மூணுஎப்பாடு பட்டாவது ஒரு பாடலை ஹிட் ஆக்கி விட்டு, ஓவர் ரொமான்ஸ் உடன் கூடிய ஒரு காதல் கதையை, புரியாத ஒரு மருத்துவ வியாதியை திணித்து நாயகனோ-நாயகியோ பைத்தியம் ஆவது போலவோ, இறந்து விடுவது போலவோ காட்டி கதையை முடித்தால் எப்படியாவது படம் ஓடிவிடும் என்னும் தமிழ் சினிமா டிஸ்ஸார்டர் மேனியாவின் கீழ் ஐஸ்வர்யா தனுஷ் ஆக்கத்தில் செல்வராகவன் தாக்கத்தை கொடுக்கும் படம் 3.

இன்றோடு படம் வந்து இரண்டாவது நாள். கதை ஏறக்குறைய படிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பணக்காரப் பையன் தனுஷ், மிடில் க்ளாஸ் பொண்ணு சுருதி. பள்ளிப் பருவத்துக் காதல். வீட்டில் யாருமில்லாத நேரத்தில், நூறு ரூவாய் கொடுத்து படம் பார்க்க வந்தவர்களை திருப்திப் படுத்துவதற்காக, கொஞ்சம் ரொமான்ஸ் கூடவே ஒரு பாட்டு. இது முடிந்தவுடனே பப்பில் குடிவெறி கொண்டாட்டத்திற்கு நடுவே தனுஷ் சுருதிக்கு தாலி காட்ட, இந்தக் கால இளைய தலைமுறைக்கு புதுவழி ஒன்றைத் திறந்து வைக்கிறார் ஐஸ்வர்யா. இதற்கு ட்ரெண்ட் செட்டிங் மேரேஜ் என்று விளம்பரம் வேறு. காதலும், சல்லாபமுமாய் தான் யோசித்து வைத்த சரக்கு (அட.. அதில்லைங்க கதை...கதை...) தீர்ந்துவிட, என்ன செய்வதென்று புரியாமல் இடைவேளை விடுகிறார் ஐஸ்வர்யா.

“பாதி படம் முடிஞ்சுதுங்க, எப்படி நெக்ஸ்ட் ஃபாலோ பண்றதுன்னு தெரியல. நீங்க கொஞ்சம் டெவலப் பண்ணுங்களேன்?” என்று தனுஷிடம் ஐஸ்வர்யா கேட்க, அதற்கு தனுஷ் “யூ சீ. யூ டெல்லிங் சாங் ரைட்டிங். ஐ ரைட். யூ டெல்லிங் ஸ்டோரி ரைட்டிங். ஐ நோ ரைட்டிங். அண்டர்ஸ்டேன்ட். காட்ப்ளஸ்” என்று தனுஷ் பதிலளிக்க, ஐஸ்வர்யா கடுப்பாகி என்ன செய்வதென்று புரியாமல் செல்வராகவனிடம் உதவி கேட்டிருக்க வேண்டும். “மயக்கம் என்ன”விலிருந்து மீளாத செல்வா மீதிக் கதையை எழுதியிருக்க வேண்டும். அப்படித்தான் இருக்கிறது படம்.

முதல் பாதி உண்மையிலேயே பிரமாதம். காதல், ரொமான்ஸ், சென்டிமென்ட் என்று எல்லாவற்றிலும் கலக்கியிருக்கிறார் தனுஷ். பள்ளிப் பருவத்து சுருதி க்யூட். திருமணத்திற்கு பிறகான சுருதியில் செயற்கைத் தன்மை கூடித் தெரிகிறது. “எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்” ஐ கொஞ்சம் குறைத்திருக்கலாம். சிவகார்த்திகேயன் அடுத்த சந்தானமாக உருவாவதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்படுகிறது. மெரீனாவிற்கு பதில் இதிலேயே முழுதாய் நடித்திருக்கலாம். பாதியிலேயே காணாமல் போய்விடுகிறார். சுருதியின் வாய்ப் பேசமுடியாத தங்கை, காதலை எதிர்க்கும் தந்தையிடம் “அக்கா போக..ட்...டும். விடு..ங்க...கப்பா..” என்று திக்கித்திக்கி சொல்வதற்கு அப்ளாஸ் தியேட்டரில். கண்ணழகா பாடல் அருமை.

இரண்டாம் பாதியில் அடிக்கடி தனுஷும், சுருதியும் நாபிக்கமலத்திலிருந்து நன்றாய் மூச்சை இழுத்து “ஆஆஆஆ....” என்று கத்துகிறார்கள். தனுஷிற்கு ஏதேதோ பிம்பங்கள் தோன்றி மறைகிறது. தனுஷ், “ரொமான்ஸ் பண்ணிகிட்டிருந்த என்னை பைத்தியம் ஆக்கிட்டியேடி” என்று உண்மை உணர்த்து நடித்திருக்கிறார். அடிக்கடி கோபப்படுகிறார், திடீரென சந்தோஷப்படுகிறார். இதற்கு பை-போலார் டிஸ்ஆர்டர் என்று பெயர் வைத்து கதையை நகர்த்துகிறார்கள். “ஒய் திஸ் கொலைவெறிடி” பாடலை நாறடித்திருக்கிறார்கள். அந்த ஆட்டத்திற்கு தியேட்டரில் ரசிகர்களின் கும்மாங்குத்தோப்பதி நடனம் எவ்வளவோ மேல். தனுஷிற்கு வந்த இந்த வியாதியைப் பற்றி சுருதிக்கு தெரியவர என்ன நடந்தது, மீதிக் கதை என்ன என்பதை அறிய ஆவலாய் தியேட்டருக்கு போகும் முன் யோசிக்கவும்.

அறிமுக இசையமைப்பாளர் அனிருத் ஒவ்வொரு பாடலின் ஸ்லோ ட்ராக் ஹம்மிங் ஐ திரும்பத் திரும்பப் போட்டு ஒப்பேற்றியிருக்கிறார். நல்லவேளை இரண்டாம் பாதி தனுஷிற்கு திகில் மீசிக் கொடுக்கவேண்டும் என்று அவருக்கு தோன்றியிருக்கவில்லை. அதுவரை தப்பித்தோம். “போ.. நீ...போ” பாடல் க்ளாஸ். படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

சுருதியை முதல் முறை பார்த்ததும் தனுஷிடம் சிவகார்த்திகேயன் சொல்லும் ஒரு வரிதான் படத்திற்கான விமர்சனம் “பெருசா ஒண்ணும் இல்லையேடா....”.G12Jap45SxP“சர்வதேச எந்திரவியல் மாநாடு – மூன்றாம் நாள் நவீன கண்டுபிடிப்புகள் கண்காட்சிக்கு உங்களை வரவேற்கிறோம்”. அந்த நொடி, அரங்கமே நிசப்தத்தில் மூழ்க நான்கு திசைகளிலிருந்தும் வந்த ஒலி நடு அரங்கில் வெடித்துச் சிதறியது. வண்ணமயமான ஒளிவெள்ளத்தினூடே, நடு அரங்கில் குவியும் பளீரென்ற ஒளியில் விலகிய திரையினுள்ளிருந்து ஒரு எந்திரன் புன்னகைத்தவாறு பேசத்துவங்கினான்.


“இன்றைய தினம் இங்கு டோக்கியோவில், சர்வதேச எந்திரவியல் மாநாட்டில் இவ்வருடத்தின் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப் படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” எனத் தொடங்கி தன் நிக்கலக் குரலில் தன் உரையைத் தொடர்ந்தான். வருடமொருமுறை உலக அரங்கின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் காணொளிகள் அறிமுகப் படுத்தப்பட்டு அவற்றில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பிற்கு ரோபோட்டிக்ஸ் துறையின் மிக உயரிய விருதான “அஸூமோ  ஹிரோஷி” விருது வழங்கப்படும்.


“இந்த வருடம் ஹிரோஷி விருதுக்கு போட்டியிடும் கண்டுபிடிப்புகள் இதோ ….. “ எந்திரன் கை நீட்ட அவன் விரலிலிருந்து சென்ற அலைவீச்சொன்று மேடையின் மிகப்பெரிய திரையை விலக்கியது. திசை அறிந்து, வாகன நெரிசலை உணர்ந்து வாகனம் ஓட்டும் ரோபோ, வீட்டில் வீணாகும் மின்சக்தியை கண்டறிந்து சேமிக்கும் ரோபோ என்று பல தானியங்கி ரோபோக்கள், அதன் பயன்கள், அதற்கான தேவைகள் யாவையும் காணொளிகளால் விளக்கப்பட்டன. அனால் இவை எல்லாம் நடுவர்களையும் பார்வையாளர்களையும் திருப்திப் படுத்துவதாய் இல்லை. இறுதியாக ஜப்பான் நாட்டின் சார்பான கண்டுபிடிப்பொன்று வெளியிடப்பட்டது.


அரங்கம் அதிரும்படியான கைதட்டல்கள். ஜப்பானின் கண்டுபிடிப்பான “தி விர்ச்சுவல் மேன்”என்னும் இயந்திரத்திற்கு. கால எந்திரத்தைப் போல ஒரு எந்திரம் அது. அந்த இயந்திரத்தினுள் ஒருவன் சென்று தன்னை அடைத்துக் கொண்டு, எந்த இடம் செல்லவேண்டுமோ அந்த இடம் போவதற்கான கட்டளையை கொடுத்தால் மட்டும் போதும். இங்கு இயந்திரம் நன்றாய் அடைபட்டு, அடுத்தகணம் சென்று சேர வேண்டிய இடத்தில் அவனின் ஒரு மாதிரி பிம்பம் தோற்றுவிக்கப்படும். அனைத்து உணர்வுகளையும் கொண்ட அந்த பிம்பம் இவன் அவ்விடத்தில் செய்யவேண்டிய வேலைகளை செய்யும். வேலை முந்தவுடன் பிம்பம் அழிக்கப்படும். அதன் பின்னர் கதவு திறந்து நிஜ மனிதன் வெளிவருவான். ஆகவே ஒரே நேரத்தில் இருவர் என்னும் போலியும் சாத்தியப்படாத அப்படி ஒரு கண்டு பிடிப்பு. அடிமை மனிதர்களின் வேலைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் இது உருவாக்கப் பட்டதாக அந்த காணொளி முடிந்தது.


வெடித்துச் சிதறிய வான வேடிக்கைகளின் நடுவே “இந்த வருடத்திற்கான அஸூமோ  ஹிரோஷி விருது முடிவுகள் இதோ.......“ என்றொரு குரல் ஒலிக்க சூழ்ந்த அமைதியின் மூன்றாம் வினாடியின் முடிவில் “தி வின்னர் ஈஸ்....தி விர்ச்சுவல் மேன்” என்ற குரலையும் மீறி ஒலித்தது கைதட்டல் ஒலி. மீண்டும் அந்த அறிவிப்பு தொடர்ந்தது “அண்ட்... த ப்ரைஸ் கோஸ் டூ ... G12Jap45SxP” என்ற அறிவிப்பின் முடிவில் விலகிய திரையினுள்ளிருந்து கை அசைத்துக் கொண்டே வந்த மற்றோர் எந்திரன் பரிசை வாங்கிச் சென்றான்.


பின் குறிப்பு: அஸூமோ ஹிரோஷி என்பவர் ஆர்டிஃபிஷியல் இண்டேல்லிஜன்ஸ் தொழில்நுட்பத்தில் சிந்திக்கும் திறன் வாய்ந்த உத்தியுடன் கூடிய ரோபோக்களை (G12Jap45SxP) படைத்தவர். அவர் உருவாக்கிய முதல் ரோபோவே அவரைக் கொன்றது.இனியவை நூற்றிநாற்பது!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நான் ட்விட்டருக்கு வந்து ஒரு வருடம் இரண்டு மாதங்கள் முடிந்து விட்டது. வலைபாயுதே பார்த்து கார்க்கி, கோளாறு, மினிமீன்ஸ் இவர்களின் ட்வீட்டுகளால் இன்ஸ்பயர் ஆகி ட்விட்டருக்கு வந்தேன். கடந்த ஒரு வருடத்தில், பல விஷயங்கள் கற்று கொண்டேன். நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். இணையம் தானே என்பதால் விர்ச்சுவல்’ஆன நட்பாக ட்விட்டர் நட்புகள் முடிந்து விடவில்லை. வேறொரு ஊரிலிருந்து சென்னை வந்து என் பிறந்தநாளைக் கொண்டாடிச் செல்லுமளவு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். புத்தகங்களுக்குள் புதையுண்டு மதிப்பெண்களுக்காகவும், வேலைக்காகவும் கல்லூரியில் சுற்றித் திரிந்திருந்தவனை திடீரென ஒரு நாள் “இதுதான் சமூகம், இங்குதான் வாழ போகிறாய். வாழ்கிறாயோ இல்லையோ, இங்குதான் நீ பணம் சம்பாதிக்க போகிறாய். அதை உருப்படியாய்ச் செய்” என்று இச்சமூகத்தில் தூக்கி எறிந்து விட்டார்கள். புத்தகங்களையும், கேள்வித்தாள்களையுமே சமாளித்திருந்தவன் எனக்கு நிஜ உலகின் பிரச்சினைகள் பெரும் மன உளைச்சலைத் தந்தன. அந்த சமயத்தில் என்னைத் தாங்கியது ட்விட்டர். இன்னும் சொல்லப்போனால் ட்விட்டரில் நான் கண்ட வழிகாட்டிகள் பலர். சிறு வயதில் எனக்குள் ஊறிப்போய் பின்னர் சூழ்நிலைகளால் மறக்கடிக்கப் பட்ட எழுத்தை மீண்டும் தூண்டியத்தில் ட்விட்டருக்குப் பெரும் பங்குண்டு. இவற்றையெல்லாம் நினைத்து என் நண்பர்கள்/வழிகாட்டிகள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன்.

கடந்த ஒரு வருடத்தில் நான் போட்ட ட்வீட்டுகளில் ஓரளவு சிறந்தவைகளை ஒரு ஈ-புக் ஆக உருவாக்கி அதைப் பகிர ஆசைப் பட்டேன். அது இப்போது நிறைவேறியிருக்கிறது. இருந்தாலும் ஒரு நிஜ புத்தகமாக இருக்கும் தருணத்தில் கார்க்கி அவர்கள் கைகளால் வெளியிட பரிசல் & நவீன் அதைப் பெற்றுக் கொள்ளவேண்டும். என்பது என் ஆசை. அது இந்த ஈ-புக் விஷயத்தில் நிறைவேறாமல் போய் விட்டது சற்றே வருத்தம். இருந்தாலும் என் குரு கார்க்கியின் வலைதளத்தில் இந்த புத்தகம் வெளியாவது எனக்கு பெருமையும் மகிச்சியையும் தருகிறது. ஆனால் கிரி அண்ணன் என் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதவேண்டும் என்று நினைத்திருந்தது நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியே.

ஒவ்வொரு கணமும் “டே.... ஒவ்வொருத்தருக்கும் கண்டிப்பா ஒரு திறமை இருக்கும். உனக்குள்ளயும் ஒரு திறம இருக்கும்” என்று 7/G ரெயின்போ காலனி சோனியா அகர்வால் போல எனைத் திட்டி இதையெல்லாம் செய்யத் தூண்டிக் கொண்டிருக்கும் அன்பு நண்பன் நட்ராஜிற்கு (@nattu_g) “நண்பன் போட்ட சோறு, நிதமும் தின்னேன் பாரு.. நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன்” என்ற தளபதி பட பாடலை டெடிகேட் செய்து உங்களனைவருக்கும் நன்றிகூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.


இது குறித்த கார்க்கியின் வலைப்பதிவு: http://www.karkibava.com/2012/03/blog-post_26.html
என் ட்வீட்டுகளை ஈ-புத்தகமாக பெற : http://www.mediafire.com/?k4d3cuaznmsl4ml 

கூட்டுக் குடித்தனம்


 ஹேப்பி ஆனிவர்சரி டி... பாரேன் டைம் எவ்ளோ சீக்கிரமா ஓடுதுன்னு. அதுக்குள்ளே நமக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் முடிஞ்சிடுச்சு” முதன்முதலாய் அர்ச்சனாவின் கைப் பிடிக்கையில் கொண்டிருந்த அதே காதலும் மோகமுமாய் செல்லச் சிணுங்கலோடு தன் ஆசைத் துணைவியைக் கொஞ்சி வாழ்த்தினான் விஷ்வா. அந்த பெங்களூர்க் குளிரில் இவ்வார்த்தைகள் மேலும் அவளை உறையச் செய்தன.

