G12Jap45SxP“சர்வதேச எந்திரவியல் மாநாடு – மூன்றாம் நாள் நவீன கண்டுபிடிப்புகள் கண்காட்சிக்கு உங்களை வரவேற்கிறோம்”. அந்த நொடி, அரங்கமே நிசப்தத்தில் மூழ்க நான்கு திசைகளிலிருந்தும் வந்த ஒலி நடு அரங்கில் வெடித்துச் சிதறியது. வண்ணமயமான ஒளிவெள்ளத்தினூடே, நடு அரங்கில் குவியும் பளீரென்ற ஒளியில் விலகிய திரையினுள்ளிருந்து ஒரு எந்திரன் புன்னகைத்தவாறு பேசத்துவங்கினான்.


“இன்றைய தினம் இங்கு டோக்கியோவில், சர்வதேச எந்திரவியல் மாநாட்டில் இவ்வருடத்தின் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப் படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” எனத் தொடங்கி தன் நிக்கலக் குரலில் தன் உரையைத் தொடர்ந்தான். வருடமொருமுறை உலக அரங்கின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் காணொளிகள் அறிமுகப் படுத்தப்பட்டு அவற்றில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பிற்கு ரோபோட்டிக்ஸ் துறையின் மிக உயரிய விருதான “அஸூமோ  ஹிரோஷி” விருது வழங்கப்படும்.


“இந்த வருடம் ஹிரோஷி விருதுக்கு போட்டியிடும் கண்டுபிடிப்புகள் இதோ ….. “ எந்திரன் கை நீட்ட அவன் விரலிலிருந்து சென்ற அலைவீச்சொன்று மேடையின் மிகப்பெரிய திரையை விலக்கியது. திசை அறிந்து, வாகன நெரிசலை உணர்ந்து வாகனம் ஓட்டும் ரோபோ, வீட்டில் வீணாகும் மின்சக்தியை கண்டறிந்து சேமிக்கும் ரோபோ என்று பல தானியங்கி ரோபோக்கள், அதன் பயன்கள், அதற்கான தேவைகள் யாவையும் காணொளிகளால் விளக்கப்பட்டன. அனால் இவை எல்லாம் நடுவர்களையும் பார்வையாளர்களையும் திருப்திப் படுத்துவதாய் இல்லை. இறுதியாக ஜப்பான் நாட்டின் சார்பான கண்டுபிடிப்பொன்று வெளியிடப்பட்டது.


அரங்கம் அதிரும்படியான கைதட்டல்கள். ஜப்பானின் கண்டுபிடிப்பான “தி விர்ச்சுவல் மேன்”என்னும் இயந்திரத்திற்கு. கால எந்திரத்தைப் போல ஒரு எந்திரம் அது. அந்த இயந்திரத்தினுள் ஒருவன் சென்று தன்னை அடைத்துக் கொண்டு, எந்த இடம் செல்லவேண்டுமோ அந்த இடம் போவதற்கான கட்டளையை கொடுத்தால் மட்டும் போதும். இங்கு இயந்திரம் நன்றாய் அடைபட்டு, அடுத்தகணம் சென்று சேர வேண்டிய இடத்தில் அவனின் ஒரு மாதிரி பிம்பம் தோற்றுவிக்கப்படும். அனைத்து உணர்வுகளையும் கொண்ட அந்த பிம்பம் இவன் அவ்விடத்தில் செய்யவேண்டிய வேலைகளை செய்யும். வேலை முந்தவுடன் பிம்பம் அழிக்கப்படும். அதன் பின்னர் கதவு திறந்து நிஜ மனிதன் வெளிவருவான். ஆகவே ஒரே நேரத்தில் இருவர் என்னும் போலியும் சாத்தியப்படாத அப்படி ஒரு கண்டு பிடிப்பு. அடிமை மனிதர்களின் வேலைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் இது உருவாக்கப் பட்டதாக அந்த காணொளி முடிந்தது.


வெடித்துச் சிதறிய வான வேடிக்கைகளின் நடுவே “இந்த வருடத்திற்கான அஸூமோ  ஹிரோஷி விருது முடிவுகள் இதோ.......“ என்றொரு குரல் ஒலிக்க சூழ்ந்த அமைதியின் மூன்றாம் வினாடியின் முடிவில் “தி வின்னர் ஈஸ்....தி விர்ச்சுவல் மேன்” என்ற குரலையும் மீறி ஒலித்தது கைதட்டல் ஒலி. மீண்டும் அந்த அறிவிப்பு தொடர்ந்தது “அண்ட்... த ப்ரைஸ் கோஸ் டூ ... G12Jap45SxP” என்ற அறிவிப்பின் முடிவில் விலகிய திரையினுள்ளிருந்து கை அசைத்துக் கொண்டே வந்த மற்றோர் எந்திரன் பரிசை வாங்கிச் சென்றான்.


பின் குறிப்பு: அஸூமோ ஹிரோஷி என்பவர் ஆர்டிஃபிஷியல் இண்டேல்லிஜன்ஸ் தொழில்நுட்பத்தில் சிந்திக்கும் திறன் வாய்ந்த உத்தியுடன் கூடிய ரோபோக்களை (G12Jap45SxP) படைத்தவர். அவர் உருவாக்கிய முதல் ரோபோவே அவரைக் கொன்றது.1 comment:

Raju N said...

நல்ல முயற்சி குருவே...
இன்னும் விவரணைகள் கொடுத்திருந்தா எஃபெக்டா இருந்திருக்கும்.
:-)