சமகாலத் தேடலில் எதிர்காலம்

கோமாவில் இருந்து எழுந்து வந்தது போலிருக்கிறது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதே எழுத்தைக் கொணர்வதென்பது மிகக் கடினமென்று என் குருவின் குரு தளத்தில் படித்து மனதிலேற்றிய வாசகம். வாசித்துக் கொண்டேதான் இருக்கிறேன், ஆனாலும் எழுத முடிவதில்லை. அறையில் இணையமில்லாதது மனைவியை அம்மா வீட்டிற்கனுப்பிய கணவனாய் என்னை உருக்குகிறது. அவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறாய் பிறகென்னடா குறை என்றெல்லாம் கேட்கக் கூடாது. வேண்டுமென்றால் மனைவியை காதலியென்று மாற்றிக் கொள்ளுங்கள். நிஜ வாழ்வில் சாத்தியமில்லைதான். என் வாக்கியத்தில் அது சாத்தியமே. இப்போதாவது என் வேதனையைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். நன்றி.


என்ன சொல்ல வருகிறாய் என்று முதல் பத்தியிலேயே சொல்லிவிடாதே, உன் எழுத்து வாசகனை இழுத்துச் செல்ல வேண்டும். சொல்ல வந்த கருத்து கடைசி வரியாக இருப்பினும் அது பரவாயில்லை. இது பலர் எனக்கு சொன்ன பின்னூட்டம். உடனே கடைசி வரிக்குப் போக நினைப்பவர்கள் நிற்க, இது இப்படியேதான் இங்கேதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உறக்கம் கலைந்தும் இழுத்துப் போர்த்திக் கொண்டு வம்படியாக கனவுகளை மனதில் திணித்துக் கொண்டிருந்த தினசரிகளில் அதுவும் ஓர் நாள். சிணுங்கிய செல்பேசியை அணைத்து எதேச்சையாக ட்விட்டரைத் தொட்டதில் செய்ததில் வந்தது வினை. ட்விட்டர், வீணாகும் நேரத்தை உபயோகமாக்கிக் கொள்ள வந்தவர்களின் உபயோகமான நேரத்தை வீணாக்கும் ஒரு கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். அக்கணத்தில் தோன்றியதென்னவோ, இனியொரு விதி செய்வோம் என்று முழங்கிக் கொண்டே நிச்சயதார்த்தம் முடிந்தவர்களை திருமணம் முடியும் வரை நாடுகடத்த வேண்டுமென்று புது சட்டம் போட வேண்டுமென்று தோன்றியது.


தொடர்ச்சியாக எழுதத் தோன்றுகையில், அய்யய்யோ பத்தி வளர்கிறதே, வாசகன் ஸ்கிப் செய்து விடுவானோ? என்றெல்லாம் யோசித்து என்டர் தட்ட வேண்டியிருக்கிறது. அடுத்த பத்தியிலும் பழையதையே தொடர்ந்தால் மொத்தமாக ஸ்கிப் செய்துவிட்டோடும் அபாயமும் இருப்பதால் அரைகுறையாய் முடித்த கதைக்கு அஞ்சலி செலுத்தி அடுத்ததிற்கு தாவ வேண்டியுள்ளது. பார்த்தீரா வாசகரே, எழுதுபவனுக்கு எத்தனை இன்னல்களென்று. புரிந்து கொள்ளுங்கள் எல்லாம் அரை ஜான், இல்லையில்லை. மன்னிக்க, எவ்வளவு யோசித்தாலும் இதயத்தையும் மூளையையும் அளக்க தெரியவில்லை. அய்யகோ, என்ன இது கை கால்கள் உதறல் எடுக்கின்றனவே, என்னவாயிற்று, எனக்கும் பேயோன் பிடித்து விட்டதோ?


வேண்டாம், தீவிர இலக்கியம் பெருமாபத்து என்று மனதிற்குள் பொறி விழ, வெகுஜன இலக்கியத்துக்கு போகலாமென்று ஒரு பத்திரிகையை எடுத்தேன். ஒரு காதல் கதையை கட்டுரையாய் சிறப்பாக வடிவமைத்திருந்தனர். அந்த பத்திரிகைதான் எனக்கு இலக்கிய வாசிப்பை அறிமுகப்படுத்தியது நான் மூன்றாம் வகுப்பிலிருந்தபோது. இப்போதும் அச்சேவை தொடர்கிறது. அந்த பத்திரிகையின் பெயர் தினத்தந்தி. எழுதுபவன் எப்போதும் நேர்மையுடன் இருக்க வேண்டுமென்று நண்பர் ஜில் ஆன்லைன் ட்விட்டியிருந்தார். திடீரென அந்த சொற்கள் எனக்கும் கணினித் திரைக்கும் இடையே வந்து பல்லிளித்துப் போகின்றன. உண்மையைச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானதால், சுய பச்சாதாபம் மேலோங்கச் சொல்கிறேன். என்னையும் கதையெழுத வைத்த பத்திரிக்கை தினமலர். ஒரு செயலைக் கதையாகத் திரிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டது அதிலிருந்துதான்.


என்ன சொல்லப் போகிறேன் என்று சொல்லாமலேயே முன்னூறு வார்த்தைகளைக் கடந்தது என்னளவில் வெற்றிதான். இந்தக் கொண்டாட்டாத்திற்கு நடுவே தவறி விழுந்த நடுப்பக்கத்தில் நான் கண்டதோர் கல்யாணமாலை விளம்பரம். அந்தத் தாளின் ஒரு மூலையில் பதினைத்து வார்த்தைகளுக்குள் “கோவை, இன்ன இன்ன சாதி குலம், வேலைக்குப் போகும் பெண் தேவை. தொடர்பு கொள்க: 9876543210” என்று இருந்தது. இதையல்லாம் யார் கவனிக்கப் போகிறார்கள் என்று மடித்துத் தூக்கி எறிந்த போதுதான் உணர்ந்தேன். அட! நானே அதை கவனித்திருக்கிறேனே.


ட்விட்டரின் நான் கண்ட ட்வீட்டுகளும், இந்த விளம்பரமும் ஒன்று மூளையிலும் மற்றது இதயமெனப்படும் மற்றொரு மூலையிலும் நின்று மரணாவஸ்தை தந்தன. இதுவரை நான் மரணித்ததில்லை, அதன் அவஸ்தையும் எனக்குத் தெரியாது தான். இருந்தாலும் இந்த வார்த்தைக்கான காப்பிரைட்ஸ் யாரிடமும் இல்லாததால் அதை நான் உபயோகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. மனதில் குடியேறி அரித்துக் கொண்டிருப்பதை வெளியேற்ற சிலர் புகைக்கிறார்கள், சிலர் குடிக்கிறார்கள். இதற்கெல்லாம் எனக்கு துணிச்சலில்லை. முடிவு செய்து விட்டேன், நான் எழுதப் போகிறேன். சினிமாத்துறையிலிருக்கும் யாராவது இதை வாசிக்க நேர்ந்தால் “புகை, மது, எழுத்து.. நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு” என உங்களை நீங்களே அப்டேட் செய்து கொள்ளுங்கள்.


விதி யாரை விட்டது, நான் பிரபலமான ட்விட்டர் என்பதெல்லாம் அதற்குப் புரியவா போகிறது? எனக்கும் கல்யாண மாலை சூட ஆசை வந்து விட்டது. வாசகர்களே, உங்கள் குறுநகைக்கு நன்றி. ஒரு அருவியின் இருபக்க இயற்கைக் காட்சிகளை ரசித்து துடுப்புப் போட மறந்து இப்போது நீர்வீழ்ச்சியின் ஓரத்தில் தோணியில் இருப்பவன் நான். விழுந்தவர்கள் தாங்கிப் பிடிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் விழத் தயாராகிறேன். இன்றோ நாளையோ மற்றொரு நாளோ, ஏன் வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் இப்போதோ கூட கேட்கலாம். என்னடா உன் பிரச்சினை? இப்பொது நான் வெட்கப்படுவேன் ன்று நம்பிக் கொண்டிருக்கும் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. என் தேவை, மாலை சூட்ட ஒரு மணமகள். பசித்துண்ண சென்றாலும், மசால் தோசை கேட்டு வாங்கித் தின்பவன் நான், இப்போது எனக்கு வாழ்க்கை கொடுக்கப் போகும் பெண்ணைப் பற்றி கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்.


இப்போது நான் கால் பெருவிரலால் தரையை நோண்டிக் கொண்டிருப்பதாகவும், இடது கை சிறு விரலின் நகத்தை குனிந்தவாறே கடித்துக் கொண்டிருப்பதாகவும் கற்பனை செய்து கொள்வீராக. இது மாற்றவியலா எண்பதாண்டு தமிழ் சினிமாவின் பொக்கிஷக் காட்சி. மாநிறம், 23 வயதில், இன்ன சாதி குலத்தில் தேவை என்று சுருங்கச் சொன்னால் இவனெல்லாம் இலக்கியவாதியா? என்று பலரும் எள்ளி நகைப்பர். இல்லாவிடினும் நகைப்பர், அது என் பிரச்சினை அல்லவே.