இருந்தாலும்,
“போடா... என்ன செஞ்சு... என்ன ஆகி... லைஃபே போரு’டா” மலர்முகம் கொஞ்சம் வாடித்தான் போயிருக்கும். அப்படித்தானிருந்தது அக்குரல்.

“ஹேய்... என்னாச்சுமா திடீர்ன்னு.. நான் எவ்ளோ சந்தோஷமான விஷயத்த சொல்றேன். இப்படி சலிச்சுக்குற? நமக்கு இப்போ என்ன குறை?”

“ஒண்ணும் இல்ல... அத விடு. சாரி, உன் மூட்’ட ஸ்பாயில் பண்ணதுக்கு”

“ச்சீ... உனக்கு என்னாச்சு. சொல்லப் போறியா இல்லையா”

“நாம ஒண்ணா ஒரே ஃபேமிலியா இருக்கலாம்டா. தனியா இருந்து என்னத்த சாதிச்சோம்”

“இதுதான் மகாராணியோட பிரச்சினையா... ச்சே விடு பாத்துக்கலாம். இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகட்டும். அப்புறம் பாக்கலாம்”

“ஐயம் சீரியஸ். எனக்கு இந்த லைஃப், ஜாப் எதுவும் இப்போ பிடிக்கல. சம்பாதிக்கிறது மட்டும் வாழ்க்கை இல்லடா”

“ஹே! திடீர்ன்னு ஏன் உனக்கு இப்படியெல்லாம் தோணுது. சரிமா. குழந்தை அப்படின்னு வரும்போது ஒரு பெரிய வீடா வாங்கி செட்டில் ஆயிடலாம்ன்னு நாம ஏற்கனவே பேசி வெச்சது தானே?”

“அதான். அதான் நானும் சொல்றேன். கல்யாணம் முடிஞ்சு நாலு வருஷம் ஆச்சு.  இன்னமும் குழந்தை, வீடு எதுக்காகவும் எந்த ஒரு ஸ்டெப்பும் எடுக்கல. நேத்து கூட அத்தை கிட்ட இதப்பத்தி பேசினேன், அவங்களும் இதேதான் சொல்றாங்க. மாமா இதைப் பத்தி உன்கிட்ட பேசுறேன்னு சொன்னாரு”

“இப்போ எதுக்கு நீ ஸ்ட்ரெய்ட்டா அவங்ககிட்ட பேசின. என்கிட்டே கன்சல்ட் பண்ணியிருக்கலாம்ல?”

“நான் உன்கிட்ட எத்தனையோ தடவ சொல்லிட்டேன். நீ கேக்குற மாதிரி இல்ல. நல்லா சம்பாதிக்கணும், நல்லா இருக்கணும்னு நீ ஆசைப் படுறதுல தப்பில்ல. அதுக்காக நம்ம வாழ்க்கைய இழந்துட முடியாது. பணம் முக்கியம் தான், ஆனா வாழ்க்கை அதைவிட ரொம்ப முக்கியம்”

“குழந்தைன்னு ஆயிட்டா நீ உன் வேலைய விடுற மாதிரி ஆகிடும். அதான் யோசிக்கிறேன்.”

“நான் அதைப் பத்தியெல்லாம் கவலைப் படல. நான் முடிவு பண்ணது பண்ணினனுதான். என் வேலை எனக்கு முக்கியம் இல்ல. ஃபேமிலி தான் முக்கியம். புரிஞ்சுக்கோ”

“சரி.. நீ முடிவு பண்ணிட்ட. இனி என்ன பண்ணமுடியும். பேப்பர் போட்டுடு. அம்மாகிட்ட நான் பேசுறேன். நீங்க ஒண்ணுகூடி முடிவு செஞ்சப்புறம் நான் சொல்லி கேட்கவா போறீங்க”

“தேங்க்ஸ்டா செல்லம்... லவ்யூ ம்ம்மா....”

“ஹ்ம்ம்... பாய்... எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு... கிளம்புறேன். சென்னை ட்ராஃபிக்ல இப்ப கிளம்பினா இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் ஆபீஸ் போக.” தொலைபேசியை அணைத்துவிட்டு கிளம்பினான்.

பின்குறிப்பு: விஷ்வா சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறான். அர்ச்சனா பெங்களூரில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் கன்சல்ட்டன்ட் ஆக இருக்கிறாள். இந்த உரையாடல் முடிந்த இரண்டு நாட்கள் கழித்து இருவரும் சேர்ந்து வாழ சென்னையில் ஒரு ஃப்ளாட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறான் விஷ்வா.


கிரிக்கெட் குவிஸ்


  1. ஒருநாள் போட்டிகளில் அணிக்கு 50 ஓவர்கள் வீதம் தலா 300 பந்துகள் வீசப்படுகின்றன. ஒரே போட்டியில் ஒரு தனி நபராக அதிக பந்துகளை சந்தித்த வீரர் யார்?
  2. டெஸ்ட் போட்டிகளில் டிராவிட் ட்ராவிட் ஐந்து முறை பவுலிங் செய்திருக்கிறார். ஒரே ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருக்கிறார். டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலிங் செய்து ஆட்டமிழக்கச் செய்த ஒரே வீரர் யார்?
  3. T20 போட்டிகளில் மேட்ச் டை ஆக முடிந்தால் சூப்பர் ஓவர் வீசப்பட்டு அதில் அதிக ரன்கள் அடிக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் ஒரே எண்ணிக்கையை அடித்திருந்தால் போட்டியின் முடிவு எதை கணக்கில் கொண்டு அறிவிக்கப்படும்?
  4. படத்தில் இருக்கும் இவர் ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் கேப்டனாக இருந்தவர். இவர் செய்த சாதனை என்ன?

  5. அனைத்து வகை ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இன்னிங்சில் ஒரு பந்து வீச்சாளரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுகள் எத்துனை? அந்த சாதனைக்கு சொந்தக்காரர் யார்?
விடைகள்:

1. கனடா அணியை சேர்ந்த ஆஷிஷ் பகாய் என்பவரே ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்த வீரர். ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஒரு போட்டியில் 172 பந்துகளை விளையாடி 137* ரன்கள் எடுத்தார்.

2. டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட்டால் அவுட் செய்யப்பட்ட ஒரே வீரர்: மேற்கிந்திய தீவுகளின் ரிட்லி ஜேக்கப்ஸ்.

3. சூப்பர் ஓவரிலும் போட்டி டை ஆகும் பட்சத்தில், எந்த அணி அதிக சிக்சர்களை அடித்துள்ளதோ அந்த அணி வெற்றி பெற்றதாய் அறிவிக்கப்படும். ஒருவேளை சிக்சர்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்குமாயின் பவுண்டரி(No. of 4s) களின் எண்ணிக்கையை வைத்து வெற்றி முடிவு செய்யப்படும்.

4. படத்தில் இருப்பவர் பெலிண்டா கிளார்க். ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்தவர். ஒருநாள் போட்டிகளில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை அடித்தவர்(229*) என்ற சாதனையை இன்று வரை தக்கவைத்துக் கொண்டிருப்பவர்.


5. இர்பான் பதான். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில், 16 ரன்களை விட்டுக் கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

விடையளித்த, முயற்சித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

அரவான்சாகித்ய அகாதமி பேரைக் கேட்டப்பவே கொஞ்சம் சுதாரிச்சிருக்கணும். ஏதோ பழைய காலத்துப் படமா இருக்கும், போதாக் குறைக்கு இந்த ஆதிப் பையன் மேல கொஞ்சம் நம்பிக்கை. மிருகம், ஈரம் படமெல்லாம் பார்த்து பிடிச்சிருச்சுன்னு நம்பி போலாமேன்னு போனேன். ஊருக்குள்ள களவாடி அதை வித்து வேம்பூர் கிராமத்துக்கே சோறு போடும் கிராமத்து களவாணி பசுபதி. மகாராணி வைர அட்டியை தந்திரமாக திருடி வரும் ஆதியின் திறமை கண்டு தங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார். இரண்டு களவாணிகளும் ஒன்று கூடி ராசகளவு செய்ய, அங்கே பசுபதி மாட்டிக் கொள்ள, அவரைக் காப்பாற்றுகிறார் ஆதி. இருந்தாலும் எதையோ மறைக்கிறார் ஆதி(ஆஆஆவ்வ்வ்....). பின்ன இடைவேளைக்கு பிறகு கதை வேண்டாமா? இடைவேளைக்குப் பின் ஆதியின் ஃபிளாஷ்பேக். காவல்காரனாக ஆதி. ஊர் இளசுகள் காவலுக்குச் சென்ற நேரம் ஊரில் அசலூரான் ஒருவன் கொல்லப் படுகிறான். அதற்குப் பதிலாக ஆதியைப் பலி கொடுக்க முடிவெடுக்கிறார்கள். ஆதி அதிலிருந்து தப்பினாரா எல்லையா என்பது மீதிக் .......(தூங்கிட்டேன்).

அரவான் – பெயரை வைத்தே இரண்டை ஊகித்துச் செல்லலாம். அறுபத்தி நாலு அழகும் வாய்ந்தவன், பாண்டவர்கள் போரில் வெல்ல பலி கொடுக்கப் படுபவன். அதேதான் இங்கும். முதல் பாதியில் பசுபதி + ஆதி நடிப்பில் எதிர்பார்ப்பு எகிறிவிடுகிறது. சட்டையே போடாமல் நடிக்க இனி ஆதி தான் பெஸ்ட் சாய்ஸ். மிருகம் படத்திற்கு பிறகு அப்படி ஒரு நடிப்பு. ஆனால் அப்படி அகலமான ஒரு உடல்வாகுடன் காமெடி செய்வது சகிக்கவில்லை. பசுபதியும் கரிகாலனும் நன்றாகவே நடித்திருக்கின்றனர். “நாட்டுக் கோழிய போடுறம்னுட்டு போண்டாக் கோழிய போட்டுட்டானுங்க மருமகனே” கதையாய் அஞ்சலியை வைத்து ஹைப் ஏற்றி விட்டார்கள். ஆனால் அஞ்சலி வருவது என்னவோ முப்பது செகண்டுகள் தான். அதற்கு ஈடாக கண்ணுக்கு குளிர்ச்சியாய் மூன்று பேர். கொடுத்த காசுக்கு (டிக்கெட் காசு) ஒரே திருப்தி. அதிலும் ஸ்வேதா மேனன் பாட்டு ஹ்ம்ம்.... அதகளம். அந்த மூன்று பேர்.

பதினெட்டாம் நூற்றாண்டு படம் என்றதாலேயே படம் ஒரே க்ரே கலரில் தெரிகிறது. பசுமையாய் ஒன்றையும் காட்டவில்லை படத்தில். போன நூற்றாண்டுகளில் அவ்வளவு வறட்சியாகவா இருந்தது தமிழகம்? ஆதி, பசுபதியைக் காப்பாற்றிக் கொண்டு வரும் சீனில் மருதநாயகம் ட்ரெய்லர் நினைவில் வந்து தொலைக்கிறது. பின்னணி இசை என்றெலாம் பெரிதாய் ஒன்றுமில்லை. பாடல்கள் சுமார். நிலா நிலா பாடல், ஸ்வேதா மேனன் பாடல் இரண்டும் ரசிக்க வைக்கின்றன.

இதையெல்லாம் விட பெரிய அபத்தமாய், “தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்” என்னும் 80 வருடமாய் தமிழ் சினிமா கட்டிக் காப்பாற்றிய ஒரு நம்பிக்கை இப்படத்தில் தோற்கடிக்கப்படுகிறது. மரண தண்டனை கூடாது என்னும் மெசேஜ் போட்டு படம் முடிவதாக பைக் ஸ்டேண்டில் எல்லாரும் பேசிக் கொண்டார்கள்.