புலிவால்


6.35 AM
“என்னங்க எழுந்திருங்க, எழுந்திருங்க பாவா.. இங்க வந்து பாருங்களேன்” அலாரம் கொஞ்சம் முன்கூட்டியே அடித்தது. கண் விழித்து நான் பெற்ற தேவதை முகத்தில் விழித்தெழுந்தேன்.
“என்னா....டி, என்னாச்சு.... காலைலயேவா. மனுஷன் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கினா பொறுக்காதே!” இது வழக்கமான Snooz.

“இங்க வாங்க, செய்திய வந்து பாருங்களேன். பாப்பா எழுந்திருச்சுக்க போறா... எழுந்திருங்க மொதல்ல” மீண்டும் அழைப்பு வர, கண் விழித்திருந்த நான் எழுந்து சென்றேன். புதிய தலைமுறை ஓடிக்கொண்டிருந்தது.
“என்ன பிரச்சினை உனக்கு?” இது நான்.
“ஏதோ விலை ஏத்தி இருக்காங்களாம், செய்தில சொன்னாங்க என்னன்னு பாருங்க” பதில் வந்தது.
“இன்னும் காபி வரலடி...”
“போய் பல்லு விளக்கிட்டு வாங்க”
செய்தியை மாற்றி சன் மியூசிக் போட, கோபக்கனல் பார்வையோன்று வந்தது. ஸ்வாப் பட்டனை அழுத்தி விட்டு பாத்ரூமுக்குள் நுழைத்தேன்.
--

மீண்டும் வந்தமர்ந்தால், டைமர்...
6:59:58
6:59:59
7:00:00
சுடச்சுட காபி வந்தது.
செய்திகள் ஆரம்பிக்க, அடுப்பை லோ-ஃப்ளேமில் வைத்து விட்டு அருகே வந்தமர்ந்தாள்.
“கடுமையான பெட்ரோல், டீசல் மற்ற எரிபொருட்கள் விலை உயர்வு காரணம் பால், போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் எந்த ஒரு நெருக்கடி நிலையிலும் உயர்த்தப்படாத பேருந்துக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.” செய்திகள் சொல்லி அதை அவர்கள் அலச ஆரம்பிக்க,
“சரிங்க, பாப்பா எழுந்தா பாத்துக்கங்க. நான் போய் பால் வாங்கிட்டு வந்துடுறேன். இந்த செய்தி தெரிஞ்சா அப்புறம் இன்னிக்கே விலை ஏத்தி வசூல் பண்ணிடுவான் பால்காரன் என்று பை, பால் அட்டையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் அனகா” (ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோபிகா என்ற பெயர் தற்காலிகமாக மாற்றப்படுகிறது).

“பொறுப்பாத்தான் இருக்கா... என்ன செய்ய இன்னைக்கு ஒரு நாளைக்கான பால் தான் வாங்க முடியும், எப்படியிருந்தாலும் சாயங்காலம் விலை ஏத்திடுவானுங்க. இப்படி அத்தியாவசியத்துக்கெல்லாம் விலையேத்தினா அப்புறம் பூ விக்கிறவன், பழம் விக்கிறவன் எல்லாரும் விலை ஏத்திடுவானுங்க. ‘கேட்டா எந்தா காலத்துல இருக்க சார் நீ’ன்னு அரசியல் பேசுவானுங்க. எல்லாம் நம்ம தலைலதான் விடியும்” என்று ஒரு சாதாரணனாய் மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். அதற்குள் உலகின் மூன்றாம் தேவதை சிணுங்க, தொட்டில் பக்கம் சென்றேன்.
“நல்ல வேலைங்க, அவனுக்கு செய்தி தெரியல. அச்சச்சோ... செல்லக்குட்டி எழுந்திருச்சிடுச்சா.” என்று சொல்லி இரண்டாம் தேவதை மூன்றாம் தேவதையை இடுப்பில் வாங்கிக் கொண்டு,
“அழுதாளா’ங்க” எனக் கேட்க
“இல்ல இல்ல... அதுக்குள்ளே நான் எடுத்திட்டேன் உன்னத்தான் தேடினா”. என்னைபோலவே மீராவிற்கும் கண்விழிக்கையில் அனகா உடனிருக்க வேண்டும்.
“சரி மா, நீ பாத்துக்கோ. நான் இதோ வந்துடுறேன்” எனச் சொல்லி கிளம்பினேன்.
“எங்கங்க கிளம்பிட்டிங்க” எனக் கேள்வி வருமென்று எதிர்பார்த்தேன், வராததால்
“போய் வண்டி டேங்க் ஃபுல் பண்ணிட்டு வரேன், பெட்ரோல் விலை ஏறுதில்லையா” நானும் பொறுப்பாகத் தான் இருக்கிறேன் என்று சூசகமாகச் சொல்லி, கிளம்பினேன்.
--

