தமிழக பொறியியல் கல்லூரி அவலங்கள்
படைப்பாளிகளாக உருவாக வேண்டிய பொறியாளர்கள், வெறும் படிப்பாளிகளாக மட்டும். தமிழகத்தில் மட்டுமே இதெல்லாம் நடக்கும் என்று தோன்றுகிறது. தமிழக கல்லூரிகளில் நான்கு வருட படிப்பில், ஒருவருக்கு ஒன்றை உருவாக்கும் கிரியேட்டிவிட்டியின் வளர்ச்சி பூஜ்யமாகத் தான் இருக்கிறது. சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட பொறியியல் கல்லூரி மாணவி தைரியலட்சுமியின் மரணம் மனதை மிகவும் வருத்திவிட்டது. இதற்கெல்லாம் காரணம் கல்விமுறை. பத்திரிக்கை ஊடகங்கள், சினிமா என எல்லோரும் கல்விமுறையைச் சாடியும் இன்னும் ஒரு மாற்றமுமில்லை. பள்ளிகளில் இருக்கும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் அதே கல்விமுறை பொறியியல் கல்லூரிகளில் தொடர்வதுதான் அவலங்களின் உச்சம்.

தன் மகன் எப்படியாவது இஞ்சினியர் ஆகிவிடுவான், நான்கு வருடம் கழித்து எப்படியாவது கடனைக் கட்டி விடலாம், வீடு வாங்கி செட்டில் ஆகலாம், விஆர்எஸ் வாங்கி விடலாம் என பல்லாயிரம் கனவுகளுடன்தான் பெற்றோர் தன் பையனையோ/பெண்ணையோ பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கின்றனர். பிளேஸ்மென்ட் இருக்கா, வேலை கண்டிப்பா கிடைச்சுடுமா என்று கேட்டு விசாரித்து சேர்க்கும் பல பெற்றோர், அந்த கல்லூரிகளின் கல்வித்தரம் பற்றிக் கேட்பதேயில்லை. இவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் நான்கு வருடங்கள் காத்திருக்கும் பெற்றோர்களில் பெரும்பான்மையானோருக்கு எஞ்சியிருப்பது ஏமாற்றம் மட்டுமே.

இந்த ஏமாற்றங்களுக்குக் காரணியாக இருப்பவை:

ராகிங்: பல்கலை. யின் கடும் சட்ட திட்டங்களினால், ராகிங் என்பது குறைந்திருந்தாலும் இன்னும் பல கல்லூரிகளிலும், விடுதிகளிலும் இந்தக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இதனால் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது.

கல்விமுறை: எந்த ஒரு பாடமாக இருந்தாலும், ஒரு பொறியாளன் ஆக விரும்புபவன் அப்பாடத்தில் ஒரு கிரியேட்டராக உருவாக வேண்டும். கல்விமுறையும், கேள்வித்தாள்களும் அதே முறையில் அமைக்கப் படவேண்டும். ஆனால் இங்கு எவ்வளவு கஷ்டமான பாடமாக இருந்தாலும் நூறு ரூபாய் கொடுத்து லோக்கல் ஆதர் புத்தகங்களை வாங்கி சைடு ஹெட்டிங் எனப்படும் துணைத் தலைப்புகளை மனப்பாடம் செய்துவிட்டால் போதும். நூற்றுக்கு அறுபது உறுதி. மேலும் டிப்ளோமா வகுப்புகளில் செய்முறை பயிற்சிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்கூட பொறியியற்கல்வியில் கொடுக்கப் படுவதில்லை.

கல்லூரி சூழ்நிலை: கல்லூரிகளில் விதிக்கப் பட்டுள்ள பல கட்டுப்பாடுகளும், சூழ்நிலையும்  மாணவர்கள் அவற்றை மீற காரணமாயும், ஏதுவாயும் அமைகின்றன. மாணவர்களும், மாணவிகளும் வளாகத்தினுள் பேசக்கூடாது என்னும் விதி இன்னும் பல கல்லூரிகளில் கடைபிடிக்கப் படுகின்றது. எப்போதும் ஒரு விதியை உடைத்து ரசிப்பதில் ஆர்வம் கொண்ட விடலைப் பருவத்தினர் மத்தியில், இந்த விதி பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. செல்போனில் யாருக்கும் தெரியாமல் பேசிக்கொள்வதில் தொடங்கி, வெளியில் சந்தித்துக் கொள்வது, காதல் என்ற பெயரில் ஊர் சுற்றுவது என நீளுகிறது பட்டியல். கல்லூரியினுள் எதிர் பாலின நட்பு சாத்தியப்படாததே மேற்சொன்னவைகளுக்கு காரணமாக அமைகிறது. மேலும் மாணவ/மாணவியரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்பவையாகவும் இருக்கிறது,

