கவுரவம்கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் எட்டிப் பார்க்கும் நேரமெல்லாம் கண்ணில் பட்டுக் கொண்டிருப்பது “Happy Kiss Day” தான். அதை கிண்டல் செய்தும் அதைக் கொண்டாட முடியாதபடி ஏக்கத்திலும் பல ஸ்டேட்டஸ்கள் என் நேரக்கோட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. என் நேரக்கோடும் அதற்குத் தகுந்தாற்போல், பெரும் கிடாயை விழுங்கிய மலைப்பாம்பென மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. என் பங்குக்கும் நானும் ஒன்றிரண்டை தட்டிவிட்டு விலகிச் செல்ல எத்தனிக்கும் தருவாயில் யாரோ ஒரு புண்ணியவான் அவர் தகப்பனுக்கு வாழ்த்துக் கூறிக் கொண்டிருந்தார் “Happy Fathers Day”.

எனக்கு எல்லாமே அம்மா தான். என் போன்ற பலர்க்கும் நிலை அவ்வாறுதான் என்று அனுமானிக்கிறேன். நான் வளர்ந்த சூழல் அப்படி. சோறூட்டி, சீராட்டி, படிப்பை கவனித்து என எனக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவளாய், பிரிந்திருக்கும் ஓரோ கணமும் கண்களில் நீர் நிரம்பச் செய்யும் அன்பின் அட்சயம் ஏந்திய ஆதிரை அவள். என் கேள்விகளுக்கு பதில் கொடுத்து, தேடல்களுக்கு வழி கொடுத்து, நிழலாய் பின் தொடர்ந்து எந்தன் வெற்றிகளைக் கொண்டாடி, தோல்விகளில் துணை நின்று எனக்கான சகலமுமாய், ஏன் நானாகவே மாறிப் போனவளவள். இப்படியாக என்னை வடிவமைத்தவள் அந்த ஒரு வாக்கியத்தை மட்டும் காதிலோதாமல் இருந்திருக்கலாம் “குறும்பு பண்ணுன, அப்பாகிட்ட சொல்லிடுவேன். சாட்டைவார் பிஞ்சிடும்”.

இது அம்மாக்களின் சுயநலமா இல்லை குழந்தை வளர்ப்பின் உத்தியா என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை, ஆனால் மகனின் வாழ்க்கையை வடிப்பவர் தாயெனினும் உளியாக்கப்படுபவர் தந்தைதான். அதனால்தான் என்னவோ, கல்லாக இருப்பவன் நெஞ்சில் வலியேற்படுத்தும் உளியென்பது உளியாகவே நிலைத்து விடுகிறது சிற்பமான பின்பும்.  முதன் முதலில் கடும் போக்குவரத்து நெரிசலின் ஊடாக சாலையை சாதாரணமாகக் கடந்தபோதுதான் விழுந்தது முதல் அடி! அப்போதெனக்கு ஐந்தாறு வயதிருக்கலாம். அதுவரை மாரில் தூக்கிக் கொஞ்சுபவராகவும் என்னவெல்லாமாகவோ இருந்தவர் அன்றிலிருந்து மாறிப்போனதாய் ஒரு தோன்றல். “அப்பா ஏன்மா முன்ன மாதிரி இல்ல?” பலமுறை ஒரே கேள்வி, ஒரே பதில்தான்  “ச்சே அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல”. நான் மட்டும் என்ன இளக்காரமா? பிறந்து விழுந்த புலிக்குட்டியும் ஒரு பூச்சி என்றால் கூட காலால் அடித்துத்தான் சாப்பிடும். அதனைப் பொறுத்தவரையில் அது வேட்டை! அன்றிலிருந்து அவரின் விறைப்பும் முறைப்பும் எனக்குள்ளும் வந்துவிட்டது. ஆனாலும் இந்த விஷயத்தில் கூட, அவர்தான் எனக்கு ரோல்மாடல்.

கொஞ்சம் வளர்ந்த பின்பு, எனக்கும் என் அப்பாவுக்கும் உரையாடல் என்பதெல்லாம் இல்லாமல் போய் விட்டது. இன்னும் சொல்லப் போனால் அவரை அப்பா என்றழைத்தே பல காலமாகி விட்டது. நான் என்ன சொல்ல நினைத்தாலும் செய்தி அம்மா வழி போகும், “அம்மா, சினிமாக்கு போலாம் ம்மா”. அங்கிருந்தும் அவ்வாறே, “நான் வெளிய போறேன் அவன கடைய பாத்துக்க சொல்லு”. இதையும் மீறி, என்ன சொன்னாலும் கேட்டாலும், “ஹ்ம்ம், சரி, பண்றேன்” அவ்வளவுதான். அவரும் அப்படித்தான் “டேய்..”. இதைத் தாண்டி எனக்கும் அவருக்குமான உரையாடல்கள் “அரைக்கிலோ பருப்பு, அரிசி ரெண்டு கிலோ, புளி நூறு....”.

“அம்மா, இந்தா புரோக்ரஸ்கார்டு. கையெழுத்து போட்டு குடு”
“டேய், மாவாட்டிகிட்டு இருக்கேன்ல அப்பாகிட்ட வாங்கிக்கோ”
“அவரா எனக்கு எல்லாம் செய்யுறார்? நீதானே? இங்க வைக்கிறேன் போட்டு குடு”
வந்த வாய்ப்புகளைக் கூட வெட்டி எறிந்து செல்லுவேன். அவரின் அதே கவுரவமோ இத்யாதியோ எதோ ஒன்று நெஞ்சுக்குள் கெக்கலிக்கும். பனியனோடு கடையில் பொட்டலம் மடித்துக் கொண்டிருப்பார், ஒரு சத்தம் வரும் “விஜீஈஈஈஈ, கணக்குப் போடணும் வா!”. அம்மா கெஞ்சலாக என்னைப் பார்ப்பாள், சரியென்று எழுத்து போய் கணக்கைப் பார்க்கும்போதே “ஏழும் எட்டும் பதினஞ்சு, ஒரு ஆறு இருபத்தொன்னு, நாலு இருபத்தஞ்சு,..........” அவரே கணக்கை முடித்து வெற்றிப் புன்னகையோடு என்னைப் பார்ப்பார். எனக்கு வெறியாகும். அட்டையை தூக்கி எரிந்துவிட்டு அம்மாவைச் சென்று கடிந்து கொள்வேன். தேர்வு முடிவுகள் வரும்போது, வகுப்பில் முதல் மாணவனாக, கணிதத்தில் 96 க்கு குறையாமல் மதிப்பெண் எடுத்து ரிப்போர்ட்டை அம்மாவிடம் கொடுக்கையில் பெருமையாகச் சொல்லுவேன் “நான் கணக்குல 96 ன்னு அங்க சொல்லு”. இப்படியாக நானறியாமலேயே நான் நானாக காரணமாயிருந்தவர் அவர்தான்.

பதின்ம வயதுகளில் வெளியூரில் கல்லூரி. பெரும் விடுதலை என்றே எண்ணினேன். போன் வாங்கிக் கொடுத்தது என்னவோ அவர்தான். இருந்தாலும் பேச்சில்லை. தினமும் அம்மாதான் அழைப்பாள். “க்கம்..க்கம்” என்று இருமிக்கொண்டே அவர் அருகில் வரும்போது மட்டும், “ஹ்ம்ம் அப்பாவாடா, நல்லா இருக்காரு டா” நான் கேட்காமலேயே பதில் வரும். ஒரு நிமிட மௌனம் “கைல காசு இருக்காடா?” நிச்சயம் அவர்தான் கேட்க சொல்லியிருப்பார். இருந்தாலும் அந்த இளமைப் பொருமலில் அதெல்லாம் தோன்றியிருக்காது. “ஹ்ம்ம் இருக்கு” அவ்வளவு தான். மாதமொருமுறை ஊருக்குப் போகயில் அம்மா இரண்டாயிரம் கொடுப்பாள், ஒரு ஐநூரை அவளிடம் கொடுத்து கொடுக்கச் சொல்லி, சொல்லிவிட்டுப் போவார் “பாத்து செலவு பண்ண சொல்லு. சம்பாதிச்சாத்தான் அதன் அருமை தெரியும்”. வேண்டுமென்றே அந்த ஐநூறைத் திருப்பிக் கொடுத்து அம்மாவிடம் சொல்லுவேன் “இதல்லாம் சொல்லலேனா எனக்கு தெரியாதா? எப்பப் பாத்தாலும். ஏதோ ஒண்ணு சொல்லிக்கிட்டு..”. கல்லூரி படிக்கையில் இரண்டாயிரத்திற்குள் என் ஒரு மாதத்தை ஓட்ட முடிந்திருந்தது. காரணம் அந்த ஒரு சொல்.

கல்லூரி முடித்து வேலைக்குப் போகும் முன் தினமும் பல ஏளனப் பேச்சுக்கள். அதெல்லாம் எனக்கான தூண்டுகோல் எனப் புரியாமலே “நான் எங்காச்சும் போய்த் தொலையனும், அதானே உங்களுக்கு வேணும்?”. எனக்கு சாதகமாகவும் பேச முடியாமல், அப்பாவை ஆதரிக்கவும் முடியாமல் எப்போதும் போல கண் கசிந்து நிற்பாள் அம்மா. வேலை கிடைத்த மறுநாள், ஹைதராபாத் கிளம்பவேண்டும். எல்லாம் எடுத்து வைத்தாகிற்று. செலவுக்கு பணம் கொடுத்தாள். “இனிமேல் உங்களுக்கு இந்தக் கஷ்டம் வராது” அப்பொழுதும் அவரைக் குத்தினேன். கிளம்பும் தருவாயில் வெளியில் வந்து வீட்டைப் பார்க்கையில் ஓர் அடாத சோகம் நெஞ்சைப் பிழிந்தது. என்னவென்று சொல்லத் தெரியாத ஓர் உணர்வு. உள்ளே சென்றவன் அம்மாவை அழைத்தேன்,
“டேய்.. எதுக்கு இப்போ கண் கலங்கி இருக்கு?”
“ஒண்ணுமில்ல, அவர கூப்பிடு” அவர் வர, வைராக்கியம், கவுரவம் என்றெல்லாம் எண்ணி வைத்திருந்த கண்ணாடிப் பேழையை உடைத்தேன்.
“அப்பா.....” நிச்சயம் நெகிழ்ந்திருப்பார். இருவரையும் ஒருசேர நிறுத்தி முதல்முறையாக கால்களில் விழுந்து ஆசி பெற்று விடை பெற்றேன். ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்...

அதன் பிறகும் இன்றுவரையிலும் இருவருக்குள்ளும் பேச்சில்லை, பேசிக்கொள்ள எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. இருந்தாலும் அந்த முறைப்பு இல்லை லேசான புன்னகை மட்டும். முதல் மாத சம்பளத்தில் எடுத்துக் கொடுத்த வேட்டி சட்டையை நான் காண அணிந்து வலம் வருவார். இப்போதும் நினைப்பேன், “அப்பா....” என்று அளவளாவ வேண்டுமென்று. வேண்டாம், அந்த கவுரவம், விறைப்பு, முறைப்பு இதுதான் அவருக்கு அழகு. அது மட்டும்தான்!