கிரிக்கெட் குவிஸ் – ஏப்ரல்


கிரிக்கெட் என்பது அனைவரையும் உற்சாகமூட்டும் ஒரு விசித்திர விளையாட்டு, அதில் அவ்வபோது வினோதங்களும் நிகழும்.

  • முழுமையாய் நடந்து முடிந்த ஒரு டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில், பேட்டிங்கின்போது DNB என ஒருவர் பதிவு செய்யப்பட்டால் Did Not Bat என்று பொருள்படும். அதாவது அவர் பேட்டிங் செய்ய வாய்ப்பு அமையவில்லை. அதன் முன்னரே அந்த இன்னிங்க்ஸ் டிக்ளேர் செய்யப் பட்டிருக்கலாம் அல்லது போட்டி முடிவுற்றிருக்கலாம். இப்படியாக DNB என பதிவு செய்யப்படாத, அதிக ஆட்டக்காரர்கள் ஆடாமல்போன இன்னிங்க்ஸ் நடந்த போட்டி எது? எதனால் அந்த வீரர்கள் ஆட இயலாமல் போனது? 

  • டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணி, விக்கெட்டுகள் மீதமிருக்கையில் அதிக ரன்கள் எடுக்கப் பட்டதாக (அ) எதிரணியை வீழ்த்த எடுக்கப் பட்ட ரன்கள் போதும் என எண்ணிக் கொண்டால் தனது இன்னிங்க்ஸ்’ஐ டிக்ளேர் செய்து எதிரணியை ஆட பணிக்கும். கேள்வி, குறைந்த எண்ணிக்கையில் தனது இன்னிங்க்ஸ்’ஐ டிக்ளேர் செய்த அணி எது?

  • ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக LBW விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் யார்?

  • டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடிய பேட்ஸ்மேன்களில், ஆஸ்திரேலியாவுக்காக அதிக சராசரியைக் கொண்டிருக்கும் பேட்ஸ்மேன் யார்?

  • ஒருநாள் போட்டிகளில் இரண்டு நாடுகளுக்காக (Representing Two Countries) செய்து கிரிக்கெட் விளையாடியவர்களில் எட் ஜாயிஸ், இயான் மார்கன் இருவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை இருவரும் இங்கிலாந்து, அயர்லாந்து போன்ற இரு நாடுகளுக்காக கிரிக்கெட் ஆடியுள்ளனர். இதை தவிர்த்து இருவருக்கும் உள்ள வேறொரு ஒற்றுமை என்ன?

  • சென்ற வருடம் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அணி வீரர்களின் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஐந்து வெளிநாட்டு வீரர்கள் விளையாட அனுமதிக்கப் பட்டது. இதே போல் IPL போட்டிகளில் ஐந்து வெளிநாட்டு வீரர்களுடன் எந்த அணியாவது விளையாடி இருக்கிறதா?

தமிழக பொறியியல் கல்லூரி அவலங்கள்
படைப்பாளிகளாக உருவாக வேண்டிய பொறியாளர்கள், வெறும் படிப்பாளிகளாக மட்டும். தமிழகத்தில் மட்டுமே இதெல்லாம் நடக்கும் என்று தோன்றுகிறது. தமிழக கல்லூரிகளில் நான்கு வருட படிப்பில், ஒருவருக்கு ஒன்றை உருவாக்கும் கிரியேட்டிவிட்டியின் வளர்ச்சி பூஜ்யமாகத் தான் இருக்கிறது. சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட பொறியியல் கல்லூரி மாணவி தைரியலட்சுமியின் மரணம் மனதை மிகவும் வருத்திவிட்டது. இதற்கெல்லாம் காரணம் கல்விமுறை. பத்திரிக்கை ஊடகங்கள், சினிமா என எல்லோரும் கல்விமுறையைச் சாடியும் இன்னும் ஒரு மாற்றமுமில்லை. பள்ளிகளில் இருக்கும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் அதே கல்விமுறை பொறியியல் கல்லூரிகளில் தொடர்வதுதான் அவலங்களின் உச்சம்.

