எறும்பு பொய் சொல்லிடுச்சாம்!ம்பி, எதுக்கு இங்க நிக்குறீங்க? யார பாக்கணும்?” பெரிதும் எதிர்பார்த்த கேள்வி காதில் கேட்க, திரும்பினேன்.

கையில் ஒரு டப்பாவுடன் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த பின் நான் முதலில் எதிர்கொண்டது ஆங்கில பேப்பரை நுனி மூக்கு கண்ணாடி வழியே ஸ்கேன் செய்து கொண்டிருந்த ஒருவரைத்தான். நல்லா ஆஜானுபாகுவான ஒரு உருவம். அவரை நெருங்குமுன்பே, மூக்குக் கண்ணாடியின் மேல்வழியாக கண்கள் மட்டும் அடுத்த டேபிளுக்கு என்னைப் போகச்சொல்லி ரீடைரக்ட் செய்தது, மிரட்டலாக.

காலண்டர் பேப்பரை நன்கு சுருட்டி, புறா இறகாய் எண்ணி காது குடைந்து கொண்டு மெய் மறந்து அமர்ந்திருந்த அடுத்தவர் ஒரு உருவம் தன்னருகே நிற்பதை உணரவே இல்லை. சுற்றிப் பார்த்தேன். “நேத்து அந்த சீரியல் பாத்தியோ? எங்காத்துல பவர் கட்டுடி” என அலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்தார் மற்றொரு பெண். என்ன செய்வதென்று தெறியாமல் நின்று கொண்டிருக்கையில் பின்னாலிருந்து வந்தது அந்த கேள்வி.

“பிராட்பேன்ட் கனெக்ஷன் அப்ளை பண்ணியிருக்கேன் சார். மோடம் கான்ஃபிகர் பண்ணனும்”

“தம்பி, மொதல்ல பொண்ணு பாக்கணும், அப்புறம் சம்பந்தம் பேசணும், தேதி குறிக்கனும், கல்யாணம் பண்ணனும் அப்புறம்தான் குழந்தை கிடைக்கும்” அறிவுஜீவித்தனமான ஒரு பார்வையை என்மேல் செலுத்தி அவரே சிரித்துக் கொண்டார்.

“புரியல சார்”

“இப்ப தானே அப்ளை பண்ணியிருக்கீங்க, நம்பர் வரணும், சர்வர்ல உங்க நம்பர சேர்க்கணும், யூசர்நேம் வரணும்... இப்படி நிறைய இருக்கு. நீங்க என்ன பண்றிங்க, போயிட்டு அடுத்த வாரம் வாங்க”

“கல்யாணம் ஆயிடுச்சு சார். பொண்டாட்டி முழுகாம இருக்கா” இப்படியெல்லாம் பேசுவது முதல் முறை. சற்றே கூச்சம் இருந்தாலும் சிரிக்காமல் சொல்லிவிட்டேன்.

“என்ன தம்பி சொல்றிங்க?”

“இல்ல சார், அப்ளை பண்ணி யூசர்நேம் எல்லாம் வந்தாச்சு. கான்ஃபிகர் மட்டும் தான் பண்ணனும்” சிரித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அவர் சிரித்து விட்டார். வாழ்க்கையில் எத்தனையோ பல்புகளை வாங்கியிருப்பார். இதெல்லாம் சாதாரணம்.

கம்ப்யூட்டரில் சாலிடேர்ஐ ஓபன் செய்தவர் சொன்னார், “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க டெக்னீஷியன் வந்துடுவார்”.

சுமார் இருபது நிமிடங்கள் ட்விட்டரை நோண்டிக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன ஆள் வந்து சேர்ந்தார்.

“சார் மோடம் கான்ஃபிகர் பண்ணனும்”

“இப்ப தான் சார் வரேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன்”

“இல்ல சார், ஆபீஸ்ல ஹாஃப் டே தான் பர்மிஷன் போட்டிருக்கேன்”

முறைத்தவாறே வாங்கி கனெக்ட் செய்தார்.

192.168.2.1 ஒருவிரலில் தடவித் தட்டினார். “Internet Explorer cannot display the webpage”

மீண்டும் ஒருமுறை. மீண்டும் மீண்டுமென இருபது முறை.

“சார்.. இந்த அட்ரஸ் ட்ரை பண்ணி பாருங்களேன்? 172.16.1.1 ஐ கொடுத்தேன்”

“சார், தெரியாம சொல்லாதிங்க சார். இங்க பாருங்க பெல்கின்க்கு இதான். ரெண்டு வருஷமா வேலை செய்றேன் எனக்கே சொல்லிக் கொடுக்காதீங்க” மீண்டும் அதே 192.168.2.1. மீண்டும் அதே எரர் மெசேஜ்.

“சார், நான் மேனுவல் கான்ஃபிகர் பண்ணியிருக்கேன். அந்த அட்ரஸ் இதான்...”

“சார், கொஞ்ச நேரம் வெளில உக்காருங்க கூப்பிடுறேன்” குரல் கொஞ்சம் கடுத்திருந்தது. பின்னாலிருந்த டேபிளில் தொலைபேசி அடித்துக் கொண்டே இருக்க, இவர் ரிசீவரை எடுத்து கீழே வைத்து விட்டு வரும் முன் நான் “172.16.1.1” ஐ அடித்திருந்தேன். செட்டிங்க்ஸ் பேஜ் வந்து நின்றது.

“சார், உங்களை யார் இதல்லாம் பண்ண சொன்னது?”

“சாரி சார். லேட்டாச்சு அதான்”

இருபது நிமிடங்கள் ஏதேதோ செய்து பார்த்தார். அவர் எதிர்பார்த்த செட்டிங் வரவே இல்லை.

“இந்த மோடம்ல ஏதோ பிரச்சினை இருக்கு...”

“சார், ஒரு வருஷமா இதைத் தான் நான் யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்”

“சும்மா சொல்லாதீங்க, அதான் பிரச்சினை இருக்குன்னு சொல்றேன்ல”

“இல்ல சார். போன மாசம் வரை கூட நான் யூஸ் பண்ணேன்”

“இந்தக் காலத்து பசங்களே இப்படித்தான். சொன்னா புரியாது” முறைத்தார். எவ்வளவு அப்பாவித்தனமாக முகத்தை வைக்க முடியுமோ அப்படி வைத்து பவ்யமாக நின்றேன்.

நீண்ட நேரமாய் அங்கு நின்று கொண்டிருக்கும் என்னை கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி எங்களருகே வந்தார்.

“என்ன பிரச்சினை?” இது அவர்.

“மோடம் கான்ஃபிகர் பண்ணணுமாம். மோடத்துல எதோ பிரச்சினை கான்ஃபிகர் ஆக மாட்டேங்குது” இது டெக்னீஷியன்.

சிஸ்டத்தையும் மோடத்தையும் பார்த்த அந்தப் பெண்,
“சார், இது ரௌட்டர். மோடம் இல்ல” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார்.

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில், ஹாசினி ஒரு ஜோக் சொல்லுவாரே,
“மூணு எறும்பு வரிசையா போயிட்டு இருந்துச்சாம், முதல் எறும்பு சொல்லுச்சாம் என் பின்னாடி ரெண்டு எறும்பு இருக்குன்னு, ரெண்டாவது எறும்பு சொல்லுச்சாம் என் பின்னாடி ஒரு எறும்பு இருக்குன்னு, மூணாஆஆவது எறும்பு சொல்லுச்சாம் என் பின்னாடி ரெண்டு எறும்பு இருக்குன்னு. எப்படி?” இதை சொல்லி முடித்தவுடன் “மூணாவது எறும்பு பொய் சொல்லிடுச்சாம்” என்று சொல்லி சிரிக்க, அதை விஜயகுமாரிடம் பிரகாஷ்ராஜ் சொல்லும்போது ஒரு முக பாவம் இருக்குமே...

“ஆமா சம்மந்தி... அந்த எறும்பில்ல.. அது.. உ.. பொய் சொல்லிடுச்சாம், பொய் சொல்லிடுச்சாம்” என்று முகத்தை கடுப்பாக வைத்துக் கொண்டு சொல்லுவாரே அதே போல் சொன்னார்...

“ஆமா சார்.. இது ரௌட்டர்.. மோடம் இல்ல”

பின்குறிப்பு: அதே பெல்கின்’னைத்தான் ஒருவருடமாக உபயோகித்து வருகிறேன். அந்த மோடம்+ரௌட்டரை அவருக்கு கான்ஃபிகர் செய்யத் தெரியாததால் புது BSNL மோடம் வாங்கித் தொலைக்க வேண்டியதாயிற்று.

4 comments:

கார்க்கி said...

:))))

ரிஷி said...

good one. Do u need any help in configuring let me know.

amas said...

இது நிச்சயம் உண்மை கதை! ;-)
amas32

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

நீங்க பி.எஸ்.என்.எல். கனெக்ஷன் வாங்கப்போறதா ட்வீட்டினப்பவே நெனச்சேன். செம பல்பு :-)))