கடலையால் நேர்ந்த விபத்துஅது ஒரு பொன் மாலைப் பொழுது. சூரியனின் பொன்னிறக் கதிர்வீச்சின் பிம்பம் தரித்து காவிரி நதியோரத்தில் பயணம் செய்வதென்பது ஒரு அலாதியான இன்பத்தை மனதினுள் ஏற்படுத்தவல்லது. அது திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலை. திருச்சி தொடங்கி பெட்டவாய்த்தலைக்கு சற்றே முன்பு வரை வலப்புறம் அசைந்தாடி நகர்ந்து கொண்டிருக்கும் காவிரி.

பொதுவாகவே காலையிலோ, மாலையிலோ மற்றெந்த வேளையிலோ இச்சாலையில் பயணம் என்பது ஒரு உற்சாகத்தை ஏற்படுத்திவிடும். ஏதோ ஒரு சோகத்துடனோ, பாதிக்கப்பட்ட உள்ளுணர்வுடனோ முகத்தில் வெயில் வாங்கி அமர்ந்திருக்கும் பயணம் முடியும் தருவாயில் கண்கள் காவிரி கண்டு பூத்து குளிர்ந்திர்க்கும். திருச்சி வந்து படித்துச் செல்லும் குழந்தைகள், பச்சை தாவணியணிந்த இளம்பெண்கள் இவர்களைக் கவர பல வித்தைகள் செய்யும் விடலைகள் என பேருந்தே அல்லோலகல்லோலப்படும்.

சில சமயங்களில் மகிழ்ச்சியான தருணங்களையும் இருளச் செய்துவிடுவாள் காவிரி. எங்கு காணினும் பள்ளமாய், மணற் கொள்ளையால் கற்பழிக்கப்பட்டு வறண்டு கிடக்கும் காவிரி கண்டு சில நேரங்களில் மனம் நொந்து விடுவதும் உண்டு. அப்போதெல்லாம் சற்றே ஆறுதல் அளிப்பது ஸ்ரீரங்கநாதரின் கோபுர தரிசனம் மட்டும் தான். வறண்ட காவிரியை காண சகிக்காமல் இடப்புறம் வந்தமர்ந்து குளித்தலை வாய்க்காலிலாவது தண்ணீர் வருமா என எதிர்பார்த்து பயணிப்பவர்கள் பலர்.

இப்படியாகத் தொடரும் பயணத்தில் அன்றைய தினம், வறண்ட காவிரி காணப் பிடிக்காமல் இடப்புறம் அமர்ந்திருந்தவனை தன் மௌன மொழியால் அழைத்து வலப்புறம் இருக்கச் செய்தாள் காவிரி. ஆங்காங்கே ஏதோ குட்டை போல தேங்கியிருந்த நீரில் குற்றுயிரும், குலையுயிருமாய் நான் காண்பதை அவள் ரசிப்பதாய்த்தான் தோன்றியதெனக்கு. எப்போதும் அனிச்சையாய் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் கைகள் அன்று சோர்ந்து போய்க் கிடந்தன ரங்கநாதரின் கோபுரம் கண்டு, காரணம் காவிரி.

பள்ளி விடுமுறையாய் இருக்கக்கூடும். தாங்கியிருந்த ஒரு கொத்து மலர்களும் வாடிவிட்ட பிறகான செடியைப் போல ஏனோ தானோ வென்றிருந்தது பேருந்து. குத்துப் பாடல்களோ, காதற்பாடல்களோ ஒலிபரப்பப் பட்டிருக்கவில்லை. ஆங்காங்கே ஒருவர் இருவர் என பத்திருபது பேர்தான் மொத்தமே. செழிப்பான காவிரியை மனதில் அசை போட்டபடி சிமிட்டாத கண்களுடன் நினைவுகளைத் தொலைத்து அமர்ந்திருந்தேன். பெட்டவாய்த்தலை கடந்த பின்னர் திரும்பிய நினைவுகளில் மீண்டுமொருமுறை பார்த்தேன். பேருந்தினுள் புதிதாய் நாலைந்து பேர். சிலர் இடம் மாறி அமர்ந்திருந்தனர். எனக்கு முந்தைய இருக்கையில் விடலையைத் தாண்டிய ஒருவனும் ஒருத்தியும்.

“காலங்களில் அவள் வசந்தம்....” ஏனோ அன்று பழைய பாடல்களை ஓட விட்டார் நடத்துனர். மீண்டும் எங்கோ ஓடிச் சென்ற குதிரையை பிடித்துக் கட்டி, சிறு புன்னகையை உதிர்த்து அமர்ந்திருந்தேன். அந்த ஜோடியின் செய்கைகள் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருந்தது. மேலும் பத்திருபது நிமிடங்கள் கடந்திருக்கும், பத்து ரூபாய்க்கு விற்ற அவித்த கடலைப் பொட்டலத்தை பிரித்து கடலை போட்டுக் கொண்டே கடலை போட்டுக் கொண்டு வந்தது அந்த ஜோடி.

இருவர் ஒருவராக பயணிக்கும் உற்சாகத்திலும், மென் தீண்டல்களினால் ஏற்பட்ட சந்தோஷத்திலும் தங்களை மறந்து அமர்ந்திருந்த அந்த ஜோடி போட்ட(சாப்பிட்ட) கடலையின் தோலை ஜன்னல் வழி வெளியே வீசிக் கொண்டே வந்தனர். ஏதோ ஒரு அவசரத்தில் தலைக் கவசம் அணியாமல் எங்கோ விரைந்து கொண்டிருக்கும் இரு சக்கர பயணி ஒருவர் முகத்தில் இந்த கடலைத் தோல் பட்டுத் தெறிக்க, அவ்வளவுதான்... வண்டியை சீராக செலுத்த முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார் அந்த இருசக்கர வாகன ஒட்டி. நல்லவேளையாக இருபக்கமும் மணல் இருந்ததால் வெறும் சிராய்ப்புடன் போனது. இல்லையேல் பெரும் விபத்தாகக் கூட மாறியிருக்கலாம். இதை கவனித்துச் சொல்ல, பேருந்து நிறுத்தப் பட்டு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. எல்லோரும் அந்த ஜோடிக்கு அறிவுரைக்க, பயணம் மீண்டு(ம்) தொடர்ந்தது.

டிஸ்கி: தமிழ் சூழலில் “கடலை” என்ற பதம் எப்படி மாறியிருக்கிறது என்று உணர்த்தவே யாம் இந்த திருவிளையாடல் புரிந்தோம்! கடலை என்றால் கடலைக்காய்/வேர்க்கடலை என்றே பொருள்பட வேண்டும்!
2 comments:

கோவை நேரம் said...

கடலைக்கு ஒரு விளக்கம்...ரொம்ப முக்கியம்...

ஆனந்த் ராஜ்.P said...

நல்லா கடலைபோட்டதுமில்லாம.., இதுக்கு திருவிளையாடல்ன்னு விளக்கவுரை...... அடங்கொன்னியா...!!