சென்னையின் செல்வன்


பல வீரதீர சரித்திர நாயகர்களை போற்றிக் கொண்டாடும் நேயர்கள் அனைவரையும் மற்றுமொரு மாவீரன் சரித்திரத்தை அறிந்துகொள்ள அழைக்கிறோம். முன்பொரு காலத்தில் மதராசப்பட்டினம் என்றழைக்கப்பட்டு பின்னர் சென்னை தேசமாக மாறிய ஊரில் தான் நம் கதாநாயகனை காலம் நமக்கு அறிமுகம் செய்கிறது. நேயர்களுக்கும் நாம் அவ்வாறே அறிமுகம் செய்கிறோம். சென்னை தேசம் மாபெரும் அங்காடிகள், மின் தொடர்வண்டி, இரைச்சல் மிகுந்த சாலைகள், சாலைகள் தோறும் ஊர்திகள் என்று அனுகணமும் இயங்கிக் கொண்டிருக்கும் நகரம். அரண்மையாக கட்டப்பட்டவை எல்லாம் ஆதுர சாலைகளாக மாறவேண்டும் என்று ஆணையிட்ட ராணி மங்கம்மாவின் ஆட்சியில் இயங்கும் தலைநகரம். மேலும் சென்னையானது சேர சோழ பாண்டிய மற்றும் மற்ற பல தேசத்து அழகிய மகளிரையும் உள்ளடக்கிய ஒரு பெருநகராகும். இவர்களுக்கெல்லாம் கனவு நாயகனாக விளங்க அழகிற் சிறந்தவனாம் எம்பெருமான் வேலாயுதத்தின் நகலெடுத்து அந்நகலில், ஆதவனைப் பிரதியெடுத்து அதிலிருந்த வர்ணம் கொண்டு உடலையும், பூரண சந்திரனைப் பிரதியெடுத்து அதிற்கொண்ட குளுமையையும் எழிலையும் ஒருசேரக் கலந்து உள்ளத்தையும், சப்தரிஷி மண்டலத்திலிருந்து இரண்டை பெயர்த்தெடுத்து கண்களையும், கொடுத்துச் சிவக்கும் அகண்ட கரங்களையும் படைத்து பூமிக்கு அனுப்பினான் பிரம்மன். சென்னையின் செல்வனாமவன் பெயர் கார்க்கி.

நம் நாயகன் பார்த்த கணத்திலேயே அடுத்தவரை கவரும் வசீகரம் கொண்டவன். பேச்சில் துணுக்கும், அன்பும் பொங்கித் ததும்பி வழியும். தமிழர் மரபாம் வில் வித்தை, குதிரை ஏற்றம், களறி, சிலம்பம், யானை ஏற்றம் போன்ற வித்தைகள் பலவும் கால ஓட்டத்தில் மறைந்திருந்தால் நம் நாயகன் அதிலெல்லாம் வல்லவன் என்று சொல்ல இயலாமல் போயிற்று. இருந்தும் ஓரிடத்திலிருந்து வேறோரிடம் விரைந்து செல்ல உதவும் இருசக்கர வாகனம் விடுதலில் நம் நாயகன் சிறந்து விளங்கினான். தலைக்கவசம் அணிந்து வேகமாக, லாவகமாக அவன் வாகனம் செலுத்தி நிறுத்துகையில் நவ நாகரிக பெண்டிர் கண் இமைக்க மறப்பர். தலைக்கவசம் கழட்டி குறும்புன்னகை புரிந்தால் மாட மாளிகை வாழ் மயில் போன்ற மங்கையர் இதயம் நொறுங்கிச் சுக்குநூறாகும். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு அவர்கள் உள்ளம் நெகிழும்படி உதவி செய்வதில் நம் நாயகன் கர்ணனுக்கு இணையென்றால் அது மிகையாகாது. இப்படி அத்துணை அழகையும் அறிவையும் ஒருசேரக் காண்பதென்பதரிது. எத்துனையோ பெண்கள் வலை விரித்தும் சிக்காதவன். நம் நாயகன், பொறி வைத்துப் பிடிக்க எலியல்ல, புலி. தூண்டிலில் சிக்க மீனல்ல “சுறா”. சென்னை தேசத்திற்கே கனவுக் கண்ணனாக விளங்கிய நம் நாயகனுக்கு, தேவலோகத்திலிருந்து தவறிவிழுந்து பூலோகம் வந்த ரம்பைகளும், மேனகைகளும் பல பின்நவீனத்துவ வசியங்களை முயன்றும் அதில் வசியப்படாதவன். வானத்து வாழ் தேவதைகளும் பார்த்து வியக்கும் எழில்மேனியோன்.

பேச்சிலும் நம் நாயகன் சிறந்து விளங்கினான். பேசச் சொன்னால், முன்னூறாண்டுத் தேனெடுத்து அதனோடு பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதம் குழப்பி, மனம் மயக்கும் மணம் கொண்ட தாழம்பூவின் வாசனையோடு உருவாக்கிய திரவியத்தை நுகர்ந்தருந்தியதுபோல ஒரு நல்ல உணர்வினையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் பேச்சாய் அது நிச்சயம் இருக்கும். மேலும் நகைச்சுவை உணர்விலும் சிறந்து விளங்கினான். இதுவே சமகாலத்தில் பல தமிழறிஞர்களாலும் மொக்கை என்றழைக்கப்பட்டது


ஈரடி வேந்தன், சொற்செல்வன் வள்ளுவன் உணவருந்துகையில் அழைத்த குரலுக்கு இறைத்த நீரை அப்படியே விட்டு கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த வாசுகியின் பக்தியை மிஞ்சும் குரு பக்தி கொண்ட, கட்டை விரலைக் கேட்ட துரோணருக்கு அதை வெட்டிப் படைத்த ஏகலைவனைப் போன்ற நால்வரை சீடர்களாகப் பெற்றார் நம் கார்க்கி. நால்வருக்கும் தனித்தனி பாடங்களைப் பயிற்றுவித்தார். அவர்களுள் வேதாளம், நட்ராஜ் இருவருக்கும் இணைய(ற்ற) நட்பின் இலக்கணத்தையும், சற்றே இலக்கியத்தையும் கற்றுக் கொடுத்தார் (நால்வருள் பிரதான சீடனான வேதாளம் பிற்காலத்தில் சேர நாடு சென்று அழகும், கருணையும், கோபமும் ஒருசேரப் பெற்ற மலையாள கோபியருள் ஒருவரை மணந்து பேரும் புகழும் பெற்று வாழ்ந்தான். சாத்தியமென்றால் பின்வரும் அத்தியாயங்களில் இதை விரிவாகக் காணலாம்). மூன்றாமவன் பிரிட்டோவிற்கு பெண்களைக் கவரும் சூத்திரத்தையும், நான்காமவன் குள்ளபுஜிக்கு போதை மிகு நிலையற்ற உலகில் நிலையான மகிழ்வைத்தரும் சூட்சுமத்தையும் போதித்தார். மேலும் கரகம், குரவைக்கூத்து, பொம்மலாட்டம் போன்றிவை பெரும்பாலும் அழிந்துவிட்ட நிலையில் தன் சீடர்களுடன் பல கருத்துகளையும் குறும்படங்கள் என்னும் நிகழ்வுகளைப் பதியவைத்து பிற்பாடு அதை மீண்டும் காணச் செய்யும் தொழில்நுட்பமாம் காணொளி வாயிலாக உலகிற்களித்தார்.


நண்பர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியமான அத்தியாயம் என்று தன் சீடர்களுக்கு போதித்த கார்க்கியின் மிகச்சிறந்த நண்பர்களைப் பற்றி சொல்லவேண்டியது நம் கடமையாகிறது. அதென்னவோ சங்ககாலந்தொட்டே கதாநாயகர்களுக்கும் பரிசல்காரர்களுக்கும் ஒரு உறவு இருந்துகொண்டுதான் இருக்கிறது. ராமனுக்கு குகனைப் போலவும், பொன்னியின் செல்வனுக்கு பூங்குழலியைப் போலவும் நம் நாயகனுக்கும் பெயரால் பரிசல்காரரான ஒருவரின் நட்பு இருக்கிறது. நட்பிற்கிலக்கணமாக புராணங்கள் கூறும் துரியோதனன்-கர்ணன் நட்பும் இவர்கள் முன்பு தோற்குமெனில் அது பொய்யாகாது.


இந்தச்சமயத்தில் நாம் நிகழ்காலத்திற்கு திரும்பவேண்டியது அவசியமாகிறது. ஒரு போட்டி அல்லது வருடத்தின் சிறந்த குறும்படைப்பு சாதனையாளருக்கான தேர்வு. இதில் உலகிற்கு செய்திகளையும், கருத்துக்களையும் எடுத்துச் சொல்லும் இணையத்தின் வழி அனைவரும் இணைந்த கீச்சுலகில் முடிசூடா மன்னனாய், இணைய(ற்ற) தளபதியாய் விளங்கும் கார்க்கி, தன்னுடன் போட்டியிட்ட அனைவரையும் வென்று முதலிடத்தில் வீற்றிருப்பது, வெஞ்சமரில் வென்று யானை மீதமர்ந்து, வென்றநாட்டில் வலம் வரும் மன்னனைப் போல இறுமாப்பும், கம்பீரமும் கொண்ட சிங்கமாய் காட்சியளிப்பதைப் போலிருக்கிறது. இக்காட்சியைக் காண கண்கோடி வேண்டுமே. இதைக்காணும் ஒவ்வொருவரும், கார்க்கி இதே போல வாழ்வில் பல வெற்றிகளை பெற்று அவர் வாழ்வு சிறக்க இறைவனை இறைஞ்சுவோமாக.18 comments:

ILA(@)இளா said...

Good

தல தளபதி said...

குரு கார்க்கி சரணம் !

rathinamuthu said...

சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள்.

பரிசல்காரன் said...

கருத்தை விடு. கவனத்தைக் கவர்கிறதுன் எழுத்து. வாசிக்கும் புத்தகம், யோசனைக்குள் புகுந்து உன்னைச் செலுத்துமாயுன் அது படைப்பு.

அவ்வகையில் இத்துணை காலம் கடந்து கல்கியும் வென்றார். அஃதே போல் நீயும் வென்றாய்.

வெல்ல வாழ்த்துக்கள் இதுவரை. வென்றதற்கு வாழ்த்துகள் இதற்கு!

- பரிசல்காரன்

amas said...

Is this written by you, Vedhalam? What amazing maturity in your wring style. Good tribute to Karki who so well deserves it! But more importantly you have written this piece with pride and passion. Congratulations :-)
amas32

karu_naakku said...

நல்ல நடை! தங்களது இளகிய மனம், நற்றமிழில் இனிமை கொட்டி ,நட்புக்கு பொன் சாமரம் வீசியுள்ளது! அங்கும், இங்கும் நீங்கள் தூவிய நகைச்சுவை,புன்னகை புழுதியை எழுப்பியுள்ளது! எழுக நின் தமிழ்! வாழிய நட்பு!
-அன்புடன் கருநாக்கு

PRAKASH said...

சூப்பர்...!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

"சென்னையின் செல்வன்" இனிய வாசிப்பு! சிரித்துக் கொண்டே வாசித்தேன்!:)

சில வாசிப்புகள் நமக்குள் புகுந்து, கைக்குள் நுழைந்து, நடையோடும், நற்றமிழோடும்!

//மூன்றாமவன் பிரிட்டோவிற்கு பெண்களைக் கவரும் சூத்திரத்தையும், நான்காமவன் குள்ளபுஜிக்கு போதை மிகு நிலையற்ற உலகில் நிலையான மகிழ்வைத்தரும் சூட்சுமத்தையும் போதித்தார்//

வெறும் பாராட்டுப் பத்திரங்களை விட, எண்ணப் புரிதல்கள், அதனால் விளைந்த எழுத்துச் சிதறல்கள், கற்பனையை விரிப்பவை!

