தீபா வெங்கட்டும், தேவிப்பிரியாவும் பின்னே நம்முட ஐகிருஷ்ஷும்இப்பதிவை ITSDB (Indian TV Seial Data Base) ஆக விளங்கும், அன்புள்ள அண்ணன் கேடிவி புகழ் ஐக்ரிஷ்(@ikrishS) க்கு டெடிகேட் செய்கிறேன்.

அதாகப்பட்டது, ஆரம்பகால தொண்ணூறுகளில் பெரிய கம்பிய வீட்டு மேல நட்டு வெச்சு கொஞ்சம் லெப்ட், கொஞ்சம் ரைட்டு சொல்லி கரகர பிக்சர்ல கொரகொர சத்தத்துல தூர்தர்ஷன் பாக்க ஆரம்பிச்சப்ப ஆரம்பிச்சுதுயா நம்மாளுக்க டிவிமோகம். கலர் டிவியும் வந்துட்டுது அதுக்குள்ளார. கேக்கவா வேணும். கிரிக்கெட் பாத்து தேசப்பற்று வளத்தாய்ங்க. வீட்டுல இருக்குறவங்களுக்கு சாப்புடுறது, தூங்குறது, புரணி பேசுறதுன்னு ஒரே மாதிரியா செஞ்சுகிட்டு இருந்த பொம்பளைங்களுக்கு ரொம்ப சந்தோசமா போயிட்டுது நாடகமெல்லாம் போட ஆரம்பிச்ச பொறவு. காசு சேத்தி வாரத்துக்கொண்ணும் மாசத்துக் கொண்ணுமா சினிமா பாத்து ஜொள்ளு வடிச்ச பசங்களுக்கு வெள்ளிக்கிழமையாப் பாத்து போட்டாங்கயா “ஒளியும் ஒலியும்”. குருவி அடிக்கிறேன், ஓடக்கா புடிக்கிறேன்னு வெய்யில்ல புழுதில சுத்தித் திரிஞ்ச வாண்டுக எல்லாம் சக்திமான் கிட்ட சரண்டர் ஆகிட்டாய்ங்க. அப்புறம் சன் டிவி வந்துச்சு. அவ்ளோதான். தமிழ்நாடு பத்தே வருசத்துல தனியா வல்லரசு ஆயிடுச்சுன்னா பாத்துக்கங்களேன்.


சன்டிவி வந்ததும் நாடகம் போட ஆரம்பிச்சாங்க. ஒரே கதை, ஒரு ஆறேழு வருசத்துக்கு ஓடும். நம்ம மக்கள் அவங்க வாழ்க்கையையும் சேர்த்து வாழ ஆரம்பிச்சாங்க. “பாரு.. அந்த XYZ நாடகத்துல வர்றவ எப்படி மாமியார பாத்துக்குறா. எனக்கும் வந்து வாய்ச்சிருக்குதே” ன்னு மருமகள்களைத் சாடை பேச ஆரம்பிச்சாங்க. மருமகள்களோ சீரியல் பாத்து “காயத்ரி கட்டியிருக்ற பச்ச சேலை அட்டகாசமா இருக்குது. எப்புடியாவது தீவாளிக்கு வாங்கிப்புடனும்” னு ஆசைப்பட்டது மட்டுமில்லாம, “அந்த நாடகத்துல அவுங்க தனிக்குடித்தனம் போயி ஜாலியா இருக்காங்க, நாமளும் போயிடலாம்” ன்னு தொல்ல குடுக்க ஆரம்பிச்சாய்ங்க புருஷம்மார்களுக்கு. ஆஞ்சு ஓஞ்சு போயி வர்ற ஆம்பிளைங்களுக்கு வெறுப்புத் தட்டுமா இல்லையா வாழ்க்கை மேல. சித்தே மைன்ட்ட மாத்தலாம்னு டிவி போட்டதுல. டிவில வகவகையா, ரகரகமா பொண்ணுங்களக்காட்ட (அட.. சீரியல்ல வர்ற ஹீரோயின்ஸ்ப்பா. அப்பவல்லாம் எப் டிவி பேமசாகல) “நீ பாட்டுக்கு கத்திகிட்டு இரு, ஆரு கேக்க போறா” ன்னு ரசிக்க ஆரம்பிச்சாங்க நம்ப நாயகிகளை.


தமிழ்சினிமா மாதிரி இல்லையா தமிழ் சீரியல் உலகம். தமிழ் சினிமா ஹீரோயின்களுக்கு மேக்சிமம் ரெண்டு மூணு வருஷம் தான் மார்க்கெட்டு. சீரியல்ல நடிக்கிறவுங்க அப்படி இல்ல. இவுங்கல்லாம் பாலிவுட் ஸ்டார் மாதிரி. எப்புடின்னா ராணி முகர்ஜி, பிரீத்தி ஜிந்தா, கஜோல் ல்லாம் இப்ப நடிச்சாலும் படம் ஹிட்டாகுதுல்ல, அந்த மாரிதான். இனி நம்ப சீரியல் சூப்பர் ஸ்டாரினிகளைப் பத்தி பாப்போம்..


என்னதான் சினிமா நடிகைகள் மார்க்கெட் போனபிறகு சீரியலில் வந்து போனாலும், சீரியல்ல மட்டுமே நடிக்கிற ஹீரோயின்களுக்கு எப்பவுமே மவுசுதான். இப்படியாக மக்கள் மனதில் முதலில் குடியேறியவர் காயத்ரி. தூர்தர்சனில் “ஓம் நமசிவாய” வில் பார்வதியாக வந்து பிறகு குடும்பம் காயத்ரியாகி மெட்டிஒலி சரோவாக மிகவும் ரசிக்கப் பட்டவர். அதற்குப் பிறகு மங்கை ஜீவா. சீரியலில் தொடங்கி பின்னர் சினிமாவில்(?) கொடிகட்டிப் பறந்தவர்.


சீரியல் உலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சீரியலென்றால் அது சித்தி தான். ராதிகா நடித்து ஒளிபரப்பான இந்த சீரியல் தான் 7.30 & 9 மணி ஸ்லாட்டுகளின் முக்கியத்துவத்தை உணர்த்திய சீரியல். வீட்டுப் பெண்கள் சமையல், வீட்டு வேலையெல்லாம் முடித்து ஆசுவாசமாக்கிக் கொள்ள பார்க்கும் சீரியலாகிப் போனது சித்தி 7.30 மணிக்கு. காலப் போக்கில் வேலைக்குச் செல்லும் ஆண்களும் வந்து பார்க்கும்படி 9 மணி ஸ்லாட்டுக்கு மாற்றப்பட்டது. சன்டிவி சீரியல்களின் இந்த சக்சஸ் ஃபார்முலா இன்று வரை தொடர்கிறது. சித்தியாக நடித்தவர் ராதிகாதான் என்றாலும் அனைவராலும் வெகுவாக ரசிக்கப் பட்டவர் பிரபாவதியாக வந்த யுவராணி. அதுவரை அவ்வளவு அழகான வில்லியை யாரும் பார்த்திருக்கவில்லை.


சித்தி 9 மணிக்குப் போனதும் 7.30 ஸ்லாட்டை எடுத்துக் கொண்டது அலைகள். இதில் வில்லியாகத் தொடங்கி இன்று அத்திப்பூக்கள் வரை சிறந்த கவர்ச்சி வில்லியாக இருப்பவர் அலைகள் ராணி. அலைகள், மயிலாப்பூர் சபாவில் தனியார் சேனல் சேனல்களுக்கான சிறந்த சீரியல் விருதைப் பெற்றது. மதியநேரத்து சீரியல்களும் அப்போது ஆரம்பித்திருந்தன. இன்றுவரையிலும் சிறந்த மதியநேரத்து சீரியல் என்றால் அது ஆடுகிறான் கண்ணன் தான். இதில் வந்த Title Song இன்றுவரை கேட்கப் படும் ஒரு சிறந்த பாடலாகும். இதில் வந்த நாயகி காயத்ரி பிரியாவும் வெகுவாக ரசிக்கப் பட்டார்.

புடவை உடுத்தி குடும்பப் பாங்காக வந்த நாயகிகளுக்கு மத்தியில் மாடர்னாக வந்து ரசிக்க வைத்தவர் அண்ணி மாளவிகா, சிதம்பர ரகசியம் சீரியலில். ஒரு ஆராய்ச்சியாளராக, மாடர்னாக நடித்திருப்பார். ஒரு காலத்தில் ராஜ் டிவியில் பேமசாகி ஓடிய கங்கா யமுனா சரஸ்வதி பாதியில் நிறுத்தப்பட கங்கா யமுனா சரஸ்வதி சங்கமம் எனும் சீரியல் பல ப்ளாஷ்’பேக்கு’களைக் கொண்டு ஓட்டப்பட்டது. சங்கமமும் தோல்விதான் என்றாலும், நர்மதா கதாபாத்திரத்தில் வந்த சுஜிதா ரசிக்க வைத்திருப்பார். இதற்கெல்லாம் பிறகு சூப்பர் ஹிட் அடித்த சீரியல் மெட்டிஒலி. முன்பே சொன்னதுபோல சரோ காயத்ரியிலிருந்து லீலா கதாபாத்திரத்தில் வந்த வனஜாவும், உமாவும் (விஜி கதாபாத்திரம்) வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்தனர். நிஜத்திலும் இவர்கள் இருவரும் சகோதரிகளே.இதற்குப் பிறகு கோலங்கள். தேவயானியின் என்ட்ரி. தேவயானியே கூட இருந்தாலும், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இன்றுவரை நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தீபா வெங்கட். தேவயானியின் தோழி உஷா கதாபாத்திரமாக வந்திருப்பார். ஹோம்லியான லுக், கோவப்பட்டால் கூட அழகாக இருப்பது, கவர்ச்சியை கையிலேடுக்காதது, திருச்செல்வத்துடனான நட்பு என தீபா வெங்கட் எடுத்த எல்லா ஆயுதமுமே ஹிட். சினிமா என்றெல்லாம் முன்னேறிப் போனாலும், சீரியல் சூப்பர் சூப்பர்ஸ்டாரினி முதலாமவர் தீபா வெங்கட் தான்.


அதிகம்பேர் பார்க்கும் இரவு நேர சீரியல்களில் அதிகம் நடிக்காமல், மதிய சீரியல்களில் மட்டுமே நடித்து தனக்கென ரசிகர்கள் ராஜ்ஜியத்தை நிறுவியவர் தேவிப்பிரியா. கண்கள் தான் இவருக்கு பெரும் பாசிட்டிவ். எந்தக் கதாபாத்திரத்தையும் உணர்ந்து நடிப்பது, டையலாக் டெலிவர் போன்றவை ரசிகர்களைக் கட்டிப் போட்டன. இன்றளவிலும் இவர் ஒரு சின்னத்திரை பானுப்பிரியாவாகக் கொண்டாடப் படுகிறார். இவர் இரண்டாவது சூப்பர்ஸ்டாரினி.இவர்களையெல்லாம் போன தலைமுறையாக்கிப் பார்த்தால், இத்தலைமுறையில் அடுத்த சூப்பர்ஸ்டாரினி இடத்திற்கு முன் நிற்பவர் நீலிமா ராணி. சினிமா, சீரியல் என தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருக்கும் மாடர்ன் மங்காத்தா.


சீரியல் நாயகிகளை பொதுவாக மூன்று Category களாக பிரிக்கலாம். சீரியல்கள் துவங்கிய காலத்தில், சினிமாவில் புகழ் பெற சீரியல்களில் நடித்தவர்களும் உள்ளனர். உதாரணமாக மீனா மனோரமாவுடன் நடித்த அன்புள்ள அம்மா சீரியலும், பானுப்ரியா நடித்த சக்தி, வாழ்க்கை, பொறந்த வீடா புகுந்த வீடா போன்ற சீரியல்களைச் சொல்லலாம். சினிமாவில் இவர்கள் ஏற்கனவே பிரபலங்கள்தான் என்றாலும் இந்த சீரியல்களே இவர்களின் கடைசி ரசிகர்கள் வரை இவர்களை எடுத்துச் சென்றது எனக்கூறலாம். இவர்கள் முதலாவது Category.

சினிமாவில் ஆண்டு அனுபவித்து அல்லது மார்க்கெட் இழந்து வருபவர்களின் இரண்டாம் இன்னிங்க்ஸ் இங்கேதான். உதாரணமாக நடிகர் ஸ்ரீமன் நடித்த கோகுலம் சீரியலில் ஸ்ரீவித்யா நடித்திருப்பார். இவரைத் தொடர்ந்து ராதிகா (சித்தி யில் துவங்கி செல்லமே வரை), சுவலட்சுமி(சூலம்) ஸ்ரீபிரியா- நிரோஷா (சின்ன பாப்பா பெரிய பாப்பா), தேவயானி (கோலங்கள்),  அபிதா (திருமதி.செல்வம்), ரம்யா கிருஷ்ணன்(தங்கவேட்டை, தங்கம்) இன்னும் பலரைச் சொல்லலாம். இவர்கள் இரண்டாம் Category.

சீரியலில் துவங்கி மக்களிடையே நல்ல பெயர் பெற்று பின்னர் சினிமாவில் குணச்சித்திர, காமெடி வேடங்களில் கலக்குபவர்களும் உண்டு. உதாரணமாக ரேணுகா(அயன்), தீபா வெங்கட் (தில், கண்டேன் காதலை), தேவதர்ஷினி (காஞ்சனா) இன்னும் பலரைக் கூறலாம். இவர்கள் மூன்றாம் Category.

இவர்களைத் தவிர மௌனிகா, சிங்கப்பூர் மஞ்சரி என அந்த சமயங்களில் ரசிகர்களைக் கொண்டு காணாமல் போனவர்களும் ஏராளம்.