9.15 AM
“என்னங்க, படிச்சது போதும் சாப்பிட வாங்க” வழக்கமான குரல் வரவில்லை. மீரா என்னை நோக்கி தவழ்ந்து வர
“என்ன பண்ணுறா இவ” என்று சொல்லி மீராவைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டே வெளியில் வந்தேன். அனகா டைனிங் டேபிளில் எனக்காக காத்துக் கொண்டிருந்தாள்.
“கூப்பிட்டிருக்கலாம் ல” என்று சொல்லி மீராவை அவளிடம் கொடுத்து விட்டு சாப்பிட அமர்ந்தேன். வெறும் ரசம் சாதம். குறிப்பால் உணர்த்துதலில் பெண்களை விஞ்ச யாருமில்லை. இரண்டு தருணங்களில் தான் வெறும் ரசம் இருக்கும் என் வீட்டில்.

ஒன்று ‘கோபம்’ என்றால்,
அதற்கு வாய்ப்பில்லையே, ஏதோ போனவாரம் கோபத்தில் திட்டி விட்டேன். அதற்காக என் காதலை சோதிக்க வேலாயுதத்திற்கு அழைத்துப் போகச் சொன்னாள், செய்தேன். இதைவிட வேறென்ன செய்யவேண்டும் அவளுக்கு?

இரண்டு ‘என்னிடம் எதையாவது சொல்லவேண்டும்’ என்றால்,
எதையாவது கேட்டால் ஓகே சொல்லி விட வேண்டும் இல்லையென்றால் பழைய சோறுதான் என்று அர்ஜுன் இன்ஸ்டிங்ட் கூற,
“ஹ்ம்ம்.. சொல்லு என்ன சொல்லணும்?”
“ஒண்ணுமில்லையே” என்னைப் பார்க்காமல் கூட பதிலளித்தாள்.
“அதான் தெரியுதே. வெறும் ரசம், என்னாச்சு ஏன் உம்’முன்னு இருக்க?”.
உள்ளே சென்றவள் சாம்பார் எடுத்து வந்து ஊற்ற, அப்படியே என் அம்மா கைப்பக்குவம். (மனைவி எவ்ளோ நல்லா சமைச்சாலும் அம்மாவைப் பாராட்டும் போக்கு என்று பெண்ணியவாதிகள் கமெண்ட் செய்யும் பொருட்டு இந்த வரிகள் சேர்க்கப் படுகின்றன. நமக்கு கமெண்ட் முக்கியம் அமைச்சரே!)

“என்னங்க... நாம ஒரு ஃப்ளாட் வாங்கலாங்க” என்றவள் சொல்ல,
“யார் அடிச்சு பொறி கலங்கி பூமி அதிருதோ அவன்தான் தமிழ்” இதேபோல ஒரு நிமிடம் ஸ்தம்பித்துத் திரும்பினேன். புரை ஏறிவிட்டது. கொஞ்சம் நீர் அருந்திவிட்டு,
“என்ன திடீர்னு, இங்க எல்லாம் வசதியைத் தானே இருக்கு? வாடகையும் ஓகே தானே?”
“இல்லங்க, பாப்பாவும் பெருசாகிட்டே வர்றா. விலைவாசி எல்லாம் ஏறிகிட்டே போகுது. இன்னும் பத்து வருஷத்துக்கு அப்புறம்’ன்னா வாங்குறது கஷ்டம். எங்கம்மாவும் இதே தான் சொன்னாங்க... அதான்”
அப்போதே நினைத்தேன், நிச்சயம் இந்த ஐடியா முதலாம் சூனியக்காரியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமென்று.
“பாக்கலாம்” என்று விஷயத்தையும் கை கழுவி விட்டு உள்ளே சென்றேன் மீராவுடன்.
--