தன் மகன் எப்படியாவது இஞ்சினியர் ஆகிவிடுவான், நான்கு வருடம் கழித்து எப்படியாவது கடனைக் கட்டி விடலாம், வீடு வாங்கி செட்டில் ஆகலாம், விஆர்எஸ் வாங்கி விடலாம் என பல்லாயிரம் கனவுகளுடன்தான் பெற்றோர் தன் பையனையோ/பெண்ணையோ பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கின்றனர். பிளேஸ்மென்ட் இருக்கா, வேலை கண்டிப்பா கிடைச்சுடுமா என்று கேட்டு விசாரித்து சேர்க்கும் பல பெற்றோர், அந்த கல்லூரிகளின் கல்வித்தரம் பற்றிக் கேட்பதேயில்லை. இவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் நான்கு வருடங்கள் காத்திருக்கும் பெற்றோர்களில் பெரும்பான்மையானோருக்கு எஞ்சியிருப்பது ஏமாற்றம் மட்டுமே.

இந்த ஏமாற்றங்களுக்குக் காரணியாக இருப்பவை:

ராகிங்: பல்கலை. யின் கடும் சட்ட திட்டங்களினால், ராகிங் என்பது குறைந்திருந்தாலும் இன்னும் பல கல்லூரிகளிலும், விடுதிகளிலும் இந்தக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இதனால் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது.

கல்விமுறை: எந்த ஒரு பாடமாக இருந்தாலும், ஒரு பொறியாளன் ஆக விரும்புபவன் அப்பாடத்தில் ஒரு கிரியேட்டராக உருவாக வேண்டும். கல்விமுறையும், கேள்வித்தாள்களும் அதே முறையில் அமைக்கப் படவேண்டும். ஆனால் இங்கு எவ்வளவு கஷ்டமான பாடமாக இருந்தாலும் நூறு ரூபாய் கொடுத்து லோக்கல் ஆதர் புத்தகங்களை வாங்கி சைடு ஹெட்டிங் எனப்படும் துணைத் தலைப்புகளை மனப்பாடம் செய்துவிட்டால் போதும். நூற்றுக்கு அறுபது உறுதி. மேலும் டிப்ளோமா வகுப்புகளில் செய்முறை பயிற்சிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்கூட பொறியியற்கல்வியில் கொடுக்கப் படுவதில்லை.

கல்லூரி சூழ்நிலை: கல்லூரிகளில் விதிக்கப் பட்டுள்ள பல கட்டுப்பாடுகளும், சூழ்நிலையும்  மாணவர்கள் அவற்றை மீற காரணமாயும், ஏதுவாயும் அமைகின்றன. மாணவர்களும், மாணவிகளும் வளாகத்தினுள் பேசக்கூடாது என்னும் விதி இன்னும் பல கல்லூரிகளில் கடைபிடிக்கப் படுகின்றது. எப்போதும் ஒரு விதியை உடைத்து ரசிப்பதில் ஆர்வம் கொண்ட விடலைப் பருவத்தினர் மத்தியில், இந்த விதி பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. செல்போனில் யாருக்கும் தெரியாமல் பேசிக்கொள்வதில் தொடங்கி, வெளியில் சந்தித்துக் கொள்வது, காதல் என்ற பெயரில் ஊர் சுற்றுவது என நீளுகிறது பட்டியல். கல்லூரியினுள் எதிர் பாலின நட்பு சாத்தியப்படாததே மேற்சொன்னவைகளுக்கு காரணமாக அமைகிறது. மேலும் மாணவ/மாணவியரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்பவையாகவும் இருக்கிறது,

விடுதிகள்: விடுதிகளில் போதுமான கட்டுப்பாடு இல்லாததும் நம் பொறியியற் கல்விமுறையில் பெரும் ஓட்டையாக இருக்கின்றது. புராஜெக்ட் செய்ய வேண்டும், ப்ராக்டிகல்ஸ் செய்ய வேண்டும் என்றெல்லாம் பொய் சொல்லி வாங்கப்படும் ஒவ்வொரு லேப்டாப்களும் பாடல்கள் கேட்கவும், சினிமா பார்க்கவுமே உபயோகப்படுகின்றன. தங்கு தடையின்றி உபயோகப் படுத்தப்படும் மொபைல் போன்கள் மாணவர்களின் தவறு செய்தலை தூண்டும் வினையூக்கியாகவே இருக்கின்றது.

புராஜெக்ட்டுகள்: கல்லூரி மூன்றாம் வருடமோ, இறுதி வருடமோ மாணவர்கள் புராஜெக்ட் செய்ய வேண்டியது பாடத்திட்டம். அந்த நான்காண்டுகளில் தான் கற்றறிந்த பொறியியலை உபயோகித்து உலகிற்கு புதிதாய் ஒன்றை கண்டறிவதே இந்த புராஜெக்ட்களின் நோக்கம். ஆனால் சாதாரண புரோக்ராமில் இருக்கும் எரர்ரைக் கூட கண்டறியத் துப்பிலாமல் வளரும் பொறியாளர்கள் ஆறாயிரத்திற்கோ, எட்டாயிரத்திற்கோ புராஜெக்ட் சென்டர்கள் எனப்படும் கடைகளில் புராஜெக்ட்களை வாங்கி கல்லூரியில் சமர்பிக்கின்றனர். வருடாவருடம் பெரும்பாலும் ஒரே புராஜெக்ட்கள்தான் பெயர்மாற்றி சப்மிட் செய்யப்படுகின்றன.

மற்ற திறன் வளர்ப்பு: தொண்ணூறு சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்கும், நூறு சதவீதம் தேர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கும் இருக்கும் எண்ணம், மாணவர்களின் திறன் வளர்ப்பில் இல்லை. மதிப்பெண்கள் ஏட்டுச் சுரைக்காய். கம்பெனிக்கு உதவாது. சென்னை, கோவை தவிர பெரும்பாலான இடங்களில் இருக்கும் கல்லூரிகளில் தடையின்றி ஆங்கிலம் பேசும் திறன் கொண்ட மாணவர்களைக் காண்பதரிது. ஆனால், கார்ப்பரேட் உலகில் இது அடிப்படைத் தேவையாய் இருக்கிறது. மேலும், ஆப்டிட்டியூட், ஆட்டிட்யூட், ப்ராப்ளம் சால்விங் ஸ்கில்ஸ் என நீளும் சாஃப்ட் ஸ்கில்ஸ் பட்டியலில் இருக்கும் ஒன்றையும் கல்லூரிகள் மாணவர்களுக்கு போதிப்பதில்லை. ஏன், அவற்றின் அடிப்படை கூட அறியா பல பொறியாளர்களை நான் கண்டிருக்கிறேன். இதனால் இவர்கள் பல லட்சங்கள் செலவு செய்து இன்ஜினியரிங் படித்தும், ஐயாயிரத்திற்கும், ஆறாயிரத்திற்கும் வேலைக்குப் போகும் அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஆசிரியர்கள்: மேற்சொன்ன திறன்கள் வாய்க்கப் பெற்ற சிலர் கம்பெனிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலைக்குச் சென்று விட, வேலை கிடைக்காத பலரின் பணத்தேவையை பூர்த்தி செய்ய ஆபத்பாந்தவனாய் வருவது கல்லூரி லெக்சரர்/உதவி பேராசிரியர் வேலை. பல பாடங்களில் அரியர் வைத்து, எப்படியோ கடைசியில் மொத்தமாக கிளியர் செய்து 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து விட்டால் போதும். ஆறு மாதமோ, ஒருவருடமா சென்னையிலோ, பெங்களூரிலோ வேலை தேடலாம். கிடைத்தால் அதிர்ஷ்டம், கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கறது ஆசிரியர் பணி. அதுவும், தான் படித்த அதே கல்லூரியில் ஓல்ட் ஸ்டூடன்ட் என்ற முன்னுரிமையுடன் வேலை எளிதில் கிடைத்து விடும். ஆப்ஜெக்ட் ஓரியண்டட் கான்செப்டில் இன்ஹெரிட்டன்ஸ்’ஐயும், பாலிமார்ஃபிசத்தையும் உதாரணத்தோடு ஒப்பித்தால் போதும், வேலை உறுதி. இப்படிப் பட்டவர்களால் எப்படி நல்ல பொறியாளர்களை உருவாக்க முடியும்? ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்களுக்கு ரோல்மாடலாய் விளங்கும் ஆசிரியர்கள் எத்துனை பேர் இருக்கிறார்கள்?

இவையெல்லாம் போக, தமிழ் மீடியம், ஆங்கில மீடியம் என மாணவர்களிடையே ஏற்படும் தாழ்வு மனப்பான்மை, ரெகுலர், லேட்ரல் என்ட்ரி, ரெகுலர், ஹாஸ்டல்லர் என குழுவாக பிரிந்து செயல்படும் தன்மை என கல்லூரிகள் கண்டுகொள்ளாத பல விஷயங்கள் நம் மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்குகின்றன.


கடலையால் நேர்ந்த விபத்துஅது ஒரு பொன் மாலைப் பொழுது. சூரியனின் பொன்னிறக் கதிர்வீச்சின் பிம்பம் தரித்து காவிரி நதியோரத்தில் பயணம் செய்வதென்பது ஒரு அலாதியான இன்பத்தை மனதினுள் ஏற்படுத்தவல்லது. அது திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலை. திருச்சி தொடங்கி பெட்டவாய்த்தலைக்கு சற்றே முன்பு வரை வலப்புறம் அசைந்தாடி நகர்ந்து கொண்டிருக்கும் காவிரி.

பொதுவாகவே காலையிலோ, மாலையிலோ மற்றெந்த வேளையிலோ இச்சாலையில் பயணம் என்பது ஒரு உற்சாகத்தை ஏற்படுத்திவிடும். ஏதோ ஒரு சோகத்துடனோ, பாதிக்கப்பட்ட உள்ளுணர்வுடனோ முகத்தில் வெயில் வாங்கி அமர்ந்திருக்கும் பயணம் முடியும் தருவாயில் கண்கள் காவிரி கண்டு பூத்து குளிர்ந்திர்க்கும். திருச்சி வந்து படித்துச் செல்லும் குழந்தைகள், பச்சை தாவணியணிந்த இளம்பெண்கள் இவர்களைக் கவர பல வித்தைகள் செய்யும் விடலைகள் என பேருந்தே அல்லோலகல்லோலப்படும்.

சில சமயங்களில் மகிழ்ச்சியான தருணங்களையும் இருளச் செய்துவிடுவாள் காவிரி. எங்கு காணினும் பள்ளமாய், மணற் கொள்ளையால் கற்பழிக்கப்பட்டு வறண்டு கிடக்கும் காவிரி கண்டு சில நேரங்களில் மனம் நொந்து விடுவதும் உண்டு. அப்போதெல்லாம் சற்றே ஆறுதல் அளிப்பது ஸ்ரீரங்கநாதரின் கோபுர தரிசனம் மட்டும் தான். வறண்ட காவிரியை காண சகிக்காமல் இடப்புறம் வந்தமர்ந்து குளித்தலை வாய்க்காலிலாவது தண்ணீர் வருமா என எதிர்பார்த்து பயணிப்பவர்கள் பலர்.

