மூணுஎப்பாடு பட்டாவது ஒரு பாடலை ஹிட் ஆக்கி விட்டு, ஓவர் ரொமான்ஸ் உடன் கூடிய ஒரு காதல் கதையை, புரியாத ஒரு மருத்துவ வியாதியை திணித்து நாயகனோ-நாயகியோ பைத்தியம் ஆவது போலவோ, இறந்து விடுவது போலவோ காட்டி கதையை முடித்தால் எப்படியாவது படம் ஓடிவிடும் என்னும் தமிழ் சினிமா டிஸ்ஸார்டர் மேனியாவின் கீழ் ஐஸ்வர்யா தனுஷ் ஆக்கத்தில் செல்வராகவன் தாக்கத்தை கொடுக்கும் படம் 3.

இன்றோடு படம் வந்து இரண்டாவது நாள். கதை ஏறக்குறைய படிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பணக்காரப் பையன் தனுஷ், மிடில் க்ளாஸ் பொண்ணு சுருதி. பள்ளிப் பருவத்துக் காதல். வீட்டில் யாருமில்லாத நேரத்தில், நூறு ரூவாய் கொடுத்து படம் பார்க்க வந்தவர்களை திருப்திப் படுத்துவதற்காக, கொஞ்சம் ரொமான்ஸ் கூடவே ஒரு பாட்டு. இது முடிந்தவுடனே பப்பில் குடிவெறி கொண்டாட்டத்திற்கு நடுவே தனுஷ் சுருதிக்கு தாலி காட்ட, இந்தக் கால இளைய தலைமுறைக்கு புதுவழி ஒன்றைத் திறந்து வைக்கிறார் ஐஸ்வர்யா. இதற்கு ட்ரெண்ட் செட்டிங் மேரேஜ் என்று விளம்பரம் வேறு. காதலும், சல்லாபமுமாய் தான் யோசித்து வைத்த சரக்கு (அட.. அதில்லைங்க கதை...கதை...) தீர்ந்துவிட, என்ன செய்வதென்று புரியாமல் இடைவேளை விடுகிறார் ஐஸ்வர்யா.

“பாதி படம் முடிஞ்சுதுங்க, எப்படி நெக்ஸ்ட் ஃபாலோ பண்றதுன்னு தெரியல. நீங்க கொஞ்சம் டெவலப் பண்ணுங்களேன்?” என்று தனுஷிடம் ஐஸ்வர்யா கேட்க, அதற்கு தனுஷ் “யூ சீ. யூ டெல்லிங் சாங் ரைட்டிங். ஐ ரைட். யூ டெல்லிங் ஸ்டோரி ரைட்டிங். ஐ நோ ரைட்டிங். அண்டர்ஸ்டேன்ட். காட்ப்ளஸ்” என்று தனுஷ் பதிலளிக்க, ஐஸ்வர்யா கடுப்பாகி என்ன செய்வதென்று புரியாமல் செல்வராகவனிடம் உதவி கேட்டிருக்க வேண்டும். “மயக்கம் என்ன”விலிருந்து மீளாத செல்வா மீதிக் கதையை எழுதியிருக்க வேண்டும். அப்படித்தான் இருக்கிறது படம்.

முதல் பாதி உண்மையிலேயே பிரமாதம். காதல், ரொமான்ஸ், சென்டிமென்ட் என்று எல்லாவற்றிலும் கலக்கியிருக்கிறார் தனுஷ். பள்ளிப் பருவத்து சுருதி க்யூட். திருமணத்திற்கு பிறகான சுருதியில் செயற்கைத் தன்மை கூடித் தெரிகிறது. “எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்” ஐ கொஞ்சம் குறைத்திருக்கலாம். சிவகார்த்திகேயன் அடுத்த சந்தானமாக உருவாவதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்படுகிறது. மெரீனாவிற்கு பதில் இதிலேயே முழுதாய் நடித்திருக்கலாம். பாதியிலேயே காணாமல் போய்விடுகிறார். சுருதியின் வாய்ப் பேசமுடியாத தங்கை, காதலை எதிர்க்கும் தந்தையிடம் “அக்கா போக..ட்...டும். விடு..ங்க...கப்பா..” என்று திக்கித்திக்கி சொல்வதற்கு அப்ளாஸ் தியேட்டரில். கண்ணழகா பாடல் அருமை.

இரண்டாம் பாதியில் அடிக்கடி தனுஷும், சுருதியும் நாபிக்கமலத்திலிருந்து நன்றாய் மூச்சை இழுத்து “ஆஆஆஆ....” என்று கத்துகிறார்கள். தனுஷிற்கு ஏதேதோ பிம்பங்கள் தோன்றி மறைகிறது. தனுஷ், “ரொமான்ஸ் பண்ணிகிட்டிருந்த என்னை பைத்தியம் ஆக்கிட்டியேடி” என்று உண்மை உணர்த்து நடித்திருக்கிறார். அடிக்கடி கோபப்படுகிறார், திடீரென சந்தோஷப்படுகிறார். இதற்கு பை-போலார் டிஸ்ஆர்டர் என்று பெயர் வைத்து கதையை நகர்த்துகிறார்கள். “ஒய் திஸ் கொலைவெறிடி” பாடலை நாறடித்திருக்கிறார்கள். அந்த ஆட்டத்திற்கு தியேட்டரில் ரசிகர்களின் கும்மாங்குத்தோப்பதி நடனம் எவ்வளவோ மேல். தனுஷிற்கு வந்த இந்த வியாதியைப் பற்றி சுருதிக்கு தெரியவர என்ன நடந்தது, மீதிக் கதை என்ன என்பதை அறிய ஆவலாய் தியேட்டருக்கு போகும் முன் யோசிக்கவும்.

அறிமுக இசையமைப்பாளர் அனிருத் ஒவ்வொரு பாடலின் ஸ்லோ ட்ராக் ஹம்மிங் ஐ திரும்பத் திரும்பப் போட்டு ஒப்பேற்றியிருக்கிறார். நல்லவேளை இரண்டாம் பாதி தனுஷிற்கு திகில் மீசிக் கொடுக்கவேண்டும் என்று அவருக்கு தோன்றியிருக்கவில்லை. அதுவரை தப்பித்தோம். “போ.. நீ...போ” பாடல் க்ளாஸ். படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

சுருதியை முதல் முறை பார்த்ததும் தனுஷிடம் சிவகார்த்திகேயன் சொல்லும் ஒரு வரிதான் படத்திற்கான விமர்சனம் “பெருசா ஒண்ணும் இல்லையேடா....”.4 comments:

amas said...

We have bought tickets for tomorrow's show:)Very nice review, so far the best I have read on twitter about this movie. Congrats!
amas32

எம்.டி.வெங்கடேஷ்வர் said...

Nan inniku parthen
unga review polave padamum

கோவை நேரம் said...

பெருசா ஒண்ணும் இல்லையா...படம் அம்புட்டு தானா

Uma said...

வொய் திஸ் கொலவெறின்னு உலகமே கதறும்போதே நினைத்தேன் 3 ல ஒன்னும் பெருசா இருக்காதுன்னு