸ்’ஸ கூட்டிட்டு வாங்க” என்று குழந்தைகள் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். பார்ப்போம். நண்பர்கள் யாராவது வருவதாய் இருந்தால், தொடர்பு கொள்ளவும். அவர்களுக்கு தேவை அரவணைப்பே அன்றி வேறொன்றும் இல்லை.
மழைக்காலத்தின் முதல் ஞாயிறு...சுட்டெரிப்பவனோ
ஓய்வெடுக்கச் சென்று விட்டான்....

வருணன் என்னும்
காதலன் எய்த
மழைத் துளிகளில்
சுழல்வதையும் மறந்து,
மயங்கிக்கிடக்கும் பூமியில்
அன்று
மழைக்காலத்தின் முதல் ஞாயிறு,
சாரல் மட்டுமே காதலாய்....

உடலூடுருவும் பனிக்காற்றில்
வழக்கங்கள் தொலைந்திருக்கும்.
நாசி தொடும் மண்வாசம்,
துளிர்த்திருக்கும் செடிகள்,
குடை பிடிக்கும் மக்கள்,
தலைநனைத்துக் களியாடும் குழந்தைகள்,
சுற்றம் சற்றே மாறி இருக்கும்,
நம் காதலும் தான்....

உன் இதமான
அரவணைப்புத் தேவைப்படும்
இனியதோர் கார்காலம்....

தீண்டிச்சென்ற சாரலால்
உன் முகத்தில் படிந்த
நீர்த்துளிகளை உதடுகளால்
நான் ஒத்தியெடுக்க
எனதுள்ளே கலந்த உன் வாசம்
பிரித்தெடுக்கவியலா ஒன்றானது...

கிச்சு கிச்சு மூட்டியும்
காது மடல் கடித்தும்,
உன் உஷ்ணப் பெருமூச்சுகளால்
என்னை உஷ்ணமாக்கும்
விளையாட்டுக்காகவே
வேண்டும் இந்தக் கார்காலம்....

உந்தன் காதோரத்தில்
என் கிறுக்கல்களாலும்
உன் செல்லச் சிணுங்கல்களாலும்
நம்மேல் விழும்
ஒவ்வொரு மழைத்துளியிலும்
தெறிக்கிறது நம் காதல்....

இரு மேகங்களின்
கூடலால் வந்த
இடி மின்னலில்,
கண்மூடி என்னை
இறுக்கி அணைக்க
காதல் தாண்டிய
உன் ஸ்பரிசத்தை உணர்கிறேன்.

உண்மையில்,
உன்னை
அணைத்துச் செய்த
அனைத்திலும் என்னுள்
அணைந்து விடவில்லை
அந்தத் தீ....

வேட்கையில் ஆடும்
இந்த வேட்டையில்
பரிசுகளோ,
நான் காணவியலா
உன்
நகக்கிறுக்கல் ஓவியங்கள்....

பெய்யும் மழைக்கேற்ப
வேகமெடுக்கும்
நம் காதலைப்போல்,
வேகமாய்ச் சுழலுகிறது
நம் வீட்டுக் கடிகாரமும்....

உன் இதழ் ரசம்
சுவைத்து ஆரம்பித்த
கார்காலத்தின் முதல் ஞாயிறு,
மாலை நேரத் தேநீரில்
முடிவடைந்தது....

மீண்டும் ஒரு ஞாயிறை எதிர்பார்த்து
காதல் வளர்ப்போம் வா,
நாமிருவரும்....