டாப் 10 மலையாள படங்கள் 2012 - No. 10 - கிராண்ட் மாஸ்டர்‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ வகையறாப் படங்கள் ஏறக்குறைய நின்றே போய் விட்டன தமிழில். இப்போதெல்லாம் தமிழ் சினிமா எங்கிருந்தோ வெளிநாட்டில் இருந்து வந்து விஷக் கிருமி பரப்பும் டாங்-லீ’ஐயும், நடுக்காட்டிற்குள் தனியாளாக உக்கார்ந்து பாம் வைக்கும் தீவிரவாதியையும் கண்டு பிடித்து அழிக்கும் புரூஸ்-லீ, ஜெட்லீ, குங்ஃபூ படங்களுக்கு முன்னேறி விட்டது. தமிழில் மிகவும் நேர்மையான போலீஸ் அதிகாரிகளான வால்டர் வெற்றிவேல், துரைச்சாமி ஐ.பி.எஸ் போன்றோருக்கு விஆர்எஸ் வந்து விட்டதாலும், நாட்டைக் காக்கும் பொறுப்பு தற்போது எஞ்சி இருக்கும் அதிகாரிகளான சுரேஷ் கோபி, மம்மூட்டி, மோகன்லால் வசமுள்ளது. அந்த வகையில் லாலேட்டனுக்காக ஒருமுறை பார்க்கலாம் வகையறாப் படமிது.சந்திரசேகர், விவாகரத்தாகி நிம்மதியான வாழ்வை வாழ நினைக்கும் ஒரு போலீஸ் அதிகாரி. கொச்சி மாநகரில் குற்றங்கள் தடுப்பு சிறப்பு பிரிவின் தலைமைப் பொறுப்பாளர். விவாகரத்திற்கு பின் அமைதியாகவும் வாழ விரும்புவதால் ரிஸ்க் எடுக்காமல் தன் பணியை செய்து வருகிறார். அந்த சமயத்தில் கொச்சியில் மூன்று பெண்கள் கடத்தப் படுகிறார்கள். தனியாளாகச் சென்று மூவரையும் மீட்டு, கடத்தியவனைப் பிடிக்கிறார். ஆக, படம் தொடங்கி பத்து நிமிடத்தில் அமைதி விரும்பி மோகன்லால் மீண்டும் ஃபார்முக்கு திரும்புகிறார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு கடிதம் வருகிறது.

அந்தக் கடிதத்தில் ஒரு சவால். அதை எழுதியவன் இன்ன தேதியில் இன்ன இடத்தில் ஒரு சம்பவம் நிகழப்போவதாகவும், முடிந்தால் அதை தடுக்கவும் என்றும் சவால் விடுகிறான். இதே போல மூன்று சம்பவங்கள், மூன்று கொலைகள். அந்தக் கொலைகளுக்கு இடையேயான சம்மந்தத்தை (சம்மந்தம், ஃபாலோ மீ. சார் எங்கயோ போயிட்டீங்க சார் ~ அந்த சம்மந்தம் அல்ல) கண்டு பிடித்து நான்காவதாய் நிகழும் சம்பவத்தை எப்படித் தடுக்கிறார் என்பதே கதை.இந்த சம்பவங்களில் குறிப்பாக சந்திரசேகரை எதற்கு இழுக்கிறான், அவருக்கும் இந்தக் கொலைகளுக்கு உள்ள சம்மந்தம் என்ன? அதை எப்படி முறியடிக்கிறார் என்பதையெல்லாம் ஒரு செஸ் விளையாட்டு வீரன் அடுத்த 64 காய் நகர்த்தல்களையும் எப்படி ஊகித்து செயல்படுகிறானோ அது போல வழக்கில் அத்துணை சாத்தியங்களையும் கவனித்து விளையாடுகிறார். ஒரே ஒரு தவறான நகர்த்தல் கூட ஆட்டத்தை முடித்து விடும் என்பதைப் போல எதிராளி விட்டு வைக்கும் சில தடயங்களினால் ஆட்டத்தை முடிக்கிறார் மோகன்லால்.

நரேன், சமகால மலையாளப் படங்களில் நல்ல துணை நட்சத்திரமாகவும் மின்னுகிறார். மோகன்லாலுக்கு துணை நிற்கும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். பிரியாமணி, மோகன்லாலுக்கு மனைவியாகவும் வக்கீலாகவும் வருகிறார். ஒரு வழக்கில் போலீஸ்காரரின் மனைவியாக அல்லாமல், ஒரு வக்கீலாக தன் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார். தொழில் தர்மப்படி, அதர்மத்தை ஆதரிக்கிறார். சமீப காலமாக அமைதியான தோற்றத்தில் அடிக்கடி அனூப் மேனனை காண முடிகிறது. இதிலும் மன நல மருத்துவராகவும், பிரியாமணிக்கு தோழராகவும் வந்திருக்கிறார். பாத்திமா பாபு, ரோமா என அனைவரும் கதையில் வந்து போகிறார்கள்.

டாவின்சி-கோட் படத்திலிருந்து ஒரு கதாபாத்திரத்தைச் சுட்டு பாபுஆண்டனிக்கு கொடுத்திருக்கிறார்கள். பாதிரியார் சொல்லும் வேலைகளை செய்துவிட்டு தான் தவறு செய்ததாய் உணரும் ஒரு பாத்திரம். இருந்தாலும் வில்லனாக சித்தரிக்கப் பட்ட இந்தக் கதாபாத்திரத்தினூடே தான் கதை பயணிக்கிறது.

க்ளைமாக்ஸ், வழக்கம் போல வில்லனைக் கொல்ல வேண்டும் என்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளதுதான். என்னதான் ஒரு த்ரில்லர் படமென்றாலும் படம் மெதுவாகவே பயணிக்கிறது. லாலை அமைதி விரும்பியாக சித்தரித்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இசை, பாடல்கள், பின்னணி இசை போன்றவற்றையெல்லாம் பற்றிப் பேச ஒன்றுமில்லை.

செஸ் விளையாட்டில் ராணி ராஜாவைக் காக்கும், இதில் வைஸ்-வெர்சா. முன்பே சொன்னதுபோல, லாலேட்டனுக்காக ஒருமுறை பார்க்கலாம். 

1 comment:

கோவை நேரம் said...

நல்ல விமர்சனம்..தட்டதில் மரையாது....அப்படின்னு ஒரு படம் இருக்கே....அது விமர்சனம் வருமா...அந்த படம் பார்த்து ரொம்ப ரசிதேன்...எதிர்பார்க்கிறேன்...விரைவில் விமர்சனத்தை...