புலிவால்


6.35 AM
“என்னங்க எழுந்திருங்க, எழுந்திருங்க பாவா.. இங்க வந்து பாருங்களேன்” அலாரம் கொஞ்சம் முன்கூட்டியே அடித்தது. கண் விழித்து நான் பெற்ற தேவதை முகத்தில் விழித்தெழுந்தேன்.
“என்னா....டி, என்னாச்சு.... காலைலயேவா. மனுஷன் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கினா பொறுக்காதே!” இது வழக்கமான Snooz.

“இங்க வாங்க, செய்திய வந்து பாருங்களேன். பாப்பா எழுந்திருச்சுக்க போறா... எழுந்திருங்க மொதல்ல” மீண்டும் அழைப்பு வர, கண் விழித்திருந்த நான் எழுந்து சென்றேன். புதிய தலைமுறை ஓடிக்கொண்டிருந்தது.
“என்ன பிரச்சினை உனக்கு?” இது நான்.
“ஏதோ விலை ஏத்தி இருக்காங்களாம், செய்தில சொன்னாங்க என்னன்னு பாருங்க” பதில் வந்தது.
“இன்னும் காபி வரலடி...”
“போய் பல்லு விளக்கிட்டு வாங்க”
செய்தியை மாற்றி சன் மியூசிக் போட, கோபக்கனல் பார்வையோன்று வந்தது. ஸ்வாப் பட்டனை அழுத்தி விட்டு பாத்ரூமுக்குள் நுழைத்தேன்.
--

மீண்டும் வந்தமர்ந்தால், டைமர்...
6:59:58
6:59:59
7:00:00
சுடச்சுட காபி வந்தது.
செய்திகள் ஆரம்பிக்க, அடுப்பை லோ-ஃப்ளேமில் வைத்து விட்டு அருகே வந்தமர்ந்தாள்.
“கடுமையான பெட்ரோல், டீசல் மற்ற எரிபொருட்கள் விலை உயர்வு காரணம் பால், போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் எந்த ஒரு நெருக்கடி நிலையிலும் உயர்த்தப்படாத பேருந்துக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.” செய்திகள் சொல்லி அதை அவர்கள் அலச ஆரம்பிக்க,
“சரிங்க, பாப்பா எழுந்தா பாத்துக்கங்க. நான் போய் பால் வாங்கிட்டு வந்துடுறேன். இந்த செய்தி தெரிஞ்சா அப்புறம் இன்னிக்கே விலை ஏத்தி வசூல் பண்ணிடுவான் பால்காரன் என்று பை, பால் அட்டையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் அனகா” (ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோபிகா என்ற பெயர் தற்காலிகமாக மாற்றப்படுகிறது).

“பொறுப்பாத்தான் இருக்கா... என்ன செய்ய இன்னைக்கு ஒரு நாளைக்கான பால் தான் வாங்க முடியும், எப்படியிருந்தாலும் சாயங்காலம் விலை ஏத்திடுவானுங்க. இப்படி அத்தியாவசியத்துக்கெல்லாம் விலையேத்தினா அப்புறம் பூ விக்கிறவன், பழம் விக்கிறவன் எல்லாரும் விலை ஏத்திடுவானுங்க. ‘கேட்டா எந்தா காலத்துல இருக்க சார் நீ’ன்னு அரசியல் பேசுவானுங்க. எல்லாம் நம்ம தலைலதான் விடியும்” என்று ஒரு சாதாரணனாய் மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். அதற்குள் உலகின் மூன்றாம் தேவதை சிணுங்க, தொட்டில் பக்கம் சென்றேன்.
“நல்ல வேலைங்க, அவனுக்கு செய்தி தெரியல. அச்சச்சோ... செல்லக்குட்டி எழுந்திருச்சிடுச்சா.” என்று சொல்லி இரண்டாம் தேவதை மூன்றாம் தேவதையை இடுப்பில் வாங்கிக் கொண்டு,
“அழுதாளா’ங்க” எனக் கேட்க
“இல்ல இல்ல... அதுக்குள்ளே நான் எடுத்திட்டேன் உன்னத்தான் தேடினா”. என்னைபோலவே மீராவிற்கும் கண்விழிக்கையில் அனகா உடனிருக்க வேண்டும்.
“சரி மா, நீ பாத்துக்கோ. நான் இதோ வந்துடுறேன்” எனச் சொல்லி கிளம்பினேன்.
“எங்கங்க கிளம்பிட்டிங்க” எனக் கேள்வி வருமென்று எதிர்பார்த்தேன், வராததால்
“போய் வண்டி டேங்க் ஃபுல் பண்ணிட்டு வரேன், பெட்ரோல் விலை ஏறுதில்லையா” நானும் பொறுப்பாகத் தான் இருக்கிறேன் என்று சூசகமாகச் சொல்லி, கிளம்பினேன்.
--

9.15 AM
“என்னங்க, படிச்சது போதும் சாப்பிட வாங்க” வழக்கமான குரல் வரவில்லை. மீரா என்னை நோக்கி தவழ்ந்து வர
“என்ன பண்ணுறா இவ” என்று சொல்லி மீராவைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டே வெளியில் வந்தேன். அனகா டைனிங் டேபிளில் எனக்காக காத்துக் கொண்டிருந்தாள்.
“கூப்பிட்டிருக்கலாம் ல” என்று சொல்லி மீராவை அவளிடம் கொடுத்து விட்டு சாப்பிட அமர்ந்தேன். வெறும் ரசம் சாதம். குறிப்பால் உணர்த்துதலில் பெண்களை விஞ்ச யாருமில்லை. இரண்டு தருணங்களில் தான் வெறும் ரசம் இருக்கும் என் வீட்டில்.

ஒன்று ‘கோபம்’ என்றால்,
அதற்கு வாய்ப்பில்லையே, ஏதோ போனவாரம் கோபத்தில் திட்டி விட்டேன். அதற்காக என் காதலை சோதிக்க வேலாயுதத்திற்கு அழைத்துப் போகச் சொன்னாள், செய்தேன். இதைவிட வேறென்ன செய்யவேண்டும் அவளுக்கு?

இரண்டு ‘என்னிடம் எதையாவது சொல்லவேண்டும்’ என்றால்,
எதையாவது கேட்டால் ஓகே சொல்லி விட வேண்டும் இல்லையென்றால் பழைய சோறுதான் என்று அர்ஜுன் இன்ஸ்டிங்ட் கூற,
“ஹ்ம்ம்.. சொல்லு என்ன சொல்லணும்?”
“ஒண்ணுமில்லையே” என்னைப் பார்க்காமல் கூட பதிலளித்தாள்.
“அதான் தெரியுதே. வெறும் ரசம், என்னாச்சு ஏன் உம்’முன்னு இருக்க?”.
உள்ளே சென்றவள் சாம்பார் எடுத்து வந்து ஊற்ற, அப்படியே என் அம்மா கைப்பக்குவம். (மனைவி எவ்ளோ நல்லா சமைச்சாலும் அம்மாவைப் பாராட்டும் போக்கு என்று பெண்ணியவாதிகள் கமெண்ட் செய்யும் பொருட்டு இந்த வரிகள் சேர்க்கப் படுகின்றன. நமக்கு கமெண்ட் முக்கியம் அமைச்சரே!)

“என்னங்க... நாம ஒரு ஃப்ளாட் வாங்கலாங்க” என்றவள் சொல்ல,
“யார் அடிச்சு பொறி கலங்கி பூமி அதிருதோ அவன்தான் தமிழ்” இதேபோல ஒரு நிமிடம் ஸ்தம்பித்துத் திரும்பினேன். புரை ஏறிவிட்டது. கொஞ்சம் நீர் அருந்திவிட்டு,
“என்ன திடீர்னு, இங்க எல்லாம் வசதியைத் தானே இருக்கு? வாடகையும் ஓகே தானே?”
“இல்லங்க, பாப்பாவும் பெருசாகிட்டே வர்றா. விலைவாசி எல்லாம் ஏறிகிட்டே போகுது. இன்னும் பத்து வருஷத்துக்கு அப்புறம்’ன்னா வாங்குறது கஷ்டம். எங்கம்மாவும் இதே தான் சொன்னாங்க... அதான்”
அப்போதே நினைத்தேன், நிச்சயம் இந்த ஐடியா முதலாம் சூனியக்காரியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமென்று.
“பாக்கலாம்” என்று விஷயத்தையும் கை கழுவி விட்டு உள்ளே சென்றேன் மீராவுடன்.
--

11.10 AM
தண்ணீர் தாகமெடுக்க டைனிங் ரூமிற்கு சென்றேன். நான் சாப்பிட்டது போக அனைத்தும் அப்படியே இருந்தது. பெண்கள் ஹஜாரே’வுக்கெல்லாம் முன்னோடிகள். “எத்தன ட்ரிக்ஸ் வெச்சிருக்காங்க. முடியல”
“என்னாச்சுன்னு இப்போ சாப்பிடாம இருக்க?”
“பிடிக்கல” நினைத்தபடி கண்ணீர் துளிர்த்திருந்தது.
“சரி, இப்போ என்ன பண்ணனும்”
“முடிவு பண்ண நான் யாரு?” பெண்களின் அரசியல் புரிந்துகொள்ள முடியாதது.
“சரி, வா வந்து சாப்பிடு” என்று வலுக்கட்டாயமாக சாப்பிட அமர்த்தி விட்டு முதலாம் தேவதையை போனில் அழைத்தேன்.
“அம்மா, இவ என்னமோ புலம்பிகிட்டிருக்கா. ஏதோ வீடு வாங்கணுமாம்”
“அவ சொல்றதுல என்ன தப்பு? நானும் உங்கிட்ட சொல்லணும்’னு இருந்தேன்” தேவதைகளுக்குள்ளான ஒற்றுமையில் விழிபிதுங்கி வேம்பயர்’களாகிப் போவதேன்னவோ அப்பாவிக் கணவர்கள்தான்.
“சரி நாளைக்குப் போகலாம்” என்று சொன்ன பிறகுதான் என் சின்ட்ரெல்லா முகத்தில் சின்னப் புன்னகை மலர்ந்தது.
--

அடுத்தநாள்
7.40 AM
“பாவா, டபுள் பெட்ரூம் பிளாட் 25 லட்சம்’ன்னு டிவில சொல்றாங்க, வந்து பாருங்க” என்றென்னை அழைக்க,
“ரெண்டு பெட்ரூம் எதுக்கு? ஆசைதான் உனக்கு” என்று மறைபொருளில் கூற, புரிந்தாலும் புரியாதது போல பாவித்தாள்.
“பாவா, ஆதவன் சிட்டில ஃப்ளாட்ஸ் நல்லா இருக்குன்னு பத்மா சொன்னா. போன் பண்ணி கேளுங்க. ஒரெட்டு போய் பாத்துட்டு வந்துடலாம்”
“வேண்டாண்டி, அது ஏதோ நில அபகரிப்புல கட்டுனதாம். பேசிக்கிட்டாங்க”
“அப்ப தாரகை சி.எம் சிட்டில வாங்கலாமாங்க?”
“அது தாரகைTM சிட்டிமா, அதல்லாம் உனக்குப் புரியாது” சில விஷயங்களைச் சொல்லிப் புரிய வைப்பதற்குப் பதிலாக ஆணாதிக்கவாதியாகவே இருந்து விடலாம்.
“சரிங்க... அங்கேயே போலாம். உங்களுக்கு லக்கி நம்பர் 7 அதனால ஏழாம் நம்பர் ஃப்ளாட் கிடைச்சா உடனே ஓகே சொல்லிடனும்”
--

11.10AM
தாரகைTM சிட்டி புரோமோட்டர்ஸ்
மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது

வரவேற்றார்கள். எல்லாம் இளம்பச்சை நிற கட்டிடங்கள். அவர்களுக்கு லக்கி நம்பர் 9 என்பதால், எல்லா ஃப்ளாட்களும் 9ம் நம்பர் கொடுக்கப்பட்டு 9A, 9B என்று வகைப்படுத்தப் பட்டிருந்தன. அனகா-அர்ஜுன் என்பதால் 9AA ஃப்ளாட் கிடைக்குமா என்று பார்க்கச் சொன்னாள் அனகா.
“என்ன சார், மாடல் ஹவுஸ் இருக்கா? டபுள் பெட்ரூமா? வாஸ்துப்படி இருக்குமா?” வழக்கமான கேள்விகள், அனகா முகத்தில் கொஞ்சம் பிரகாசம்.
“சார், இது ஃப்யூச்சர் ஜெனரேஷன் புராஜக்ட். நீங்க எதிர்பார்க்குற வழக்கமான விஷயங்களுக்கு மாறா இதைக் கட்டியிருக்கிறோம்” புதிர் போட்டார்கள்.
“எஸ் சார். அரசின் அனைத்துச் சலுகைகளையும் கரெக்டா யூஸ் பண்ணி பெர்ஃபெக்டா கட்டியிருக்கிறோம். பக்கத்துலயே பெரிய நூலகம் இருக்கு, ஸோ மருத்துவ வசதிகள் உங்களுக்கு கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கு. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இதுதான் தமிழ்நாட்டுல மின்தடையில்லா முதல் சிட்டி சார்”
கேட்கவே இனித்தது. மின்தடையில்லா சிட்டி. எப்படி சாத்தியம்? ஆர்வம் மேலோங்கியது.

“அப்துல் கலாமே பாதுகாப்பானது’ன்னு சொல்லிட்டதால நம்ம சிட்டிக்குன்னு தனியா ஒரு அணுஉலை கட்டிகிட்டிருக்கோம். நீங்க ஷேர் பண்ணிக்கலாம். இல்லை உங்களுக்கு தனி மீட்டர் வேணும்’ன்னு ஆசைப்பட்டா அக்னி மூலைல ஒரு மினி ரியாக்டர் கட்டி கொடுத்திடுவோம். விரைவில் வீட்டுகொரு ரியாக்டர் திட்டத்தை அரசே அறிமுகப் படுத்தப்போறதால மானிய விலையில யுரேனியம் உங்களுக்கு கிடைக்கும்” சொல்லி முடித்தார்.
“என்னங்க என்னென்னமோ சொல்லுறிங்க. அவ்ளோ விலையிலெல்லாம் வேண்டாங்க” சொல்லி முடிப்பதற்கு முன்னரே,
“அதான் அவ்ளோ சொல்றாரில்லங்க, வாங்கிடுவோங்க. கொஞ்சம் முன்னப்பின்ன ஆனாலும் பரவால்லங்க. எனக்கு பிடிச்சிருக்குங்க”. வீட்டு நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டது இனியொன்றும் சொல்வதற்கில்லை.
“ஓகே சார். வீட்டுல பேசிட்டு சொல்றோம்”
“இந்த வாரமே புக் பண்ணினா, வீடு கட்டி குடியேறுற வர சென்னைல எங்கயும் போயிட்டு வர இலவச பஸ் பாஸ் கொடுக்குறோம் சார். ஸோ டிலே பண்ணாதிங்க” என்க, தூண்டிலில் அகப்பட்டவனாய் மாதாந்திர EMI யைக் குறிந்து சிந்தித்துக் கொண்டே வெளியேறினேன்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

...ஆப்பரேசன் கிரீன்...


..1..

... சொர்க்கலோகம், கலியுகம் 16 லட்சம் கோடியே இருபத்தி ஓராம் ஆண்டு, பூலோக கணக்கில் 2415ஆம் ஆண்டு ...

அடடா! என்ன சுகம், என்ன சுகம்! பூமியில் அவ்வளவு சம்பாதித்தும் ஸ்கைவாக், பெசென்ட் நகர் என்று ஊர்சுத்திய போதும் கூட இவ்வளவு சுகம் கிடைத்திருக்கவில்லை. யார் செய்த புண்ணியமோ, கம்ப்யூட்டர் இன்ஜினியராக பூலோகத்தில் ஒரு அரிய தொழில்நுட்பத்தில் (Rare Technology) வேலை செய்ததால்தான் என்னவோ இப்போது இங்கு சொர்க்கம் வெர்ஷன் 2.0 வில் அசிஸ்டன்ட் சித்திரகுப்தன் வேலை. ஆம், நான் வேலை செய்த அதே டெக்னாலஜியில்தான் சொர்க்கம் v2.0 வின் இயக்கமே. அதனால்தான் என்னை சுமார் நானூறு ஆண்டுகளாக ஆன்-சைட்டி’லேயே (ஆன்-சைட்=சொர்க்கம்) வைத்திருக்கிறான் எமதர்மன். நானூறு ஆண்டுகள் அனுபவம் என்றால் சும்மாவா? கேட்டதையெல்லாம் கொடுப்பான் எமதர்மன். ரம்பை ஊர்வசி என்பவர்களை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் பூலோகவாசிகளுக்கு, இங்கிருக்கும் பாபிலோனா அல்ஃபோன்சாக்களைத் தெரியாது. இவர்கள் தான் என்னுடைய பணிப்பெண்கள். இப்போது புரிகிறதா, ஏன் இந்த பில்ட்-அப் என்று?

என்றும்போல் தான் அன்றும் விடிந்தது. இருந்தும் ஒரு பரபரப்பை உணரமுடிந்தது என்னால். எப்போதும் நான் கண்விழிக்கையில் உடனிருந்து பணிவிடை செய்யும் பணிப்பெண்கள் எங்கே? கண்விழித்தால் எமனும், சித்திரகுப்தனும் சோகத்துடன் அமர்ந்திருந்தனர். எனக்கும் அந்த பரபரப்பு தொற்றிக்கொள்ள, என்னவென்று விசாரித்தேன். அந்தக் காரணமறிந்து உடைந்து போனேன். ஆம், பூலோகத்தில் யாரோ என் டி.என்.ஏ’வைத் தூண்டிவிடப் போகிறார்களாம். “உனக்கு மறுபிறவி எடுக்கும் காலம் வந்து விட்டது, ஆப்-ஷோருக்கு(பூலோகம்) கண்டிப்பாய் போயே ஆகவேண்டும்” என்றும் கூறி முடிப்பதற்கு முன்னரே கண் கலங்கிவிட்டார் எமதர்மன். இறந்து மேலோகம் வருபவர்களில் “யார் உண்மையான தமிழன்?” என்று கண்டறியும் ஒரு கஷ்டமான வேலைக்கு புரோக்ராம் எழுதியவன் நான். இப்படி திறமைமிக்க என்னை மீண்டும் பூமிக்கனுப்ப எமனுக்கு மனசே இல்லைதான். எனக்கான தேதியைக் கொடுத்துவிட்டு கலக்கத்துடன் வெளியேறினார் எமதர்மன்.

சொர்க்க வாழ்க்கையின் அந்த இறுதி நாட்கள். கொடுக்கவேண்டிய கே.டி(KT) அனைத்தையும் கொடுத்து முடித்திருந்தேன். எனக்கான பணியிறுதிப் பார்ட்டியும் முடிந்துவிட்டது. அனைவரும் விட்டுச் செல்ல அந்தத் தனிமை என்னை வாட்டியது. இறுதியாய் ஒரு முறை என்னைக் காண வந்த எமதர்மன் என்னை ஆரத்தழுவி பிரியாவிடை கொடுத்துச் சென்றார். நாளை விடிவது பூலோகத்தில்தான் என்று நிதர்சனத்தை உணர்ந்து கண் அயர்ந்தேன்.

..2..

.... பூலோகம், 2415 ம் வருடம், அதிகாலை 3 மணி ...

விரலசைவை உணர்ந்தேன். என் மூச்சு சப்தம் மட்டுமே திரும்பக் கேட்டது அந்த ஆய்வுக்கூடத்தில். என் நெஞ்சிலும், கைகளிலும், உடல் முழுவதுமே ஏதோ ஒட்டி வைக்கப் பட்டிருந்ததை உணர்ந்தேன். மெதுவாய்க் கண்கள் திறந்தேன். நான் எங்கிருக்கிறேன்? கேட்க யாருமில்லை அந்த இடத்தில். தலை அசைக்க சிரமமாயிருந்தாலும், இடம்-வலம் நோக்கினேன். ஆய்வுக்கூடம், பக்கத்து அறை முழுவதுமே இருட்டாய் இருந்தது. எனக்கு அப்போதே புலப்பட்டு விட்டது. மின்வெட்டு, மீண்டும் தமிழ்நாட்டில்தான் பிறந்திருக்கிறேன் என்று. சில நாழிகள் கழிந்து சில நவயுவதிகள் அங்கு வந்தனர். என் மறுஜென்மம் வெற்றி என்று ஆங்கிலத்திலேயே தங்கள் ஆச்சர்யத்தைப் பகிர்ந்துகொண்டனர். ஆய்வுக்கூடமா அது? என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது அந்த இடம்.

இரண்டு மூன்று நாட்கள் அவர்கள் கேட்ட கேள்விகள் எதற்கும் நான் பதிலளிக்கவில்லை. உடல் அசைவு, பார்வை போன்றவற்றிற்கான உடற்பயிற்சிகள் தரப்பட்டன. சில நாட்கள் கழித்து நானே என் மௌனத்தை உடைத்தேன். “நான் யாரு? எதுக்காக என்னை இங்க வெச்சிருக்கீங்க?” என்று ஒரு ஆய்வுப் பெண்ணிடம் கேட்க, ஆச்சர்யத்தில் முகம் மலர்ந்தது அவருக்கு. “Yei, he is speaking TAMIL di” என்று சத்தமிட்டார் அவர். உடனே அனைவரும் என்னைச் சூழ்ந்து கொள்ள, ஒரு பெண் என்னிடம் பேச முனைந்தார்.

“ஹாய் விஷ்வா....”
என்று அந்தப்பெண் கை நீட்டிய போதுதான் என்னுடலின் பெயர் “விஷ்வா” என்று தெரிந்து கொண்டேன். பதிலுக்கு கைகுலுக்கி விட்டு
“நான் யாரு? நீங்க எல்லாம் யாரு? நான் எதுக்காக இங்க இருக்கேன்?” என்று கேட்டேன்.
“என் பேரு கோபிகா, இவங்க எல்லாம் என் நண்பர்கள், மரபியல் ஆராய்ச்சி வல்லுனர்கள். ஒரு முக்கியமான விஷயத்துக்காகத்தான் இந்த ஆராய்ச்சி எல்லாமே. போகப் போக உங்களுக்கே விளங்கும். இப்போ உங்களுக்கு தேவை கம்ப்ளீட் ரெஸ்ட்” என்று என் ரூமில் என்னை விட்டுச் செல்ல, பல குழப்பங்களுடன் நிம்மதியற்றுக் கிடந்தேன்.

இரண்டு நாட்கள் முடிந்திருக்கும், கோபிகாவும் மற்ற மாணவிகளும் என்னைக் காண என்னறைக்கு வந்தனர்.
“ஆர் யூ ஆல்ரைட்?” என்று ஒருவர் கேட்க,
“ஐ யாம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்” என்றேன். கோபிகா என்னை நோக்கி பேசத் தொடங்கினார்.
“நீங்க விஷ்வா. ஆனா இப்போ சுமார் நானூறு வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த அர்ஜுன் என்கிறவரோட டி.என்.ஏ வைத்தூண்டி விஷ்வா+அர்ஜுன்னா உங்கள உருவாக்கியிருக்கிறோம். நீங்க, எங்க ஆராய்ச்சியோட முழு வெற்றியின் பரிமாணம்” என்று கூற, ஆச்சர்யத்தில் எழுந்தமர்ந்தேன்.
“கூல் டவுன் மிஸ்டர்.அர்ஜுன்” என்று கோபிகா என் தோளில் கைவைக்க, ஒரு வினாடி ஸ்தம்பித்தேன். ஆம், நேற்று வரை விஷ்வா என்று என்னை அழைத்தவர்கள் இன்று அர்ஜுன் என்கிறார்கள். “அப்போ, இவர்களுக்கு என்னைத் தெரிந்திருக்கிறது, என்னிடம் எதையோ எதிர்பார்கிறார்கள்” என்று செவியைக் கூர்மையாக்கினேன்.

“நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லத் தான் நாங்க இங்க வந்திருக்கோம். நீங்க இருக்கிறது இந்தியா, தமிழ்நாடு, 2415 ம் வருஷம். இதல்லாம் உங்களுக்கு தெரியும்’ன்னு நினைக்கிறேன்” தலையசைத்தேன், தொடர்ந்தார்.
“இப்போதைய இந்தியா நிலையைப் பற்றி நான் உங்களுக்கு சொல்லியே ஆகணும், We are in G8, We have VETO power, நாமளும் இப்போ வல்லரசு”
“அப்படியா? இதல்லாம் எப்படி சாத்தியமாச்சு? நான் இப்போ என்ன செய்யணும்”
“அதை நீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுப்பீங்க” என்று புன்னகைக்க, கைக்கெட்டும் தூரத்திலிருந்த டம்ளரை எடுத்து கொஞ்சம் நீர் அருந்தினேன்.


..3..

வர்கள் வந்து சேர்ந்தனர். எட்டு பத்து பேர் இருந்தார்கள். அனைவரும் இளைஞர்கள். அனைவரையும் வெல்கம் செய்து விட்டு,
“இட்ஸ் பெட்டர் யூ இண்டரேக்ட் வித் அர்ஜுன்” என்று அவர்களிடம் சொல்லி, “அர்ஜுன், உங்களுக்கு என்ன கேட்கணுமா அதை இவங்க கிட்ட கேளுங்க..” என்றார் கோபிகா.
“ஹாய் சார், வீ ஒர்க் IAL ltd. வீ நீட் எ ஹெல்ப் ப்ரம் யூ” என்று ஒருவர் சொல்ல நான் தலையசைத்தேன்.
“இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கமே, உங்களோட கம்ப்யூட்டர் நாலேஜ், அது இப்போ இங்க இந்தியர்களுக்கு தேவைப்படுது”
“என்ன சொல்றிங்க, நான் ஒர்க் பண்ணது ரொம்ப பழைய டெக்னாலாஜி, இந்த நானூறு வருஷத்துல எவ்வளவோ இம்ப்ரூவ் ஆயிருக்கணுமே? ஸ்டில் இந்தியா அப்படியேதான் இருக்கா?”

“இல்லை சார், இந்த நானூறு ஆண்டுகள்’ல இந்தியா ரொம்பவே முன்னேறியிருக்கு. ஒரு காலத்துல சாப்ட்வேர் சுல்தான்’னா இருந்த நாம தேவைய புரிஞ்சுகிட்டு வழி மாற ஆரம்பிச்சோம். நாகரிக மாற்றத்துல உலகமே வேகமா முன்னேறிப் போயிட்டிருக்க, நாம விவேகமா யோசிச்சோம். உலக நாடுகள் அனைத்துமே அணுசக்தி, தொழில்நுட்பம் இதுலதான் கான்சன்ட்ரேட் பண்ணாங்க. ஆனா இந்தியா கொஞ்சம் வித்தியாசமா தின்க் பண்ணுச்சு. அக்ரிக்கல்சர், எஸ் சார். விவசாயம். நம்மளோட பாரம்பரியம்’ன்னு வரலாறு சொல்லுது. அதுல புதுமையை புகுத்தினோம். Indian Agro Logistics ன்னு ஒரு கம்பெனி இளைஞர்களை, விவசாயிகளை வேலைக்கமர்த்தி விவசாயம் செஞ்சாங்க. முன்னெல்லாம் கம்பியூட்டர் இஞ்சினியர்’கள் வாங்கின மாதிரி லட்சக்கணக்கான சம்பளமெல்லாம் சாத்தியமாச்சு, எல்லாரும் ஒண்ணு சேர்ந்ததால. இப்போ உலகிலேயே இந்தியா தான் புட் ப்ரோடக்ஷன்ல ஃபர்ஸ்ட். உணவில்லாம எதுவுமே சாத்தியமில்லை என்கிறதால நாம இப்போ சூப்பர் பவர்” என்று நானூறு ஆண்டுகால வரலாற்றை உணர்ச்சி பொங்க ஒப்புவித்தார் அந்த இளைஞர்.

“வாவ்.. அமேஸிங்.. இப்போ என்கிட்டேர்ந்து என்ன எதிர்பார்க்குறிங்க?”
“நாம விவசாயத்துல கவனம் செலுத்தினதால டெக்னாலஜி ல கொஞ்சம் பிஹைன்ட் தான். இருந்தாலும் நாம ரொம்ப மோசமா போயிடல. இப்போ இந்தியா டோடல்லி யுனைட்டட் ஆன் அக்ரி. சோ, இதையெல்லாம் மேனேஜ் பண்ண நமக்கு ஒரு சாப்ட்வேர் தேவைப்படுது”
“இந்தியா இவ்ளோ முன்னேறியிருக்கு’ன்னு சொல்லுறிங்க, சரி. உங்களால அந்த சாப்ட்வேர்’ஐ உருவாக்க முடியாதா?”
“முடியும் சார், ஆனா இப்போ இருக்கிற டெக்னாலஜில மொத்த இந்தியாவுக்கும் தேவையான பிராசசிங் கொடுக்க முடியல. தேடிப் பார்த்ததுல நீங்க வேலை செஞ்ச அதே டெக்னாலஜி’யால இதைத் தர முடியும்ன்னு தெரிஞ்சுது. நாம சூப்பர் பவரா உருவானத சகிச்சுக்க முடியாத வெளிநாடுகள் கிட்ட உதவி கேட்டா, அவங்க ரொம்ப டிமாண்ட் பண்றாங்க. அப்போ சர்ச் பண்ணி பார்க்கிறப்போ சில படிவங்கள் கிடைச்சது. ஆனா இப்போதைய டெக்னாலஜிஸ்ட்’களினால அத கோப்-அப் பண்ணிக்க முடியல. அப்பத்தான் உங்கள பத்தி தெரியவந்தது. அதற்காகத் தான் இந்த ஆராய்ச்சி. நீங்கதான் ஹெல்ப் பண்ணனும், ப்ளீஸ்”

“போதும், அவரை ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ண வைக்காதிங்க” என்று கோபிகா அறிவுரைக்க,
“ஓகே சார், டேக் யுவர் ஓன் டைம்” என்று சொல்லி அனைவரும் விடைபெற்றனர். வாழ்க்கையில் முதல்முறை ஓய்வு என்பது கசந்தது. ஏற்கனவே நானூறு ஆண்டுகள் ஓய்வெடுத்து விட்டேன். இனி உடைவாள் தான் எடுக்க வேண்டும். இதுவரை அமெரிக்காகவுக்காக டைப்பிய விரல்கள் படுவேகமாய் கணினியை ஆன் செய்தன. ஹ்ம்ம் இம்முறை என் தாய் நாட்டிற்காக. திடீரென்று பளிச்சென்று வந்த அந்த வெளிச்சம், கண்களினூடே பாய்ந்து நெஞ்சத்தின் எரிதழலை மேலும் தூண்டி விட்டது.