நான் சொன்னதும் மழை வந்துச்சா..


அப்படி நடந்திருக்க கூடாதுதான். என்ன செய்ய, தன்னையே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ஆற்றாமையில், இரண்டொரு நாட்கள் ஷேவ் செய்யப்பட்டிராத கன்னங்களைச் சொறிந்துகொண்டே கடும் எரிச்சலில் மொட்டை மாடி சுவற்றை எட்டி உதைத்தான் விஷ்வா. ஒரு பாக்கெட் கிங்க்ஸ் அணைந்து கிடந்தது அவன் காலடியில். ஓங்கி ஒரு அறை அறைந்துகொண்டான் தனக்குத்தானே. ஒரு நிமிட இச்சை இவை அனைத்திற்கும் காரணமென்று தன்னைத் தானே வருத்திக் கொண்டிருந்தான். இரண்டு நாட்களாய் வேலைக்கு செல்லவில்லை. அவள் முகம் காணாமல் உணவுமில்லை, உறக்கமுமில்லை.


நம்பர் 9C, நந்தனா அப்பார்ட்மென்ட்ஸ். விஷ்வாவும், ஸ்ருதியும் ஒன்றாய் தங்கியிருக்கும் ஃப்ளாட். நண்பர்களா, காதலர்களா, திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்களா என்று அவர்களுக்கும் தெரியாது அப்பார்ட்மென்ட்சிலும் யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட ஒரு ரிலேஷன்ஷிப் இருவருக்குள்ளும். அதற்காக லிவிங் டுகெதர் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அவளுக்கு உடம்பு சரியில்லை என்றால் இவன் காபி போட்டுத் தருவான், வெந்நீர் வைத்து மருந்து மாத்திரைகள் கொடுப்பான். இவனுக்கு அலுவலகத்தில் ஒரு பாராட்டு என்றால் ஒரு சைவ கட்டிப்பிடித்தலோடு பாராட்டுக் கிடைக்கும் அவளிடமிருந்து. இருவரும் ஒரே ஊர்க்காரர்கள், ஒரே ஊரில் வேலை செய்கிறவர்கள். அவ்வளவுதான். அவ்வளவே தான்.


‘சென்னை போன்ற ஒரு மாநகரின் ஒரு ஆண் துணை நிச்சயம் வேண்டும்’ என்று அவளோ, ‘ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்துக்காது. நல்லா சமைக்கிற ஒரு ஆள் கூட இருந்தா நல்லா இருக்குமே’ என்று இவனோ ஒரு போதும் நினைத்தது கிடையாது. இரண்டு மூன்று வருடங்களாக ஒரே ஃப்ளாட்டில் தான் வசிக்கிறார்கள். ஒரே பேருந்தில்தான் ஊருக்குச் செல்லுவார்கள், ஒன்றாகத் தான் பைக்கில் ஊர் சுற்றுவார்கள், சினிமாவுக்குப் போவார்கள். இன்னும் சொல்லப்போனால் நடுவில் ஒற்றைத் தலையணையை சாட்சியாக்கி, கட்டிலை பகிர்ந்து கொள்ளுமளவு பரஸ்பர புரிதலும் நம்பிக்கையும் கொண்ட இரண்டு பேர். அந்த அப்பார்ட்மெண்டே அவர்களை கணவன் மனைவி என்று தான் நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் இருவருக்குள்ளும் காதல் என்றொரு எண்ணம்கூட இருந்ததில்லை.


நண்பனின் நிச்சயதார்த்தத்திற்கு சென்று விட்டு அன்று இருவரும் ஃப்ளாட்டுக்கு வரும்போது மணி 11 ஐ தாண்டியிருந்தது. என்றாவது குடிக்கும் பழக்கம் இருந்தாலும் அன்றைய தினம் கொஞ்சமாக, ரொம்பக் கொஞ்சமாகத்தான் குடித்திருந்தான் விஷ்வா. குடித்தால் அன்று முழுவதும் ஷ்ருதி பேசமாட்டாள், சமைக்க மாட்டாள் தனிமை வெறுப்பேற்றும் என்பதாலேயே பெரும்பாலும் குடிப்பதைத் தவிர்த்து விடுவான். கொஞ்சம் குடித்ததற்கே “உன்கூட பைக்கில் வர மாட்டேன்” என்று அவள் கோபித்துக்கொண்டு விட்டாள். நேரம் வைகியதால் நண்பர்கள் சமாதனப் படுத்தி இவனோடு அவளை அனுப்பி வைத்தனர். வழி நெடுக சாரி சொன்ன படியே வண்டியை ஓட்டினான். அவள் செவிமடுக்கவில்லை. வீடு வந்தவள் உடை மாற்றி உறங்கச் சென்று விட்டாள். கெஞ்சல்கள் எல்லாம் வீண். கோபத்தில் அவள் முகம் இன்னும் சிவந்திருந்தது மருதாணியிட்ட கைகளைப் போலென்று காலங்காலமாய் சொல்லப்படும் உவமை போல். கோபத்தின் எதிரொலியாய் கட்டிலின் நடுவே இரண்டு தலையணைகள். இனி பேசிப் பிரயோஜனமில்லை என்று இவனும் உறங்கச் சென்றான்.


மணி சுமார் இரண்டு இருக்கும், தொடர்ந்து குரைத்த நாய்களின் சத்தம் உடலால் உறங்கிக் கொண்டே உள்ளத்தால் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கும் விஷ்வாவை விழிக்கச் செய்தது. நெஞ்சு லேசாய் எரிவதாய் உணர்ந்தான். போய்க் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு ஒரு கிங்க்ஸ்’ஐ எடுத்து பற்ற வைத்தவாறு பால்கனிக்குச் சென்றான். எப்படி அவளை சமாதனப் படுத்துவது என்றெண்ணியபடி எண்ணங்களை ஆஷ் ட்ரேயில் நிறைத்து விட்டு கட்டிலுக்கு வந்தான். வந்தவன் நேராய் கட்டில் முனையில் காலை இடித்துக் கொள்ள, அருகிலிருந்த சின்ன நைட் லேம்ப்பின் சுவிட்ச்சை தட்டினான். அங்கு ஆரம்பித்தது வில்லங்கம்.


இளம் நீல நிற ஒளியில், போர்வை விலகியிருக்க ஸ்ருதியைக் கண்டவன் ஸ்தம்பித்து விட்டான். முதல் முறையாய் அழகியாய் இருந்தவள் உறங்கும் தேவதையாய் தோன்றினாள் இவன் கண்களுக்கு. பௌர்ணமியை மேகம் மறைத்திருப்பதைப் போல் உணர்ந்தான். கலைந்திருந்த கூந்தலுமாய் தலையணையைக் கட்டியணைத்து உறங்குமவளை கண்களால் வருடினான். காற்றிலேயே அவள் உடல் பருகினான். அந்த ஏ.சி அறையிலும் தன்னுடல் உஷ்ணமாவதை உணர்ந்தான். நிமிடங்களல்ல நொடிகளே நீடித்ததிந்த விழிப் புணர்ச்சி. சுதாரித்தவன் குற்றவுணற்ச்சியில் குறுகினான். தான் குடித்ததற்கே கோபித்துக் கொண்டவள் இவ்விஷயமறிந்தால் முகத்திலேயே முழிக்க மாட்டாள் என்றெண்ணியவன் மறுபடி ஒரு கிங்க்ஸ்’ஐ பற்ற வைத்தவாறு பால்கனிக்கு விரைந்தான். இயற்கையின் குளுமையும், நிலவும் அவன் கண்ட அனைத்தும் அவளையே நினைவூட்டின. தான் காதல் வயப்பட்டதாய் சந்தேகித்தான். அப்படியிருப்பின் அது துரோகமென்று அவனே தனக்குள் கற்பித்தும் கொண்டான். இத்தகைய யோசனைகளில் நேரம் விரைந்து கொண்டிருந்தது. இவனைக் காணாதவள் பால்கனியை வந்து எட்டிப் பார்க்க, முதல் முறையாய் அவள் கண்கள் நோக்க முயன்று தோற்றுப் போனவனாய் அவள் பின்னால் நடந்தேன்.


“ஷ்ரு..தி... சாரி... மன்னிச்..டு” பேச்சு வரவில்லை அவனுக்கு. ஏக்கமாய்ப் பார்த்தான். முகத்தைத் திருப்பிக் கொண்டு கோபத்தில் பற்களைக் கடித்துக் கொண்டே கட்டிலை கையால் குத்திக் கொண்டே அமர்ந்திருந்தாள் அவள்.

“ஷ்ருதி... ஷ்ருத்தி....கூப்பிடுறேன்ல”. குற்றஉணர்ச்சி வேறு அடிக்கடி முள்ளாய்க் குத்திக் கொண்டிருந்தது, மனது என்று சொல்லப்படும் மூளையின் எதோ ஒரு மூலையில். அவன் பேச்சினால் வெறுப்பு கூடிப் போவதாய் உணர்த்த, அவனைத் திரும்பி ஒரு முறை முறைத்து விட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள். எரிச்சலில் கட்டிலில் அடிபடும் கையின் வேகம் கூடியிருந்தது.

“ஏற்கனவே அவளுக்கு கோபம், இதில் நடந்த விஷயத்தை சொன்னால் அவ்ளோதான்” என்று மனசாட்சி சொன்னது. மீண்டும் அழைத்தான், மீண்டும் மீண்டும் அழைத்தான். அவள் திரும்பக் கூட இல்லை. நேராய் கட்டிலைத் தாண்டிச் சென்றவன் அவள் முன்னாள் முழந்தாளிட்டு அவள் கைகளை எடுத்து கண்களில் ஒத்திக்கொண்டான். கைகளை விடுவிக்க முயன்றாள் அவள்.


“மன்னிச்சுடு ஷ்ருதி, நான் தப்பு பண்ணிட்டேன்” எது நடந்தாலும் பரவாயில்லை. மனதிலே சபலமேற்பட்டு விட்டது. இனியும் அந்த சூட்டைத் தாங்கிக் கொண்டு நடிப்பது என்பது இவனுக்கு உள்ளுக்குள் உறுத்தியது. “இனியொரு முறை இப்படி நிகழாதென்பதற்கு என்ன நிச்சயம்?. அவளின் அன்பிற்கு தான் செய்யும் ஈடு இந்த துரோகம் தானா” என்றெல்லாம் எண்ணியவன் அனைத்தையும் அவளிடம் சொல்லிவிடத் துணிந்துவிட்டான். கையை விடுவிக்க முடியாதபடி இறுகப் பற்றியிருந்தான்.

“சரி, இனிமே குடிக்காத. குடிச்சா என் மூஞ்சில முழிக்காத” நெற்றிப் பொட்டில் இறங்கின, வார்த்தைத் தோட்டாக்கள். கோபம் தனிந்தவளாய் கைகளை விடுத்து எழுந்தவளை பிடித்து அமர்த்தினான்.

“ச்சே, விடுடா அதான் கோபம் போயிடுச்சுன்னு சொல்றேன்ல?”

“ஹ்ம்ம் அதில்ல ஷ்ருதி.. நான் ஒண்ணு சொல்லணும்”

“என்ன? இனிமே குடிக்கமாட்டேன். ப்ராமிஸ்ன்னு கதை விட போறியா?”

“இல்ல. ஷ்ருதி.... சம்திங் சீரியஸ்” இவள் அவன் கண்களை நோக்க, அதை எதிர்கொள்ள முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான் விஷ்வா.

“ஹ்ம்ம் சொல்லு”

“நான் சொல்ற விஷயம் கேட்டுட்டு என்கிட்டே பேசாம இருக்க மாட்டன்னு சத்தியம் பண்ணு”

“அப்படி என்னடா சொல்ல போற? சஸ்பென்ஸ் வெக்காத”

“இல்ல எப்படி சொல்றதுன்னு...”

“நமக்குள்ள என்ன டா சொல்லு”

“இல்ல நைட் தூங்கிட்டு இருக்கும்போது லைட் போட்டேன். நீ தூங்கிட்டு இருந்த”

“நைட் தூங்காம என்ன பண்ணுவாங்க?”

“இல்ல நான் சொல்றத முழுசா கேளு. டென்ஷன் ஆகாத ப்ளீஸ்”

“ஹ்ம்ம்”

“லைட் போட்டப்போ, உன்ன பார்த்தேன். நீ தூங்கிட்டு இருந்த. ஆனா, உன் பெட்ஷீட் விலகியிருந்துச்சு. இன்ட்டன்ஷனலா நான் எதுவும் பாக்கல. ஆனா...”

கண்களில் கோபக் கனல் தெறிக்க எழுந்தவள் அவனை ஓங்கி அறைந்தாள். தலையணையை எடுத்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றாள்.

“ஸ்ருதி, ப்ளீஸ் கோச்சுக்காத. நான் தான் சொல்றேன்ல. நானா தப்பு பண்ணல. நான் ஏன் அப்படி பண்ணேன்ன்னு எனக்கு தெரியல. என்ன மன்னிச்சுடு ஷ்ருதி. தப்பு பண்ணியிருந்தா இப்போ கூட நான் உன்கிட்ட இதை சொல்லியிருக்க தேவையில்ல. ஷ்ருதி... ஷ்ருதி...”
கேட்கக் கூட தயாராய் இல்லையவள். படாரென கதவைச் சாத்தும் சத்தமும் சிந்திய கண்ணீர்த்துளிகளும் அவளின் கோபத்தை எடுத்துரைத்தன.


இரண்டு நாட்களாய் ஃப்ளாட்டுக்கு வரவில்லையவள். அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தன்னிலை மறந்தவனானான் விஷ்வா. அங்குமிங்கும் சுற்றி அலைந்தவன் மூன்றாம் நாள் இரவு வீடு வந்து சேர்ந்தான். கதவு திறந்திருந்தது. அவள் வருகையை அறிந்தவன் ஆவலாய் உள்ளே சென்றான். டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் இவனைக் கண்டதும் எழுந்து உறங்கச் சென்று விட்டாள். பின்னாலேயே போனான். கொஞ்சம் அதிர்ச்சி. கட்டில் இரண்டாக போடப்பட்டு நடுவில் ஒரு டீப்பாய் வைக்கப் பட்டிருந்தது. பேச முயற்சித்தவனை பார்வையால் அடக்கி விட்டு இழுத்துப் போர்த்தினாள்.


“யூ ஹேவ் எ டெக்ஸ்ட் மெசேஜ்” அவனது அலைபேசி அலறியது.

“Do you really like me?” அவள் தான் அனுப்பியிருந்தாள்.

“YES... Pls spk to me. thats not intentional” ரிப்ளையனுப்பினான்.

“Like or LOVE?” 

“Like only” 

“If it is just LIKE, then u might have not got that stupid bad feelings. lier”

“hmm.. sorry. really, i dont know what im feeling. but if u r not talking to me means its really killing”

“Whaterver it may be. i will give a last chance. just tell what u feel inside, to me tomo morning”


“காலை என்ன உளறப் போகிறேனோ” என்ற பயத்தில் உறங்காமலிருந்தான். இடைவிடாத சிகரெட் இழுப்புகள். “ஒருவேளை காதலாக இருக்குமோ? ஒருவேளை அப்படி இருந்து அவள் பேசாமல் போய் விட்டால்?” இன்னும் பல குழப்பங்களுடனும் ராத்திரியைக் கழித்துக் கொண்டிருந்தான்.


ரோஜா, பூங்கொத்து இவற்றைத் தவிர்த்து அவளுக்குப் பிடித்தமான ஒரு புத்தகத்தை பரிசளித்தான்.   
“உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. நீ இல்லாம என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல ஷ்ருதி. இது காதலான்னு எனக்கு தெரியல. ஆனா நீ என் கூடவே இருக்கணும்னு தோணுது”
பதிலேதும் பேசவில்லை. இம்முறை கோபமேதுமில்லை. பேசப் பிடிக்காதவளாய் விலகிச் சென்றாள்.

“நான் உன்னைப் புரிஞ்சுகிட்ட அளவு நீ என்னைப் புரிஞ்சுக்கல” குறுஞ்செய்தியாய் பதிலனுப்பினாள். வேறேதும் வார்த்தைகள் பரிமாறப் படவில்லை அக்கணத்தில்.


அன்றைய இரவு,

அணிந்திருந்த விளக்குகளின் இருட்டில், கட்டில்கள் தனியே கிடந்தன. கட்டில்கள் மட்டும் தனியே கிடந்தன.


பேச்சிலர் சமையல் – பெப்பர் சிக்கன்பேச்சிலர் அறையில் இருக்கும் குறைந்த பட்ச பொருட்களை வைத்து சுவையாக சமைப்பது எப்படி என்னும் என் சமையல் குறிப்புகளில் அடுத்ததாக பெப்பர் சிக்கன்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – அரை கிலோ
இஞ்சி – 25 கிராம்
பூண்டு – 15-20 விழுதுகள்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் - 4
பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் – ஒரு பாக்கெட்
பெப்பர் – 25 கிராம் பாக்கெட் ஒன்று.
உப்பு – தேவையான அளவு (ஒரு டீ ஸ்பூன் + கொஞ்சம் அதிகம்)
எண்ணை – தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் எண்ணையை ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் காய்ந்த மிளகாய் சேர்த்து பொரிய விடவும்.

ஒரு நிமிடத்திற்குப் பிறகு, நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாய் வதக்கவும்.

இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு கழுவிய சிக்கனை அதில் போட்டு உப்பு சேர்த்து நன்றாய் கிளறவும்.

மசாலா சிக்கனில் நன்றாய் பிடித்தவுடன் குக்கரை மூடி வைக்கவும்.

இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி விடவும்.

வாணலியில் வெந்த சிக்கனுடன், பேப்பரை போட்டு நன்றாய் கிளறவும்.

பெப்பர் சிக்கன் தயார்!
பேச்சிலர் சமையல் – ராகி சேமியா


சமையல் செய்யும் அனைத்து பேச்சிலர் அறைகளிலும் இருக்கும் குறைந்த பட்ச பொருட்களை கொண்டு ஒரு நல்ல உணவுப் பொருளை சமைப்பது எப்படி என்று முயற்சி. நான் சமைத்து சாப்பிட்டு பார்த்து சக்சஸ் ஆன பேச்சிலர் சமையலை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். தேவைப்படும் சமையல் சாதனங்கள் குக்கர்/சாதம் வைக்கும் பாத்திரம், வாணலி மற்றும் அடுப்பு.
தேவையான பொருட்கள்:
ராகி சேமியா – 1 பாக்கெட் (இருவருக்கு போதுமானது)
சின்ன வெங்காயம் – 8,9 (தேவையான அளவு ன்னு ட்விஸ்ட் வைக்கல)
ப.மிளகாய் – 3
தேங்காய் – அரை மூடி துருவிக் கொள்ளவும்.
கடுகு – அரை ஸ்பூன் அளவு
கருவேப்பிலை - ஐந்தாறு இலைகள்
உப்பு – ஒன்றரை ஸ்பூன் – இரண்டு ஸ்பூன் அளவு
எண்ணை – மூன்று ஸ்பூன் அளவு

ராகி சேமியாவை ஆவியில் வேகவைக்க வேண்டுமென்பதால், குக்கரில் நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி நடுவே ஒரு சிறு பாத்திரம்/டம்ளரை வைத்து அதன் மேல் ஒரு சிறு தட்டில் சேமியாவை கொட்டிக் கொள்ளவும் (சுற்றி இருக்கும் தண்ணீர் சேமியாவை தொடாத வாக்கில்). இப்போது குக்கரினுள் இருக்கும் டம்ளரின் மேல் இருக்கும் தட்டில் சேமியாவும், டம்ளரை சுற்றி தண்ணீரும் இருக்கும். சேமியாவில் கொஞ்சம் தண்ணீரை தெளித்துக் கொள்ளவும். இரண்டு விசில் வரும்வரை வேக விடவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வெங்காயம், மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும். வெந்த சேமியாவை எடுத்து வாணலியில் போட்டு உப்பு போட்டு நன்றாய் கிளறவும். சிறிது நேரம் கழித்து துருவிய தேங்காயை இதனுடன் சேர்த்து கிளறி சூடு இறங்கியவுடன் சாப்பிடவும். எலுமிச்சம்பழச் சாற்றை கொஞ்சம் பிழிந்து சாப்பிட்டால் இன்னும் சிறப்பாய் இருக்கும்.


அபாயம்
“ஏய்.. என்னாச்சுடா இவ்னுக்கு, மூஞ்சி இப்டிகீது”
“ஒண்ல மச்சா, அந்த பிகராண்ட பேசியிருக்கான் அது அல்வா குத்தீச்சு”
“அதல்லாம் இல்லை மாமா, பிரியா இப்பல்லாம் என்னாண்ட பேசுரதில்ல, அதான் மாமா
“டேய்.. அதத்தான் ரவி கரிக்ட் பண்ணி தடவிட்டு இருக்கானே... மாமா அது ஆள் இல்லை மாமா ஐட்டம்.. நீ வேணா பாரேன், உனக்காண்டி அத நான் கரிக்ட் பண்ணி காட்டுறேன்”


எதேச்சையாய் காதில் விழுந்த இவ்வார்த்தைகள் கேட்டு ஸ்தம்பித்து நின்றேன். இவ்வார்த்தைகளை, கையில் சிகரெட்டோடு முழுவதும் சிராய்ப்புகள் கொண்ட RX100 இல் வந்த நால்வரோ,  கிரிக்கெட் மட்டையுடன் தலையில் கர்ச்சீப் கட்டிக் கொண்டு கையில் வயரைச் சுற்றி வந்த குழுவோ பேசிச் சென்றிருந்தால் ஒருவேளை நான் அலட்சியப் படுத்தியிருந்திருப்பேன். பேசிச்சென்றவர்கள் முதுகில் புத்தக மூட்டையோடு அரும்பு மீசைகூட முளைத்திரா பள்ளி மாணவர்கள். அதிகமாய்ப் போனால் பத்தாம் வகுப்பு மாணவர்களாய் இருந்திருக்கூடும். “கனவு காணுங்கள்” என்று சொல்லிச்சென்ற முன்னாள் ஜனாதிபதியின் வார்த்தைகளே பிரதானமாய் இருந்தது என் நண்பர்கள் வட்டத்தினுள் எங்கள் பள்ளிக் காலத்தில். அப்போதெல்லாம் இவ்வளவு தெரிந்து வைத்திருக்கவில்லை நாங்கள். இப்போதும் மாணவர் சமூகம் அப்படித்தான் இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருந்தவன் முகத்திலறைந்தாற்போல் வார்த்தைகள் கேட்டு அன்றைய நாள் சூன்யமாய்ப் போனது.


அன்றிரவு வந்தவன் நார்மலாக என்னை உணரவில்லை. கடும் அசூயை தோன்றிற்று. சமூகம் இப்படிப் பாழாகிறதே என்று ஏக்கமா, பயமா என்று சொல்ல முடியாத ஒரு உணர்வுநிலை. “உனக்கு எவன் என்ன செஞ்சான், என்ன மயித்துக்கு இதையெல்லாம் யோசிக்கிற” என்று மனசாட்சி கேவலமாய்த் திட்டியது. இருந்தாலும் ஒரு உள்ளுணர்வு இதற்கான காரணங்களை அடுக்கியது.


முழு முதற்காரணமாய் மூளைக்கெட்டியது சினிமா. அந்தக் காலத்திலிருந்து எப்படியெல்லாம் காதலித்தார்கள் என்று சொல்லி போரடிக்க விரும்பவில்லை. ஆனால் இப்போதைய நிலைமை படுமோசம். சமீபத்திய படங்களில் உதட்டு முத்தம் தான் காதலை உறுதிப்படுத்தும் என்று ஒரு மாயை உருவாகியிருப்பது கண்டு அச்சமுற்றேன். இன்னும் சில படங்கள் காதலிப்பவர்களுக்குள் எதுவும் தப்பில்லை ரேஞ்சுக்கு, காதலை சித்தரிக்கின்றன. காதலித்தால் ஜாலியாக இருக்கலாம், தொலைபேசி உரையாடல்கள் கிளுகிளுப்பை(கிலுகிலுப்பை அல்ல!) ஏற்படுத்தும், நண்பர்கள் மத்தியில் பெருமை பீத்திக் கொள்ளலாம் என்று தவறான புரிதல்களால், இளம் சமூகம் காதல், காமம் வேறுபாடறியாமல் இதைப் பரீட்சித்து பார்க்கிறது. மேலும் இச்சமூகம் தவற விடாத ஊடகங்களுள் சினிமாவே பிரதானம். இதற்காக முத்தக் காட்சிகள் இல்லாத சினிமாவைத் தான் எடுக்கவேண்டும் என்று ரஜினி சாரை வைத்து சொல்ல வைக்க முடியாதே. காமம் மட்டுமின்றி வன்மத்தையும் சேர்த்தே இளம் தலைமுறை மீது திணிக்கிறது தற்கால சினிமா. தொலைக்காட்சிகளும் பெருகிவரும் இணைய பயன்பாடும் இதிலடக்கம்.


