கானல் நீர்க் குமிழிகள்

தினம் மாலை
முகத்தில் மை பூசி,
வளைந்து நீண்ட
நொச்சிக் குச்சியொன்றை ஏந்தி
ஓடித் துரத்தி
எதிரிகளை சுட்டு வீழ்த்தும்
களிப்பினூடே சொல்லிக் கொள்வேன்
எனக்குள் நானே,
ராணுவ வீரனாவேனென்று!

பின்னர்,
படம் பார்த்தும்
கதை கேட்டும்
வீரத் தாலாட்டும்
சிறு வயது விளையாட்டுமாய்
கனவென்று தெரியாமலே
கனவொன்றை அடைகாத்தேன்.

திறன் வளர்த்து
உடல் வியர்த்து
சிந்தை நேராக்கி
பார்வை கூராக்கி
எல்லை சென்று போராடும்
லட்சியமொன்றை
நெஞ்சுரத்தில் விதைத்திட்டேன்.

விளையாட்டும்
வேடிக்கையுமாய்
பள்ளிப் பருவமதோ கடந்துவிட,

தமிழ்நாட்டில் பிறந்ததனால்
பொறியாளன் அல்லது
மருத்துவனாக
எந்தன் கனவோ கருக்கலைப்பு
செய்யப்பட,

கைப்பட்ட
கானல் நீர்க் குமிழிகளாய்
சிதறித் தொலைந்திருந்தன
எந்தன் கனவுக் கோட்டைகள்!

கனவுக் கலைப்பு
செய்யப்பட்ட பின்னர் நானோர்
சிந்தனை மலடனாகிப்
போனேன்!
இருந்தாலும்
நிச்சயம் ஆக்கப் படுவேன்
ஒரு தொழில் தேவனாய்.

நானிருப்பது இந்தியா,
இங்கு திறன் பேசா!
ஏட்டுச்சுரைகாயாம்
மதிப்பெண் பேசும்
வாரிசோ சிபாரிசோ
அது பேசும்
சாதிக்கச் செய்ய
சாதி பேசும்
இஃதொன்றுமில்லாவிடினும்
சில்லறை பேசுமிங்கே
நான் கல்லறை போகும் வரை!

டிஸ்கி1: நண்பர் ஒருவர் கேட்டுக் கொள்ள எழுதப் பட்டது.
டிஸ்கி2: கருப்பையா மன்னிப்பாராக!


2 comments:

நா.கிருஷ்ண கோபிகா said...

கனவுகள் பின்னர் ஒடுவது அத்தனை எளிதாய் இல்லை தான் இங்கு.. போகட்டும் என விடவும் முடியவில்லை.. குமிழ்களை நல்ல காலம் வரும் வரை அடை காக்கவே ஒட்டு மொத்த பிராணனும் போய் விடுகிறது.. முதல் பத்தியை காட்சியில் கண்டு கொண்டிருக்கிறேன்.. இனிமை!!

Cpede News said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215