விடுதிகள்: விடுதிகளில் போதுமான கட்டுப்பாடு இல்லாததும் நம் பொறியியற் கல்விமுறையில் பெரும் ஓட்டையாக இருக்கின்றது. புராஜெக்ட் செய்ய வேண்டும், ப்ராக்டிகல்ஸ் செய்ய வேண்டும் என்றெல்லாம் பொய் சொல்லி வாங்கப்படும் ஒவ்வொரு லேப்டாப்களும் பாடல்கள் கேட்கவும், சினிமா பார்க்கவுமே உபயோகப்படுகின்றன. தங்கு தடையின்றி உபயோகப் படுத்தப்படும் மொபைல் போன்கள் மாணவர்களின் தவறு செய்தலை தூண்டும் வினையூக்கியாகவே இருக்கின்றது.

புராஜெக்ட்டுகள்: கல்லூரி மூன்றாம் வருடமோ, இறுதி வருடமோ மாணவர்கள் புராஜெக்ட் செய்ய வேண்டியது பாடத்திட்டம். அந்த நான்காண்டுகளில் தான் கற்றறிந்த பொறியியலை உபயோகித்து உலகிற்கு புதிதாய் ஒன்றை கண்டறிவதே இந்த புராஜெக்ட்களின் நோக்கம். ஆனால் சாதாரண புரோக்ராமில் இருக்கும் எரர்ரைக் கூட கண்டறியத் துப்பிலாமல் வளரும் பொறியாளர்கள் ஆறாயிரத்திற்கோ, எட்டாயிரத்திற்கோ புராஜெக்ட் சென்டர்கள் எனப்படும் கடைகளில் புராஜெக்ட்களை வாங்கி கல்லூரியில் சமர்பிக்கின்றனர். வருடாவருடம் பெரும்பாலும் ஒரே புராஜெக்ட்கள்தான் பெயர்மாற்றி சப்மிட் செய்யப்படுகின்றன.

மற்ற திறன் வளர்ப்பு: தொண்ணூறு சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்கும், நூறு சதவீதம் தேர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கும் இருக்கும் எண்ணம், மாணவர்களின் திறன் வளர்ப்பில் இல்லை. மதிப்பெண்கள் ஏட்டுச் சுரைக்காய். கம்பெனிக்கு உதவாது. சென்னை, கோவை தவிர பெரும்பாலான இடங்களில் இருக்கும் கல்லூரிகளில் தடையின்றி ஆங்கிலம் பேசும் திறன் கொண்ட மாணவர்களைக் காண்பதரிது. ஆனால், கார்ப்பரேட் உலகில் இது அடிப்படைத் தேவையாய் இருக்கிறது. மேலும், ஆப்டிட்டியூட், ஆட்டிட்யூட், ப்ராப்ளம் சால்விங் ஸ்கில்ஸ் என நீளும் சாஃப்ட் ஸ்கில்ஸ் பட்டியலில் இருக்கும் ஒன்றையும் கல்லூரிகள் மாணவர்களுக்கு போதிப்பதில்லை. ஏன், அவற்றின் அடிப்படை கூட அறியா பல பொறியாளர்களை நான் கண்டிருக்கிறேன். இதனால் இவர்கள் பல லட்சங்கள் செலவு செய்து இன்ஜினியரிங் படித்தும், ஐயாயிரத்திற்கும், ஆறாயிரத்திற்கும் வேலைக்குப் போகும் அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஆசிரியர்கள்: மேற்சொன்ன திறன்கள் வாய்க்கப் பெற்ற சிலர் கம்பெனிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலைக்குச் சென்று விட, வேலை கிடைக்காத பலரின் பணத்தேவையை பூர்த்தி செய்ய ஆபத்பாந்தவனாய் வருவது கல்லூரி லெக்சரர்/உதவி பேராசிரியர் வேலை. பல பாடங்களில் அரியர் வைத்து, எப்படியோ கடைசியில் மொத்தமாக கிளியர் செய்து 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து விட்டால் போதும். ஆறு மாதமோ, ஒருவருடமா சென்னையிலோ, பெங்களூரிலோ வேலை தேடலாம். கிடைத்தால் அதிர்ஷ்டம், கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கறது ஆசிரியர் பணி. அதுவும், தான் படித்த அதே கல்லூரியில் ஓல்ட் ஸ்டூடன்ட் என்ற முன்னுரிமையுடன் வேலை எளிதில் கிடைத்து விடும். ஆப்ஜெக்ட் ஓரியண்டட் கான்செப்டில் இன்ஹெரிட்டன்ஸ்’ஐயும், பாலிமார்ஃபிசத்தையும் உதாரணத்தோடு ஒப்பித்தால் போதும், வேலை உறுதி. இப்படிப் பட்டவர்களால் எப்படி நல்ல பொறியாளர்களை உருவாக்க முடியும்? ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்களுக்கு ரோல்மாடலாய் விளங்கும் ஆசிரியர்கள் எத்துனை பேர் இருக்கிறார்கள்?

இவையெல்லாம் போக, தமிழ் மீடியம், ஆங்கில மீடியம் என மாணவர்களிடையே ஏற்படும் தாழ்வு மனப்பான்மை, ரெகுலர், லேட்ரல் என்ட்ரி, ரெகுலர், ஹாஸ்டல்லர் என குழுவாக பிரிந்து செயல்படும் தன்மை என கல்லூரிகள் கண்டுகொள்ளாத பல விஷயங்கள் நம் மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்குகின்றன.


12 comments:

வேதாளம் அர்ஜுன் said...

டிஸ்கி:ஒரு விழிப்புணர்ச்சிக்காக எழுதிய கட்டுரை. யாரையும்/எந்த கல்லூரியையும் நேரிடையாக குறிப்பிடவில்லை.

Gunasekaran said...

Boss.. Its blaming almost every college in Tamilnadu :)

Gunasekaran said...

Boss.. Its blaming almost every college in Tamilnadu :)

amas said...

நல்ல தமிழில் எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துகள்! தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான பொறியியற் கல்லூரியின் நிலைமையை தான் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.
Supply and demand will slowly bring about a change. Demand for quality engineers will create an awareness in mediocre colleges to increase their standard. The government also has to take an initiative to weed out the non performing colleges. Those who really suffer are the students from the rural area.
amas32

Pulavar Tharumi said...

நம் கல்வியின் நிலைமையை நேர்த்தியாக தொகுத்து அளித்திருக்கிறீர்கள். நீங்கள் கூறியுள்ள விசயங்கள் பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டுமன்றி, நமது ஒட்டு மொத்த கல்வி முறைக்கே பொருந்தும். ஆனால் இந்த விசயங்களை அதிகாரவர்க்கமோ, பெற்றோர்களோ, மாணவர்களோ சிறிது கூட உணரவில்லை.

tharan said...

நல்ல பதிவு. நமது கல்வி முறையின் அவலத்தை நன்றாக தொகுத்துள்ளீர்கள்.
மனப்பாடம் செஞ்சு மார்க் வாங்கும் கல்வி முறைய மாத்தியாகனும். நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
திறமையில்லாதவனுக்கு மென்பொருள் துறையிலோ, அவனது பாடப்பிரிவு சார்ந்த துறையிலோ வேலை கிடைப்பதில்லை, கல்லூரியில் விரிவுரையாளராக சேர்கின்றான். இதனால் அடுத்த தலைமுறை மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

Satish said...

Excellent! its true the same thing is happening in the colleges. Hats of to you.

Satish said...

Arjun, Very Nice posting. Samething is happening in the colleges. Excellent.

sant said...

எவ்வளவோ கனவுகளோடு நான் விரும்பி ஆசிரியப் பணியை தேர்ந்தெடுத்தேன். நீங்கள் சொல்பவை எல்லாம் உண்மைதான். இவையெல்லாவற்றையும் விட மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மிதப்பு எண்ணம் மிக முக்கிய காரணம். எதுக்கு ரொம்ப படிக்கணும்? எப்பிடியும் ஒரு வேல வாங்கிறலாம். ஸ்டுடண்ட் லைஃப என்ஜாய் பண்ணலாம். குடிக்கணும், ஊர் சுத்தணும், பொண்ணுங்கள ஏமாத்தணும். இது ஒரு சமூக நோயா இருக்கு. பெற்றோர், ஆசிரியர், கல்லூரி நிர்வாகம், கல்வி முறை, சமூகம் முக்கியமா மாணவ/மாணவிகள் எல்லாரும் மாறணும்

நா.கிருஷ்ண கோபிகா said...

நேர்மையான அலசல்..

// கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கறது ஆசிரியர் பணி. அதுவும், தான் படித்த அதே கல்லூரியில் ஓல்ட் ஸ்டூடன்ட் என்ற முன்னுரிமையுடன் வேலை எளிதில் கிடைத்து விடும் //.

சிரித்து மாள வில்லை.. நீங்கள் சொல்லியிருப்பது நிஜம் என்பதையும் தாண்டி!!

Arun said...
This comment has been removed by the author.
Arun said...

Purely Based on my exp.(+2->tier 2 engg college->chennai/Blore-search->JOB) this has just covered 50-60% of the real situation,we can go in-depth of each topic...

My thought is most of us(atlest me) joins Engg., only to get good job and settle and not to create/invent any new thing..

Very good Attempt and Initiative... !