துரோகத்தின் இருள் படிந்த வீடு


சிலநாட்களாகவே வீட்டில்
திருடுபோகிறது
இரகசிய ஆராய்ச்சிகளினால்
அது ஒரு பூனை என்று கண்டறிந்தேன்
எரியும் கண்களைக் கொண்ட
கருப்பு நிற பூனையது
என் உறக்கத்துக்கு பின்
நாளைக்கான பாலை
அபகரித்து விடுகிறது
எனதான ரகசியங்களையும் சேர்த்தே

விஷம் கலந்து வைத்தேன்
எந்தன் ரகசியங்களில்
மறுகாலை பால் தரையில்
கொட்டிக்கிடந்தது கண்டதிர்ந்தேன்
இனி
நட்பாவது தவிர
வேறு வழியில்லை

பூனைக்காக காத்திருக்கத் துவங்கினேன்
என் விழித்திருப்பை உணர்ந்து
அதன் வருகை சில நாட்களில்லை
பின்னொரு நாள் என்னையது
எதிர்கொள்ளத் துணிந்து
புன்னகையுடன் வரவேற்று
அதற்கான உணவைப் பரிமாறினேன்
அது நம்பும் பொருட்டு
நானும் கொஞ்சம் அருந்தினேன்

அதன் பின்னர்
மெதுவாக நெருங்கியெந்தன்
கால்களை வளையவரத்
துவங்கியது
கைகளிலெடுத்த போது
நம்பிக்கையின்மையின் நகங்கள்
கூராக இருந்தன

பின்னொரு நாளில்
மரணத்தின் வலையிலிருந்து
மீட்டு அதன்
நம்பிக்கைக்கு பாத்திரமானேன்

இப்போதெல்லாம்
என்னருகில் படுத்துக்கொள்ள
அது
தயங்குவதேயில்லை
அதன் நகங்கள் முழுவதும்
மழிக்கப்பட்டு விட்டன

இவையெல்லாம் கடந்த ஓரிரவில்
அது இறந்து கிடந்தது
என் ரகசியங்களைக்
காக்கும் பொருட்டு

தற்போது
ரகசியங்கள் காக்கப்பட்ட
எனது அறையை வியாபித்திருக்கின்றன
நம்பிக்கையின் இளஞ்சூடும்
துரோகத்தின் இருளும்
கொஞ்சம்
விஷம் கலந்த பாலின் வீச்சமும்.
n  வண்ணநிழலன்


நடத்தலின் பொருட்டு


இந்த சாலைகளில் நடப்பவர்கள் யாரும்
வெறுமனே நடப்பதேயில்லை.

மகளொருத்தி கைபிடிக்க
அவளெதிர்காலம் நினைத்து நடக்கிறாள்
தாய். மகளுக்கோ
டோராபுஜ்ஜியின் நினைவு.

நட்சத்திரங்களை பதித்தாற்போல்
கண்கொண்டவளை மணவாட்டியாக்க
அவள் பின்னால் நடக்கிறான் ஒருவன்
ஒருவன் தொடர்வதையறிந்து
யாரவனென பயந்து நடக்கிறாளவள்.

தங்கையின் பிரசவ செலவின் நினைவு
கணவனுக்கு. தான் கேட்ட சேலை
வராமல் போய்விடுமோவெனும் ஏக்கம்
கைகோர்த்துடன் செல்பவளுக்கு.

தேர்வு பயத்தில் நடக்குமொரு கூட்டம்
வறுமையொழிக்க நடக்குமொரு கூட்டம்
இன்னும் பல்வேறு எண்ணங்களூடே நடக்கும்
பாதசாரிகள் பலர்

நடத்தலின் பொருட்டு நினைக்கவும்
நினைத்தலின் பொருட்டு நடக்கவும்
எல்லோருக்கும் ஏதோ ஒன்று
இருந்துகொண்டே தானிருக்கிறது!
                 -- வண்ணநிழலன்


புரிதல்
அவளுக்கு பொழுதுபோக்கு
சமையலும் என்னைக் கொஞ்சுதலும்தான்
எனக்கு வாசிப்பு பிடிக்கும்

அன்றொருநாள் அவளென்னை
பின்னாலிருந்து கட்டியணைத்தபோது
ஒரு முக்கியமான கட்டுரையைப்
படித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி
தவிர்த்தேன்

எப்போதோ
சாப்பாட்டு மேஜையிலமர்ந்தவாறு
என்னை மிகவும் பாதித்த 
கவிதையொன்றைச் சொன்னேன்
விளங்கவில்லை என்றவள் சொல்ல
ஞானசூனியம் என்று திட்டி
பாதிச் சோற்றில் கைகழுவினேன்

பின்னெப்போதோ
படுக்கைக்கென்னை அழைத்தபோது
வலைத்தளங்களில்
மூழ்கிக் கிடந்தேன்

ஒருநாளும் சமையலின் சுவையை
இவை பாதித்ததில்லை

பிறகொரு நாளின்
உதாசீனப் படுத்துதலின் உந்துதலும்
நிராகரிப்பின் வலியும் கொண்டவள்
விட்டுச் சென்றுவிட்டாள்
அன்றைய பிரச்சினை நினைவிலில்லை
ஆனால்
அன்றைக்கு படித்துக் கொண்டிருந்த
நாவல் தமிழின் மிக முக்கியமான
படைப்பாகும்

இப்போது நான்
கைகளைத் தூக்கவியலா கட்டுகளுடன் 
அனுமதிக்கப் பட்டிருக்கிறேன்
பினாயில் நெடி தூக்கும் ஒரு
மருத்துவமனையில்

ஒரு இலையுதிர்வதைப் போல
ஒரு பறவை பறப்பதைப் போல
ஒரு பூனையின் பதுங்குதல் போல
ஒரு சிறு விபத்து

கண் விழித்தபோது
அருகமர்ந்திருந்தாள்
வெற்றிப் புன்னகையா
இரங்கற் பார்வையா என
ஊகிக்கவில்லை 
அவள் கண் நோக்க
தோற்றிருந்தேன்

தாகத்திற்கு கொஞ்சம்
நீர் கொடுத்தவள்
என்னைக் கைத்தாங்கலாக
தூக்கியமர்த்தி
ஒரு புத்தகத்தை 
வாசிக்கத் துவங்கியிருந்தாள்.
                   -- வண்ணநிழலன்

கவிதைகள் வாசிக்க ஆரம்பித்த பிறகு நான் எழுதும் முதல் கவிதை இது. மிகப் பிடித்த மனுஷ்யபுத்திரனின் தாக்கம் இருக்கும் என எனக்கே தெரிகிறது. என்னையும் இப்படியெல்லாம் வாசிக்க/எழுத தூண்டிய லதாமகன் & சிஎஸ்கே இருவருக்கும் நன்றிகள் பல.