இப்படியாகத் தொடரும் பயணத்தில் அன்றைய தினம், வறண்ட காவிரி காணப் பிடிக்காமல் இடப்புறம் அமர்ந்திருந்தவனை தன் மௌன மொழியால் அழைத்து வலப்புறம் இருக்கச் செய்தாள் காவிரி. ஆங்காங்கே ஏதோ குட்டை போல தேங்கியிருந்த நீரில் குற்றுயிரும், குலையுயிருமாய் நான் காண்பதை அவள் ரசிப்பதாய்த்தான் தோன்றியதெனக்கு. எப்போதும் அனிச்சையாய் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் கைகள் அன்று சோர்ந்து போய்க் கிடந்தன ரங்கநாதரின் கோபுரம் கண்டு, காரணம் காவிரி.

பள்ளி விடுமுறையாய் இருக்கக்கூடும். தாங்கியிருந்த ஒரு கொத்து மலர்களும் வாடிவிட்ட பிறகான செடியைப் போல ஏனோ தானோ வென்றிருந்தது பேருந்து. குத்துப் பாடல்களோ, காதற்பாடல்களோ ஒலிபரப்பப் பட்டிருக்கவில்லை. ஆங்காங்கே ஒருவர் இருவர் என பத்திருபது பேர்தான் மொத்தமே. செழிப்பான காவிரியை மனதில் அசை போட்டபடி சிமிட்டாத கண்களுடன் நினைவுகளைத் தொலைத்து அமர்ந்திருந்தேன். பெட்டவாய்த்தலை கடந்த பின்னர் திரும்பிய நினைவுகளில் மீண்டுமொருமுறை பார்த்தேன். பேருந்தினுள் புதிதாய் நாலைந்து பேர். சிலர் இடம் மாறி அமர்ந்திருந்தனர். எனக்கு முந்தைய இருக்கையில் விடலையைத் தாண்டிய ஒருவனும் ஒருத்தியும்.

“காலங்களில் அவள் வசந்தம்....” ஏனோ அன்று பழைய பாடல்களை ஓட விட்டார் நடத்துனர். மீண்டும் எங்கோ ஓடிச் சென்ற குதிரையை பிடித்துக் கட்டி, சிறு புன்னகையை உதிர்த்து அமர்ந்திருந்தேன். அந்த ஜோடியின் செய்கைகள் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருந்தது. மேலும் பத்திருபது நிமிடங்கள் கடந்திருக்கும், பத்து ரூபாய்க்கு விற்ற அவித்த கடலைப் பொட்டலத்தை பிரித்து கடலை போட்டுக் கொண்டே கடலை போட்டுக் கொண்டு வந்தது அந்த ஜோடி.

இருவர் ஒருவராக பயணிக்கும் உற்சாகத்திலும், மென் தீண்டல்களினால் ஏற்பட்ட சந்தோஷத்திலும் தங்களை மறந்து அமர்ந்திருந்த அந்த ஜோடி போட்ட(சாப்பிட்ட) கடலையின் தோலை ஜன்னல் வழி வெளியே வீசிக் கொண்டே வந்தனர். ஏதோ ஒரு அவசரத்தில் தலைக் கவசம் அணியாமல் எங்கோ விரைந்து கொண்டிருக்கும் இரு சக்கர பயணி ஒருவர் முகத்தில் இந்த கடலைத் தோல் பட்டுத் தெறிக்க, அவ்வளவுதான்... வண்டியை சீராக செலுத்த முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார் அந்த இருசக்கர வாகன ஒட்டி. நல்லவேளையாக இருபக்கமும் மணல் இருந்ததால் வெறும் சிராய்ப்புடன் போனது. இல்லையேல் பெரும் விபத்தாகக் கூட மாறியிருக்கலாம். இதை கவனித்துச் சொல்ல, பேருந்து நிறுத்தப் பட்டு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. எல்லோரும் அந்த ஜோடிக்கு அறிவுரைக்க, பயணம் மீண்டு(ம்) தொடர்ந்தது.

டிஸ்கி: தமிழ் சூழலில் “கடலை” என்ற பதம் எப்படி மாறியிருக்கிறது என்று உணர்த்தவே யாம் இந்த திருவிளையாடல் புரிந்தோம்! கடலை என்றால் கடலைக்காய்/வேர்க்கடலை என்றே பொருள்பட வேண்டும்!