TRAFFIC!

ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்வும் அன்றன்று அவனறிந்தோ அறியாமலோ நடக்கும் சிலபல விபத்துகளின் கோர்வைதான். அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் கல்லூரி செல்லுகையிலோ, அலுவலகம் விரைகையிலோ சாலையோரம் சிந்திச் சிதறியிருக்கும் கண்ணாடித் துகள்களோ, கடுமையான ஹாரன்களின் சப்தங்களூடே சாளரம் எட்டிப் பார்க்கையில் சாலையோரக் கூட்டமோ, உச்சஸ்தாயியில் அலறிக்கொண்டே கடந்து போகும் ஆம்புலன்ஸோ வாழ்க்கையின் மீதான பயத்தை நிச்சயம் அதிகப்படுத்திச் செல்லுகின்றன. பலருக்கோ இவையாவும் பழகிப்புளித்த விஷயமாகியும் போய் விட்டது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், சாலையிலோ அல்லது வாழ்க்கையிலோ ஒரு விபத்தென்பது ஒருவர் இருவரை மட்டும் பாதிக்கும் விஷயமாக மட்டும் இருந்து விடுவதில்லை.


தன் மனைவி மீதோ, ஒற்றை மகள் மீதோ அன்பும் பாசமும் இல்லாமல், அவர்களுக்கென நேரம் ஒதுக்காமல், பெயரும் புகழும் தன்னை எப்போதும் சூழ்ந்திருக்க வேண்டும் என்று நடிப்பே பிரதானமாகி வாழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர் சித்தார்த். தந்தையின் அன்பிற்காக ஏங்கும் இருதயம் பாதிக்கப்பட்ட அவரது மகள்.

தன் தந்தை பிரபல மருத்துவராய் இருந்தும், அவரின் உதவியின்றி தன் சொந்த முயற்சியால் ஏதேனும் ஒரு வேலை தேடிக் கொள்ளவேண்டுமென்று ஒரு டிவி சேனலில் ஒரு ஜர்னலிஸ்ட் ஆக சேரும் ரிஹான்.

லஞ்சம் வாங்கியதால் சஸ்பென்ட் செய்யப்பட்டு பத்திரிக்கைகைல செய்திவர, தன் சொந்த மகளால் வெறுக்கப்படும் தகப்பன் டிராஃபிக் போலீஸ் சுதேவன்.

தன் மனைவிக்கும் நண்பனுக்கும் இடையேயான தவறான உறவு தெரியவர மனைவியை கார் ஏற்றி கொல்ல முயற்சித்து தப்பிக்கும் டாக்டர். ஏபெல்.

கணநேர சிந்தைப்பிழை, பயம்... இவையாவும் காரணிகளாக நிகழும் ஓர் விபத்து, இவர்களின் காலக்கோடுகளை இணைக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள், போராட்டங்கள், மரணம், அழுகை, சோகம். இவையெல்லாம் சேர்ந்ததே Traffic.

தமிழகத்தில் நடந்த ஓர் உண்மைச்சம்பவத்தை அதன் பரபரப்பு குறையாமலும், உடலுறுப்பு தானத்தின் அவசியத்தை உணர்த்தும் விதமாகவும் படமாக்கியிருக்கிறார்கள் மலையாளத்தில். மூளைச்சாவு நிகழ்ந்ததும், இருதயத்தை வேறோர் சிறுமிக்கு தானம் செய்து அவள் உயிரை பிழைக்கச் செய்த ஹிதேந்திரன் கதை தான் Traffic.

தன் முதல்நாள் வேலைக்குச் செல்லும் ரிஹான், ஒரு சாலை விபத்தில் விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதே சமயம் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சித்தார்த்தின் மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறாள். ரிஹானின் இருதயம் அந்த பெண்ணுக்கு பொருந்திப் போக அவளையாவது காப்பற்ற மருத்துவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் இருவர் இருப்பதும் வெவ்வேறு இடம். ஒருவர் எர்ணாகுளத்தில் மற்றொருவர் பாலக்காட்டில். இடையே நூற்றி ஐம்பது கிலோ மீட்டர்கள். அப்பெண்ணின் நாடித்துடிப்பும் குறைந்துகொண்டே வர நான்கு மணிநேரங்கள் என கெடு வைக்கின்றனர் மருத்துவர்கள். சாத்தியமே இல்லாத பயணத்தை போலீசின் உதவியோடு செய்ய முயற்சிக்கின்றனர்.

ரிஹானின் இதயம், ரிஹானின் நண்பன் ராஜீவ், அறுவை சிகிச்சை செய்யப்போகும் மருத்துவர் ஏபெல் உடன் இப்பயணத்தை இரண்டு மணிநேரத்தில் முடிக்க பொறுப்பேற்கிறார் சுதேவன். பயணத்தின் நடுவே மருத்துவர் ஏபெல் தன் மனைவியை கொல்ல முயற்சித்தது தெரியவர அவரை இப்பயணத்தில் இருந்து இறக்கி விட உத்தரவு வருகிறது. ஏபெல் தான் பிழைக்க இப்பயணத்தை முடக்குகிறார். நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. இந்த மிஷனை கமிஷ்னர் கேன்சல் செய்யும் அடுத்த நிமிடம், அவர்கள் பயணத்தில் எட்டு கிலோமீட்டர்கள் முன்னில் இருப்பதாக தகவல் வருகிறது. பயணம் தொடர்கிறது. பயணத்தில் எதிர்கொண்ட சிக்கல்கள்  எவை, இப்பயணத்தை எப்படி வெற்றிகரமாக முடித்தார்கள் என்பதை சற்றும் பதட்டம் குறையாமல் காட்சியாக்கி இருக்கிறார்கள்.

கதையை கமர்ஷியலாக்காமல் எடுத்திருக்கிறார்கள். கமிஷனராக வரும் அனூப் மேனன், டிராஃபிக் போலீசாக ஸ்ரீனிவாசன் இருவரின் நடிப்பும் அபாரம். தன் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தருவாயில் சித்தார்த்தின் மனைவி பேசும் வசனம், குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்காமல் பணம், புகழ் என்று அலைந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் சவுக்கடி. மற்ற அனைவருமே தங்களுக்கான பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

Traffic – தமிழில் எடுக்கப்பட்டு நம் அறிவு ஜீவிகள் ஆபாசம், வன்மம், கொடூரம், இத்யாதி என விமர்சிக்கும் முன்னரே பார்க்கவேண்டிய படம்!

2 comments:

ILA(@)இளா said...

ஹ்ம், படம் பார்க்க குடுப்பினை இல்லை.

Nirosh said...

வாழ்த்துக்கள் நண்பா....!