பேச்சிலர் சமையல் – ராகி சேமியா


சமையல் செய்யும் அனைத்து பேச்சிலர் அறைகளிலும் இருக்கும் குறைந்த பட்ச பொருட்களை கொண்டு ஒரு நல்ல உணவுப் பொருளை சமைப்பது எப்படி என்று முயற்சி. நான் சமைத்து சாப்பிட்டு பார்த்து சக்சஸ் ஆன பேச்சிலர் சமையலை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். தேவைப்படும் சமையல் சாதனங்கள் குக்கர்/சாதம் வைக்கும் பாத்திரம், வாணலி மற்றும் அடுப்பு.
தேவையான பொருட்கள்:
ராகி சேமியா – 1 பாக்கெட் (இருவருக்கு போதுமானது)
சின்ன வெங்காயம் – 8,9 (தேவையான அளவு ன்னு ட்விஸ்ட் வைக்கல)
ப.மிளகாய் – 3
தேங்காய் – அரை மூடி துருவிக் கொள்ளவும்.
கடுகு – அரை ஸ்பூன் அளவு
கருவேப்பிலை - ஐந்தாறு இலைகள்
உப்பு – ஒன்றரை ஸ்பூன் – இரண்டு ஸ்பூன் அளவு
எண்ணை – மூன்று ஸ்பூன் அளவு

ராகி சேமியாவை ஆவியில் வேகவைக்க வேண்டுமென்பதால், குக்கரில் நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி நடுவே ஒரு சிறு பாத்திரம்/டம்ளரை வைத்து அதன் மேல் ஒரு சிறு தட்டில் சேமியாவை கொட்டிக் கொள்ளவும் (சுற்றி இருக்கும் தண்ணீர் சேமியாவை தொடாத வாக்கில்). இப்போது குக்கரினுள் இருக்கும் டம்ளரின் மேல் இருக்கும் தட்டில் சேமியாவும், டம்ளரை சுற்றி தண்ணீரும் இருக்கும். சேமியாவில் கொஞ்சம் தண்ணீரை தெளித்துக் கொள்ளவும். இரண்டு விசில் வரும்வரை வேக விடவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வெங்காயம், மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும். வெந்த சேமியாவை எடுத்து வாணலியில் போட்டு உப்பு போட்டு நன்றாய் கிளறவும். சிறிது நேரம் கழித்து துருவிய தேங்காயை இதனுடன் சேர்த்து கிளறி சூடு இறங்கியவுடன் சாப்பிடவும். எலுமிச்சம்பழச் சாற்றை கொஞ்சம் பிழிந்து சாப்பிட்டால் இன்னும் சிறப்பாய் இருக்கும்.


3 comments:

Prabu Krishna said...

பாஸு இது எங்க ரூம்ல அடிக்கடி செய்றாங்க. உங்க புண்ணியத்துல இனி நானும் செய்வேன். அடிக்கடி இந்த மாதிரி ஹெல்ப் பண்ணுங்க.

amas said...

மல்லிகா பத்ரிநாத்தை தொர்கடித்துவிடுவீர்கள் போலிருக்கே! உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர் :) படத்துடன் விளக்கம் அருமை.
amas32

கோகுல் said...

நானும் இது மாதிரி அனுபவிச்சதை எழுதனும்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன்.நாலு வருஷம் பேச்சுலர் சமையல்.அது ஒரு நல்ல அனுபவம்.