என் எழுத்தினால் பல சிகரங்களை, பல உயரங்களை அடைவேன் என்றாலும், எனைப்பற்றி தெரியாத, இலக்கிய அனுபவமில்லாத ஒருவருக்கு என் உயரம் 5.2”. தலைக்கனம் உடையவன் என்று பலராலும் சொல்லப் பட்டாலும் அது உடல் எடையை எள்ளளவும் கூட்டவில்லை. எனது எடை 43 கிலோ. என்னை என்னாலேயே தூக்க முடியாது என்பதால் என்னால் தூக்க முடியும் எடையுள்ள பெண்ணைத்தான் எனக்குத் தேடித் தருவீர்கள் என்று நம்புகிறேன். அடுத்ததாய், கொஞ்சம் பருப்பை ஊற வைத்து, வேக வைத்து, எண்ணையில், கடுகு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பருப்பைப் போட்டு வேக வைத்து சாம்பார்பொடி போட்டு இரண்டு கொதி விட்டு இறக்கி சாம்பார் வைக்கத் தெரிந்திருக்குமளவு சமையல் தெரிந்திருந்தால் போதும். தொட்டுக்க பூந்தியோ, மிட்சரோ எதோ ஒன்று போதுமெனக்கு. சமகால இலக்கியவாதிகளில் வித்தியாசமானவன் நான்.


வரப்போகிறவள் தனக்கு வேண்டுமென்பதை அழுது சாதிக்காமல், புரட்சி செய்து போராடிப் பெறுகிறவளாக இருத்தல் நலம். இந்தப் புரட்சி எண்ணம் அவ்வப்போது வந்து சென்றால் சிறப்பு. இதை இங்கு சொல்லியாகவேண்டிய கட்டாயம் என்னவென்று நீங்கள் யோசிக்குமளவு வைக்க மாட்டேன். என் உடல்வாகு அடிதாங்காது என்பதுதான் ஒரே காரணம். மலையாளம் எழுதப் படிக்கத் தெரிந்த, தமிழ் பேசவேணும் தெரிந்த மலையாளிப் பெண் வேண்டுமென்று சொன்னால் என்னை வித்தியாசமாகப் பார்க்காதீர்கள். இது சிறுவயதிலிருந்து வளர்த்த கனவு. பெண்ணிற்கு கவிதை பிடித்திருத்தல் நலம், பின்/நவீனத்துவத்தில் வாசகன் கற்பனைக்கு கொஞ்சம் இடமளிக்க வேண்டுமென்று முன் சென்றவர்கள் சொல்லிச் சென்றதால் கவிதை விரும்பும் பெண்ணைக் கேட்க விரும்பும் காரணத்தை வாசகர்களாகிய நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.


வேலைக்குச் செல்லும், செல்லாத, செல்ல விரும்பும், விரும்பாத யாராக இருப்பினும் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. சுருங்கச் சொன்னால், என் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் கூட வர விடாமல் என்னைப் பூவாய்க் கண்களுக்குள் வைத்துத் தாங்கும் நல்ல பெண்ணிருப்பின் தகவல் அனுப்பவும். வருங்கால இலக்கியத்தில் உங்களது பெயரும் இடம் பிடிக்கட்டுமே.


எழுத்தாளரின் பின் குறிப்புகள்:
1. பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? என்று பின்னூட்டம் தடை செய்யப் பட்டுள்ளது என்று சொன்னாலும், நீங்கள் இடாமல் இருக்கப் போவதில்லை.
2. பெண் தேடித்தராதவர்கள், உன் எழுத்து அடுத்த லெவலுக்குப் போய்க் கொண்டிருக்கின்றது என்றாவது பின்னூட்டமிட்டுச் செல்வது நலம் பயக்கும்.
18 comments:

கவி அழகன் said...

Valthukkal

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

எனக்கு பேயோன் பிடித்துவிட்டதா - ரசித்தேன். ஆடின காலும், பாடின வாயும், எழுதின கையும் சும்மா இருக்க முடியாது :-)))

கார்த்தி said...

மிக மிக மிக அருமை நண்பரே..மிகவும் இரசித்து படித்தேன். அந்த 'அருவி', 'தோணி' வரிகள் அருமை!!
வாழ்த்துகள்!!

Anonymous said...

தம்ப்ரீ "மலையாளம் எழுதப் படிக்கத் தெரிந்த தமிழ் பேசவேனும் தெரிந்த கேரளப் பெண் வேண்டும்" ன்னா இப்போதைக்கு பிரபுதேவா கழட்டிவிட்ட நயந்தாரா தான் ஃப்ரீயா இருக்கு சம்மதமா..,,இவன் லாரிக்காரன்

amas said...

A novel matrimonial ad :-))Best of Luck!

amas32

ஆனந்த் ராஜ்.P said...

விதி வலியதுதான்…

ஆனா இந்தளவு கோர்வையாக பெண் தேடும் படலத்தை அறியச் செய்யும் வித்தையையும் கொடுத்துள்ளதே…!

மரணிக்காததால் மரண அவஸ்தை அறியாதிருப்பினும்… இந்தச் சொல்லாடலுக்கும், கல்யாணத்திற்க்குமான தொடர்பு நினைவிற்கு வருவதை தவிர்க்கவியலவில்லை.

ஜவ்வாக இழுத்திருந்தாலும்… அதன் "தாக்கம்" உணரமுடியாத உச்சத்திற்கு பயணப்பட்டுவிட்டது "வேதாளத்தின்" எழுத்து.

மலையாளம் எழுதப்படிக்கத்தெரிந்த, தமிழும் படிக்க பேசத் தெரிந்த பெண்ணை நான் மணந்து கொண்டதால்… உமக்கொன்றும் விரைவிலேயே "வாய்க்கும்" என நம்புகின்றேன்.

மற்றபடி உடலை வளர்த்துக்கொள்ளவும். அனுபவஸ்தரின் அனுபவத்தை சிரமேற்க்கொள்வீர் …! ;-))

#வெகுஜனப்பத்திரிக்கைகளில் தங்களின் படைப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டதெனக்கு.

ஆனந்த் ராஜ்.P said...

விதி வலியதுதான்…

ஆனா இந்தளவு கோர்வையாக பெண் தேடும் படலத்தை அறியச் செய்யும் வித்தையையும் கொடுத்துள்ளதே…!

மரணிக்காததால் மரண அவஸ்தை அறியாதிருப்பினும்… இந்தச் சொல்லாடலுக்கும், கல்யாணத்திற்க்குமான தொடர்பு நினைவிற்கு வருவதை தவிர்க்கவியலவில்லை.

ஜவ்வாக இழுத்திருந்தாலும்… அதன் "தாக்கம்" உணரமுடியாத உச்சத்திற்கு பயணப்பட்டுவிட்டது "வேதாளத்தின்" எழுத்து.

மலையாளம் எழுதப்படிக்கத்தெரிந்த, தமிழும் படிக்க பேசத் தெரிந்த பெண்ணை நான் மணந்து கொண்டதால்… உமக்கொன்றும் விரைவிலேயே "வாய்க்கும்" என நம்புகின்றேன்.

மற்றபடி உடலை வளர்த்துக்கொள்ளவும். அனுபவஸ்தரின் அனுபவத்தை சிரமேற்க்கொள்வீர் …! ;-))

#வெகுஜனப்பத்திரிக்கைகளில் தங்களின் படைப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டதெனக்கு.

ILA(@)இளா said...

//தீவிர இலக்கியம் பெருமாபத்து/
இது கொஞ்சம் அதிகமாத் தெரியலை.


ஆனாலும் அவசரப்படக்கூடாதுய்யா.

Anonymous said...

பேயோனின் டச் உள்ளது. சிறந்த ஓட்டம். ரசித்தேன்.

Sankar P said...

> என்னைப் பூவாய்க் கண்களுக்குள் வைத்துத் தாங்கும் நல்ல

யார் பூவை கண்களுக்குள் வைத்துக் கொள்வார்கள் !? உவமை பொருத்தமாக இல்லையே !

------------

Charu style comment.

நான் தென் அமெரிக்க எழுத்தாளர்கள் பலரின் திருமணங்களையும் நேரில் கண்டு இரசித்திருக்கிறேன். ப்ரான்செவில் (France ) இருக்கும் ஒவ்வொரு திருமண மண்டபமும் எனக்கு அத்துபடி. எங்கு எந்த வைன் நன்றாக இருக்கும் என்று ஐரோப்பியர்கள் பட்டி மன்றம் வைத்தல் என்னை நடுவராக கூப்பிடும் அளவுக்கு என் அறிவு அதிகம். அதெல்லாம் இங்கு யாருக்கு புரிகிறது. அவ்வளவு தூரம் வேண்டாம் இங்கு இருக்கும் கேரளாவுக்கு சென்று பாருங்கள். நான் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று என் இரசிகர்கள் அன்னா ஹசாரே போல உண்ணா நோன்பு இருக்கிறார்கள். நிலைமை இப்படி எல்லாம் இருக்க, என் சீடனின் சீடன், வேதாளம் திருமணம் செய்து கொள்ள விழைந்து பெண் தேடுகிறானாம். ஒரு மரியாதைக்குக் கூட என்னிடம் சொல்லவில்லை. என்னதான் பாலக்காடு பையனாக இருந்தாலும், தமிழர் சகவாசம் கெடுத்து விட்டது அவனை. ஏன், என்னிடம் கேட்டால், நானெல்லாம் தேடிக் கொடுக்க மாட்டேனா ? இதுவே ஏன் பழக்கமாய் போய் விட்டது. நான் தேடித் தேடி உதவி செய்வதும், பின்னர் அவர்கள் என்னை வாடி வாடிப் போக வைப்பதும் என்று. இருந்தாலும், இந்த பாழாய்ப் போன மனசாட்சி விட மறுக்கிறது. இரண்டு ரெமி மார்ட்டின் இறங்கியவுடன் தயாள சிந்தனை, புதைத்து வைத்த டாஸ்மாக் சரக்கை போல பொங்குகிறது. அதனால், வேதாளம் நம்மிடம் கேட்காவிட்டாலும் நாம் அவருக்காக பெண் தேட வேண்டும். என் வாசகர்கள் நீங்கள் ஆளுக்கு எத்தனை பெண் தேடித் தரப் போகிறீர்கள். ஊட்டி நந்தகுமார் நீங்கள் ஒரு இருபது பெண்களாவது ஏற்பாடு செய்ய வேண்டும். [பார்த்திபன், உங்கள் கணக்கு என்ன? பாஸ்கர், நீங்கள் சொல்லும் கணக்கு என்ன? கண்ணன் (பெல்ஜியம்) போன்ற நண்பர்கள் பத்து பெண்களாவது தேடித் தர வேண்டும்]. எப்படியும் ஒரு லட்சம் பெண்கள் விண்ணப்பிப்பார்கள் என்று என் மனம் சொல்கிறது. குறைந்தது 50,000 . சிரிக்காதீர்கள், நான் திமுக வெற்றி பெரும் என்று சொன்ன போதும் யாரும் நம்பவில்லை. ஆனால் நான் விரும்பியபடிதான் நடந்தது.

[] - Taken from Charu's blog. Rest are all sondha karpanai.

You have written a very nice post. I loved it.

Anonymous said...

இணையத்தை இழந்து தவிப்பதற்கு சொன்னாயே ஒரு உதாரணம்,உன் தவிப்பு புரிகிறது!;-) வாழ்த்துகள் என்னும் ஒற்றைச் சொல்லுக்குள் உன் எழுத்தின் மீதான என் காதல் அனைத்தையும் இட்டு நிரப்புகிறேன்.வளர்க. :-)

Jill kamatchirajan said...

உனக்கு பெண் தேடணுமா? எல்லாம் எங்க தலைஎழுத்து :-) இவ்ளோ பெரிய கட்டுரை எழுதுனதுக்கு பதிலா .. கார்க்கிக்கு ஒரு sms அனுப்பிருந்த இந்நேரம் உனக்கு கல்யாணம் ஆகிருக்கும் ... #fact

Anonymous said...

தம்பி பெண்களுக்கும் புரிவது போல் எழுதவும் அப்பதான் பொண்ணு கிடைக்கும் :-) #யாழினி அப்பா

கார்க்கி said...

Too good. Right from the title

Karthikeyan V said...

“புகை, மது, எழுத்து.. நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு” என உங்களை நீங்களே அப்டேட் செய்து கொள்ளுங்கள். அருமை நண்பரே...

Prabu Krishna said...

பெண் கிடைத்தால் அவருக்கு இதை படித்துக் காட்டவும் :-)

Siva Subramani said...

கடிய நடையாய் இருந்தாலும் எளிதில் புரிகிறது...!!!
உங்களுக்கு பெண் கிடைத்ததும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.... :)

கலாகுமரன் said...

உங்களை விரும்பும் பெண்னா கவிதையை விரும்பும் பெண்னா ? அப்புரம் கவிதையை எந்த மொழியில் ரசிக்கோனும் ? ஏன்னா ரெண்டு லாங்குவேஜ் சொல்லிருக்கீங்க. அப்புரம் ரெண்டு லாங்குவேஜிலேயும் மாத்து கிடைக்கும் போது மண்டைல கைவச்சுகிட்டு உக்காரக்கூடாது. [சீரியஸ் ஜோக் இல்ல]