இரண்டாவதாக செல்போன்கள். பள்ளி செல்லும் மாணவர்கள் அனைவரிடமும் செல்போன்கள். புகைப்படம் எடுக்கும் வசதிகொண்ட, வீடியோ பார்க்கும் வசதிகொண்ட செல்போன்களை பெரும்பாலும் இளைய தலைமுறை தவறாகவே உபயோகிக்கிறது. இதைப் பற்றி தினந்தோறும் செய்திகள், இணையத்தில் வீடியோக்கள் என்று பல வந்தாலும் அவற்றை யாரும் சட்டை செய்வதில்லை. ஒரு மாணவனிடம் இருக்கும் தவறான வீடியோ அடுத்தவனுக்கு, அதற்கடுத்தவனுக்கு என்று பரவி சமூகத்தை அழிக்கும் விஷக்கிருமியாய் பரப்பப்பட்டுக் கொண்டே வருகிறது.


இதனால், டெக்னாலஜி வளர்ச்சியினால்தான் குற்றங்கள் பெருகிப் போயின என்றும் சொல்லிவிடமுடியாது. தொழில்நுட்பம் என்பது வரம். இப்போதுதான் குற்றங்கள் வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. எத்துணையோ செய்திகள், ஸ்கேண்டல் வீடியோக்கள் என்று வந்தப் பிறகும் இன்னும் மாணவர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பாக எந்த ஒரு முயற்சியும் எடுத்த பாடில்லை. இன்னும் சொல்லப் போனால் பல பள்ளிக்கூடங்களில் பாலியல் கலவியே நடந்துகொண்டிருக்கிறது. பாலியல் கல்வி மட்டுமல்லாது பெருகிவரும் ஊடக உபயோகம், இணைய உபயோகம் காரணம் சைபர்கிரைம் பற்றிய விழிப்புணர்வையும் மாணவர்களிடையே, இளம் சமூகத்தினிடையே ஏற்படுத்துவது கட்டாயம். மேலும் சைபர் கிரைம் விதிமுறைகளும் இங்கே மாற்றியமைக்கப்பட வேண்டும். விதிகள் இன்னும் கொஞ்சம் வலுப்பெற்றவைகளாக இருத்தல் வேண்டும். சமச்சீர் கல்வி போய் சமச்சீர் கலவி வராதநிலை காக்க, அரசின் கூடுதல் கவனமும் இதில் தேவைப்படுகிறது. இலவசங்களை விடுங்கள், இவையாவும் உடனடியாக செய்யப்படவேண்டிய அத்தியாவசியங்கள். உலகில் பெண்கள் பாதுகாப்புடன் வாழ தகுதியற்ற நாடுகளில் இந்தியாவுக்கு நான்காமிடமாம். இந்த விஷயத்தில் காட்டப்படும் அலட்சியம் இந்தியாவை முதலாமிடத்திற்கு கொண்டு சென்றாலும் வியப்பதற்கில்லை. 

உயிர்ச்சொல் – நாவல் வாசிப்பனுபவம்
கபிலன் வைரமுத்து எழுதிய உயிர்ச்சொல் நாவலைப் படித்து முடித்தேன். குழந்தை இல்லாமல் தவித்து, ஏங்கிப்போய் பின் மருத்துவ சிகிச்சைகளின் மூலம் குழந்தை பெற்றபின்னர் மன அழுத்தம் ஏற்பட்டு அக்குழந்தையே அவருக்கு சுமையாகிறது. அதிலிருந்து அத்தாய் எங்கனம் மீண்டு வருகிறார், அந்த மன அழுத்தத்திற்கு காரணம் என்ன என்பதையெல்லாம் சில கற்பனைகளோடு சொல்லும் ஒரு அழகிய நாவல் – உயிர்ச்சொல்.