அப்படி விரிக்க வைத்த வேதாளம், இன்னும் பறந்து சிறகடிக்க வாழ்த்துக்கள்!
ஒருவரோடு ஒருவர் இயைந்து வளர்வதே = நட்பின் மாண்பு! அதான் கார்க்கிக்கும் பிடிக்கும்!:)

சென்னையின் செல்வனுக்கும், சென்னையின் செல்வனைப் படைத்தவனுக்கும் வாழ்த்துக்கள்!:)

வேதாளம் அர்ஜுன் said...

@இளா @தலதளபதி @rathinamuthu @prakash @கருநாக்கு: நன்றிகள் தோழர்களே..

@பரிசல்://வாசிக்கும் புத்தகம், யோசனைக்குள் புகுந்து உன்னைச் செலுத்துமாயுன் அது படைப்பு//

அப்படியானால் முதலில் வென்றது நீங்களும் கார்க்கி அண்ணனும் தான்


@amas32: thanks for ur support mom,that really inspires me lot

@கண்ணபிரான்: நன்றிகள். கத்துக்குட்டிக்கு நீங்கள் எல்லோரும் தானே வழிகாட்டிகள்...

Itzpooraan said...

கதி கலங்க வைக்கும், மதி நுட்பம்! மிரள வைக்கும் தமிழ் நடை! அலற வைக்கும் சங்க கால உவமைகள்! என்னமோ போங்க! உங்களுக்குள் இம்புட்டு அறிவா?! பொறாமையா இருக்கு! $வாழ்த்துகள்!!!

நடராஜன் said...

பொன்னியின் கரையில் சோழனின் ஆதரவில் வளர்ந்த தமிழ் இன்று மெரினாவின் கரையில் மலர்வது மகிழ்ச்சி! இதை விட சிறப்பாக கல்கியை சமகாலத்தில் நகலெடுப்பது சாத்தியமா எனத் தெரியவில்லை! உமது தமிழுக்கும், குருபக்திக்கும் வந்தனம்! :)

குழந்தபையன் said...

// பெண்களைக் கவரும் சூத்திரத்தையும்//

தம்பி பொய் பேச கூடாது

Sathesh Chellappa said...

எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. சாருக்கு ஒரு இலக்கியவாதி ஐடெண்டி கார்ட் பார்ஸல்.....

திருமாறன்.தி said...

ஆஹா...அருமை அருமை அர்ஜூன். என்ன ஒரு முதிர்ச்சி எழுத்தில். மிகவும் ரசித்தேன்.வர்ணனை ஒவ்வொன்னும் அபாரம்.

//தமிழர் மரபாம் வில் வித்தை, குதிரை ஏற்றம், களறி, சிலம்பம், யானை ஏற்றம் போன்ற வித்தைகள் பலவும் கால ஓட்டத்தில் மறைந்திருந்தால் நம் நாயகன் அதிலெல்லாம் வல்லவன் என்று சொல்ல இயலாமல் போயிற்று.// இதில் வரும் டிவிஸ்டை மிகவும் ரசித்தேன்.

குருவுக்கு ஆகச்சிறந்த குருதட்சனை.

Renu said...

என்னே ஒரு குருபக்தி ! பதிவு கலக்கல் :)

கோமாளி செல்வா said...

என்ன சொல்லுறதுனே தெரியல. சத்தியமா அப்படியே பிரமிச்சுப்போய் நிக்கிறேன். இன்னும் சொல்லப்போனா இதுல கமெண்ட் போடுற அளவுக்குக் கூட என்னோட இலக்கிய அறிவு இல்லை.

ரொம்ப மகிழ்ச்சியாவும், சந்தோசமாகவும் இருக்கு :))

கார்க்கி said...

!!!!!!!!!!!!

நன்றி நன்றி நன்றி

ரகு said...

இப்போது தான் உன் எழுத்துகளை முதன் முதலாக படிக்கிறேன்.மிக அழகான நடை,சொற்கோர்வை... நீ பெரிய எழுத்தாளர் என்பதையும் கடந்து நல்ல மனிதனாய் வருவாய்! வாழ்த்துக்கள். வளர்க!