டாப் 10 மலையாள படங்கள் 2012 - No. 9 - செகண்ட் ஷோ


 ஒரு நடிகரின் வாரிசு, அட அது கூட வேணாங்க. ஒரு டாப் நடிகரின் அக்கா மகளின் சித்தி மகன் ஒரு படத்தில் நடித்தால் படம் எப்படி இருக்கும்? நாயகன் அந்த நடிகரிடம் ஆசி வாங்குவது போல ஒரு சீன். மாஸ் ஓபனிங் சாங், ரெண்டு குத்துப்பாட்டு, பஞ்ச் டயலாக், அதிரடி சண்டை, ஜோடியாக அப்போதைய மார்க்கெட் நிலவரத்தில் டாப் நடிகை. விஜய் டிவிக்கு விளம்பர உரிமை, படம் ரிலீசாவதற்கு முன்னாலிருந்து டைரக்டர் நாயகன் நாயகி சகிதம் பேட்டி என அதகளப்படும். மலையாளத்தில் கடந்த இரண்டு தலைமுறை மக்களை தன்வசப்படுத்திய ஒரு சூப்பர் ஸ்டாரின் மகன் நடித்து மேலே சொன்ன இத்யாதிகள் ஏதுமின்றி ஹிட் அடித்திருக்கும் படம் செகன்ட்-ஷோ.


இப்படம் வருடத்தின் ப்ளாக் பஸ்டர்களில் ஒன்று. மம்முட்டியின் மகன் தல்குர் சல்மான் லாலுவாக இதில் அறிமுகமாகி இருக்கிறார். லாலேட்டனுடனான மம்மூக்காவின் நட்பு இதில் தெரிகிறது. வழக்கம் போல கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான், வாரிசு பழிவாங்குவான், கூண்டோடு ஒரு கும்பலை அழிக்கும் கதை தான். ஜெயிலிலிருந்து ரிலீசாகி மழைக்கு ஒதுங்கி நிழற்குடையில் அருகிலிருக்கும் ஒருவனிடம் லாலு தன் கதையைச் சொல்வதாய் படம் ஆரம்பிக்கிறது.


தன் தாய் மற்றும் தோழன் குருடி உடன் வசிக்கும் லாலு, படிக்க முடியாமல், ஈவினிங் காலேஜ் போவதாகப் பொய் சொல்லி மணல் திருட்டுக் கும்பலில் டிரைவராகிறான். நண்பன் நெல்சனுக்கு ஏற்பட்ட பிரச்சினையில், அவனை அடித்தவர்களைத் தட்டிக்கேட்க செல்ல அந்த சமயத்தில் போலீஸ் மணல் திருட்டு வாகனத்தை பறிமுதல் செய்கிறது. வேலையற்றுப் போகிறான். அதன் பிறகு, சாவேர் வாவச்சனிடம் போய்ச் சேருகிறான். ட்யூ கட்டாமல் வாகனங்கள் ஒட்டித் திரிபவர்களின் வாகனங்களை அவர்களுக்குக் தெரியாமலேயே எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும் வேலை. தன் சகோதரனைக் கொன்றவனை கொல்லப் போகும் வாவச்சன் ஆள் மாற்றி இன்னொரு தாதாவான விஷ்ணு புத்தனின் அடியாளைக் கொல்கிறார். இதற்குப் பதிலாக வாவச்சனே கொல்லப் படுகிறார்.


இதற்குப் பழி வாங்கப் போகும்போது விஷ்ணுபுத்தனே தன்னிடம் வேலை செய்யப் பணிக்கிறான் லாலுவை. அடுத்த லெவல் கஞ்சா கடத்தல். ஒரு போலிஸ் அதிகாரி உதவியுடனும் கடத்துகிறார்கள். இடையில் நடக்கும் சம்பவங்களின் தொடர்ச்சியாக லாலு விஷ்ணுபுத்தனைக் கொல்கிறான். இறுதியில் லாலு டான் ஆகிறான். அதற்குப் பிறகான ட்விஸ்ட்டை படத்தில் காண்க.


இந்தப் படத்தின் முக்கிய அம்சமே, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து ப்ளாக் பஸ்டர் ஆகியிருப்பது தான். படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் தல்குர் சல்மானின் ஸ்க்ரீன் பிரசன்ஸ். ஹீரோயிசம், பஞ்ச் டயலாக் என எதுவுமில்லாமல் அமைதியாக அறிமுகமாகி பின்னர் பழி வாங்கும் படலம் தொடங்கி பின்னி பெடல் எடுக்கிறார். லோ-பட்ஜெட் டானாக சரியாக பொருந்தி இருக்கிறார். இந்தப் படம் இவருக்கு சரியானதொரு அறிமுகமாகி இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்ததும் என் நினைவுக்கு வந்தது அதர்வாதான். முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நன்றாக நடித்திருப்பார். படம் பிடிக்காதவர்களுக்கு கூட அதர்வாவை பிடித்திருக்கும். அதே போல்தான் இவரும்.


நாயகியாக கவுதமி நாயர், லாலுவிற்கு முறைப்பெண்ணாக வருகிறார். “ரவுடியை காதலிப்பதெல்லாம் தமிழ் சினிமாவில் தான் நடக்கும்” என வசனம் பேசுகிறார். இறுதியில் காதலைப் புரிந்து கொண்டு உடனிருந்தால் மட்டும் போதுமென மன்றாடுகிறார். இவரிடம் இருக்கும் பிளஸ், கண்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம்.


மேலும் இப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது நெல்சன் மண்டேலா அலியாஸ் குருடி. பண்ணும் சேஷ்டைகளும், நடிப்பும் மென்னகையை வர வைக்கிறது. கடைசியில் அநியாயமாக கொல்லப்பட்டு ஆறுதல்களையும் அள்ளுகிறார். ரோஹினி, இன்னபிற நட்சத்திரங்களும் ஓகே. படத்தை பார்த்ததும் தோன்றிய ஒரு விஷயம், ஏன் சார்! டான்’னா கோட்டு சூட்டு தான் போடணுமா? லுங்கி, பேன்ட் இதல்லாம் ஆகாதா. பில்லா பார்த்து ரொம்ப கெட்டு போயிருக்கிறார்கள் இயக்குனர்கள்.


எதிர்பார்ப்புகள் இல்லாமல், ஒருமுறை பார்க்கலாம் எனும் வகையறாப் படம். அதுவும் மலையாள சினிமாவின் அடுத்த தலைமுறையை ஆளப்போகும் தல்குர் சல்மானின் அறிமுகத்துக்காகவே ஒருமுறை நிச்சயம் காணலாம்.

No comments: