ஏழாம் அறிவு வேலாயுதம் - COMBO விமர்சனம்

ஏழாம் அறிவுதற்காப்புக் கலைகளிலும், மருத்துவத்திலும் வல்லவரான போதிதர்மன், சீனா சென்று அங்கு அக்கலைகளை பரப்புகிறார். அனைத்தையும் கற்றுக் கொண்டுவிட்டு பலநூறு ஆண்டுகளுக்குப் பின் அவர்களே நமக்கு எதிரியானால்? ஏறக்குறைய இக்கலைகள் அனைத்தும் இங்கு அழிந்துவிட்ட நிலையில், இந்த எதிர்ப்பை எப்படி ஏழாம் அறிவின் உதவியோடு முறியடிக்கிறார்கள் என்பதே கதை.

முதல் பத்து நிமிடங்கள் விஜய் டிவியின் “நடந்தது என்ன?” போல போதிதர்மன் பற்றிய ஒரு டாக்குமென்டரியாக படம் தொடங்குகிறது. ஒரு கொடும் உயிர்க்கொல்லி வைரசிலிருந்து மக்களைக் காக்கிறார். தற்காப்பு கலைகளை சொல்லிக் கொடுக்கிறார். இதனால், போதி தர்மன் இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி விடக்கூடாது என்பதற்காக விஷம் வைத்து அவரை கொன்று விடுகிறார்கள். கதை நிகழ்காலத்திற்கு திரும்புகிறது.  

“Bio War”, ஆறாம் நூற்றாண்டு, மறு பிறவி என்று தசாவதாரத்தை கொஞ்சம் டிங்கரிங் செய்திருக்கிறார்கள். ஜெனிட்டிக் மெமரி என்னும் ஏழாம் அறிவில் ஆராய்ச்சி செய்யும் மாணவியாக ஸ்ருதிஹாசன். டி.என்.ஏ வில் பதிந்திருக்கும் பரம்பரை பண்புகளைத் தூண்டுவதன் மூலம் பரம்பரை குணங்களை ஒருவரின் உடலில் வெளிக்கொணர முடியும் என்று ஆராய்ச்சி செய்கிறார். அவ்வாறாக போதிதர்மனின் டி.என்.ஏ’வினை ஒத்திருக்கும் சூர்யாவைக் கண்டுபிடிக்கிறார். அதே சமயம், இந்தியாவை அடிமைப்படுத்த ஆப்பரேசன் ரெட் என்பதைத் தொடங்குகிறது சீனா. ஆறாம் நூற்றாண்டின் அதே வைரசை மீண்டும் கண்டுபிடித்து அதை இந்தியாவுக்குள் பரப்ப டாங் லீ என்பவரை இங்கு அனுப்புகிறது சீனா. இவ்வைரசிலிருந்து விடுபட போதிதர்மனே அவதரிக்க வேண்டும் என்கிற சூழ்நிலை உருவாகிறது. நோக்கு வர்மம்(ஹிப்னாடிசம்), குங்பூ போன்றவற்றில் வல்லவரான டாங் லீ’யை எதிர்த்து ஸ்ருதியும், சூர்யாவும் எப்படி ஆப்பரேசன் ரெட்’ஐ முறியடிக்கிறார்கள் என்பது மீதிக்கதை.


டாங் லீ தான் படத்தின் உண்மையான ஹீரோ. மனுஷன் அநியாயத்திற்கு நடித்திருக்கிறார். பார்வையிலேயே மிரள வைக்கிறார். படத்தின் மற்றொரு பெரிய பிளஸ் வசனங்கள். “இந்தியனா இருக்கிறதுனால வெளிநாட்டுல மதிக்க மாட்டேங்குறான், தமிழனா இருக்கிறதுனால இந்தியால மதிக்க மாட்டேங்குறான்” போன்ற வசனங்கள், செம கிளாஸ் செவிட்டில் அறைந்தாற்போல் உணர்ச்சி வசப்பட வைக்கின்றன. தமிழுணர்வு என்பதைக் கொஞ்சம் கதையில் கலந்திருக்கிறார், செம பிசினஸ் ட்ரிக்ஸ்.  போதிதருமனாக முதல் பத்து நிமிடங்கள் மற்றும் க்ளைமாக்ஸ்’ல் மட்டுமே “நடித்திருக்கிறார்” சூர்யா. போதிதர்மன் ஒரு தமிழன், சீனாவின் கலைகள் இங்கிருந்து சென்றவைதான் என்று எடுத்துச் சொல்லியிருப்பதற்கு மட்டும் பாராட்டுகள் இயக்குனருக்கு.

முழுப்படத்தையும் எடுத்துவிட்டு “அடடே! பாட்டு மிஸ் ஆகுதே?” என்பதற்காக அரைமணி நேரத்திற்கு ஒரு பாட்டை சொருகியிருக்கிறார்கள், தவிர்த்திருக்கலாம். ஒரு தமிழச்சியாக உணர்ச்சி வசப்படும் தருணங்களைத் தவிர மற்ற இடங்களில் கடுப்பேற்றியிருக்கிறார் சுருதி, உங்க உச்சரிப்புல தீ’யை வைக்க. நானறிந்து படத்தில் டைரக்டர் டச் என்றால் சூர்யாவிற்கு “டிஷ்யூம்” அமிதாப்’பை நண்பனாக்கியது மட்டும்தான். சாரி முருகதாஸ் சார், ஒவ்வொரு தமிழனுக்கும் திமிர் வரும்’ன்னு சொன்னிங்க, எரிச்சல் தான் வருது.

ஏழாம் அறிவு- தமிழன் முதற்பாதியில் கடுப்பாகிறான், இரண்டாம் பாதியில் மனதைத் தேற்றிக் கொள்கிறான்.
வேலாயுதம்
சமூக அநீதிகளை அழிக்க, ஒரு கற்பனைக் கதாபாத்திரம் உண்மையாக அவதரித்தால்? இதுதான் வேலாயுதத்தின் ஒன் லைன்.

திருப்பாச்சி, கந்தசாமியை கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். விஜய் ஹீரோ என்பதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லி, மும்பை தாண்டி டைரக்டாக சென்னைக்கே வருகிறார்கள். தமிழகத்தின் பொற்கால ஆட்சியை சீர்குலைக்க பல இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிடுகிறார்கள். இவற்றையெல்லாம் முறியடிக்க பத்திரிகையாளரான ஜெனிலியா வேலாயுதம் எனும் ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். அதே நேரத்தில் தங்கை திருமண விஷயமாக சென்னை வருகிறார் விஜய். எதேச்சையாக இரண்டு டைம்லைன்’களும் சங்கமிக்க விஜய் வேலாயுதமாக மாறி சமூக அநீதிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் படம்.

சரியான கதாபாத்திர தேர்வுகள். சரண்யா மோகன், ஹன்ஷிகா, சந்தானம் என்று அனைவரும் முதற்பாதியை அலுப்புத்தட்டாமல் நகர்த்தியிருக்கிறார்கள். தங்கைக்காக விஜய் செய்யும் சேட்டைகள், பணத்தைத் திருட சந்தானத்தின் முயற்சிகள் என்று முதற்பாதி முழுவதும் சிரிப்பலைகள். வேலாயுதம், போகிறபோக்கில் தீவிரவாதிகளின் சில திட்டங்களை முறியடித்துச் செல்கிறார். மக்களுக்கு வேலாயுதம் யார்? என்ற எதிர்பார்ப்பு மேலோங்குகிறது. இடைவேளை.

ஆறாம் அறிவை ஆப் செய்து விட்டு உக்கார்ந்தால் இரண்டாம் பாதி சூப்பர், ஆஹா ஓஹோ. வில்லன்களைப் பின்னிப் பெடலெடுக்கிறார் வேலாயுதம். கள்ளநோட்டுகளை அழிக்கிறார், அணு உலைக்குள் பாயவிருக்கும் ரயிலை சடன் பிரேக் போட்டு நிறுத்துகிறார், சிட் பண்ட் மோசடிப் பணத்தை மீட்டுக் கொடுக்கிறார், என இரண்டாம் பாதி முழுக்க வேலாயுதத்தின் அட்டூழியங்கள், சாரி அற்புதங்கள். இந்தப் பகையில் தங்கை இறந்து விட, அதற்குக் காரணமான வில்லன்களை வேலாயுதம் எப்படி பழி தீர்க்கிறார் என்பது மீதிக்கதை.

பாடல்கள், காமெடி, சென்டிமென்ட் என்று அனைத்தும் சரியாகப் பொருந்தி வருவது படத்திற்கு பெரிய பலம். கத்திப் பேசுவது, சவால் விடுவது, ஜம்ப் பண்ணுவது என்று வழக்கமான விஷயங்கள் இல்லாமல் விஜய் எதார்த்தம், ஜோடி ஹன்ஷிகா செம பதார்த்தம். ஜெனிலியா வந்த வேலையை சரியாக செய்திருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் சந்தானம் கலக்கியிருக்கிறார்.

இரண்டாம் பாதியில், லாஜிக் மீறல்கள் தான் படத்தின் ஒரே மைனஸ். சூப்பர் ஹீரோ கதை என்பதால் கொஞ்சம் சகித்துத் தான் ஆக வேண்டும். “ஆண்டவன் இருக்கானோ இல்லையோ, வேலாயுதம் இருக்கான்” போன்ற மக்கள் வசனங்கள், ஸ்ஸ்ஸப்பா முடியல. முதல் முறையாக சிக்ஸ் பேக் காட்டி சண்டை போட்டிருக்கிறார் விஜய், நோ கமெண்ட்ஸ்.

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கோபம்தான் வேலாயுதம் என்று கருத்து சொல்லியிருக்கிறார்கள். நீங்களும் வேலாயுதம் நானும் வேலாயுதம் என்பதால், ஒருமுறை நண்பர்களோடு/குடும்பத்தோடு படத்தை பார்த்து விடுவது நல்லது. தனியாக சிக்கினால் கம்பெனி பொறுப்பல்ல.

வேலாயுதம் – மாஸ் என்டர்டெயினர்.Revolution 2020 - விமர்சனம் 

ஆங்கில அண்ணல், வருங்கால இந்தியாவை வடிவமைக்கும் சிந்தனைச்சிற்பி, “IIT” புகழ் சேதன் பகத்’தார் எழுதி பெரும் எதிர்பார்ப்பிற்க்கிடையே வெளிவந்திருக்கும் நாவல் “Revolution2020”.


தன் தந்தையின் ஆசைப்படி IIT, JEE தேர்வுகளில் வென்று, இஞ்சினியராக ஆசைப்பட்டு அதில் தோற்று, சிறுவயது முதலே மனதில் வைத்து வளர்த்த காதலும் கைகூடாமல் தோல்வியின் பிரதிபலிப்பாக முதலாமவன் கோபால். “வேண்டுவதெல்லாம் பணம், பணத்தைத் தவிர வேறொன்றுமில்லை” என்னும் கொள்கைப்படி வாழ நினைப்பவன். மாறாக, இத்தேர்வுகளில் வென்று இன்ஜினியரிங் படித்தும் இந்தியாவைத் திருத்துகிறேன், புரட்சி பண்ணுகிறேன் என்று ஒரிஜினல் பகத்தின் நகலாக இரண்டாமவன் ராகவ். இவ்விருவரின் ஆசை நாயகி ஆர்த்தி. ராகவ்’வையும் கைவிட முடியாமல், கோபாலுக்கும் கம்பெனி கொடுக்கும் அழகுப்பதுமை (என வர்ணிக்கிறார் பகத்). இவர்கள் மூவருக்குமிடையேயான புரட்சியோடு கூடிய முக்கோண காதல் போராட்டம் தான் கதை.


IIT தேர்வுகளில் தோற்று, தன் தந்தையின் விருப்பத்திற்கிணங்க வெளியூருக்கு கோச்சிங் செல்கிறார் கோபால். அந்த சமயத்தில் தன் ஆசை நாயகி ஆர்த்தி ராகவ்’வுடன் கமிட்’டாகி விட, இதற்கெல்லாம் ராகவ்’வின் IIT ரேங்க் தான் காரணமென்று மனதிற்குள் வஞ்சம் வளர்க்கிறார். “ராகவ், இந்த நாளை உன் டைரில குறிச்சு வெச்சுக்கோ. ஒருநாள் இல்ல ஒருநாள்....” என மனதிற்குள் சபதம் எடுக்கிறார். இருந்தும் இரண்டாம் முறையும் தேர்வில் தோற்கிறார். அந்த அதிர்ச்சியில் தந்தை இறந்துவிட, அனாதையாகும் கோபாலுக்கு ஆதரவளிக்கிறார் அந்த ஊர் எம்.எல்.ஏ சுக்லா. தந்தை விட்டுச்சென்ற முப்பது ஏக்கர் நிலத்தில் எம்.எல்.ஏ’வின் உதவியோடு இன்ஜினியரிங் கல்லூரி கட்டுகிறார். இன்ஜினியரிங் படிக்கக் கூட வக்கில்லாத கோபாலை இன்ஜினியரிங் கல்லூரி ஓனராக்கும் அந்த கணத்தில், ஒரே பாடலில்  சின்ராசுவை முதலாளியாக்கும் “சூரியவம்சம்” விக்ரமன் கூட தோற்று விடுகிறார் பகத்திடம். 


மறுபக்கம், பெற்றோர் விருப்பத்தை மீறி, பொறியியலில் ஆர்வம் காட்டாமல், ஜர்னலிசம் படித்து பத்திரிகைத் துறையில் கால்பதிக்கிறார் ராகவ். IIT யில் படித்தும், உலகை சீர்திருத்த பேனா பிடிக்கும் அந்த நொடியில், ராகவை மீறி சேதன்’தான் வெளிப்படுகிறார். இப்படி சமூக அக்கறையில் ஆர்த்தியை கவனிக்க மறக்க, சந்தர்ப்பத்தை சாதகப்’படுத்தி’, ஆர்த்தியை வசப்’படுத்தி’ ராகவை பழிவாங்குகிறார் கோபால். இது தெரியாமல், ராகவ் முதற்பணியாக கோபாலின் கல்லூரி எம்.எல்.ஏ’வின் ஊழல் பணத்தில் கட்டப்பட்டது என்று எழுதுகிறார். பகை முற்றுகிறது. தன் எழுத்தின் மூலம் எம்.எல்.ஏ வை ராஜினாமா செய்ய வைக்கிறார் ராகவ். எம்.எல்.ஏ பதவி காலியாகிறது. ஆர்த்தியின் அப்பா அரசியல்வாதி, அவரால் முடியாததால் ஆர்த்தியை எம்.எல்.ஏ’வாக்க முயற்சிக்கிறார், ஆர்த்தி அரசியலை வெறுக்கிறார், இப்படி ஒரு மொக்கை ட்விஸ்ட் வைத்து, ஆர்த்தியை கல்யாணம் பண்ணிக்க போகிறவர் தான் எம்.எல்.ஏ எனச் சொல்கிறார் பகத். இப்படிப் பட்ட சூழ்நிலையில், ராகவை கோபால் சந்திக்கிறார். ராகவின் பெருந்தன்மையை புரிந்துகொள்கிறார், ஓவர் நைட் கனவில் நல்லவனாகி, ஆர்த்தியை ராகவோடு சேர்த்து வைக்க ஆர்த்திக்கு துரோகம் பண்ணுகிறார். “உங்களை மலை போல நம்பினேனே கோபால்.... இப்படி எனக்கு துரோகம் பண்ணிட்டிங்களே கோபால் கோபால்....” என்று சொல்லி கோபாலை விட்டு விலகி ராகவை மணந்து கொள்கிறார் ஆர்த்தி. எம்.எல்.ஏ ஆகிறார் ராகவ். கதை முடிகிறது.


நம் தேசத்தில் கல்வி வணிகமயமாகிக் கொண்டிருக்கிறது, ஊழலைக் கல்வியில் புதைக்கிறார்கள், “படிக்காதவர்கள் கூட கல்வித்தந்தை ஆகிவிடலாம்” என்பதையெல்லாம் சொல்லியிருக்கிறார், பாராட்டுக்கள். சமீபத்திய சமூக நிழல்வுகளான லஞ்சம், ஊழல் போன்றவைகளின் வழி இக்கதையை நகர்த்தியிருக்கிறார் பகத். இன்னும் கொஞ்ச நாள் கழித்து புத்தகம் வந்திருந்தால், இப்போதைய ட்ரெண்ட்’டான உண்ணாவிரதத்தையும் சேர்த்திருப்பார். இருந்தும், தான் நினைத்தபடி க்ளைமாக்ஸ்’ஐ முடிக்க நிறையவே இழுத்திருக்கிறார். ரெண்டு பாட்டு, கொஞ்சம் பிட்டு, கொஞ்சம் ஃபைட் சேர்த்தால் சூப்பர் மசாலா ஹிந்திப் படம் ரெடி.


Revolution 2020 - பாடமல்ல படம்!


முரண்!
ஹிட்ச்காக், குரசெவோ இந்த மாதிரி பெயரை எல்லாம் கேட்டா எதோ டானிக், மருந்து மாத்திரைன்னு நினைக்குற என்னை மாதிரி அப்பாவிங்க மட்டும் இந்த விமர்சனத்தை படிக்கவும்.

கதை பயணிக்கிறது, கதை பயணிக்கிறதுன்னு பல படத்தோட விமர்சனங்கள்ல படிச்சிருப்பீங்க. ஆனா இந்த படத்துக்குதான் அந்த வார்த்தைகள் சரியா பொருந்தும்ன்னு நினைக்கிறேன். எதிலுமே த்ரில் எதிர் பார்க்குற பிரசன்னா, வழக்கம் போல அம்மாஞ்சி சேரன். சேரன் வந்த கார் விபத்துக்குள்ளாக, சென்னை வரை லிஃப்ட் கொடுக்கிறார் பிரசன்னா. இருவரும் பேசிக்கொண்டே செல்ல காரிலேயே கதை பயணிக்கிறது.  இருவரும் அவரவர் கொசுவர்த்தி சுருளை சொல்லி முடிக்கிறார்கள். அட! பிளாஷ்பேக்ப்பா. சேரனின் ஜென்ம சாபல்யம் இந்த படத்திலும் அவரைப் புரிந்து கொள்ளாத, சண்டை போடும் மனைவி. நல்லவேளை இந்தப் படத்தில் மனைவியிடம் “என்னடா... கோவமா இருக்கியா? என்று கேட்கவில்லை. தொடர்ந்து தோல்விகளைக் கண்டு வரும் தோணி போல, கடும் மன உளைச்சலில் இருக்கும் சேரனுக்கு ஆதரவாய் இருக்கிறார் ஹரிப்ரியா(லாவண்யா), ஆதரவு காதலாகிறது. இன்னொரு பக்கம் பிரசன்னா, தான் காதலிக்கும் பெண்ணை ஃபாரீன் ட்ரிப்புக்கு கூட்டிச் சென்று கலையோ கலைன்னு கலைத்த தன் தந்தையை கொல்ல வேண்டும் என்று வெறியுடன் இருக்கிறார் பிரசன்னா. “உன் மனைவியை நான் கொல்றேன், பதிலுக்கு எங்கப்பனை நீ கொல்லனும்என இருவரின் பிரச்சினைக்கும் தீர்வு கொலை தான் என்று சேரனை பிரெய்ன்வாஷ் செய்கிறார் பிரசன்னா. “போய்யா.. நீயும் உன் திட்டமும் ன்னு சேரன் போய் விட, தன் திட்டப் படி சேரனின் மனைவியைக் கொல்கிறார் பிரசன்னா. பதிலுக்கு பிரசன்னாவின் தந்தையைக் கொல்லச் சொல்லி சேரனுக்கு செக் வைக்கிறார் பிரசன்னா. சேரன் கொலை செய்தாரா, இல்லையா என்பது மீதிக்கதை.

ஆங்கிலப் படங்களே அதிகம் பார்த்திராத, ட்விஸ்ட்களை அதிகம் ரசிக்கும் மக்களுக்கு இது ஒரு நல்ல படமாகத் தோன்றும். படத்துக்கு பெரிய பிளஸ் பிரசன்னாவின் நடிப்பு. நல்ல முன்னேற்றம். இருந்தாலும் ஒரு சில இடங்களில் அஞ்சாதே, நாணயம் படங்களின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. அப்புறம் சேரன், அதே டீ-ஃபால்ட் நடிப்பு. இயலாமை, வாழ்க்கையின் மீதான வெறுப்பு இதையெல்லாம் தாங்கிச் செல்லும் கதாபாத்திரம் என்றால் உடனே சேரனைக் கூப்பிட்டு விடுகிறார்கள். நன்றாகவே நடித்திருக்கிறார். இருந்தாலும் இவர் வில்லத்தனமாக யோசிப்பதெல்லாம், “முடியல பாஸ், விட்ருங்க. லாவண்யாயாவாக வரும் ஹரிப்ரியா பரவாயில்லை ரகம். படத்திற்கு மற்றொரு பலம், ட்விஸ்ட்கள். இருந்தாலும், இந்த மேப் போட்டு கொலை செய்வதைத் தவிர புதுசா எதையாவது முயற்சித்திருக்கலாம்.

ஒரு த்ரில்லர் படத்துக்கு தேவையான இசை சேர்ப்பு இல்லை, பாடல்களை தவிர்த்திருக்கலாம். முதல் பாதி, படம் கொஞ்சம் இழுவை அதிகம். அதனாலேயே இரண்டாம் பாதி சீக்கிரம் முடிந்து போவதைப் போல தெரிகிறது. அக்மார்க் தமிழ் சினிமா கிளைமாக்ஸ். இவையெல்லாம் தான் படத்தின் மைனஸ்கள்.

பிரசன்னாவுக்காக ஒருவாட்டி வேணா பாக்கலாம்.