அன்புள்ள அதிகாரிக்கு...


அன்புள்ள காவல்துறை உயரதிகாரிக்கு,

நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். வள்ளுவநாட்டில் தங்களைப்போன்ற உயரதிகாரிகளுக்கு எந்தவிதமான நலக்கேடுகளும் இருக்க வாய்ப்பில்லை. ஐயா, நான் ஒரு புகார் அளிக்க தங்களைக் காண வந்தபோது தாங்கள் வேலைத் திரக்கில் இருப்பதாகச் சொல்லி என்னை அனுப்பி விட்டார்கள். ஒருமுறை இருமுறை அல்ல பலமுறைகள். சாதாரண மக்கள் என்னைப்போல் உயரதிகாரிகளைப் பார்ப்பது சாத்தியமில்லை இந்த நாட்டில் என்று உங்கள் உள்மனசு இப்போது சொல்லிக் கொண்டிருக்கலாம். அதனிடம் திரும்பச் சொல்லுங்கள் நான் சாதாரண மனிதன் அல்ல ஓர் எழுத்தாளன் என்று.

ஐயா முதலில் என்னைப்பற்றி சொல்லி விடுகிறேன். அப்போதுதான் என் புகாரும் வழக்கும் உங்களுக்குத் தெளிவாக விளங்கும். வள்ளுவநாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கியமான இரு-மொழி எழுத்தாளர் ஒருவர் “கண்ணே, உன்னைக் காணும்போது என் இளமையில் என்னைக் கண்டது போலே இருக்கிறதடா” என்றும்,  வள்ளுவநாட்டிலிருந்தே பிரெஞ்சுப்புரத்சி செய்யும் மற்றொரு எழுத்தாளர் “இவன் தான் என் எழுத்துலக வாரிசு” என்றும், உலக சினிமா, இலக்கியம், ஓவியம் இன்னபிற கலைகளையும் கரைத்துக் குடித்த மற்றொரு புகழ்பெற்ற எழுத்தாளர் “தமிழ் இலக்கிய உலகின் அடுத்த விடிவெள்ளி பிறந்து விட்டது” என்றும் என்னைப் பற்றி பதிவெழுதி வெளியிட சமயம் பார்த்து டிராஃப்ட்டில் வைத்துக் கொண்டிருக்கும் அளவு முக்கிமானவன் ஐயா நான்.

என்ன ஐயா அப்படிப் பார்க்கிறீர்கள். என்னைத் தெரியவில்லையா? என்னிடம் ஏதேனும் கேள்விகள் உள்ளனவா? கேளுங்கள்.... கேட்டீர்களா? இந்தக் கேள்வியை மட்டும் என் நண்பன் சித்திரபுத்தனிடம் கேட்டிருந்தால் உங்களை உண்டு இல்லை என்றாக்கி இருப்பான். நீங்கள் எப்பேர்ப்பட்ட அதிகாரியாக இருந்தாலும் அவனுக்குக் கவலை இல்லை. “என்னடா நான் எப்பேர்ப்பட்ட அதிகாரி என்னிடமே திமிராய்ப் பேசுகிறானே?” என்றுதானே நினைக்கிறீர்கள். உங்களுக்கு நான் ஒரு எழுத்தாளன் என்று புரியவைப்பதற்கான ஒரு சிறுமுயற்சி ஐயா இது. தமிழில் வாராத்திர பத்திரிகைகளில் உங்கள் கதையை கண்டதே இல்லையே? என்று தானே கேட்டீர்கள். உண்மையை சொல்லப்போனால் உமது இலக்கிய ஞானத்தைக் கண்டு சிலிர்க்கிறேன் ஐயா. இருந்தாலும், நாம் எந்த மாதிரியான சூழலில் வாழ்கிறோம்? வாராந்திர சஞ்சிகைகளில் கட்டுரைத்தனமான ஒரு கதை பிரசுரமாகி வந்தால் மட்டுமே எழுத்தாளன் என்று ஏற்றுக் கொள்ளும் இந்த சூழலை நினைத்தால் மிகக் கஷ்டமாக இருக்கிறது. பேசாமல் எஸ்பந்யோல் போய் விடலாமென்று கூட தோன்றுகிறது ஐயா.

இந்தக்கடிதத்தை எழுதுவதற்கான நோக்கம் இதுதான் ஐயா. எனக்கு ஒரு பிரச்சினை. அதை நீங்கள்தான் தீர்க்க முடியும். உங்களால் மட்டுமே அதற்கு ஒரு தெளிவு சொல்ல முடியும். அதிலுள்ள நெளிவு சுளிவுகளை ஆராய்ந்து குறைந்தபட்சம் எனக்கொரு நல்ல வழி சொல்லுவீர்கள் என்றே இந்த மடலை எழுதுகிறேன். பிரச்சினை பின்வருமாறு.

ஒரு நல்ல ஒரு காதல் கதை எழுத சமயம் பார்த்து குறிப்பெடுத்து பாதி முக்கால் வாசி எழுதி முடித்த களைப்பில் உறங்கிப் போனேன் நாள் கிழமை தெரியாத ஏதோ ஒரு நாளில். காலை எழுந்து பார்த்தால் கதையைக் காணவில்லை. என்னடா இவன் கிணற்றைக் காணவில்லை என்பது போல சொல்லுகிறானே, ஒருவேளை நம்மைக் கதையெழுத சொல்லிவிடுவானோ? என்றுதானே நினைக்கிறீர்கள். வள்ளுவநாட்டில் ஒருநாள் முதல்வர் கூட ஆகிவிடலாம், ஆனால் ஒரே நாளில் எழுத்தாளன் ஆவது மிகச் சிரமமய்யா. அந்தக் கஷ்டம் தங்களுக்கு வராதிருக்க அந்த அகிலாண்டேஸ்வரியை பிரார்தித்துக் கொள்கிறேன்.

கதையைக் காணவில்லை, திரும்ப எழுதுவதில் எனக்கொன்றும் பிரச்சினை இல்லைதான், இருந்தாலும் நடந்தது என்னவென்று தங்களிடம் சொல்ல வேண்டுமே. நான் உறங்கிப்போன சமயம், என் தங்கை அந்தக் கதையை கல்லூரிக்கு எடுத்துச் சென்றிருக்கிறாள். “பிறகென்ன, அந்த கதையை அவள் தோழி வாசித்திருப்பாள். உன் தங்கையிடம் உன் அலைபேசி எண் வாங்கி உனக்கு அழைத்து காதல் வயப்பட்டிருப்பாள்” என்பதுதான் தங்களின் தற்போதைய புன்னகைக்கு அர்த்தம் எனப் புரிகிறது ஐயா. தமிழ்ச் சூழல் சினிமா பார்த்து எவ்வளவு கெட்டுப் போயிருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. மேலும் இந்தத் தருணத்தில் என் ஆற்றாமையும் சொல்லிவிடத் தோன்றுகிறது ஐயா. இப்போதெல்லாம் பெண்கள் அப்கிரேட் ஆகி விட்டார்கள். கவிதைக்கெல்லாம் மயங்குவதே இல்லை. மேலும் இப்போதெல்லாம் யார் சார் எழுத்தாளனை காதலிக்கிறார்கள்?

அன்று கல்லூரியில் நடக்கவிருந்த கதைப் போட்டிக்காக எனது கதையை எடுத்துக் கொண்டுபோய் அவள் பெயரில் கொடுத்துவிட்டாள் என்தங்கை. ஏதோ அந்த போட்டிக்கான நடுவர் உங்களைப்போலவே கொஞ்சம் இலக்கியவாதி போல. என் கதைக்கு முதல் பரிசு ஐயாயிரம் பரிசை அறிவித்து விட்டார். ஒரு நோபல் பரிசுக்கான இலக்கியத்தை வெறும் ஐயாயிரத்திற்கு விற்றது எனக்கு சுரீரென்றாலும் அப்போதைய சிக்கலில் அது பெரிய தொகையே. தாய்க்கு அடுத்ததாக தங்கைகளே உலகில் நல்லவர்கள், அதனால்தான் எழுதப்படாத சாசனப்படி பரிசுத் தொகையில் பெரும்பங்கை எனக்குக் கொடுத்து விட்டாள். அவளுக்குத் தேவை அவள் பெயரில் ஒரு நற்சான்றிதழ் மட்டுமே.

இந்தச் சமயத்தில் என் மனக்குமுறலை உங்களிடம் சொல்லியே ஆகவேண்டும். இப்படித்தான் என் சின்னஞ்சிறு படைப்புகள் சிலவற்றை வாராந்திர பத்திரிகைகளுக்கு அனுப்பினேன் வேறொரு பெயரிட்டு. அவர்களும் அதை பிரசுரித்து இங்கே சொல்ல கூச்சப்படும் ஒரு தொகையை சன்மானமாக அனுப்பினார்கள். அத்தொகை இரண்டு நாட்களுக்கான சிகரெட்டுக்குத்தான் போதுமானதாக இருக்கும். ஆனால் பாருங்கள் கல்லூரியில் பரிசோ ஐயாயிரம். மாதவன் நடித்த தம்பி படம் பார்த்திருக்கிறீர்களா ஐயா? அதில் வரும் மாதவன் போல “நான் இப்ப என்ன செய்ய?” என்று கத்தவேண்டும் போல் இருக்கிறது. மற்ற மனுக்களைப் போலல்லாமல், இக்கடிதத்தை நீங்கள் பொறுமையாக படித்திருப்பீர்கள் என்றால் இச்சமயம் உங்களுக்குள் ஒரு கேள்வி வரும். அதை தீர்க்கவேண்டியது என் கடமை. “பத்திரிகையில் வந்தால்தான் எழுத்தாளனா என்றெல்லாம் பேசினானே, இப்போது பத்திரிக்கை தரும் சன்மானம் குறைவு என்று புலம்புகிறானே?” என்றுதானே எள்ளி நகைக்கிறீர்கள். இப்படிக் கூட மாற்றிப்பேசவில்லை என்றால் என்னை இலக்கியவாதி என்று எப்படி ஏற்றுக் கொள்வீர்கள் நீங்கள். மேலும், இது உங்களுக்கு புதிதாகப் படுமாயின், நீங்கள் இன்னும் தமிழிலக்கிய சூழலை நன்கு அறியாதவர் என்றே பொருள்படும்.

பத்திரிகைகளை மாற்றமுடியாது தான் இருந்தாலும் என் சிகரெட் செலவுக்கு அது போதுமாயிருக்கிறது. இருந்தாலும் எனக்கு வேறொரு சிந்தனை தோன்றி இருக்கிறது ஐயா. வள்ளுவநாட்டின் மொத்த கல்லூரி மாணவர்களுக்கும் போட்டிகளின்போது கதை எழுதி சப்ளை செய்யலாமென்று இருக்கிறேன். ஒரு கதைக்கு ரூபாய் ஆயிரம் என்று விலையும் நிர்ணயித்து இருக்கிறேன். வரும் பரிசுத்தொகையை அவர்களுடன் சரிபாதியாக பிரித்துக் கொள்ளவும் முடிவெடுத்திருக்கிறேன். இதனால் நான் சொல்ல வருவது, கதையைக் கொடுத்தாலும் அதன் காப்புரிமை, அதாவது புத்தககண்காட்சி வரும்போது புத்தகமாக போட்டு காசு பார்க்கும் உரிமை எனக்கு மட்டுமே. இதில் ஏதாவது சட்டசிக்கல் வருமா என அறிய ஆவல் ஐயா. கதையை வாங்கிச் சென்றவர்கள் கதைக்கு உரிமை கொண்டாடினால் என்ன செய்யலாம் என்பது போன்ற என் ஐயங்களுக்கு தீர்வு சொல்லுவீர்கள் என காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,
வள்ளுவநாட்டின் தன்னிகரில்லா எழுத்தாளன்
சித்தன்நம்பி

5 comments:

குழந்தபையன் said...

காதல் வயப்பட வக்கில்லாத எழுத்தாளனின் கையாலாகாத பின்னூட்டம் இது என்று சொல்லி கொள்ள விரும்புகிறேன் ஐயா

அரசன் சே said...

அந்த அதிகாரி இந்நேரம் உடுப்புகளை கழட்டி வைத்துவிட்டு ஊரைவிட்டே போயிருப்பார் என்று ..நம்புவோமாக .

ராம்குமார் - அமுதன் said...

மிகவும் சரி... சோமாலியா நாட்டிலெல்லாம் ஒரு வார்த்தையை மொழிபெயர்ப்பதற்கு நமது ஊர் காசில் ஒரு கோடி ரூபாய் கேட்கிறார்கள்... ஆனால் நம்மூரில் சொந்தமாய் எழுதும் எழுத்தாளனுக்கு இந்த சமூகம் தரும் மரியாதையென்ன....இதனை எடுத்துக் காட்டிய வகையில் ஒரு கொண்டாட்டமான பதிவு இது தம்பி :) வாழ்த்துகள்...

Gnanasekar said...

அருமையான பதிவு..

மகுடி said...

“தமிழ் இலக்கிய உலகின் அடுத்த விடிவெள்ளி பிறந்து விட்டது” என்றும் என்னைப் பற்றி பதிவெழுதி வெளியிட சமயம் பார்த்து டிராஃப்ட்டில் வைத்துக் கொண்டிருக்கும் அளவு முக்கிமானவன்".... அற்புதம் நண்பா... யார் எழுதி வைத்திருக்கிறார்களோ இல்லையோ, நான் எழுதியிருக்கிறேன்... அந்த சித்திரபுத்தன் யாரு???