கவுரவம்கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் எட்டிப் பார்க்கும் நேரமெல்லாம் கண்ணில் பட்டுக் கொண்டிருப்பது “Happy Kiss Day” தான். அதை கிண்டல் செய்தும் அதைக் கொண்டாட முடியாதபடி ஏக்கத்திலும் பல ஸ்டேட்டஸ்கள் என் நேரக்கோட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. என் நேரக்கோடும் அதற்குத் தகுந்தாற்போல், பெரும் கிடாயை விழுங்கிய மலைப்பாம்பென மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. என் பங்குக்கும் நானும் ஒன்றிரண்டை தட்டிவிட்டு விலகிச் செல்ல எத்தனிக்கும் தருவாயில் யாரோ ஒரு புண்ணியவான் அவர் தகப்பனுக்கு வாழ்த்துக் கூறிக் கொண்டிருந்தார் “Happy Fathers Day”.

எனக்கு எல்லாமே அம்மா தான். என் போன்ற பலர்க்கும் நிலை அவ்வாறுதான் என்று அனுமானிக்கிறேன். நான் வளர்ந்த சூழல் அப்படி. சோறூட்டி, சீராட்டி, படிப்பை கவனித்து என எனக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவளாய், பிரிந்திருக்கும் ஓரோ கணமும் கண்களில் நீர் நிரம்பச் செய்யும் அன்பின் அட்சயம் ஏந்திய ஆதிரை அவள். என் கேள்விகளுக்கு பதில் கொடுத்து, தேடல்களுக்கு வழி கொடுத்து, நிழலாய் பின் தொடர்ந்து எந்தன் வெற்றிகளைக் கொண்டாடி, தோல்விகளில் துணை நின்று எனக்கான சகலமுமாய், ஏன் நானாகவே மாறிப் போனவளவள். இப்படியாக என்னை வடிவமைத்தவள் அந்த ஒரு வாக்கியத்தை மட்டும் காதிலோதாமல் இருந்திருக்கலாம் “குறும்பு பண்ணுன, அப்பாகிட்ட சொல்லிடுவேன். சாட்டைவார் பிஞ்சிடும்”.

இது அம்மாக்களின் சுயநலமா இல்லை குழந்தை வளர்ப்பின் உத்தியா என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை, ஆனால் மகனின் வாழ்க்கையை வடிப்பவர் தாயெனினும் உளியாக்கப்படுபவர் தந்தைதான். அதனால்தான் என்னவோ, கல்லாக இருப்பவன் நெஞ்சில் வலியேற்படுத்தும் உளியென்பது உளியாகவே நிலைத்து விடுகிறது சிற்பமான பின்பும்.  முதன் முதலில் கடும் போக்குவரத்து நெரிசலின் ஊடாக சாலையை சாதாரணமாகக் கடந்தபோதுதான் விழுந்தது முதல் அடி! அப்போதெனக்கு ஐந்தாறு வயதிருக்கலாம். அதுவரை மாரில் தூக்கிக் கொஞ்சுபவராகவும் என்னவெல்லாமாகவோ இருந்தவர் அன்றிலிருந்து மாறிப்போனதாய் ஒரு தோன்றல். “அப்பா ஏன்மா முன்ன மாதிரி இல்ல?” பலமுறை ஒரே கேள்வி, ஒரே பதில்தான்  “ச்சே அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல”. நான் மட்டும் என்ன இளக்காரமா? பிறந்து விழுந்த புலிக்குட்டியும் ஒரு பூச்சி என்றால் கூட காலால் அடித்துத்தான் சாப்பிடும். அதனைப் பொறுத்தவரையில் அது வேட்டை! அன்றிலிருந்து அவரின் விறைப்பும் முறைப்பும் எனக்குள்ளும் வந்துவிட்டது. ஆனாலும் இந்த விஷயத்தில் கூட, அவர்தான் எனக்கு ரோல்மாடல்.

கொஞ்சம் வளர்ந்த பின்பு, எனக்கும் என் அப்பாவுக்கும் உரையாடல் என்பதெல்லாம் இல்லாமல் போய் விட்டது. இன்னும் சொல்லப் போனால் அவரை அப்பா என்றழைத்தே பல காலமாகி விட்டது. நான் என்ன சொல்ல நினைத்தாலும் செய்தி அம்மா வழி போகும், “அம்மா, சினிமாக்கு போலாம் ம்மா”. அங்கிருந்தும் அவ்வாறே, “நான் வெளிய போறேன் அவன கடைய பாத்துக்க சொல்லு”. இதையும் மீறி, என்ன சொன்னாலும் கேட்டாலும், “ஹ்ம்ம், சரி, பண்றேன்” அவ்வளவுதான். அவரும் அப்படித்தான் “டேய்..”. இதைத் தாண்டி எனக்கும் அவருக்குமான உரையாடல்கள் “அரைக்கிலோ பருப்பு, அரிசி ரெண்டு கிலோ, புளி நூறு....”.

“அம்மா, இந்தா புரோக்ரஸ்கார்டு. கையெழுத்து போட்டு குடு”
“டேய், மாவாட்டிகிட்டு இருக்கேன்ல அப்பாகிட்ட வாங்கிக்கோ”
“அவரா எனக்கு எல்லாம் செய்யுறார்? நீதானே? இங்க வைக்கிறேன் போட்டு குடு”
வந்த வாய்ப்புகளைக் கூட வெட்டி எறிந்து செல்லுவேன். அவரின் அதே கவுரவமோ இத்யாதியோ எதோ ஒன்று நெஞ்சுக்குள் கெக்கலிக்கும். பனியனோடு கடையில் பொட்டலம் மடித்துக் கொண்டிருப்பார், ஒரு சத்தம் வரும் “விஜீஈஈஈஈ, கணக்குப் போடணும் வா!”. அம்மா கெஞ்சலாக என்னைப் பார்ப்பாள், சரியென்று எழுத்து போய் கணக்கைப் பார்க்கும்போதே “ஏழும் எட்டும் பதினஞ்சு, ஒரு ஆறு இருபத்தொன்னு, நாலு இருபத்தஞ்சு,..........” அவரே கணக்கை முடித்து வெற்றிப் புன்னகையோடு என்னைப் பார்ப்பார். எனக்கு வெறியாகும். அட்டையை தூக்கி எரிந்துவிட்டு அம்மாவைச் சென்று கடிந்து கொள்வேன். தேர்வு முடிவுகள் வரும்போது, வகுப்பில் முதல் மாணவனாக, கணிதத்தில் 96 க்கு குறையாமல் மதிப்பெண் எடுத்து ரிப்போர்ட்டை அம்மாவிடம் கொடுக்கையில் பெருமையாகச் சொல்லுவேன் “நான் கணக்குல 96 ன்னு அங்க சொல்லு”. இப்படியாக நானறியாமலேயே நான் நானாக காரணமாயிருந்தவர் அவர்தான்.

பதின்ம வயதுகளில் வெளியூரில் கல்லூரி. பெரும் விடுதலை என்றே எண்ணினேன். போன் வாங்கிக் கொடுத்தது என்னவோ அவர்தான். இருந்தாலும் பேச்சில்லை. தினமும் அம்மாதான் அழைப்பாள். “க்கம்..க்கம்” என்று இருமிக்கொண்டே அவர் அருகில் வரும்போது மட்டும், “ஹ்ம்ம் அப்பாவாடா, நல்லா இருக்காரு டா” நான் கேட்காமலேயே பதில் வரும். ஒரு நிமிட மௌனம் “கைல காசு இருக்காடா?” நிச்சயம் அவர்தான் கேட்க சொல்லியிருப்பார். இருந்தாலும் அந்த இளமைப் பொருமலில் அதெல்லாம் தோன்றியிருக்காது. “ஹ்ம்ம் இருக்கு” அவ்வளவு தான். மாதமொருமுறை ஊருக்குப் போகயில் அம்மா இரண்டாயிரம் கொடுப்பாள், ஒரு ஐநூரை அவளிடம் கொடுத்து கொடுக்கச் சொல்லி, சொல்லிவிட்டுப் போவார் “பாத்து செலவு பண்ண சொல்லு. சம்பாதிச்சாத்தான் அதன் அருமை தெரியும்”. வேண்டுமென்றே அந்த ஐநூறைத் திருப்பிக் கொடுத்து அம்மாவிடம் சொல்லுவேன் “இதல்லாம் சொல்லலேனா எனக்கு தெரியாதா? எப்பப் பாத்தாலும். ஏதோ ஒண்ணு சொல்லிக்கிட்டு..”. கல்லூரி படிக்கையில் இரண்டாயிரத்திற்குள் என் ஒரு மாதத்தை ஓட்ட முடிந்திருந்தது. காரணம் அந்த ஒரு சொல்.

கல்லூரி முடித்து வேலைக்குப் போகும் முன் தினமும் பல ஏளனப் பேச்சுக்கள். அதெல்லாம் எனக்கான தூண்டுகோல் எனப் புரியாமலே “நான் எங்காச்சும் போய்த் தொலையனும், அதானே உங்களுக்கு வேணும்?”. எனக்கு சாதகமாகவும் பேச முடியாமல், அப்பாவை ஆதரிக்கவும் முடியாமல் எப்போதும் போல கண் கசிந்து நிற்பாள் அம்மா. வேலை கிடைத்த மறுநாள், ஹைதராபாத் கிளம்பவேண்டும். எல்லாம் எடுத்து வைத்தாகிற்று. செலவுக்கு பணம் கொடுத்தாள். “இனிமேல் உங்களுக்கு இந்தக் கஷ்டம் வராது” அப்பொழுதும் அவரைக் குத்தினேன். கிளம்பும் தருவாயில் வெளியில் வந்து வீட்டைப் பார்க்கையில் ஓர் அடாத சோகம் நெஞ்சைப் பிழிந்தது. என்னவென்று சொல்லத் தெரியாத ஓர் உணர்வு. உள்ளே சென்றவன் அம்மாவை அழைத்தேன்,
“டேய்.. எதுக்கு இப்போ கண் கலங்கி இருக்கு?”
“ஒண்ணுமில்ல, அவர கூப்பிடு” அவர் வர, வைராக்கியம், கவுரவம் என்றெல்லாம் எண்ணி வைத்திருந்த கண்ணாடிப் பேழையை உடைத்தேன்.
“அப்பா.....” நிச்சயம் நெகிழ்ந்திருப்பார். இருவரையும் ஒருசேர நிறுத்தி முதல்முறையாக கால்களில் விழுந்து ஆசி பெற்று விடை பெற்றேன். ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்...

அதன் பிறகும் இன்றுவரையிலும் இருவருக்குள்ளும் பேச்சில்லை, பேசிக்கொள்ள எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. இருந்தாலும் அந்த முறைப்பு இல்லை லேசான புன்னகை மட்டும். முதல் மாத சம்பளத்தில் எடுத்துக் கொடுத்த வேட்டி சட்டையை நான் காண அணிந்து வலம் வருவார். இப்போதும் நினைப்பேன், “அப்பா....” என்று அளவளாவ வேண்டுமென்று. வேண்டாம், அந்த கவுரவம், விறைப்பு, முறைப்பு இதுதான் அவருக்கு அழகு. அது மட்டும்தான்!


33 comments:

நையாண்டி நைனா said...

wow... Nice... and heartmelting...

sum1 spcl said...

ஒரே வார்த்தையில் அருமை என் கூறி கடந்துவிடலாம்.. தந்தையினுள் பொதிந்து கிடக்கும் அன்பையும் கரிசனத்தையும் உணரும் கணங்களை கடப்பது போல்..! சிறந்த நடை!!! பலரும் உணர/உண்ர்ந்தாலும் கொண்டாட மறுக்கும் விஷயம் தந்தையின் அன்பு

King Viswa said...

மிகவும் அருமை. ஆனால் பேச ஆரம்பித்து விடுங்கள்.


உலகத்தில் அப்பாக்கள் போல நல்லவர்கள், தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள் யாருமில்லை.

Athammohamed said...

அழகிய பதிவு! மிக அருமை.

ஆனந்த் ராஜ்.P said...

அருமையாய்... அந்த வீராப்புக்கு களங்கம் வந்திராம எழுதிட்டீக.

அழகாக கோர்த்த மாலையாய் சொல்லாடல்கள். அப்பாவைப்பற்றி எல்லோருக்குமான பொதுவான கருத்தை அழகாக உங்க ஸ்டைல்ல சொல்லியாச்ச்.

