கூட்டுக் குடித்தனம்


 ஹேப்பி ஆனிவர்சரி டி... பாரேன் டைம் எவ்ளோ சீக்கிரமா ஓடுதுன்னு. அதுக்குள்ளே நமக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் முடிஞ்சிடுச்சு” முதன்முதலாய் அர்ச்சனாவின் கைப் பிடிக்கையில் கொண்டிருந்த அதே காதலும் மோகமுமாய் செல்லச் சிணுங்கலோடு தன் ஆசைத் துணைவியைக் கொஞ்சி வாழ்த்தினான் விஷ்வா. அந்த பெங்களூர்க் குளிரில் இவ்வார்த்தைகள் மேலும் அவளை உறையச் செய்தன.

இருந்தாலும்,
“போடா... என்ன செஞ்சு... என்ன ஆகி... லைஃபே போரு’டா” மலர்முகம் கொஞ்சம் வாடித்தான் போயிருக்கும். அப்படித்தானிருந்தது அக்குரல்.

“ஹேய்... என்னாச்சுமா திடீர்ன்னு.. நான் எவ்ளோ சந்தோஷமான விஷயத்த சொல்றேன். இப்படி சலிச்சுக்குற? நமக்கு இப்போ என்ன குறை?”

“ஒண்ணும் இல்ல... அத விடு. சாரி, உன் மூட்’ட ஸ்பாயில் பண்ணதுக்கு”

“ச்சீ... உனக்கு என்னாச்சு. சொல்லப் போறியா இல்லையா”

“நாம ஒண்ணா ஒரே ஃபேமிலியா இருக்கலாம்டா. தனியா இருந்து என்னத்த சாதிச்சோம்”

“இதுதான் மகாராணியோட பிரச்சினையா... ச்சே விடு பாத்துக்கலாம். இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகட்டும். அப்புறம் பாக்கலாம்”

“ஐயம் சீரியஸ். எனக்கு இந்த லைஃப், ஜாப் எதுவும் இப்போ பிடிக்கல. சம்பாதிக்கிறது மட்டும் வாழ்க்கை இல்லடா”

“ஹே! திடீர்ன்னு ஏன் உனக்கு இப்படியெல்லாம் தோணுது. சரிமா. குழந்தை அப்படின்னு வரும்போது ஒரு பெரிய வீடா வாங்கி செட்டில் ஆயிடலாம்ன்னு நாம ஏற்கனவே பேசி வெச்சது தானே?”

“அதான். அதான் நானும் சொல்றேன். கல்யாணம் முடிஞ்சு நாலு வருஷம் ஆச்சு.  இன்னமும் குழந்தை, வீடு எதுக்காகவும் எந்த ஒரு ஸ்டெப்பும் எடுக்கல. நேத்து கூட அத்தை கிட்ட இதப்பத்தி பேசினேன், அவங்களும் இதேதான் சொல்றாங்க. மாமா இதைப் பத்தி உன்கிட்ட பேசுறேன்னு சொன்னாரு”

“இப்போ எதுக்கு நீ ஸ்ட்ரெய்ட்டா அவங்ககிட்ட பேசின. என்கிட்டே கன்சல்ட் பண்ணியிருக்கலாம்ல?”

“நான் உன்கிட்ட எத்தனையோ தடவ சொல்லிட்டேன். நீ கேக்குற மாதிரி இல்ல. நல்லா சம்பாதிக்கணும், நல்லா இருக்கணும்னு நீ ஆசைப் படுறதுல தப்பில்ல. அதுக்காக நம்ம வாழ்க்கைய இழந்துட முடியாது. பணம் முக்கியம் தான், ஆனா வாழ்க்கை அதைவிட ரொம்ப முக்கியம்”

“குழந்தைன்னு ஆயிட்டா நீ உன் வேலைய விடுற மாதிரி ஆகிடும். அதான் யோசிக்கிறேன்.”

“நான் அதைப் பத்தியெல்லாம் கவலைப் படல. நான் முடிவு பண்ணது பண்ணினனுதான். என் வேலை எனக்கு முக்கியம் இல்ல. ஃபேமிலி தான் முக்கியம். புரிஞ்சுக்கோ”

“சரி.. நீ முடிவு பண்ணிட்ட. இனி என்ன பண்ணமுடியும். பேப்பர் போட்டுடு. அம்மாகிட்ட நான் பேசுறேன். நீங்க ஒண்ணுகூடி முடிவு செஞ்சப்புறம் நான் சொல்லி கேட்கவா போறீங்க”

“தேங்க்ஸ்டா செல்லம்... லவ்யூ ம்ம்மா....”

“ஹ்ம்ம்... பாய்... எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு... கிளம்புறேன். சென்னை ட்ராஃபிக்ல இப்ப கிளம்பினா இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் ஆபீஸ் போக.” தொலைபேசியை அணைத்துவிட்டு கிளம்பினான்.

பின்குறிப்பு: விஷ்வா சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறான். அர்ச்சனா பெங்களூரில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் கன்சல்ட்டன்ட் ஆக இருக்கிறாள். இந்த உரையாடல் முடிந்த இரண்டு நாட்கள் கழித்து இருவரும் சேர்ந்து வாழ சென்னையில் ஒரு ஃப்ளாட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறான் விஷ்வா.


10 comments:

நடராஜன் said...

உரையாடல் தொலைப்பேசியில் நிகழ்வதைப் போலவே தெரியவில்லை! அருமையான கதை

sutha said...

இன்றைய உலகின் அவலம் இது - சில பெண்கள் இன்னும் இயல்பு மாறாமல் இருப்பது வரம் - படிக்கும் போது ஃபோனில் பேசுவது போல் தெரியாதது - கதைக்கு வெற்றி. நல்ல கான்செப்ட். நல்ல எழுத்து நடை .... பகிர்ந்ததற்கு நன்றி

சத்யா said...

கதை முழுதும் தொலைபேசியில் நடக்கும் உரையாடல் என்பது பின்குறிப்பில் படித்த பின்பு தான் தெரிகிறது.ஆழமும், அடர்த்தியும் நிறைந்த கதை

Anonymous said...

இன்றைய யதார்த்தம். நல்ல பதிவு.

classic k7 said...

அருமையான கதை , சூழ்நிலை கதை ! வாழ்த்துகள்

Balu Sv said...

நல்ல கதைக்களம்... உரையாடல் இயல்பா அழகா இருக்கு... எழுத்துநடை அருமை. வாழ்த்துக்கள் குரு! :))

Gokul Prasad said...

//மலர்முகம் கொஞ்சம் வாடித்தான் போயிருக்கும். அப்படித்தானிருந்தது அக்குரல்.// இந்த வார்த்தைகளை படிக்கும் போதே இது தொலைபேசி உரையாடல் என்பது தெரிந்துவிட்டது..மாற்றவும்.. குறையொன்றுமில்லை. தெளிவான நடை.

amas said...

My post was about babies too, but from a different perspective :) Very nice! மிகவும் யதார்த்தமான நிகழ்வை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் :) வாழ்த்துகள்!
amas32

kavitha said...

அருமை... ஒரு சந்தேகம்..4 வருஷமா அந்த பொண்ணு வேற வேலை சென்னைல ட்ரை பண்ணலையா?/

Uma said...

சம்பாதிக்கிறது மட்டும் வாழ்க்கை இல்லடா”--- நல்ல முடிவு..

சின்ன வரிகளில் அருமையா,, மனதைத தொடும் கதை. positive approach கதையின் பலம்.