அன்பே சிவம்


இன்று ஏதோ சந்திர கிரகணமாம். பாம்பு வந்து சந்திரனை விழுங்குமாம். அந்த வேளையில் எதுவும் சாப்பிடக் கூடாது. கிரகணம் முடிந்ததும் குளிக்க வேண்டும் என்றெல்லாம் பல்வேறு நம்பிக்கைகள். அவ நம்பிக்கை என்று நான் சொல்ல வரவில்லை, எல்லாம் அவரவர் நம்பிக்கை. மூட நம்பிக்கை என்றும் சொல்லவில்லை, முன்னோர்கள் சொன்ன நம்பிக்கை. எது எப்படியோ, என்னைப் பொறுத்தவரை ஒருவரது நம்பிக்கை என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அது அடுத்தவரை பாதிக்காத வரையில். பலருக்கும் எடுத்துச் சொல்லவேண்டிய மெத்தப் படித்தவர்களும் இதற்கு உடந்தை போவதே வருந்தற்க விஷயம்.


இன்று என்னறையில் நடந்த நிகழ்வு மிக மோசமாய் சுட்டு விட்டதென்னை. கிரகணம் தொடங்கியதும் உறங்கிப் போனான் அறைத்தோழன். எல்லா பேச்சிலர் அறை வழக்கங்கள் தான் என்னறையிலும். “இன்றைக்கு நான் நாளைக்கு நீ”, கல்லறை வாசகமல்ல இது. சமையலறை வாசகம். இதன்படி நண்பனை தோசை சுட மாவு வாங்கி வரச் சொல்லி பணித்தேன். எழுத்து கிரகணம் தொடங்கியதுமே நித்திரை போனவன் என் உசுப்பலில் எழுந்து அலைபேசியில் நேரம் நோக்கினான். மணி எட்டு, “ஒன்பதரைக்கு கிரகணம் முடிகிறது அப்புறமாய் போகிறேன்” என்றான். பூங்குழலியின் அழகில் மயங்கிக் கிடந்த நான் பொன்னியின் செல்வனோடு பொறாமை வளர்த்து வாசித்தலைத் தொடர்ந்தேன். மணி ஒன்பதும் ஆனது, எழுந்தவன் நேராக குளிக்கச் சென்றுவிட்டான். அடுப்பில் எதுவுமில்லை என்ற கடுப்பில் போட்ட ட்விட்டில் எழுந்த கேள்விக் கணைகளுக்கான பதில் தான் இப்பதிவு. நண்பனைக் குறிப்பிடாமல் பொதுவாக ட்விட்டியது பலரையும் பாதித்திருக்கலாம். சிரம் தாழ்த்தி, பாதமலர் தொட்டு மன்னிப்புக் கோருகிறேன். மன்னித்தருளுக! இருந்தும் மற்ற சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது என் கடமை.


“சபரிமலைக்கு மாலை போட்டிருப்பவன், அடுத்தவன் நம்பிக்கையை கேலி செய்யலாமா?”
நான் ஆத்திகன், நாத்திகன் என்பதை விடுங்கள். மாலை போட்டிருப்பதால் ஒரு பலன். எல்லோரும் என்னைக் கடவுளாக காண்பதாக எண்ணிக் கொண்டு, என்னை மனிதனாகப் பார்க்கிறார்கள். நான் அவர்களை மனிதனாக்கப் பார்க்கிறேன். சென்னை வந்து ஒரு வருடமாகியும் இந்த ஒரு மாதத்தில் தான் மனிதன் என்ற மரியாதை கிடைக்கிறது. அதைக் கேட்டு வாங்கத்தான் தோளில் ஒரு நீலவஸ்திரம். மற்றுமல்லாமல், அசைவம் தவிர்த்திருக்கிறேன். கெட்ட எண்ணங்களை தவிர்த்திருக்கிறேன், தினம் இருவேளைக் குளிக்கிறேன். இருந்தும் ஒருநாள் கூட கோவிலுக்குப் போனதில்லையே? மேலும் என் நம்பிக்கைகள் என்னைச் சார்ந்தவர்களை பாதிக்கும்படி நடந்ததில்லையே! மற்றவர்கள் ஏன் அப்படி இல்லை?


“எதற்காக மாலை போடணும்?”
விரதம் என்ற போர்வையில் எனக்கான ஒரு மன புத்துணர்வை, எண்ணப் புத்துணர்வை இதனால் அடைய முடிகிறது. என்னை என்னாலேயே கட்டுப் படுத்த முடிகிறது. வருடத்தின் பத்து மாதங்கள் எப்படியெல்லாமோ இருக்கிறேன், இரண்டு மாதங்கள் கட்டுப்பாடு முடிகிறது. வருடம் முழுவதும் தண்ணியடித்து திரிபவர்கள் இந்த இரண்டு மாதங்கள் ஒழுங்காய் இருப்பது உதாரணம். காரணம் கடவுளோ, பயமோ அல்ல. மனத்தின் ஒரு ஆசை. "அட! இப்படியெல்லாம் இருக்க மாட்டோமா?" என்று. அதற்கான ஒரு சந்தர்ப்பம் மாலை போடுதல்.


“அப்படி என்னய்யா இருக்கு சபரிமலைல. எதுக்கு சபரிமலை போகணும்?”
சபரிமலையை ஒரு கோவிலாக அல்லாமல் ஒரு புண்ணிய க்ஷேத்ரமாகத் தான் காண்கிறேன். கேரளத்தான் என்பதற்காக மட்டும் இதை சொல்லவில்லை. கேரளத்திலிருந்தாலும் தமிழ்த் தா(க்)கம் தான் எனக்கு அதிகம். எருமேலி’யிலிருந்து சன்னிதானம் வரை 48 மைல்கள்(ஏறக்குறைய) முழுவதும் காட்டு வழிப்பாதையில் இயற்கைக் காற்றை சுவாசித்தபடி, இயற்கையோடு இசைந்து பிளாஸ்டிக், மொபைல் போன்ற அன்றாட இம்சைகள் இல்லாமல் செருப்பில்லா நடை பயணம். என்னைப் பொறுத்தவரை கடவுள் என்பது மனிதனை இயக்கம் விசை. அப்படியானால் “திங்களைப் போற்றியும், ஞாயிறைப் போற்றியும், மாமழையை போற்றியும்” எனும் இயற்கை வாழ்த்தை மனத்தில் கொண்டவனான எனக்கு இயற்கை தான் கடவுள். இயற்கைதான் மனிதனை இயக்குகிறது. எனவே இப்பயணத்தை என் உடல் புத்துணர்வுக்கான ஒரு வழியாய் உணர்கிறேன். மாலை போடாமல் போவது அங்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும், கேள்விகளை ஏற்படுத்தும் அதற்காகத் தான் இந்த மாலை, அன்றி வேறொன்றுமில்லை. சபரிமலையை மட்டும் இப்படிச் சொல்லவில்லை. ஆந்திராவில் ஸ்ரீசைலம் புண்ணியஸ்தலத்தையும் இப்படித்தான் சொல்லுவேன். இரண்டு மலைகளுக்கிடையில் நதி முகட்டில் அந்த திருத்தலம், சொர்க்கம்.


“என்னதான் சொல்ல வர்ற?”
இக்கணத்தில் கடவுள் இல்லை என்பவன், நாளை எனக்கோ, என் தாய்க்கோ, என் குடும்பத்திற்கோ ஏதேனும் ஒன்று என்றால் நான் கூட கடவுளிடம் போய் கையேந்தலாம். யார் கண்டார்? 

டிஸ்கி: கடவுளை வணங்குபவர்களை எல்லோரும் தேவைக்காக போகிறார்கள் என்று சொல்லவில்லை, உயிர் போகும் நிலை வந்தால் ஒருவேளை "நானும்" கடவுளிடம் போகலாம் என்றுதான் சொல்கிறேன்.

3 comments:

கிரி ராமசுப்ரமணியன் said...

நல்ல பதிவு!
வாழ்த்துகள்!

நடராஜன் said...

http://www.youtube.com/watch?v=4DNt7d3Wi2Q எனக்கு சிப்பு சிப்பா வருது!

rishvan said...

nice post... please read my tamil kavithaigal blog in www.rishvan.com