என் அநாதை அம்மா


எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து, அம்மாவின் சேலைத் தலைப்பிலேயே வளர்ந்து, அவள் நிழலில் படித்து ஆளாகி, பிழைப்புக்காக எங்கோ நாடு கடத்தப்பட்ட மக்களில் நானும் ஒருவன். ஒருவேளை நீங்களும் இப்படிப்பட்டவரானால் இங்கே நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கு பிடிக்கும். உங்கள் மனசாட்சியையும் உங்களிடம் பேச வைக்கும்.

அம்மாக்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். நமக்கு எல்லாமுமாக இருப்பவள், நாம் என்ன தவறு செய்தாலும் பொறுப்பேற்பவள் என. எனினும் உலகத்தில் சில விஷயங்களை இது இப்படித்தான் என வரையறுத்திட முடியாது. அதில் முதலானது அம்மா எனும் உயிர். இப்படி உயிரான அம்மாவைப் பிரிந்து, எங்கோ சென்று பிழைக்கும் வாழ்க்கை தான் வாய்க்கிறது நமக்குள் பலருக்கும். இப்படிப் உயிர் கொடுத்தவளைப் பிரிந்து, எங்கோ நவ நாகரிக உலகில், அள்ள அள்ள கை நிறையப் பணம், வாழ்க்கையில் இதுவரை கண்டிடாத இன்பங்கள் என போலி போதைக்கு அடிமையாகி, நம் சுயத்தை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நமக்காக அங்கு ஒரு ஜீவன் துடித்துக் கொண்டிருக்கிறதே என்பதையும் மறந்து. இங்கே நாம் பிஸ்ஸா, பர்கர் என மேய்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில், “சாப்பிடுற நேரமாச்சே, புள்ள சாப்பிட்டானோ இல்லையோ” என ஏங்கித் தவித்து கால்வயிற்றுக் கஞ்சியும் அரை வயிற்றுக் கஞ்சியுமாய் குடித்து உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பவள்தான் அம்மா. நீங்கள் ஒவ்வொரு முறையும் ஊருக்குச் செல்லும்போது பல ஆயிரங்களை அவள் கையில் கொடுத்து வந்திருந்தாலும், ஒருமுறையேனும் ஒரு ஆயிரமாவது தபாலில்/மணி ஆர்டரில் அனுப்பிப் பாருங்கள், பிறகு தெரியும் அவள் மகிழ்ச்சி என்னவென்று. “என் புள்ள காசு அனுப்பிருக்கான்” என்று ஊரெல்லாம் பறைசாற்றிக் கொண்டாடுவாள் அவள் மகிழ்ச்சியை. எல்லா அம்மாக்களும் எதிர் பார்ப்பது இதைதான்.

இப்படி வாழ்க்கைச் சுழலில் கிராமத்தை விட்டு, அம்மாவை பிரிந்து தொழிலுக்காக எங்கோ போய் நடுத்தெருவில் நின்று கொண்டிருப்போம். என்ன கொஞ்சம் கவுரவம் மட்டும் சேர்ந்திருக்கும். கை நிறையப் பணம், கார் என ஆடம்பரம் எல்லாமுமே. எனினும் இவை அனைத்தும் நம் அம்மா கையிட்டு பிசைந்து தரும் ஒரு பிடி சோற்றிற்கு ஈடாகாது. வாழ்க்கைப் போராட்டத்தின் ஒரு கால கட்டத்தில் மீண்டும் அம்மா நினைவு வரும். உடம்புக்கு ஏதாவது வந்தாலோ, நம் பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆனாலோ அப்போது அம்மா தேவைப் படுவாள்.

இன்னும் கொஞ்சம் வயதாகிப் போனால், அம்மாவின் நினைப்பு இன்னும் அதிகமாகும். பிரிவின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க உறவின் ஆழமும் கூடுமே, அதுதானே நியதி. நம் அம்மா அணிந்திருப்பதைப் போல யாரேனும் உடையணிந்திருப்பதைக் கண்டாலோ, அவள் வயதொத்த, அவள் சாயல் கொண்ட பெண்களைக் கண்டாலோ ஒரு நிமிடம் மனசாட்சி கரையத்துவங்கும். வாழ்க்கையில் எதையோ இழந்து விட்ட தவிப்பு, இனம்புரியா அழுகை மனதில் பரவத் துவங்கும். அப்போது மனசாட்சி நிச்சயம் நம்முடன் பேசும், அம்மாவைப் பற்றி.

எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது. எனக்கொன்றும் அத்துனையையும் ஆண்டு அனுபவித்த வயதாகிவிடவில்லை. இருந்தாலும் பிரிவின் வலியை உணர்ந்தவன் நான். எனது “புண்ணியம்” பதிவைப் படித்த நண்பர் சண்முகவேல்(@kullabuji in twitter) அவருக்கும் அது மாதிரியான ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் விருப்பம் இருப்பதைத் தெரிவித்தார். இருவரும் முடிவு செய்து இந்த ஞாயிறு “குட் லைஃப் ஆதரவற்றோர் காப்பகம்” சென்றோம். நான் ஏற்கனவே அங்கு சென்றிருக்கிறேன், ஆதலால் பல குழந்தைகளும் என்னை அடையாளம் கண்டு கொண்டனர், என் பெயரையும் கூட நினைவில் வைத்திருந்தனர். அனைத்துக் குழந்தைகளும் எங்களுடன் ஓடிச்சாடி விளையாடி, அவர்களின் கதைகளையும், உடனிருப்பவர்களிடம் சண்டையிட்டதையும் விளையாட்டுத் தனமாய்ப் பகிர்ந்து கொண்டனர். காப்பகத்தில் புதிதாய்ப் பலரும் சேர்க்கப் பட்டிருந்தனர். அவர்களுடன் பேசுகையில் தான் நிகழ்ந்தது அந்த நிகழ்வு.

அந்தக் குழந்தைக்கு சுமார் பத்து, பதினோரு வயதிருக்கும். “நான் புதுசா வந்திருக்கேன் என்கூடயும் பேசுங்க” என்று கை பிடித்து அருகில் இருத்திக்கொண்டாள். இதற்கு முன் எங்கோ அவள் அம்மாவின் தோழி வீட்டில் இருந்ததாகவும், அப்பா இல்லையென்றும், தான் ஐந்தாம் வகுப்பு படிப்பதாகவும் அவளைப் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தாள். இந்த சின்ன வயதிலும் நல்ல ஆர்வம், அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பு என அனைத்தும் நிறைந்தவளான அந்தக் குழந்தைக்கு இப்படி ஒரு துன்பம் வந்திருக்கக் கூடாது என்று இறைவனிடம் சொல்லத் தோன்றிற்று. ஏற்கனவே அவள் சொன்னதில் கண்கலங்கி இருந்த நான், அவள் பெயரை சொல்லக் கேட்க கரைந்து விட்டேன். ஆம் அவள் பெயர் “விஜயலட்சுமி”, என் அம்மாவின் பெயர். ஏற்கனவே அம்மாவின் பிரிவில் தவித்துக் கொண்டிருக்கும் எனக்கு, அவள் பெயர் கொண்ட ஒரு அனாதை(ஆதரவற்ற)க் குழந்தையைக் கண்டவுடன் அழாமல் இருக்க முடியவில்லை. அவள் தன் துப்பட்டாவில் என் கண்ணீர் துடைத்து “என்ன ஆச்சு? ஏன் அழரிங்க” எனக் கேட்க, நான் காரணம் சொன்னேன். அதற்கு அவள் “அப்போ, வாரவாரம் என்னைப் பார்க்க வருவிங்கதானே அண்ணா?” என்று குழந்தை தனமாகக் கேட்க மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக் கொண்டு வந்திருக்கிறேன். உண்மையில் அவளை என் அம்மா’வாகத்தான் பார்த்தது மனது. அப்போது மனசாட்சி பேசியது, அம்மாவை எவ்வளவு இழந்து கொண்டிருக்கிறேன் என்று. அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றும் சொல்லியது. இந்த புதிய அனுபவத்தில் நண்பர் ஷண்முகவேலுவும் நெகிந்துதான் போனார், நிச்சயம் மாதமொருமுறையாவது வருவதை சொல்லி இருக்கிறார்.

விஜயலட்சுமியுடன் நான்: 


குழந்தைகள் சிலர்:


இனியும் அம்மாவைத் தவற விடக்கூடாது என்று நினைக்கிறேன், தினமும் அடிக்கடி அழைத்துப் பேசி விடவேண்டும். மனதில் உள்ள அனைத்தையும் கொட்டி விட வேண்டும் அவளிடம், அவள் மட்டுமே நிம்மதி தருபவள், ஏனென்றால் அவள் "அம்மா".


பி.கு: “அடுத்த தடவ வரும்போது நிறைய ஃப்ரெண்ட்ஸ்’ஸ கூட்டிட்டு வாங்க” என்று குழந்தைகள் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். பார்ப்போம். நண்பர்கள் யாராவது வருவதாய் இருந்தால், தொடர்பு கொள்ளவும். அவர்களுக்கு தேவை அரவணைப்பே அன்றி வேறொன்றும் இல்லை.
10 comments:

amas said...

Your mother is very lucky to have you as her son as you are to have her as your mother, since you cannot be so nice without she having brought you up like this. The little girl Vijayalakshmi is so pretty. Tell her that when you see her next time. May you be blessed with all the great things in life :)
amas32

loganathan.s @raz_funz said...

மச்சி நாம போறோம் ...

நந்தா ஆண்டாள்மகன் said...

நல்ல பதிவு ....

கோமாளி செல்வா said...

Rompa rompa santhosama iruku machi:-) randu time padichen. Unmailaye oru feeling varuthu. Mudinja alavu adikkadi poitu va. Athe mathiri amma pathi sonna sollitte irukalam! ( mobile la irunthu comment podurathala english)

Anonymous said...

ஹெலோ நண்பா இன்றைய இளைஞர்கள் எதில் எல்லாமோ மனதை சிதற விட்டு பணத்தை அழித்து உடலை கெடுத்து கொண்டு இருக்கும் போது இப்படி ஒரு நல்ல காரியம் செய்த உனக்கும் உன் நண்பனுக்கும் தலை வணங்குகிறேன்
hats of u my dear friends!

kullabuji said...

## சிறந்த பதிவு ##


எனக்கு இப்படி ஒ௫ விலை மதிப்பில்லா வாய்ப்பை வழங்கிய உனக்கு முதலில் என் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


வாழ்வில் மறக்க முடியா த௫னம் 19/06/2011(5pm).

நமது பயணம் தொட௫ம்.

kullabuji said...

## சிறந்த பதிவு ##


எனக்கு இப்படி ஒ௫ விலை மதிப்பில்லா வாய்ப்பை வழங்கிய உனக்கு முதலில் என் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


வாழ்வில் மறக்க முடியா த௫னம் 19/06/2011(5pm).

நமது பயணம் தொட௫ம்.

JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்) said...

நல்ல பதிவு... வாழ்த்துக்கள் நண்பா

moorthy said...

மிகவும் நல்ல பதிவு

Meena said...

அம்மாவின் மீது இத்தனை பாசமும் நன்றியும் வைத்திருக்கும் உங்களுக்கு
அவருடைய ஆசிகள் எந்த நிமிஷமும் உண்டு. உங்களுடைய இந்த துடிப்பு
உங்கள் அம்மாவிற்கு புரியும் பொழுது அவர் ஆனந்தக் கண்ணீரும் மன நிறைவும்
என்றென்றும் பெறுவார்