அமலன்-தருணா தம்பதியினர், குழந்தையின்மை காரணம் ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம் என்று முடிவு செய்கின்றனர். குடும்ப சூழல், இன்ன பிற காரணங்களுக்காக அது இயலாமல் போக மருத்துவ சிகிச்சைகளின் மூலம் கருத்தரிக்கிறார் தருணா. அதிலிருந்து செல்லுமிடமெல்லாம் குழந்தைக்காக எல்லாம் பார்த்து பார்த்து வாங்கும் தம்பதியரின் மனநிலையை அழகாய் விவரிக்கிறார் கபிலன். இவ்வளவு கஷ்டங்களைத் தாண்டி வந்த பின்னர், இனி இருவரும் டைரி எழுதுவது என்று முடிவு செய்கின்றனர். அப்படி அவர்களிருவரும் எழுதும் நாட்குறிப்புகளின் அழகிய தொகுப்பாக இந்நாவல் அமைக்கப் பட்டுள்ளது.


அமலன், தனியார் கம்பெனியில் வேலை. “Scam Fair” என்னும் ஊழல் கண்காட்சியை ஏற்பாடு செய்து சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர நினைக்கும் ஒரு இயக்கத்தின் எண்ணங்களுக்கு உருக் கொடுப்பவராக எப்போதும் வேலை, டென்ஷன் என்றிருக்கும் நபர். மனைவியின் மீதுள்ள காதலையும், குழந்தையில்லா ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் அழகாய் பதிவு செய்கிறார். அதைவிடவும் வேலையில் அதிக சிரத்தையுள்ளவராக சித்தரிக்கப்பட்டுள்ளார்.


தருணா, தன் எண்ணங்களை ஓவியங்களினால் வெளிப்படுத்தும் திறமை கொண்ட பெண். நாட்குறிப்புகளில் பல ஓவியங்களும், குழந்தையைப் பற்றி எதிர்பார்ப்புகளும் தான். குழந்தையில்லை என்று ஏங்கித் தவித்து, குழந்தை பிறந்த பின் ஒரு Post Natal Psychosis இனால் பாதிக்கப்படுகிறார். அக்குழந்தையே பாரமாகிறது. இதன் காரணமென்ன, இதிலிருந்தெல்லாம் எப்படி மீண்டு வருகிறார் என்பதே மீதிக்கதை.


கற்பனை அரசியலோடு கூடிய மெடிக்கல் சப்ஜெக்ட் கதை தான் என்றாலும் சில இடங்களைத் தவிர எங்கும் வெறுப்புத்தட்டவில்லை. அதுவும் கண்டிப்பாக அமலன் சார்ந்த பகுதிகள் தான். ஊழல் கண்காட்சி, மாதிரி ராணுவ ஆட்சி என்றெல்லாம் நீளும் அதீத கற்பனை அரசியல் சில இடங்களில் அட! போட வைக்கிறது. கதைக்கரு தெரிந்து விட்டதால் முதல் நூறு பக்கங்கள் கொஞ்சம் இழுவைதான். ஆனால் நாவலின் இரண்டாம் பாதி படு சுவாரஸ்யம். குழந்தை பிறப்பைப் பற்றி பல மருத்துவத் தகவல்கள் புரியும்படி விளக்கப்பட்டுள்ளன, கதையோடு ஒன்றியபடியே. குழந்தை பிறந்தபின் ஏற்படும் Post Natal Depression/Psychosis பற்றி முதல் முறை படிக்கும்போது அனைவருக்கும் கண்டிப்பாக கொஞ்சம் பயம் ஏற்படும். தருணா இதையெல்லாம் எதிர்த்து போராடி வென்றிருப்பதாய் நாவலை முடித்திருப்பது நிச்சயம் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும். நாவலுடன் கொடுக்கப்பட்ட பாடலும் மனதிற்கு இதம் தருவதாய் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு.