டாப் 10 மலையாள படங்கள் 2012 - No. 7 ஒழிமுறிஜெயமோகனால் எழுதப்பட்டு எடுக்கப்பட்ட படம். எழுத்தில் வந்திருந்தால் ஒரு சிறந்த நாவலாகி இருக்கும். திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து குமரியாகி கேரளத்தின் அந்தஸ்தை தொலைத்த ஒரு கிராமத்தில் 55 வயதான மீனாக்ஷிப்பிள்ளை, 71 வயதான தன் கணவர் தாணுப்பிள்ளையிடம் ஒழிமுறி (விவாகரத்து) கேட்கிறார். இருவருக்கும் ஒரே மகன் சரத். இந்த வழக்கில் தாணுப்பிள்ளைக்காக ஹாஜராகிறார் பாலாமணி. இவ்வளவு வயதிற்கு பின் ஒழிமுறி வேண்டி வந்திருக்கும் மீனாக்ஷிப் பிள்ளையின் மகன் சரத்திடம் பாலாமணி நட்பாகி வழக்கிற்கான காரணங்களை கேட்டறிகிறார். தன் தந்தை ஒரு பொல்லாதவர் என்றும், கோபக்காரர் என்றும் அதனால் தன் தாய் அனுபவித்தவை நிறைய என்றும் ஃபிளாஷ்பேக் விரிகிறது.


‘மல்லன்’ சிவன்பிள்ளைக்கும், அரண்மனை வாழ் காளிப்பிள்ளைக்கும் மகனாய்ப் பிறந்தவர் தாணுப்பிள்ளை. அதிகாரத்தை கையில் கொண்டு நடப்பவள் காளிப்பிள்ளை. மனைவி வேறொருவரை சேர்த்துக் கொண்டு தன்னை கைவிட காசு சேர்க்கும் பொருட்டில் ஒரு குஸ்தி சண்டையில் அடிபட்டு உயிரிழக்கிறார் சிவன்பிள்ளை. இதனால் ஏற்பட்ட வடு தாணுப்பிள்ளையை ஓர் ஆணாதிக்கவாதி ஆக்குகிறது. ஒரு குடும்பத்தில் கட்டுப்பாடு ஆணின் கையில்தான் இருக்கவேண்டும் என்று ஓரிடத்தில் சொல்கிறார் தன் மகனிடம். அதற்கு காளிப்பிள்ளையும் ஒரு காரணம். தன்னை மணந்து கொண்ட மீனாக்ஷியிடம் ரொம்பவே முரட்டுத்தனமாக இருக்கிறார். இவளும் தன் தாய் போல தான்தோன்றி ஆகிவிடக் கூடுமென்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்படியாக மீனாட்சி பல விதமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறாள். “அன்பு செலுத்தும் உரிமை அடிமைகளுக்கு இல்லை. அவர்களுடைய பணி எல்லாம் சேவை/வேலை செய்வது மட்டுமே” அப்படிப்பட்ட ஓர் அடிமையாகத்தான் தான் இருந்ததாக தன்னை அடையாளப் படுத்திக்கொள்கிறார் மீனாட்சி.

மனைவியிடம் இவ்வளவு குரூரமாக இருக்கும் தாணுப்பிள்ளை, மகனிடம் கண்டிப்பானவராக இருந்தாலும் உள்ளுக்குள் மிகுந்த நேசம் கொண்டவராக இருக்கிறார். ஆனால் தந்தையின் அன்பு எப்போதுதான் மகன்களுக்கு புரிந்திருக்கிறது? தந்தையை ஒரு கோபக்காரனாகவும், தாயை துன்புறுத்துபவனாகவும் கண்ட சரத்திற்கு அவர்மேல் எந்த ஒரு அபிமானமோ, பாசமோ இல்லை. “நீயும் ஒரு தாணுப்பிள்ளைதான்” என்று கோபப்படும் சரத்திடம் பாலாமணி சொல்லும்போது வெறுப்பாகி விடுகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் தன் தாய் நடந்த எல்லாவற்றையும் சொல்லும்போது உருகிப்போகிறார். “பத்து மாதம் சுமந்தால் எந்தப் பெண்ணும் தாகி விடலாம். ஆனால் உள்ளம் கனிந்தாலே ஒருவன் நல்ல தந்தை ஆகமுடியும்” தாணுப்பிள்ளை ஒரு நல்ல தகப்பன் என்று வாதக்காய்ச்சல் வந்த மகனைத் தூக்கிக் கொண்டு மருத்துவரிடம் ஓடி சரியாக்கும் தந்தையின் அன்பைப் பற்றி சொல்லுகிறாள்.

காளிப்பிள்ளை, ஒரு பெண் தன்னைத் தானே பார்த்துக் கொள்ளவேண்டும், பெண் என்பவள் பகவதி அவளுக்கு யாருடைய துணையும் தேவையில்லை என்று அதிகாரத்தை கையிற்கொண்டிருப்பவள். வீட்டை விட்டு வெளியே போகச்சொன்ன மகன் மீண்டும் கூப்பிடும்வரை வீட்டிற்குள் வராத வைராக்கியம், போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் உடன் பேசும் திமிர், இறக்கும் தருவாயில் மருமகளைத் திட்டிக் கொண்டே தன் மகன் நல்லவென்று சொல்லி இறக்கும் பாசம் என எல்லாக் காட்சிகளிலும் சபாஷ்.

“மனிதர்கள் குரூரர்கள் ஆவது வெறுப்பினால் அல்ல, அபரிமிதமான அன்பினாலாகும்” இந்த ஒரு வசனமே போதும் படத்தைப் பற்றிச் சொல்ல. தன் மனைவி தனக்கு எப்போதும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் எனும் அன்பே தாணுப்பிள்ளையை குரூரனாய் ஆக்கியது. இறுதியில் ஒழிமுறி கேட்டபின்பும் தன் கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவருக்கு பணிவிடை செய்கிறார் மீனாட்சி. தான் இறக்கும்போது யாருடைய மனைவியாகவும், அடிமையாகவும் இருக்க விருப்பமில்லை எனும் ஒரு காரணத்திற்காக 55 வயதில் விடுதலை கேட்பதும் ஒருவகை குரூரம் என்றாலும், அதுவும் மிகுந்த அன்பையே குறிக்கிறது.

மசாலா மயமாகி வரும் வரும் மலையாள சினிமா உலகில் நல்ல கதையாம்சம் கொண்ட இன்னொரு படம். இது நிச்சயம் பேசப்படும்.

No comments: