நான் சொன்னதும் மழை வந்துச்சா..


அப்படி நடந்திருக்க கூடாதுதான். என்ன செய்ய, தன்னையே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ஆற்றாமையில், இரண்டொரு நாட்கள் ஷேவ் செய்யப்பட்டிராத கன்னங்களைச் சொறிந்துகொண்டே கடும் எரிச்சலில் மொட்டை மாடி சுவற்றை எட்டி உதைத்தான் விஷ்வா. ஒரு பாக்கெட் கிங்க்ஸ் அணைந்து கிடந்தது அவன் காலடியில். ஓங்கி ஒரு அறை அறைந்துகொண்டான் தனக்குத்தானே. ஒரு நிமிட இச்சை இவை அனைத்திற்கும் காரணமென்று தன்னைத் தானே வருத்திக் கொண்டிருந்தான். இரண்டு நாட்களாய் வேலைக்கு செல்லவில்லை. அவள் முகம் காணாமல் உணவுமில்லை, உறக்கமுமில்லை.


நம்பர் 9C, நந்தனா அப்பார்ட்மென்ட்ஸ். விஷ்வாவும், ஸ்ருதியும் ஒன்றாய் தங்கியிருக்கும் ஃப்ளாட். நண்பர்களா, காதலர்களா, திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்களா என்று அவர்களுக்கும் தெரியாது அப்பார்ட்மென்ட்சிலும் யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட ஒரு ரிலேஷன்ஷிப் இருவருக்குள்ளும். அதற்காக லிவிங் டுகெதர் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அவளுக்கு உடம்பு சரியில்லை என்றால் இவன் காபி போட்டுத் தருவான், வெந்நீர் வைத்து மருந்து மாத்திரைகள் கொடுப்பான். இவனுக்கு அலுவலகத்தில் ஒரு பாராட்டு என்றால் ஒரு சைவ கட்டிப்பிடித்தலோடு பாராட்டுக் கிடைக்கும் அவளிடமிருந்து. இருவரும் ஒரே ஊர்க்காரர்கள், ஒரே ஊரில் வேலை செய்கிறவர்கள். அவ்வளவுதான். அவ்வளவே தான்.


‘சென்னை போன்ற ஒரு மாநகரின் ஒரு ஆண் துணை நிச்சயம் வேண்டும்’ என்று அவளோ, ‘ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்துக்காது. நல்லா சமைக்கிற ஒரு ஆள் கூட இருந்தா நல்லா இருக்குமே’ என்று இவனோ ஒரு போதும் நினைத்தது கிடையாது. இரண்டு மூன்று வருடங்களாக ஒரே ஃப்ளாட்டில் தான் வசிக்கிறார்கள். ஒரே பேருந்தில்தான் ஊருக்குச் செல்லுவார்கள், ஒன்றாகத் தான் பைக்கில் ஊர் சுற்றுவார்கள், சினிமாவுக்குப் போவார்கள். இன்னும் சொல்லப்போனால் நடுவில் ஒற்றைத் தலையணையை சாட்சியாக்கி, கட்டிலை பகிர்ந்து கொள்ளுமளவு பரஸ்பர புரிதலும் நம்பிக்கையும் கொண்ட இரண்டு பேர். அந்த அப்பார்ட்மெண்டே அவர்களை கணவன் மனைவி என்று தான் நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் இருவருக்குள்ளும் காதல் என்றொரு எண்ணம்கூட இருந்ததில்லை.


நண்பனின் நிச்சயதார்த்தத்திற்கு சென்று விட்டு அன்று இருவரும் ஃப்ளாட்டுக்கு வரும்போது மணி 11 ஐ தாண்டியிருந்தது. என்றாவது குடிக்கும் பழக்கம் இருந்தாலும் அன்றைய தினம் கொஞ்சமாக, ரொம்பக் கொஞ்சமாகத்தான் குடித்திருந்தான் விஷ்வா. குடித்தால் அன்று முழுவதும் ஷ்ருதி பேசமாட்டாள், சமைக்க மாட்டாள் தனிமை வெறுப்பேற்றும் என்பதாலேயே பெரும்பாலும் குடிப்பதைத் தவிர்த்து விடுவான். கொஞ்சம் குடித்ததற்கே “உன்கூட பைக்கில் வர மாட்டேன்” என்று அவள் கோபித்துக்கொண்டு விட்டாள். நேரம் வைகியதால் நண்பர்கள் சமாதனப் படுத்தி இவனோடு அவளை அனுப்பி வைத்தனர். வழி நெடுக சாரி சொன்ன படியே வண்டியை ஓட்டினான். அவள் செவிமடுக்கவில்லை. வீடு வந்தவள் உடை மாற்றி உறங்கச் சென்று விட்டாள். கெஞ்சல்கள் எல்லாம் வீண். கோபத்தில் அவள் முகம் இன்னும் சிவந்திருந்தது மருதாணியிட்ட கைகளைப் போலென்று காலங்காலமாய் சொல்லப்படும் உவமை போல். கோபத்தின் எதிரொலியாய் கட்டிலின் நடுவே இரண்டு தலையணைகள். இனி பேசிப் பிரயோஜனமில்லை என்று இவனும் உறங்கச் சென்றான்.


மணி சுமார் இரண்டு இருக்கும், தொடர்ந்து குரைத்த நாய்களின் சத்தம் உடலால் உறங்கிக் கொண்டே உள்ளத்தால் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கும் விஷ்வாவை விழிக்கச் செய்தது. நெஞ்சு லேசாய் எரிவதாய் உணர்ந்தான். போய்க் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு ஒரு கிங்க்ஸ்’ஐ எடுத்து பற்ற வைத்தவாறு பால்கனிக்குச் சென்றான். எப்படி அவளை சமாதனப் படுத்துவது என்றெண்ணியபடி எண்ணங்களை ஆஷ் ட்ரேயில் நிறைத்து விட்டு கட்டிலுக்கு வந்தான். வந்தவன் நேராய் கட்டில் முனையில் காலை இடித்துக் கொள்ள, அருகிலிருந்த சின்ன நைட் லேம்ப்பின் சுவிட்ச்சை தட்டினான். அங்கு ஆரம்பித்தது வில்லங்கம்.


இளம் நீல நிற ஒளியில், போர்வை விலகியிருக்க ஸ்ருதியைக் கண்டவன் ஸ்தம்பித்து விட்டான். முதல் முறையாய் அழகியாய் இருந்தவள் உறங்கும் தேவதையாய் தோன்றினாள் இவன் கண்களுக்கு. பௌர்ணமியை மேகம் மறைத்திருப்பதைப் போல் உணர்ந்தான். கலைந்திருந்த கூந்தலுமாய் தலையணையைக் கட்டியணைத்து உறங்குமவளை கண்களால் வருடினான். காற்றிலேயே அவள் உடல் பருகினான். அந்த ஏ.சி அறையிலும் தன்னுடல் உஷ்ணமாவதை உணர்ந்தான். நிமிடங்களல்ல நொடிகளே நீடித்ததிந்த விழிப் புணர்ச்சி. சுதாரித்தவன் குற்றவுணற்ச்சியில் குறுகினான். தான் குடித்ததற்கே கோபித்துக் கொண்டவள் இவ்விஷயமறிந்தால் முகத்திலேயே முழிக்க மாட்டாள் என்றெண்ணியவன் மறுபடி ஒரு கிங்க்ஸ்’ஐ பற்ற வைத்தவாறு பால்கனிக்கு விரைந்தான். இயற்கையின் குளுமையும், நிலவும் அவன் கண்ட அனைத்தும் அவளையே நினைவூட்டின. தான் காதல் வயப்பட்டதாய் சந்தேகித்தான். அப்படியிருப்பின் அது துரோகமென்று அவனே தனக்குள் கற்பித்தும் கொண்டான். இத்தகைய யோசனைகளில் நேரம் விரைந்து கொண்டிருந்தது. இவனைக் காணாதவள் பால்கனியை வந்து எட்டிப் பார்க்க, முதல் முறையாய் அவள் கண்கள் நோக்க முயன்று தோற்றுப் போனவனாய் அவள் பின்னால் நடந்தேன்.


“ஷ்ரு..தி... சாரி... மன்னிச்..டு” பேச்சு வரவில்லை அவனுக்கு. ஏக்கமாய்ப் பார்த்தான். முகத்தைத் திருப்பிக் கொண்டு கோபத்தில் பற்களைக் கடித்துக் கொண்டே கட்டிலை கையால் குத்திக் கொண்டே அமர்ந்திருந்தாள் அவள்.

“ஷ்ருதி... ஷ்ருத்தி....கூப்பிடுறேன்ல”. குற்றஉணர்ச்சி வேறு அடிக்கடி முள்ளாய்க் குத்திக் கொண்டிருந்தது, மனது என்று சொல்லப்படும் மூளையின் எதோ ஒரு மூலையில். அவன் பேச்சினால் வெறுப்பு கூடிப் போவதாய் உணர்த்த, அவனைத் திரும்பி ஒரு முறை முறைத்து விட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள். எரிச்சலில் கட்டிலில் அடிபடும் கையின் வேகம் கூடியிருந்தது.

“ஏற்கனவே அவளுக்கு கோபம், இதில் நடந்த விஷயத்தை சொன்னால் அவ்ளோதான்” என்று மனசாட்சி சொன்னது. மீண்டும் அழைத்தான், மீண்டும் மீண்டும் அழைத்தான். அவள் திரும்பக் கூட இல்லை. நேராய் கட்டிலைத் தாண்டிச் சென்றவன் அவள் முன்னாள் முழந்தாளிட்டு அவள் கைகளை எடுத்து கண்களில் ஒத்திக்கொண்டான். கைகளை விடுவிக்க முயன்றாள் அவள்.


“மன்னிச்சுடு ஷ்ருதி, நான் தப்பு பண்ணிட்டேன்” எது நடந்தாலும் பரவாயில்லை. மனதிலே சபலமேற்பட்டு விட்டது. இனியும் அந்த சூட்டைத் தாங்கிக் கொண்டு நடிப்பது என்பது இவனுக்கு உள்ளுக்குள் உறுத்தியது. “இனியொரு முறை இப்படி நிகழாதென்பதற்கு என்ன நிச்சயம்?. அவளின் அன்பிற்கு தான் செய்யும் ஈடு இந்த துரோகம் தானா” என்றெல்லாம் எண்ணியவன் அனைத்தையும் அவளிடம் சொல்லிவிடத் துணிந்துவிட்டான். கையை விடுவிக்க முடியாதபடி இறுகப் பற்றியிருந்தான்.

“சரி, இனிமே குடிக்காத. குடிச்சா என் மூஞ்சில முழிக்காத” நெற்றிப் பொட்டில் இறங்கின, வார்த்தைத் தோட்டாக்கள். கோபம் தனிந்தவளாய் கைகளை விடுத்து எழுந்தவளை பிடித்து அமர்த்தினான்.

“ச்சே, விடுடா அதான் கோபம் போயிடுச்சுன்னு சொல்றேன்ல?”

“ஹ்ம்ம் அதில்ல ஷ்ருதி.. நான் ஒண்ணு சொல்லணும்”

“என்ன? இனிமே குடிக்கமாட்டேன். ப்ராமிஸ்ன்னு கதை விட போறியா?”

“இல்ல. ஷ்ருதி.... சம்திங் சீரியஸ்” இவள் அவன் கண்களை நோக்க, அதை எதிர்கொள்ள முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான் விஷ்வா.

“ஹ்ம்ம் சொல்லு”

“நான் சொல்ற விஷயம் கேட்டுட்டு என்கிட்டே பேசாம இருக்க மாட்டன்னு சத்தியம் பண்ணு”

“அப்படி என்னடா சொல்ல போற? சஸ்பென்ஸ் வெக்காத”

“இல்ல எப்படி சொல்றதுன்னு...”

“நமக்குள்ள என்ன டா சொல்லு”

“இல்ல நைட் தூங்கிட்டு இருக்கும்போது லைட் போட்டேன். நீ தூங்கிட்டு இருந்த”

“நைட் தூங்காம என்ன பண்ணுவாங்க?”

“இல்ல நான் சொல்றத முழுசா கேளு. டென்ஷன் ஆகாத ப்ளீஸ்”

“ஹ்ம்ம்”

“லைட் போட்டப்போ, உன்ன பார்த்தேன். நீ தூங்கிட்டு இருந்த. ஆனா, உன் பெட்ஷீட் விலகியிருந்துச்சு. இன்ட்டன்ஷனலா நான் எதுவும் பாக்கல. ஆனா...”

கண்களில் கோபக் கனல் தெறிக்க எழுந்தவள் அவனை ஓங்கி அறைந்தாள். தலையணையை எடுத்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றாள்.

“ஸ்ருதி, ப்ளீஸ் கோச்சுக்காத. நான் தான் சொல்றேன்ல. நானா தப்பு பண்ணல. நான் ஏன் அப்படி பண்ணேன்ன்னு எனக்கு தெரியல. என்ன மன்னிச்சுடு ஷ்ருதி. தப்பு பண்ணியிருந்தா இப்போ கூட நான் உன்கிட்ட இதை சொல்லியிருக்க தேவையில்ல. ஷ்ருதி... ஷ்ருதி...”
கேட்கக் கூட தயாராய் இல்லையவள். படாரென கதவைச் சாத்தும் சத்தமும் சிந்திய கண்ணீர்த்துளிகளும் அவளின் கோபத்தை எடுத்துரைத்தன.


இரண்டு நாட்களாய் ஃப்ளாட்டுக்கு வரவில்லையவள். அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தன்னிலை மறந்தவனானான் விஷ்வா. அங்குமிங்கும் சுற்றி அலைந்தவன் மூன்றாம் நாள் இரவு வீடு வந்து சேர்ந்தான். கதவு திறந்திருந்தது. அவள் வருகையை அறிந்தவன் ஆவலாய் உள்ளே சென்றான். டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் இவனைக் கண்டதும் எழுந்து உறங்கச் சென்று விட்டாள். பின்னாலேயே போனான். கொஞ்சம் அதிர்ச்சி. கட்டில் இரண்டாக போடப்பட்டு நடுவில் ஒரு டீப்பாய் வைக்கப் பட்டிருந்தது. பேச முயற்சித்தவனை பார்வையால் அடக்கி விட்டு இழுத்துப் போர்த்தினாள்.


“யூ ஹேவ் எ டெக்ஸ்ட் மெசேஜ்” அவனது அலைபேசி அலறியது.

“Do you really like me?” அவள் தான் அனுப்பியிருந்தாள்.

“YES... Pls spk to me. thats not intentional” ரிப்ளையனுப்பினான்.

“Like or LOVE?” 

“Like only” 

“If it is just LIKE, then u might have not got that stupid bad feelings. lier”

“hmm.. sorry. really, i dont know what im feeling. but if u r not talking to me means its really killing”

“Whaterver it may be. i will give a last chance. just tell what u feel inside, to me tomo morning”


“காலை என்ன உளறப் போகிறேனோ” என்ற பயத்தில் உறங்காமலிருந்தான். இடைவிடாத சிகரெட் இழுப்புகள். “ஒருவேளை காதலாக இருக்குமோ? ஒருவேளை அப்படி இருந்து அவள் பேசாமல் போய் விட்டால்?” இன்னும் பல குழப்பங்களுடனும் ராத்திரியைக் கழித்துக் கொண்டிருந்தான்.


ரோஜா, பூங்கொத்து இவற்றைத் தவிர்த்து அவளுக்குப் பிடித்தமான ஒரு புத்தகத்தை பரிசளித்தான்.   
“உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. நீ இல்லாம என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல ஷ்ருதி. இது காதலான்னு எனக்கு தெரியல. ஆனா நீ என் கூடவே இருக்கணும்னு தோணுது”
பதிலேதும் பேசவில்லை. இம்முறை கோபமேதுமில்லை. பேசப் பிடிக்காதவளாய் விலகிச் சென்றாள்.

“நான் உன்னைப் புரிஞ்சுகிட்ட அளவு நீ என்னைப் புரிஞ்சுக்கல” குறுஞ்செய்தியாய் பதிலனுப்பினாள். வேறேதும் வார்த்தைகள் பரிமாறப் படவில்லை அக்கணத்தில்.


அன்றைய இரவு,

அணிந்திருந்த விளக்குகளின் இருட்டில், கட்டில்கள் தனியே கிடந்தன. கட்டில்கள் மட்டும் தனியே கிடந்தன.


17 comments:

குழந்தபையன் said...

நல்லா இருக்கு இலக்கியவாதியே.. இளைய சாருவே..

வேதாளம் அர்ஜுன் said...

//கட்டில்கள் மட்டும் தனியே கிடந்தன//

அவங்க ரெண்டு பெரும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க..

சி.பி.செந்தில்குமார் said...

>>இல்ல நைட் தூங்கிட்டு இருக்கும்போது லைட் போட்டேன். நீ தூங்கிட்டு இருந்த”

“நைட் தூங்காம என்ன பண்ணுவாங்க?”

ஹி ஹி ஹி

>>வேதாளம் அர்ஜுன் said...

//கட்டில்கள் மட்டும் தனியே கிடந்தன//

அவங்க ரெண்டு பெரும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க..

ஒய் திஸ் விளக்கம்?

கதை நல்லாருக்கு..

amas said...

இப்ப நிறைய இடங்களில் இந்த living together சர்வ சாதரணமாக நடக்கிறது. அதிலே ஒரு சின்ன twist வைத்து ஒரு காதல் கதை எழுதியிருக்கீங்க. அவர்களுக்குள் அவ்வளவு காலம் platonic friendship இருந்ததற்கு என்ன காரணம் என்றும் எழுதியிருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். நன்றாக எழுதுகிறீர்கள் :)
amas32

கார்க்கி said...

எவ்வ‌ள‌வு புரித‌ல்க‌ள் வ‌ந்தாலும், ஆணும் பெண்னும் ந‌ண்ப‌ர்க‌ளாக‌ ம‌ட்டும் இருக்க‌வே முடியாது என்று சொல்லும் இக்க‌தையை ப‌ற்றி நான் என்ன‌ சொல்ல‌? அத‌ற்கு குடியை வேற‌ கார‌ண‌மாக‌ சொல்வ‌தை எப்ப‌டி ஏற்க‌? ம்ஹூம்.

வேதாளம் அர்ஜுன் said...

@செந்தில்.சி.பி: நன்றி

@amas32: கதை ரொம்ப பெருசா ஆயிடுமோன்னு அப்படி எழுதல. நன்றி

@karki: அவங்க ரெண்டு பேர்க்கும் காதல் மறைமுகமா இருந்திருக்கு. நண்பர்களா நடிச்சிருக்காங்க. அவளை இவன் மிஸ் பண்ண ஒரு ஸ்ட்ராங் ரீசன் வேணும். அதுக்கு அவ பேசாம இருக்கணும். அதனால குடியை இதில் இழுத்தேன்.

Gokul Prasad said...

சிறுகதைவடிவத்தைப் பொறுத்தவரை இவை முற்றிலும் சம்பிரதாயமானவை. இதற்கு மாறாக சிறுகதை வடிவத்தில் சோதனைகளை நிகழ்த்தலாம்.உங்களுக்கு மொழியாளுமையில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது பாராட்டுக்குரியது. சிறுகதையில் twist முக்கிய அங்கம் வகிப்பது. ஆனால் இக்கதையில் அதை முன்கூட்டியே யூகிக்க முடிகிறது.நவீன ஆக்கங்களில் வாசகன் அப்படைப்பாளிக்கு இணையாகவே கற்பனையை செயல்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். வாசகனை எந்த அளவுக்கு கற்பனைசெய்ய வைக்கிறதோ அந்த அளவுக்கு சிறுகதை வெற்றி பெறுகிறது. சொல்லப்படும் விஷயம் சிறுகதையில் இருக்கக் கூடாது. வாசகனே ஊகித்துச் சென்றடையும் விஷயமே சிறுகதையின் மையமாகும்.சிறுகதை அதன் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் மனதில் மீண்டும் தொடங்குகிறது. வாழ்த்துக்கள்

ப.செல்வக்குமார் said...

அட்டகாசமான கதைனு சொல்லிடமுடியாது மச்சி. இருந்தாலும் பரவாயில்லை ரகம்தான் :)) இது உன்னோட சிறந்த கதை இல்லை.

இது காதலா இல்லை என்னனு தெரியலைங்கிற வசனம் ரொம்ப பழசா தெரியுது :)))))))

குழந்தபையன் said...

@கார்க்கி: ஆண் பெண் நட்ப்பு ரீதியாக பழக இந்த உலகம் அனுமதிப்பதில்லை நீண்ட நாட்களுக்கு!! சரி தானே

@அர்ஜுன்: நடப்பு முத்தி போனால் காதல் ஆகும் .. இதுவே உலக நடப்பு.. எதாவது நட்ப்பு கிடைத்தால் சொல்லு

ஆனந்த் ராஜ்.P said...

கோகுல் பிரசாத் சார் சொன்னது போல்.., சிறுகதையின் அந்த முடிச்சு அவிழ்ந்த பின் தான் வாசகனின் மனதில் கதை விரிவடையும்..!

அருமையாய் எழுத்தும் மொழிநடையும் வசப்பட்டு விட்டது.

இன்னும் எழுதுங்கள்..! வாழ்த்துக்கள்..!

நடராஜன் said...

இந்த உணர்வுகள் விஷயம் எல்லாம் எனக்கு ஒத்துவராது. இருந்தாலும் உம் கதை நடையால் படிப்பவரை விறுவிறுப்பாக அழைத்து சென்றது அழகு!

Anonymous said...

'கத்தி மேல்' நடக்கும்படியான கான்செப்ட்டை கைய்யான்ட விதம் அருமை!//சைவ கட்டிபிடித்தல்// அருமையான எழுத்தாற்றல்!Super.. -@kosaaksi

karthikeyan.kg. said...

அர்ஜுன் அருமை. தமிழ் உங்களை எழுத வைக்கிறது.. நான் முதலில் கதை காமத்தை நோக்கி நகர்வதாக எண்ணிவிட்டேன். என் எண்ணத்தை பொய்த்து காதலினால் சேர்த்து உள்ளது அருமை

புத்தகப்புழு said...

சுவாரஸ்யமான நடை உங்களுடையது.இன்னும் தூரம் பல செல்வீர்கள் :-).ஆனால் எனக்கென்னவோ கதையில் ரொமான்ஸ் செயற்கையாக –ஒட்டாமல்- இருப்பதாகத் தோன்றுகிறது.தட்டையான சித்தரிப்பு.டெக்னிக்கில் கவனம் செலுத்தலாம்.உங்கள் பயணத்துக்கு ஒரு ஆல் த பெஸ்ட்.

புத்தகப்புழு said...

சுவாரஸ்யமான நடை உங்களுடையது.இன்னும் தூரம் பல செல்வீர்கள் :-).ஆனால் எனக்கென்னவோ கதையில் ரொமான்ஸ் செயற்கையாக –ஒட்டாமல்- இருப்பதாகத் தோன்றுகிறது.தட்டையான சித்தரிப்பு.டெக்னிக்கில் கவனம் செலுத்தலாம்.உங்கள் பயணத்துக்கு ஒரு ஆல் த பெஸ்ட்.

Anonymous said...

feelings...ok..ஆனா..கொஞ்சம்..இன்னும் நல்லா presentபண்ணியிருக்கலாமோ..?

Sasikala Jagannathan said...

its just lyk a usual story. ur way of xpressing the story was nice....:)