புரிதல்
அவளுக்கு பொழுதுபோக்கு
சமையலும் என்னைக் கொஞ்சுதலும்தான்
எனக்கு வாசிப்பு பிடிக்கும்

அன்றொருநாள் அவளென்னை
பின்னாலிருந்து கட்டியணைத்தபோது
ஒரு முக்கியமான கட்டுரையைப்
படித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி
தவிர்த்தேன்

எப்போதோ
சாப்பாட்டு மேஜையிலமர்ந்தவாறு
என்னை மிகவும் பாதித்த 
கவிதையொன்றைச் சொன்னேன்
விளங்கவில்லை என்றவள் சொல்ல
ஞானசூனியம் என்று திட்டி
பாதிச் சோற்றில் கைகழுவினேன்

பின்னெப்போதோ
படுக்கைக்கென்னை அழைத்தபோது
வலைத்தளங்களில்
மூழ்கிக் கிடந்தேன்

ஒருநாளும் சமையலின் சுவையை
இவை பாதித்ததில்லை

பிறகொரு நாளின்
உதாசீனப் படுத்துதலின் உந்துதலும்
நிராகரிப்பின் வலியும் கொண்டவள்
விட்டுச் சென்றுவிட்டாள்
அன்றைய பிரச்சினை நினைவிலில்லை
ஆனால்
அன்றைக்கு படித்துக் கொண்டிருந்த
நாவல் தமிழின் மிக முக்கியமான
படைப்பாகும்

இப்போது நான்
கைகளைத் தூக்கவியலா கட்டுகளுடன் 
அனுமதிக்கப் பட்டிருக்கிறேன்
பினாயில் நெடி தூக்கும் ஒரு
மருத்துவமனையில்

ஒரு இலையுதிர்வதைப் போல
ஒரு பறவை பறப்பதைப் போல
ஒரு பூனையின் பதுங்குதல் போல
ஒரு சிறு விபத்து

கண் விழித்தபோது
அருகமர்ந்திருந்தாள்
வெற்றிப் புன்னகையா
இரங்கற் பார்வையா என
ஊகிக்கவில்லை 
அவள் கண் நோக்க
தோற்றிருந்தேன்

தாகத்திற்கு கொஞ்சம்
நீர் கொடுத்தவள்
என்னைக் கைத்தாங்கலாக
தூக்கியமர்த்தி
ஒரு புத்தகத்தை 
வாசிக்கத் துவங்கியிருந்தாள்.
                   -- வண்ணநிழலன்

கவிதைகள் வாசிக்க ஆரம்பித்த பிறகு நான் எழுதும் முதல் கவிதை இது. மிகப் பிடித்த மனுஷ்யபுத்திரனின் தாக்கம் இருக்கும் என எனக்கே தெரிகிறது. என்னையும் இப்படியெல்லாம் வாசிக்க/எழுத தூண்டிய லதாமகன் & சிஎஸ்கே இருவருக்கும் நன்றிகள் பல.


7 comments:

குழந்தபையன் said...

சார் கவிதை நல்லா இருக்கு... இந்த மாதிரி அனுபவமில்லா ஏரியாவுல வார்த்தை கோர்ப்புகள் ஆச்சர்யப்படுத்துகிறது...

Azhagesan Pazhanigurusamy said...

Awesome!!!

துருவன் said...

கவிதையா குறுங்கதையா என குழப்ப நிலை கடைசி வரை இருந்தது. .ஆயினும் அதை மறக்க வைத்து மனம் கவர்ந்தது கரு. .
சாதாரண விவரிப்பு வரிகளாய் அல்லாமல் காலம் சார்ந்த நிகழ்வுகள் நல்ல முயற்சி. .குறிப்பாக முடிவு. .அவள் கவிதை படிக்க ஆரம்பித்த விதம். .திரைப்பட முடிவு போல் பரவசிக்கிறது. .
சுற்றத்தின் விவரிப்பு திரு மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் வெகுவாகவே காணப்படாது. .உணர்வுகளின் பிரதிபலிப்பின் விவரிப்பே அதிகம். .
எனக்கு இந்த முயற்சி பிடித்திருக்கிறது. .
இலகுவான ஆனால் உணர்வுகள் பொதிந்த மனக் கீற்றின் மொழிபெயர்ப்பு என நான் அவதானிக்கிறேன். .
முயற்சி தொடரட்டும். .
நல்ல மனம் கவர்வன தொடர்ந்து வருமாயின் நுகர்ந்து மகிழ்ந்து பகிர ஆவல். .
. .

jroldmonk said...

கவிதைன்னு சொல்லிட்டு கதையே எழுதிட்டீங்க கவிஞர் தம்பி ;-) நாட் பேட்.

SHAN Shylesh said...

"ஒரு புத்தகத்தை வாசிக்க கொடுத்தாள்" என்று தானே முடியணும் :)))).

அற்புதம் மாப்பி. உன் வளர்ச்சியை படிப்படியாக பார்க்கிறேன். வாழ்த்தூஸ்!

amas said...

ரொம்ப ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு வருடத்திற்குள்ளாகவே நல்ல முதிர்ச்சி - எழுத்தில். தொடர்ந்து எழுதி நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லும் திறனும் பெற என் வாழ்த்துகள்!

amas32

Sasikala Jagannathan said...

awesome.. too cute and sweet..