11.10 AM
தண்ணீர் தாகமெடுக்க டைனிங் ரூமிற்கு சென்றேன். நான் சாப்பிட்டது போக அனைத்தும் அப்படியே இருந்தது. பெண்கள் ஹஜாரே’வுக்கெல்லாம் முன்னோடிகள். “எத்தன ட்ரிக்ஸ் வெச்சிருக்காங்க. முடியல”
“என்னாச்சுன்னு இப்போ சாப்பிடாம இருக்க?”
“பிடிக்கல” நினைத்தபடி கண்ணீர் துளிர்த்திருந்தது.
“சரி, இப்போ என்ன பண்ணனும்”
“முடிவு பண்ண நான் யாரு?” பெண்களின் அரசியல் புரிந்துகொள்ள முடியாதது.
“சரி, வா வந்து சாப்பிடு” என்று வலுக்கட்டாயமாக சாப்பிட அமர்த்தி விட்டு முதலாம் தேவதையை போனில் அழைத்தேன்.
“அம்மா, இவ என்னமோ புலம்பிகிட்டிருக்கா. ஏதோ வீடு வாங்கணுமாம்”
“அவ சொல்றதுல என்ன தப்பு? நானும் உங்கிட்ட சொல்லணும்’னு இருந்தேன்” தேவதைகளுக்குள்ளான ஒற்றுமையில் விழிபிதுங்கி வேம்பயர்’களாகிப் போவதேன்னவோ அப்பாவிக் கணவர்கள்தான்.
“சரி நாளைக்குப் போகலாம்” என்று சொன்ன பிறகுதான் என் சின்ட்ரெல்லா முகத்தில் சின்னப் புன்னகை மலர்ந்தது.
--

அடுத்தநாள்
7.40 AM
“பாவா, டபுள் பெட்ரூம் பிளாட் 25 லட்சம்’ன்னு டிவில சொல்றாங்க, வந்து பாருங்க” என்றென்னை அழைக்க,
“ரெண்டு பெட்ரூம் எதுக்கு? ஆசைதான் உனக்கு” என்று மறைபொருளில் கூற, புரிந்தாலும் புரியாதது போல பாவித்தாள்.
“பாவா, ஆதவன் சிட்டில ஃப்ளாட்ஸ் நல்லா இருக்குன்னு பத்மா சொன்னா. போன் பண்ணி கேளுங்க. ஒரெட்டு போய் பாத்துட்டு வந்துடலாம்”
“வேண்டாண்டி, அது ஏதோ நில அபகரிப்புல கட்டுனதாம். பேசிக்கிட்டாங்க”
“அப்ப தாரகை சி.எம் சிட்டில வாங்கலாமாங்க?”
“அது தாரகைTM சிட்டிமா, அதல்லாம் உனக்குப் புரியாது” சில விஷயங்களைச் சொல்லிப் புரிய வைப்பதற்குப் பதிலாக ஆணாதிக்கவாதியாகவே இருந்து விடலாம்.
“சரிங்க... அங்கேயே போலாம். உங்களுக்கு லக்கி நம்பர் 7 அதனால ஏழாம் நம்பர் ஃப்ளாட் கிடைச்சா உடனே ஓகே சொல்லிடனும்”
--

11.10AM
தாரகைTM சிட்டி புரோமோட்டர்ஸ்
மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது

வரவேற்றார்கள். எல்லாம் இளம்பச்சை நிற கட்டிடங்கள். அவர்களுக்கு லக்கி நம்பர் 9 என்பதால், எல்லா ஃப்ளாட்களும் 9ம் நம்பர் கொடுக்கப்பட்டு 9A, 9B என்று வகைப்படுத்தப் பட்டிருந்தன. அனகா-அர்ஜுன் என்பதால் 9AA ஃப்ளாட் கிடைக்குமா என்று பார்க்கச் சொன்னாள் அனகா.
“என்ன சார், மாடல் ஹவுஸ் இருக்கா? டபுள் பெட்ரூமா? வாஸ்துப்படி இருக்குமா?” வழக்கமான கேள்விகள், அனகா முகத்தில் கொஞ்சம் பிரகாசம்.
“சார், இது ஃப்யூச்சர் ஜெனரேஷன் புராஜக்ட். நீங்க எதிர்பார்க்குற வழக்கமான விஷயங்களுக்கு மாறா இதைக் கட்டியிருக்கிறோம்” புதிர் போட்டார்கள்.
“எஸ் சார். அரசின் அனைத்துச் சலுகைகளையும் கரெக்டா யூஸ் பண்ணி பெர்ஃபெக்டா கட்டியிருக்கிறோம். பக்கத்துலயே பெரிய நூலகம் இருக்கு, ஸோ மருத்துவ வசதிகள் உங்களுக்கு கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கு. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இதுதான் தமிழ்நாட்டுல மின்தடையில்லா முதல் சிட்டி சார்”
கேட்கவே இனித்தது. மின்தடையில்லா சிட்டி. எப்படி சாத்தியம்? ஆர்வம் மேலோங்கியது.

“அப்துல் கலாமே பாதுகாப்பானது’ன்னு சொல்லிட்டதால நம்ம சிட்டிக்குன்னு தனியா ஒரு அணுஉலை கட்டிகிட்டிருக்கோம். நீங்க ஷேர் பண்ணிக்கலாம். இல்லை உங்களுக்கு தனி மீட்டர் வேணும்’ன்னு ஆசைப்பட்டா அக்னி மூலைல ஒரு மினி ரியாக்டர் கட்டி கொடுத்திடுவோம். விரைவில் வீட்டுகொரு ரியாக்டர் திட்டத்தை அரசே அறிமுகப் படுத்தப்போறதால மானிய விலையில யுரேனியம் உங்களுக்கு கிடைக்கும்” சொல்லி முடித்தார்.
“என்னங்க என்னென்னமோ சொல்லுறிங்க. அவ்ளோ விலையிலெல்லாம் வேண்டாங்க” சொல்லி முடிப்பதற்கு முன்னரே,
“அதான் அவ்ளோ சொல்றாரில்லங்க, வாங்கிடுவோங்க. கொஞ்சம் முன்னப்பின்ன ஆனாலும் பரவால்லங்க. எனக்கு பிடிச்சிருக்குங்க”. வீட்டு நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டது இனியொன்றும் சொல்வதற்கில்லை.
“ஓகே சார். வீட்டுல பேசிட்டு சொல்றோம்”
“இந்த வாரமே புக் பண்ணினா, வீடு கட்டி குடியேறுற வர சென்னைல எங்கயும் போயிட்டு வர இலவச பஸ் பாஸ் கொடுக்குறோம் சார். ஸோ டிலே பண்ணாதிங்க” என்க, தூண்டிலில் அகப்பட்டவனாய் மாதாந்திர EMI யைக் குறிந்து சிந்தித்துக் கொண்டே வெளியேறினேன்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

17 comments:

கோம்பை சண்முகம் said...

அருமை அழகியலும்,உளவியலும்.

சி.பி.செந்தில்குமார் said...

மொத வாலு

சி.பி.செந்தில்குமார் said...

>>(மனைவி எவ்ளோ நல்லா சமைச்சாலும் அம்மாவைப் பாராட்டும் போக்கு என்று பெண்ணியவாதிகள் கமெண்ட் செய்யும் பொருட்டு இந்த வரிகள் சேர்க்கப் படுகின்றன. நமக்கு கமெண்ட் முக்கியம் அமைச்சரே!)

நக்கலு?!!

சி.பி.செந்தில்குமார் said...

>>Your comment has been saved and will be visible after blog owner approval.

ஓனர்காரு!! வணக்கமுங்கோவ்

சி.பி.செந்தில்குமார் said...

டைமிங்க் இமேஜினேஷன் வித் ஹியூமர் சென்ஸ்

இளஞ்சிங்கம் நவீன் said...

இரண்டாம் தேவதை ,முதலாம் சூனியக்காரி போன்றவை நிச்சயம் உண்மையிலேயே அருமை....//யார் அடிச்சு பொறி கலங்கி பூமி அதிருதோ அவன்தான் தமிழ்// உண்மையா?/ யார் அடிச்சும் ரெண்டு நாள் அழுதுட்டு மூணாவது நாள் வேலை பார்க்க கிளம்புவானே அவன் தான் தமிழன்.....

வேதாளம் said...

@சண்முகம் @நவீன்: நன்றி

@செந்தில்: எல்லாம் உங்கள் ஆசி தான். நக்கலு இல்லாட்டி எப்புடி? ஆங்!

Athammohamed said...

அருமையான படைப்பு, நான் உமது ட்வீட் ரசிகன்.

jroldmonk said...

அட எழுத்தில் நல்ல முதிர்ச்சி..ஜஸ்ட் படிக்க ஆரம்பிச்சேன்.. நிறுத்தாம கதையை படிச்சு முடிச்சேன்.. நல்ல ஃப்ளோ.keep it up arjun :-)

கோமாளி செல்வா said...

//க்கத்துலயே பெரிய நூலகம் இருக்கு, ஸோ மருத்துவ வசதிகள் உங்களுக்கு கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கு.//

இது நல்லா இருக்கு. கணவன், மனைவி பற்றின குறிப்பாலுணர்த்தும் விசயங்களும் உண்மை.

உங்க அம்மா தேவதை , அவுங்க அம்மா சூனியக்காரியோ ? :))

திருமாறன்.தி said...

கல்யாணம் ஆகாமலே கணவன் மனைவி உரையாடல்களை அருமையாய் எழுதியிருக்கிறார்கள்.எழுத்துநடையில் நல்ல முன்னேற்றம்...முடிவில் ரியாக்டர் எல்லாம் ஆதீத கற்பனை என்றாலும் நகைச்சுவை என்பதால் ஏற்றுக்கொள்ளலாம்.வாழ்த்துகள்.தொடருங்கள்

Renu said...

கல்யாணம் பண்ணுனவன் எழுதுற மாதிரியே எழுதி இருக்க ? ஒழுங்கா உண்மைய சொல்லு

Natarajan said...

கோபிகாவை அடுத்து அனகாவையும் துணைவியாக்கி சேர நாட்டினர் சமூக சமத்துவம் இல்லாதவர் என்பது மீண்டுமொரு முறை நிரூபணம் ஆகிவிட்டது. வருங்கால இளைஞர் நலம் பெறும் படி மற்ற இரு தேவதைகளை தமிழகத்திலேயே பறந்து அருள்பாலிக்குமாறு தமிழ் இளைஞர்கள் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.

இவண்.
காதல் பரப்பு செயலாளர்,
தேவதை தேடுவோர் சங்கம்,
பிரேமனூர்-143143

தளவாடி said...

குடும்ப வாழ்வின் எதார்த்தம் புரிகிறது உங்கள் எழுத்தில்.எனக்கு ஒரு சந்தேகம் , மனைவியை தேவதை என்டு இந்த காலத்தில யார் சொல்றது?நீங்க சொல்லி இருக்கிரீங்க.உங்கட நிஜ வாழ்கையில் வரும் மனைவியையும் இப்டி சொல்லுவீங்களா?

வெண்பூ said...

நல்லா இருக்கு... அணு உலைகூட கட்டலாம், ஆனா அதைவிட பஸ்பாஸுக்கு மதிப்பு அதிகம்னு நக்கல் அடிச்சிருக்குறது நல்லா இருக்கு :)

கிரி ராமசுப்ரமணியன் said...

படிச்சிட்டேன்!

ILA(@)இளா said...

//பக்கத்துலயே பெரிய நூலகம் இருக்கு, ஸோ மருத்துவ வசதிகள் உங்களுக்கு கைக்கெட்டும் தூரத்திலேயே //
ரொம்பவும் ரசிக்க வைத்த வரிகள்