தமிழ் ட்விட்டர் விருதுகள் ஜூலை’11 (#TTA)ஜூலை  மாதத்தில் ட்விட்டரில் சிறப்பாக ட்விட்டியவர்களுக்கான விருதுகள். சிறந்தவர்களை தேர்வு செய்து வெற்றிபெறச் செய்யுங்கள்.தொடர் ட்வீட்ஸ்'களை ஊக்குவிக்கும் பொருட்டு இம்மாதம் சிறந்த தொடர்-ட்வீட்ஸ் விருது சேர்க்கப்படுகிறது. இது போன்ற தொடர் ட்வீட்கள் இனி வரூம் மாதங்களில் தொடரும் பட்சத்தில் இவ்விருது தொடரும். சமூக ஆர்வலர், என்சைக்ளோபீடியா விருதுகளுக்கு பெரும்பாலும் விருது பெற்றவர்களே தகுதி பெறுவதால், அவ்விருதுகள் தற்சமயம் நிறுத்தி வைக்கப் படுகின்றன. வருங்காலங்களில் புதிய ட்விட்டர்கள் இவ்விருதுகளுக்கு தகுதி பெரும் பொருட்டு, சமூக மாற்ற சிந்தனைகள், அரிய தகவல் பரிமாற்றம் போன்றவற்றில் ஈடுபட வலியுறுத்தப் படுகிறது. 

நன்றி.


ஒரு ஊரில் அழகே உருவாய்...தோழிகளை கடுப்பேற்றி ரசிப்பதன் சுகமே அலாதி. அதிலும் அவர்களின் "பொஸஸிவ்னஸ்"ஐ சீண்டி ரசிப்பதில் ஆனந்தமோ ஆனந்தம் தான். அப்படி என் தோழியை கடுப்பெற்றி ரசித்த ஒரு SMS நிகழ்வுதான் இது.

நான்: ஹாய் டா....

தோழி: சொல்லு டா செல்லம். என்ன பண்ற? எங்கடா இருக்க? உன்னை பார்க்கணும் போல இருக்கு.

நான்: நான் இப்போ பஸ் ஸ்டேண்ட்’ல இருக்கேன் மா. உன்ன பாக்க தான் கிளம்பிட்டேன். இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவேன். :) 

(இந்த அரை மணி நேரம் எவ்ளோ கடுப்பாக போறான்னு தெரியாமலே..)

தோழி: அய்யோ.. ச்ச்சோ ச்ச்வீட் டா.. சீக்கிரம் வாடா செல்லம்.

நான்: வேய்ட்டீஸ்.. இரு பஸ் ஏறிக்கிறேன். அப்புறம் மெசேஜ் பண்றேன்.

தோழி: என்ன டா பஸ் ஏறிட்டியா?

தோழி: செல்லம், மெசேஜ் பண்ணுடா.

தோழி: சீட் கெடச்சுதா டா.

தோழி: டேய்... இன்னுமா பஸ் ஏறல.

தோழி: :)

தோழி: :(

தோழி: (எம்டி மெசேஜ்)

#(நான்: மனதிற்குள், அடிப்பாவி, ஒரு அஞ்சு நிமிஷம் பஸ் ஏறி மெசேஜ் பண்றதுக்குள்ள ஆயிரம் மெசேஜ்)

நான்: i got the bus.#(கோவமா இருக்கிறதா காட்டிக்கணும், அதனால இங்க்லீஷ்)

தோழி: என்னடா கோவமா இருக்கியா? #(அட! என்ன எப்படி புரிஞ்சு வெச்சுருக்கா பாருங்க)

நான்: no.

தோழி: என்னாச்சு டா செல்லம். சாரி உன்ன கோவப் படுத்தி இருந்தா.

நான்: பரவால்ல #(நமக்கு சீக்கிரமா உருகுற மனசுங்க)

தோழி: என்ன கலர் டிரெஸ் போட்ருக்க, நானும் அதே கலர்’ல போட்டு வரேன்.

நான்: லைட் ப்ளூ ஷர்ட், ப்ளாக் பேன்ட்.

தோழி: சூப்பர் டா. அதுல நீ ரொம்ப க்யூட்’டா இருப்ப. நான் அப்போ அந்த ப்ளூ சுடி போட்டு வரேன்.

நான்: டி டி டி... பஸ் ல ஒரு சூப்பர் பொண்ணு.

தோழி: டேய்.... வேணாம்.

நான்: செம க்யூட், லவ்லி டா. பிங்க் கலர் டிரெஸ் போட்ருக்கா.

தோழி: எம்டி மெசேஜ் #(கோவமா இருக்காங்களாம்)

நான்: என்னையே பாக்குறா டா. வெயிட்டீஸ். நான் அப்புறம் மெசேஜ் பண்ணுறேன். :)  

தோழி: நீ மெசேஜ் பண்ணவே வேணாம். போ.

#(அப்புறம் ஒரு அஞ்சு நிமிஷம் நான் மெசேஜ் பண்ணல)

தோழி: :( #(ஃபீல் பண்றாங்களாம்)

நான்: நிஜமா அவ அழகா இருக்கா டா.

தோழி: இப்போ எங்க இருக்க?

நான்: அவ பேரு ஷக்தி. அவ அம்மா அவள கூப்பிட்டப்போ கேட்டேன்.

தோழி: இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் நீ வர.

நான்: அவ அம்மாவுக்கு நான் எழுந்து இடம் கொடுத்தேனா அவ என்ன பாத்து சிரிச்சா டா. தேங்க்ஸ்’ன்னு சொன்னா. என்னா ஸ்மைல்..! ஆஸ்ஸம். அழகு டா.

தோழி: வேற ஏதாச்சும் பேசுறியா? #(இதுக்கு பேரு பொறாமை, கேட்டா பொஸஸிவ்னஸ்’ன்னு சொல்லுவா)

நான்: என்னையே பாத்துட்டு இருக்கா. எனக்கு என்னென்னமோ பண்ணுது. ப்ளீஸ் நான் அப்புறம் மெசேஜ் பண்றேன்.

தோழி: #(இரண்டு மிஸ்டு கால், நான் எதுவும் ரிப்ளை பண்ணல)

தோழி: அவள புடிச்சிருந்தா, அப்படியே அவகூட போயிடு. பிடிக்காம யாரும் என்ன பாக்க வர வேணாம்.

நான்: :) (ஸ்மைலி மட்டும்)

தோழி: நிஜமா உனக்கு என்ன பிடிக்கலையா டா. நான் வேணாமா?

நான்: பிடிச்சிருக்கு.

தோழி: அப்புறம் ஏன் அவள பத்தி பேசி உசுர வாங்குற.

நான்: நிஜமா அவ அழகா இருக்கா டா. அழக ரசிக்கிறது தப்பா.?

தோழி: நீ ரசி, என்னமோ பண்ணு. என்கிட்டே சொல்லாத. #(கடுப்பாயிட்டா)

நான்: அத விடு. அவளும் உன் ஸ்டாப் தான். ப்ளீஸ் டா. பஸ் ஸ்டாப்’க்கு வந்துடு.

தோழி: நான் யாரையும் பாக்க விரும்பல.

நான்: ஏய். விளையாடத. நாங்க இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவோம்.

தோழி: “நாங்க”ன்னு சொல்ற போடா. என்கிட்டே பேசாத. அப்ப என்ன விட அவ அவ்ளோ முக்கியமா போய்ட்டாளா.

நான்: ப்ளீஸ் ப்ளீஸ். கோச்சுக்காத டா. பஸ் ஸ்டாப் வந்துடு. அவள நீ கண்டிப்பா பாக்கணும். அப்புறம் நாம கோவிலுக்கு போலாம்.

தோழி: வேணாம். நான் வரல. மனசு சரி இல்ல. இன்னொரு நாள் பாக்கலாம்.

நான்: அப்ப அவ்ளோதானா? சரி நான் போறேன். இனி நீ  கூப்பிட்டாலும் வர மாட்டேன்.

தோழி: #(எம்டி மெசேஜ்)

நான்: வர முடியுமா, முடியாதா?

#(இரண்டு நிமிடங்கள் மெசேஜ் வரல, அவ மொபைல் சுவிட்ச் ஆப். இரண்டு நிமிடங்கள் கழித்து)

தோழி: சரி, வரேன். ஆனா அவள பாக்க மாட்டேன்.  அவள பத்தி நீ பேச கூடாது.

நான்: ச்சோ.... ச்வீட்... J

#(பஸ் ஸ்டேண்டில் காத்திருக்கிறாள், என்னைப் பார்த்ததும் கோபமாய் முகத்தை திருப்பிக் கொள்ள)

நான்: ஹாய் டா. என்ன கோவமா?

#(பதிலில்லை)

நான்: அங்க பாரு ஷக்தி.

தோழி: நான் பாக்க மாட்டேன்.

#(நான் அவள் முகத்தை தூக்கி, திருப்பி ஷக்தியை காட்ட, லேசாய் புன்னகை. அது கோபத்தோடு கூடிய அழகிய மந்திரப் புன்னகை)

நான்: அதுதான் ஷக்தி. ரெண்டு வயசு. இது அவங்க அம்மா அப்பா. அங்கிள் பாப்பா’வ கொடுங்க.

#(ஷக்தியை வாங்கி அவளிடம் கொடுக்கிறேன்)

#(கோபமும், மகிழ்ச்சியும், அதிர்ச்சியுமாய் என்னவளின் முக பாவனைகள் கண்ட எனக்கு, விவரிக்க முடியாதபடி ஒரு சந்தோஷம்)

தோழி: குட்டிப் பாப்பா பேரு ஷக்தியா? #(என்று அவளைக் கொஞ்சி ஒரு முத்தம் கொடுக்க, அவளிடம்  வாங்கிய முத்தத்தை என்னிடம் கொடுத்துச் சென்றாள் ஷக்தி.)

டிஸ்க்ளைமர்: இப்படி ஒரு தோழி இருந்து, இப்படியெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று கற்பனையில் எழுத்தப்பட்டதே இந்த பதிவு.


இளைய நிலா அர்ஜுன் எக்ஸ்க்ளுசிவ்குறும்படங்களின் ஷங்கர் என்றறியப்படும் கார்க்கி அடுத்த வேட்டைக்கு தயார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் அறிமுகமாகிறார் “வேதாளம்” என்கிற “அர்ஜுன்”. படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில், தமிழ் குறும்பட உலகில் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் ரசிகர்மன்றங்களும் கட்-அவுட்’களும் என்று குறும்பட உலகில் ஒரு “பவர் ஸ்டாராக” உருவாகியிருக்கிறார் வேதாளம். திரை உலகில் அவ்வப்போது பல ஸ்டார்கள் தோன்றி மறைத்தாலும், இவரின் வரவு தமிழ் குறும்பட உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த புராஜெக்ட்’டுகள் என்று பிசியாக இருக்கும் வேதாளத்தின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி.

*** உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்..
        நானே கொஞ்சமாத்தான் இருக்கேன்(சிரிக்கிறார்). கொஞ்சமா இருக்கிறது முக்கியம் இல்ல, பொண்ணுங்க கொஞ்சுற மாதிரி இருக்கேன் அதான் முக்கியம். பொறந்தது, வளந்தது(??) எல்லாம் கேரளா. ஆனால் தமிழ் தான் என் மூச்சு, பேச்சு, வாட்சு.. அதனாலதான் தமிழ் திரை உலகத்துக்கு ஒரு கலைத் தொண்டு செய்யணும்ன்னு கிளம்பிட்டேன்.

*** இந்த படத்துல உங்க ரோல் என்ன?
        எந்த காலத்துல இருக்கீங்க நீங்க?. எங்க படத்துல ரோல் எல்லாம் இல்ல. எல்லாமே டிஜிட்டல் தான். “உங்களுக்கு என்ன டிஜிட்டல்’ன்னு கேளுங்க பதில் சொல்லுறேன்?”

*** படத்தோட கதை?
        கதை.... பெருசா சொல்லுற மாதிரி ஒண்ணும் இல்ல, ஆனா தமிழ் குறும்பட உலகில் இது ஒரு புது முயற்சியா இருக்கும். பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். இதுக்கு மேல எதையும் சொல்லக்கூடாது’ன்னு டைரக்டர் சத்தியம் வாங்கிட்டாரு.

*** உங்க பொழுதுபோக்கு?
        எல்லா கலாரசிகனைப் (பக்கத்து வீட்டு கலா அல்ல) போலவும் அடுத்தவங்கள போழுதுபோக்குறதுதான் என் பொழுதுபோக்கு.

*** நடிப்புல உங்க குருவா யார நினைக்கிறீங்க?
தமிழ்ல கமல்ஹாசன், ஹிந்தில அமிதாப்பச்சன்.

*** பிடிச்ச படம்..?
        எங்க படம்தான். போனவாரம் தான் படம் “பிடிச்சோம்”, ரொம்ப மொக்கைய போட்டுட்டேனோ? “கிக்குஜிரோ, பதேர் பாஞ்சாலி” பிடிக்கும் (கெத்தாக சிரிக்கிறார்). குறும்படங்கள்ல நளன் படங்கள், “பண்ணையாரும் பத்மினியும்” (சத்தியமா குறும்படம் தாங்க) பிடிக்கும்.

*** உங்களுக்கும் அமலா பால்’க்கும் பத்திகிச்சு’ன்னு கிசுகிசு வருதே அதப்பத்தி என்ன சொல்ல வரீங்க?
        இந்த படத்தோட ப்ரோமோ ஸ்டில்ஸ் பாத்துட்டு, அடுத்த படத்துல சான்ஸ் வேணும்’ன்னு கேட்டாங்க. ஏற்கனவே நிறைய பேர் வெயிட்டிங் லிஸ்ட்(??)ல இருக்கிறதுனால முடியாதுன்னு சொல்லிட்டேன். அப்புறம் அப்பப்போ கால் பண்ணுவாங்க. நாங்க நல்ல நண்பர்கள் அவ்ளோதான்.

*** உங்க லட்சியம் என்ன?
        நான் சீக்கிறம் வளர்ந்து பெரியவனாகி வெள்ளித்திரைல ஒரு ரவுண்டு வரணும். அதுக்கான முயற்சில தான் இருக்கேன். “தமிழ்ப்படம்” படத்துல சிவா ஓட்டுன சைக்கிள தேடிக்கிட்டிருக்கேன்.

*** “இளைய நிலா” பட்டம் எப்படி வந்தது?
எங்க டைரக்டர் கார்க்கி அணில் ஃபேன், நானும் நல்லா உ’டான்ஸ் ஆடுவேன், அதனால அவரு அப்படி வெச்சுருக்கலாம். நல்லாத்தானே இருக்கு.

*** அரசியல்?
        ஹெவி காம்படிஷன், தங்கபாலு, திருமா ன்னு பல பேரு இருக்காங்க. அதனால நான் ஒரு அதிரடி ஸ்டார் ஆகிட்டு அப்புறமா அரசியலுக்கு வரலாம்ன்னு பாக்குறேன். ஆனா ஒரு விஷயம், நல்லவேளை ஆட்சி மாறிடுச்சு இல்லன்னா என் படம் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்திருக்கும்.

*** உங்க ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறிங்க?
        நான் தனியாப் பேச விரும்பல. அப்படி பேசித்தான் ஆகணும்னா “இனிமே எல்லாம் அப்டித்தான்”


திடீரென டைரக்டரிடமிருந்து "கால்" வர, வணக்கம் சொல்லி "கிளம்புங்க காத்து வரட்டும்" என்று சொல்ல தலை தெறிக்க திரும்புகிறோம்.

தெய்வத்திருமகள் விமர்சனம்
ஒரு தெய்வத்திருமகனுக்கும் அவனுடைய தெய்வத்திரு”மகள்”க்குமான தந்தை-மகள் பாசப்பிணைப்புப் போராட்டம் தான் கதை.

கிருஷ்ணா(விக்ரம்) ஊட்டியில் ஒரு சாக்லேட் தொழிற்சாலையில் வேலைசெய்யும் ஒரு தொழிலாளி, சொன்ன வேலைகளை சரியே செய்ய தெரிந்த, மார்க்கெட்டுக்கு போய் வரத்தெரிந்த, சாலை விதிகளை கடைப்பிடித்து வாழத் தெரிந்த ஒரு மனநிலை குன்றியவர்.  அவருக்கென அவரைப்போலவே நாலு நண்பர்கள். குழந்தை பிறந்தவுடன் மனைவி இறந்துவிட, குழந்தையை வளர்க்கும் பொறுப்பு குழந்தையாகவே உள்ள கிருஷ்ணாவினுடையதாகிறது. குழந்தை அழும்போது என்ன செய்ய வேண்டும் என்பது கூடத்தெரியாமல் முழிக்கும் விக்ரமிற்கு, உடன் பணி புரியும் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவி உதவி செய்ய ஒரே பாடலில் குழந்தை “நிலா” வளர்கிறாள், பள்ளி செல்லும் வயது வர, நிலாவை ஒரு கான்வென்டில் சேர்க்கிறார். பள்ளியின் கரஸ்பாண்டன்ட் அமலா பால்,  கிருஷ்ணாவின் காதல் மனைவியின் தங்கை. அங்கு ஆரம்பிக்கிறது பிரச்சினை. அமலா நிலாவைப் பற்றி தந்தையிடம் சொல்ல, அந்த பணக்கார தாத்தா நிலாவை தூக்கிச்செல்கிறார்., விக்ரம் அவர்கள் மேல் வழக்குத் தொடர கோர்ட்டுக்கு வருகிறார். வக்கீல்கள் அனுராதா(அனுஷ்கா), வினோ(சந்தானம்) அவர்களின் உதவியோடு எப்படி வழக்கில் வெல்கிறார்கள் என்பது மீதிக்கதை.


தரமான விக்ரம் படம், வரலாற்று விமர்சன வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால் “விக்ரம் கிரிஷ்ணாவாகவே வாழ்ந்திருக்கிறார்”. அனுஷ்கா, குழந்தை நிலா ஆகியோரும் விக்ரமிற்கு ஈடு கொடுத்து நடித்துள்ளனர். நிலா கேட்கும் கேள்விகளுக்கு விக்ரம் சொல்லும் பதில்கள் சுவாரஸ்யம். கை அசைவுகளிலேயே பேசிக்கொள்கிறார்கள். நிலாவின் ஒவ்வொரு அசைவுகளும் ரசிக்க வைக்கிறது. அருந்ததிக்கு பிறகு இந்தப் படத்தில் அனுஷ்காவின் நடிப்பு பேசப்படும். கதையோடு ஒன்றி வரும் சந்தானம் டைமிங் காமெடி நன்று. நாசரின் இயல்பான நடிப்பும் கதைக்கு பலம் சேர்க்கிறது. அமலாவை அழகுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.


படத்தின் மற்றொரு பிளஸ், ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை மற்றும் பாடல்கள். “கதை சொல்லப் போறேன்” பாடல் கிராஃபிக்ஸ் கலக்கல். “விழிகளில் ஒரு வானவில்” பாடல் அல்ட்ரா மோஷன் கேமரா கொண்டாட்டம். ஒளிப்பதிவாளர் விளையாடியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு ஒவ்வொரு காட்சிகளையும் ரசிக்க வைத்ததில் இயக்குனர் விஜய்க்கு ஒரு சபாஷ்..


படத்திற்கு மைனஸ் என்று பார்க்கப்போனால், விக்ரமின் கேரக்டர். ஒரு மனநிலை குன்றியவருக்கு இவ்வளவு தெரிந்திரிக்கிறதா என்பதில் லாஜிக் இடிக்கிறது. படத்தின் மற்றொரு சொதப்பல், கிளைமாக்ஸ். கோர்ட்டில் நாசர் “நிலா உன்கூட இருந்தா நீ நிலாவ பாத்துக்க மாட்ட, நிலா தான் உன்ன பாத்துக்கணும்”, ”உன்னால அவள டாக்டரா இல்ல, ஒரு நர்ஸா கூட ஆக்க முடியாது” என்று சொல்வதைப்புரிந்து கொண்டு நிலாவை அமலாவிடம் ஒப்படைப்பதெல்லாம் ரொம்ப ஓவரு.


ஆனால் இதையெல்லாம் ஒதுக்கி விட்டு ஊட்டியின் அழகான காட்சிகளுக்காகவும், விக்ரம், நிலாவின் இயல்பான நடிப்புகளுக்காக மட்டுமே பார்ப்போமெனில் கலங்கும் கண்கள் நிச்சயம்.


ஆண்கள் ஜாக்கிரதை- ஒரு சீட்டிங் சாட்டிங்
தற்சமயம் தமிழ் இணையத்தில் பெரிதும் வலம் வந்து கொண்டிருக்கும் வார்த்தைகள் சாட்டிங்-சீட்டிங். இதைக்குறித்து விரிவாக பலரும் எழுதிவிட்டனர். இதைக்குறித்து சில கட்டுரைகளைப் படித்தபின் மனதிற்குள் ஒரு நெருடல். இந்த சாட்டிங் விஷயங்களைப் பற்றி எழுதியவர்கள் பலரும் ஆண்களையே குற்றவாளிகளாக்கி எழுதியிருக்கின்றனர். இப்போது நான் சொல்லப் போகும் விஷயத்தினால் நான் யாரு’க்கோ வக்காலத்து வாங்குவதாக எண்ணி விட வேண்டாம். எனக்கு யாரைப்பற்றியும் எதுவும் தெரியாது. பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டியே இந்த டிஸ்க்ளெய்மர்’ஐ இங்கு சேர்க்க வேண்டி உள்ளது. ஒரு பொதுவான கண்ணோட்டத்தில் நான் கண்ட ஒருவரைப் பற்றியும், சில சம்பவங்களையும் இங்கு சொல்கிறேன்.


கல்லூரி சேர்ந்த புதிதில் வளரும் நட்பு வட்டத்தில் பலரும் கூட, புதிய பலருடன் கல்லூரி ஆரம்பித்தது. இதில் பெண் தோழிகளும் உள்ளடக்கம். இது நடந்தது ஒன்றும் எண்பதுகளிலோ, தொண்ணூறுகளிலோ கிடையாது. ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னால் அவ்ளோதான். எனவே வந்தவர்கள் மூன்றாம் தலைமுறையின் முதல் வித்துக்கள்.  பழைய கல்லூரி கதைகளில் வரும் அம்மாஞ்சிகளாக இல்லை யாரும். ஊரையே விற்றுவிடும் திறமைசாலிகளாகத் தான் வந்து சேர்ந்தனர் பலரும். வழக்கம் போல மூன்றாம் தலைமுறை என்றாலே பிரச்சினை தானே, அதே தான் இங்கும். “இதை ஆண்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமா?// பெண்களால் முடியாதது ஒன்றும் இல்லை” என பெண்ணியம் பேசும் பலரும் தோழிகள் ஆயினர். தோழிகள் என்ற ஒரு காரணத்திற்காக அர்த்தமற்ற பல விவாதங்களுக்கும் தலை அசைத்துப் போக வேண்டி இருந்தது. அந்த சமயங்களில் மௌனம் மட்டுமே எல்லாம் தெரிந்தவர்களிடமிருந்து என்னைக் காக்கும் ஆயுதமாகப் பட்டது. பல சமயங்களில் கோழையாகவும் பார்க்கப் பட்டேன். இப்போது இது பிரச்சினை இல்லை. பிரச்சினை வேறு.


நான் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் ஆரம்பித்திருந்தன, அந்த காலகட்டத்தில்தான் இங்கு மொபைல் போன்கள் வெகுவாக வளர்ச்சி கண்டு வந்தன. வெளியூரிலிருந்து ஹாஸ்டலில் தங்கிப்படிக்கும் பல மாணவியருக்கும் மொபைல் அத்தியாவசியமாகப் பட்டது ஒரு தொலைத்தொடர்பிற்க்கு. இந்த அத்தியாவசியம் ஆடம்பரமாக வெகு நாட்கள் பிடிக்கவில்லை எங்கள் வட்டத்திற்குள். மேலும் பலரும் கெட்டுப் போவதற்கு ஏதுவாகவும் இருந்தது இந்த மொபைல் போன்களே. மொபைல் போன்களின் வளர்ச்சியின் வேகத்தில் காதல்களும் பெருகின. அது போன்ற ஒரு “தெய்வீகக் காதலை”ப் பற்றி தான் சொல்ல இங்கு வந்தேன்.


.... அவள் பெயர் உஷா. மா நிறம். திருச்சி தான் ஊர், அப்பா பெரிய தொழிலதிபர். வீட்டிற்கு ஒரே பெண். இதற்கு மேலும் எதுவும் சொல்ல தேவை இல்லை. நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள், இருந்தாலும் தொடர்கிறேன். குணாதிசயங்களைச் சொல்லவேண்டுமெனில் நல்ல பெண், கிளியோபாட்ராவின் மறுபிறவி என தன்னை நினைத்துக் கொள்(ல்)பவர். பலரிடமும் பயமின்றி தாராளமாக(?) பேசும் சோஷியலிஸ்ட். இதனாலேயே தூண்டில் போட்ட பலரும், மீன் சிக்கிய பின்னும் நரம்பை அறுத்து தப்பி ஓடினர். எந்த நேரத்திலும் யாருக்கும் SMS அனுப்பத் தயங்காதவர். இவை அனைத்தையும் தெரிந்த பின்னும் நட்பு பாராட்டிய என் நண்பர்கள் சிலரிடம், தான் பள்ளியிலே ஒருவரைக் காதலித்ததாகக் கூறியிருக்கிறார். (குழப்பங்களைத் தவிர்க்க வேண்டி உஷா’வை இவள் என்று குறிக்கிறேன்). அவரிடம் இவளே சென்று காதலை ப்ரப்போஸ் செய்ததாகவும், கொஞ்ச நாட்கள் காதலித்து விட்டு அவன் கழட்டி விட்டு சென்றதாகவும் இவள் கூறியிருக்கிறாள். தன் சோஷியலிஸ்ட் தோழிக்கு ஒன்று என்றால் தட்டிக் கேட்கப் புறப்பட்ட பல நண்பர்களும் அவனைப் பிடித்து விசாரித்ததில் இவளைப் பற்றிய சுயரூபம் வெளிவந்தது, முதன்முதலில். +2 முடித்து வீட்டில் வசதி இல்லாததால் இஞ்சினியரிங் படிக்க முடியாமல் கேட்டரிங் செய்து கொண்டிருந்த அவனி(ரி)டம் “நீ இஞ்சினியரிங் படிக்கல, நான் வேற ஊர் போறேன். நமக்குள்ள ஒத்து வராது என்ன விட்டுடு” என்று சொல்லி இவள் தான் அவரைக் கழட்டி விட்டிருக்கிறாள். நம்ப முடியாமல் நண்பர்கள் மிரட்டிக் கேட்க “நான் பொறியியல், நீ பொரியல் ரெண்டுக்கும் ஒத்துவராது, ப்ளீஸ் என்ன தொந்தரவு பண்ணாத” என்ற இவளனுப்பிய கடைசி SMS’ஐ சாட்சியாக வைத்து கதறியிருக்கிறார். இருந்தாலும் இந்த விஷயங்கள் கல்லூரி வட்டத்தில் வெளிவராமல் ரகசிமாக்கப்பட்டன, இவள் ‘சோஷியலிஸ்ட்’ என்னும் ஒரே காரணத்தினால். இதற்கிடையில் காதல் தோல்வி என்று விளம்பரப்படுத்திக்கொண்ட இந்த பெண் தேவதாஸ்(??)’ன் அலம்பல்களை சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது.


வெகு சீக்கிரமே நார்மல் ஆகி விட்ட இவளுக்கு, “ஆள்” இல்லாத காரணத்தினால் ஒரே சமயத்தில் பலருக்கும் SMS பறந்தது. மொபைல் ரீ-சார்ஜ் முதல் ATM பணம் வரை எல்லாம் இருந்த இடத்திலேயே கிடைத்தது, இவள் தான் சோஷியலிஸ்ட் ஆயிற்றே. திடீரென நண்பர்கள் அத்துணை பேருக்கும் ஆப்பு வைக்கும் விதமாக நிகழ்ந்தது ஒரு நிகழ்ச்சி. “World SMS Day” என்று எவனோ ஒருவன் ரேண்டமாக இவளுக்கு SMS செய்திருக்கிறான். கஸ்டமர்கேராக இருந்தாலும் திருப்பி ரிப்ளை பண்ணும் இவள், அந்த ‘Stranger’ க்கும் ரிப்ளை செய்திருக்கிறாள், நிஷா என்ற பெயரில். அந்த புதியவன் தன்னை ஒரு இரண்டாமாண்டு மாணவனாகவும், சென்னையில் வசிப்பதாகவும், பெயரை குரு என்றும் அறிமுகப்படுத்தியிருக்கிறான். அதன் பிறகென்ன.. ஒரே போன் கால்கள் தான், SMS’கள் தான். நண்பர்களின் வயிற்றெரிச்சலில் ஒரு ‘காதல் கோட்டை’ உருவாகிக் கொண்டிருந்தது. ஒரு மாதத்தில் எல்லாம் பேசிப் பழகி, பிடித்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதென முடிவு செய்யப்பட்டு, இடம் கல்லணை என முடிவு செய்யப்பட்டது. எதற்கும் உதவும் நண்பர்கள் இதற்கும் உதவியாக வேண்டுமே? போய்ப் பார்த்ததில் ஆள் சுமார் என்றும், கல்லூரி மாணவன் போல் இல்லை என்றும், கொஞ்சிக் குலாவியதில் பாதியிலேயே தலைதெறிக்க தப்பி வந்ததாகவும் தெரிவித்தனர். தீர விசாரித்ததில் அவர் எங்கோ சூப்பர்வைசராக வேலை செய்வதாக சொல்லியிருக்கிறார் இவளிடம். நாட்கள் செல்லச்செல்ல நெருக்கம் அதிகமானது. வார இறுதிகளில் வேறு தோழி வீட்டிற்கு செல்கிறேன் என்று பொய் சொல்லி அவரைப் பார்க்க செல்வது என பல களேபரங்கள் நடந்தேறியது. இடைப்பட்ட காலத்தில் நடந்த ஏதோ ஊடலில் “அவன் சரியான ஃபிராடு, அவன் சூப்பர்வைசர் இல்ல, ஏதோ இன்சூரன்ஸ் கம்பெனில வேல பாக்குறான், என்ன ஏமாத்திட்டான்” என நண்பர்களிடம் உண்மையை உளறியிருக்கிறாள். பிறகு ஊடல்கள் சமாதானமாகி “காதல் கோட்டை” தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. புதன்கிழமைகளில் ஹிந்து பேப்பர் வாங்கிக் கொண்டு கல்லூரியில் சீன் போடுவாள், கேட்டால் “எங்க மாமாவுக்கு வேலை தேடுறேன்” என்று ஏதாவது விளம்பரங்களைக் கத்தரித்துக் கொண்டிருப்பாள். இருந்தாலும் அவரைப் பாராட்டித்தான் ஆக வேண்டும் வாங்கும் ஐந்தாயிரத்திலும் இரண்டாயிரத்தை இவளுக்காக செலவு செய்த உத்தமன், உண்மையாக காதலித்து வேறு தொலைத்து விட்டார். வீட்டில் பார்த்த பெண்களையும் இவளுக்காக வேண்டாமென்று ஒதுக்கியிருக்கிறார். இப்படி பல கடுப்புகளையும்,பல காதல்களையும் சகித்துக் கொண்டு கல்லூரி படிப்பை முடிக்க வேண்டியிருந்தது. அதன் பின் எந்த ஒட்டுமில்லை, உறவுமில்லை. சில மாதங்கள் கழித்து நண்பர்கள் அழைத்திருந்தனர் “நம்ம ‘குரு’வுக்கு கல்யாணம் வர்றியாடா” எனக் கேட்க, குழம்பிப்போய் அப்ப உஷா? என்று கேட்ட கேள்விக்கு அவர்கள் சொன்ன பதில் அதிரவைத்தது. “டேய், இப்போ நம்ம உஷா Status’சே வேற டா. ஏதோ MNC’ல செலக்ட் ஆயிட்டா, மாசம் 20000 சம்பளம். இப்போ எங்களை எல்லாம் மதிக்கிறதே இல்ல டா”, என்று சொன்ன அவர்களிடம் “அப்ப காதல் கோட்டை?” என கேட்க “அவளப் பத்தி உனக்கு தெரியாததாடா, எனக்கு இருபதாயிரம் சம்பளம், நீ ஒரு நாப்பதாயிரம் வாங்கினாத் தான் நம்ம ஸ்டேட்டஸ் மேட்ச் ஆகும், அப்ப தான் எங்கப்பா ஓகே சொல்லுவாரு ன்னு கூலா சொல்லிற்று அவன கட் பண்ணிட்டாடா, பாவம் டா குரு சாகப்போயி கடைசில ஏதோ மாமா பொண்ண கட்டி வெக்க முடிவு பண்ணிட்டாங்க டா” என்று சொல்ல அவள் மேல் எரிச்சலாகவும் குரு’வின் மேல் பரிதாபமும் வந்தது.

டிஸ்கி 1: மேற்படி இவள் குரு’வின் திருமணத்திற்கே சென்று அலப்பறையை கூட்டியிருக்கிறாள்.
டிஸ்கி 2: பொதுவாக சாட்டிங்கில் சீட்டிங் செய்வது ஆண்கள் தான் என்ற பொதுவான கருத்திற்கு எதிராக இப்பதிவை வைக்கிறேன். இதில் நான் பொதுவாக பெண்களைப் பற்றி கூறவில்லை, உஷா என்ற ஒருத்தியைப் பற்றி மட்டும் தான் கூறியிருக்கிறேன், எனவே நோ டென்ஷன்..