என்ன தலைப்பு வைக்க?

“ஹே... நானும் பதிவேழுதுறேன்... நானும் பதிவேழுதுறேன்...” என்று ஆரம்பித்து மூன்று நான்கு மாதங்களாகி விட்டது. ஏதோ கதை, கவிதை, மொக்கை என்று வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதோ இன்னொரு புது(பழைய்ய்ய்...ய) முயற்சி. சின்னச் சின்ன விஷயங்கள் சிலவற்றை சேர்த்து அவியல், காக்டெயில், கொத்து பரோட்டா மாதிரியான ஒரு முயற்சிப் பதிவு. இதற்கு நீங்களே பெயர்(தலைப்பு) சூட்டுங்களேன்.

சென்ற வாரம் ஊருக்கு போயிருந்த போது பக்கத்து வீட்டு அம்முவுக்கு முதலாம் பிறந்தநாள் ஆயத்தத்தில் “பர்சேஸ்” போகலாம் என்று என்னையும் அழைத்துப் போயிருந்தனர். அம்முவை நான் தூக்கிக் கொள்ள, என் அம்மா, அம்முவின் அம்மா என ஆளுக்கொரு கவுன் எடுத்தனர் அம்முவுக்கு. அது மட்டும் போதாதென்று, டிரெஸ்’க்கு மேட்ச்சிங்’ஆக வேண்டுமென்று செருப்பு, பாசி, வளையல், கம்மல் என பட்டியல் நீண்டு கொண்டே போனது. நான் கேட்டே விட்டேன் என் அம்மாவிடம். “ஏம்மா? பசங்களுக்கு பொறந்த நாள்’ன்னா ஒரு சட்டை, ஒரு டவுசர்’ல முடிச்சுக்குவீங்க, பொண்ணுங்க’ன்னா மட்டும் என்ன ஸ்பெஷல்’ஆ?”. அதுக்கு அவர்கள் சொன்ன பதில். “பசங்கன்னா அப்படித்தான்டா, பொண்ணுங்களுக்கு தான் இதல்லாம் போட்டு அழகு பார்க்க முடியும்”. பாவம் பசங்க. எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க.

பார்த்து ஒரு வருடங்களுக்கு மேலாகி விட்டதே என்று என் அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தேன். அண்ணன் மகன் எங்கோ விளையாடச் சென்றிருந்தவன் நான் வந்திருப்பதை அறிந்து நான் அறியாமல் பின்னாலிருந்து வந்தவன், அவன் கைகளை என் கைகளுக்குள் நுழைத்து தலையை அமுக்கி “ஸ்மேக்” போட்டு விட்டான். உடனிருந்த அவன் நண்பன் படுக்கையில் “ஒன், டூ, த்ரீ” என்று அடித்துச் சொல்ல “நான் அவுட்’டாம்”. அவர்களிருவரும் “WWE... ஜான்...... சீனா....னா......” என்று குதூகலித்தார்கள். அடப்பாவிங்களா, நான்’லாம் சின்னப் பையனா இருக்கும்போது (இப்போ மட்டும் வளர்ந்துட்டியா?) கிச்சு கிச்சு மூட்டி விளையாடுவேன், கண்ணா மூச்சி விளையாடுவேன் அவ்ளோ தான். ஆனா இந்த கால பசங்க..

நண்பன் ஒருவனைப் பார்க்கப் போயிருந்தேன். வாழ்க்கையையே வெறுத்துப் போய் பேசிக் கொண்டிருந்தான். விசாரித்ததில் அவனுக்கு காஃபி டே’யில் வேலை கிடைத்திருக்கிறது, இவனும் “ஏ.சி லயே வேலை, ஜாலியா இருக்கும்” என்று போயிருக்கிறான். கொஞ்ச நாளிலேயே அங்கு நடக்கும் ரொமான்ஸ்’களைப் பார்த்து பையன் ரொம்ப வெறுப்பாகிவிட்டான். அவன் சொன்ன கதைகளைக் கேட்டு சிறிது நேரம் யோசித்த நான், “மச்சி, இன்னில இருந்து நீதான் டா என் குரு” என்றேன். “என்னடா சொல்ற, புரியலையே?” என்று பேக்கே பேக்கே என்று முழித்தவனுக்கு சொல்லி புரிய வைத்தேன். <போனவாரம் “சத்குரு சொன்ன ஜென் கதைகள்” என்ற ஒரு புத்தகம் படிச்சேன்’டா. அதில் “கோபம், எரிச்சல் இவற்றை அடக்கி, பற்றற்று வேலை செய்வதே ஒரு உண்மையான ஜென் நிலை” ன்னு போட்டிருந்துச்சு. நீயும் அப்படித்தாண்டா இருக்கே, அதனால தான் சொல்றேன் நீதான் மச்சி என் குரு> என்று கிண்டலடித்ததற்கும் மென்மையாக ஒரு புன்னகை செய்தான். ஒருவேளை உண்மையிலேயே ஜென்’னாக மாறி விட்டானோ?

என் கனவு தேவதையாக நினைத்திருக்கும் “கோபிகா”வுக்காக எழுதப் பட்ட சில ட்வீட் ஸ்வீட்ஸ்:

உன்னைக் காதலித்தால் காதல் கவிதை எழுதலாம். உன்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், வாழ்க்கைக் கவிதைதான் எழுதவேண்டும்.

கணவனாவதன் முதல் படி கவிஞனாவதுதான்! 

நில உச்சவரம்பு என்ற ஒன்று உள்ளதாம், ஆனால் நீயோ எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறாய். 

தேநீரல்ல, தேன் நீர்.... உன் விரல் பட்டதால்! 

என் தனிமையையும் உன் நினைவுகளால் நிரப்புகிறாய்..

உன் பெண்மையை விட மென்மை'யையே காதலிக்கிறேன்... 

குளக்கரையில் உன் கை பிடிக்க, உந்தன் சிணுங்கலில் உடைந்து சிதறிய கண்ணாடி வளையல்கள் குளத்தில் விழுந்து வண்ண மீன்கள் ஆகியதுவே!

உன்னை நினைத்து எழுதும் ட்வீட்டுகளும் ஸ்வீட்டுகள் ஆகின்றதே! 


#என்ன பதிவை பிடிச்சிருந்ததா? பதிவுக்கு ஒரு பெயர் வெச்சுட்டு போங்க. <அண்ணன் பேர் வெச்சுட்டு முருகேசி’க்கு 200 ரூபாய் மொய் செய்வார்>.


7 comments:

Natarajan said...

தயவுசெய்து #கோபிகா டேகை எடுத்துவிடவும். ரொம்ப தொந்திரவாக இருக்கிறது!

ராஜன் said...

நீ இன்னும் வளரணும் தம்பீ! எதுக்கும் அண்ணன் ஜாக்கியின் சாண்ட்வெஜ் நான்வெஜ்லாம் தவறாம படி(அது கொஞ்சம் லேட்டா வந்தாலும்)

கோகுல் said...

கூட்டாஞ்சோறு?
ஓகேவா?
ஓகேனா மொய் அனுப்புங்க.

DKCBE said...

மீ த பார்ஸ்ட்! படிச்சாச்சு. கமென்ட்டும் போட்டுட்டேன். இனி புதுசா பதிவு எழுதியிருக்கேன் படி படினு மெசேஜெல்லாம் அனுப்பி கொல்லாதே.

ILA(@)இளா said...

//படி படினு மெசேஜெல்லாம் அனுப்பி கொல்லாதே/
பதிவை விட இந்த பின்னூட்டம் அருமை :)

Anonymous said...

I too skipped the Gopika part. Otherwise good post :)
நான் கவனித்தவை என்று பெயர் வைக்கலாம்.
amas32

வந்தியத்தேவன் said...

நல்லாயிருக்கு ரொம்ப வெஜ்ஜாக இருக்கு இடைக்கிடை நான் வெஜ்ஜும் இருந்தால் தான் சூடு சுவையாக இருக்கும் ஹிஹிஹி. பெயர் நோ ஐடியா