இலக்கிய பக்கம் வர்றேன்னு சொன்னீங்க. கண்டிப்பாக வரவும்.

amas said...

அழ வைத்து விட்டீர்கள் அர்ஜுன். தந்தையை நேசியுங்கள். தாய் தந்தைக்குள் உறவில் பிரச்சினை இருந்தாலும் மகன் தந்தைக்குள்ள உறவில் இவ்வளவு இடைவெளி இருக்கக் கூடாது.

A very honest post, straight from the heart. I appreciate your courage and also in writing it so well. I wish you more happiness in your family relationships.

amas32

நாயோன் said...

என்ன அருமையான சொல்லாடல்கள்..!!! வியந்தேன்!
வார்த்தைகளால் விவரிக்க முடியாத பரிதவிப்பு எனக்குள்.!
அப்பா மகன் உறவில் உள்ள விரிசல்களாய் உணரப்படும்/பார்க்கப்படும், வயது பேதத்திற்குள் அடங்கும் வன்மமில்லாத பகையுணர்வை அள்ளி தெளித்திருக்கிறாய்... மிகத்தெளிவாய்!!
எத்தனைப் பாசங்களை மறந்து/மறுத்து போயிருக்கிறோம்.. அது அப்பாவிடமிருந்து வந்த/வருகிறதென்ற ஒரே காரணத்திற்காக..!
அத்தனைப் புறக்கணிப்புகளும் அவருக்கு தோல்வியைத் தந்திருக்குமென நினைத்துக்கொண்டே நாம் தோற்றுக்கொண்டிருப்பதை உணராமல் வாழ்ந்துவிட்ட காலமது.. உணர்கிறேன்..!

//நானறியாமலேயே நான் நானாக காரணமாயிருந்தவர் அவர்தான்.//
//ஒரு நிமிட மௌனம்.... “கைல காசு இருக்காடா?” நிச்சயம் அவர்தான் கேட்க சொல்லியிருப்பார்.//
//வைராக்கியம், கவுரவம் என்றெல்லாம் எண்ணி வைத்திருந்த கண்ணாடிப் பேழையை உடைத்தேன்//
//அந்த கவுரவம், விறைப்பு, முறைப்பு இதுதான் அவருக்கு அழகு. அது மட்டும்தான்//

எளிமையான ஆனால் அழுத்தமான வரிகள்.!
உன் எழுத்துத் திறமை அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்கான நேரமிது.. காலெடுத்து வைத்து விடு...
வாழ்த்துகள்... & லவ் யூ மச்சி.!

அன்பு said...

best post of yu :) love it to the core arjun ...

Karuppiah Thangaraj said...

ஒரு பதிவைப்படிக்கும்போது வாசகனால் தன்னை அதனுள் ஈடுபடுத்த முடிந்தாலே பதிவுக்கு வெற்றிதான். இப்பதிவை படிக்கும்போது என் தந்தையும்... அவருக்கும் எனக்குமிடையே நடந்த சில விவாதங்களும் கண்முன் வந்து செல்கிறது. பொதுவாக சிறுவயதில் ஹீரோவாக தெரிந்த அதே தந்தை அதன்பின் வெவ்வேறாக பரிணமித்துவிடுகிறார். தந்தை என்பவர் இரண்டு தாய்க்கு சமம். என்ன நாம்தான் அதை புரிந்துகொள்வதில்லை. அருமையான பதிவு. வாழ்த்துகள். @iKaruppiah :-)

Jeeno said...

அருமை..# கல்லுக்குள் ஈரம்... வெளியேதெரியாதது அவரினன்பு.. பேசிவிடுங்கள் சகோ..#

Tirupurvalu said...

My friend u not still accept your mistakes .If you get a son and he like same activities like u then u know the pain.
break yr head weight and touch with your father closely that will help for his many wounds by u

கவி அழகன் said...

அருமையான படைப்பு

ARUN PALANIAPPAN said...

மனதைத் தொட்டது...
பல வீடுகளில் இது தான் நிலை..

தங்கள் அப்பாவின் நடை தங்களை சுயமாக வளர்த்துக் கொள்ளத் தான் என்று பல மகன்கள் புரிந்து கொள்வதில்லை!!!
புரிந்து கொள்ளும் போது, அவர்களும் அப்பாவாகி இருக்கிறனர்!

Anonymous said...

Too touching a post with carefully chosen words. Dad, a darling forever and for every child.

Giri Ramasubramanian said...

க்ளாஸ் தம்ப்ரீ!

nandha ra said...

நல்ல எழுத்து.வாழ்த்துக்கள்.

jeganjeeva said...

ஆரம்பத்திலிருந்தே அந்த இடைவெளி ஒட்டாமலேயே போன விதம் சொல்லியிருப்பது அருமை.

இருப்பினும் பேசி விடுங்கள்.

rathinamuthu said...

மிக அருமையான நெகிழ்ச்சியான பதிவு. வாழ்த்துக்கள்.

Nataraj (ரசனைக்காரன்) said...

பொறுமையாக படிக்கவேண்டும் என
’சேவ்’வி வைத்து படித்தேன்.
மிக அருமை அர்ஜுன்..நானும் என் அப்பாவும் கிட்டத்தட்ட இதுபோல் தான் இருந்தோம். ஆனால் திருமணத்திற்கு பிறகு அது எப்படியோ மாறிவிட்டது. அந்த உளி உவமை ஏ கிளாஸ்..

sanchana said...

ரொம்ப நல்லா இருந்தது. உண்மையாக இருந்தது. மனதை என்னவோ செய்தது.@usharanims

sanchana said...

ரொம்ப நல்லா இருந்தது. உண்மையாக இருந்தது. மனதை என்னவோ செய்தது.@usharanims

இந்திரா said...

நெகிழ்ச்சியான பதிவு.
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

Rajan said...

என்ன சொல்ல என்று தெரியாமல் உங்களை போலவே நானும் ...

Love Kills said...

உண்மையிலேயே வண்ண நிழல் தான், தந்தை மகன் உறவு. நான் சமீபத்தில் படித்த கண்ணீர் குடத்தை உடைக்கும் மென்மையான சொல்லம்பாடல். வாழ்த்துக்கள்

nellai அண்ணாச்சி said...

ரொம்ப நல்லா இருந்தது

பரிசல்காரன் said...

டச்சிங்டா! உன் எழுத்து அடுத்த தளத்துக்குப் போகுது..

பச்சைமண்ணு said...

அழகான பதிவு. உள்ளத்திலிருந்து வந்ததால் இன்னும் இனிக்கிறது. அப்பாவிடம் எதற்கும் பேசி விடுங்கள். உங்கள் இருவருக்கும் உள்ள இந்த இடைவெளி நிரப்படவேண்டியது.

Anonymous said...

வார்த்தைகளால் வண்ணநிழலை உருவாக்கி இருக்கிறாய்.. இன்றுதான் உன்னோட பதிவை முதன் முதலா படிக்கிறேன்..அருமை..

ராம்குமார் - அமுதன் said...

மனதைத் தொட்டது... மிகவும் நெகிழ்ச்சியான, அற்புதமானதொரு பதிவு.. பிரமாதம்... :))

s suresh said...

மிகவும் அருமையான உணர்ச்சி பூர்வமான படைப்பு வாழ்த்துக்கள்!

ஆதி said...

மிக நெகிழ வைத்தப்பதிவு, வாழ்த்துக்கள்

Prathi surendran said...

எந்த ஒரு பதிவை படிச்சும், உடனடியா என் கண்ணில் நீர் வந்ததில்லை, இன்று வந்தது
அப்பாவின், செல்ல மகள் நான், எனக்கென்று அவர் செய்யாதது ஒன்றுமே இல்லை, என் பெற்றோருக்கு நான் தான் உலகம், இருப்பினும், உங்களின் வலியை, அதை மீறிய பாசத்தை உணர முடிந்தது- கிட்ட தட்ட திருமுருகன் இயக்கிய பரத் நடித்த படத்தை நியாபக படுத்தியது
உங்கள் எழுத்து- ஆச்சர்யம், அதே சமயம் அற்புதம், பெரிய வார்த்தைகளை கூற நான் தமிழ் இன்னும் வாசிக்க வேண்டும், இருப்பினும் பாதித்தது உங்கள் பதிவு அர்ஜுன், மனமார்ந்த வாழ்த்துக்கள்

chandra said...

uncomparable person only appa. appa pol varuma