துரோகத்தின் இருள் படிந்த வீடு


சிலநாட்களாகவே வீட்டில்
திருடுபோகிறது
இரகசிய ஆராய்ச்சிகளினால்
அது ஒரு பூனை என்று கண்டறிந்தேன்
எரியும் கண்களைக் கொண்ட
கருப்பு நிற பூனையது
என் உறக்கத்துக்கு பின்
நாளைக்கான பாலை
அபகரித்து விடுகிறது
எனதான ரகசியங்களையும் சேர்த்தே

விஷம் கலந்து வைத்தேன்
எந்தன் ரகசியங்களில்
மறுகாலை பால் தரையில்
கொட்டிக்கிடந்தது கண்டதிர்ந்தேன்
இனி
நட்பாவது தவிர
வேறு வழியில்லை

பூனைக்காக காத்திருக்கத் துவங்கினேன்
என் விழித்திருப்பை உணர்ந்து
அதன் வருகை சில நாட்களில்லை
பின்னொரு நாள் என்னையது
எதிர்கொள்ளத் துணிந்து
புன்னகையுடன் வரவேற்று
அதற்கான உணவைப் பரிமாறினேன்
அது நம்பும் பொருட்டு
நானும் கொஞ்சம் அருந்தினேன்

அதன் பின்னர்
மெதுவாக நெருங்கியெந்தன்
கால்களை வளையவரத்
துவங்கியது
கைகளிலெடுத்த போது
நம்பிக்கையின்மையின் நகங்கள்
கூராக இருந்தன

பின்னொரு நாளில்
மரணத்தின் வலையிலிருந்து
மீட்டு அதன்
நம்பிக்கைக்கு பாத்திரமானேன்

இப்போதெல்லாம்
என்னருகில் படுத்துக்கொள்ள
அது
தயங்குவதேயில்லை
அதன் நகங்கள் முழுவதும்
மழிக்கப்பட்டு விட்டன

இவையெல்லாம் கடந்த ஓரிரவில்
அது இறந்து கிடந்தது
என் ரகசியங்களைக்
காக்கும் பொருட்டு

தற்போது
ரகசியங்கள் காக்கப்பட்ட
எனது அறையை வியாபித்திருக்கின்றன
நம்பிக்கையின் இளஞ்சூடும்
துரோகத்தின் இருளும்
கொஞ்சம்
விஷம் கலந்த பாலின் வீச்சமும்.
n  வண்ணநிழலன்


7 comments:

நாயோன் said...

மச்சி! செம...
குறிப்பாக கடைசி பாராவில் வைத்திருக்கும் ட்விஸ்ட் அருமை!

Manoj Reuben said...

கவிதையோட சாரம் ரொம்ப நல்லாயிருக்கு! ஆனால் நாம் உரையிலேயே எழுதிப்பழகிவிட்டதால் கவிதைச்சுவை கிடைக்க பல புதிய வார்த்தைகளையும், சிறு சிறு வார்த்தையமைப்புகளும் உதா: உவமைகள், உவமேயங்கள் இன்னும் பலசுவைகளை கொண்டுவந்தால் இன்னும் நன்றாயிருக்கும். கவிதைக்கு வரும்போது, அப்பூனையை எதற்காக கொன்றீர்கள் என்ற காரணத்தை தெரிவிக்கவில்லை. அதை வாசகர்களின் விருப்பத்திற்கே விட்டுவிட்டீர்கள். அதுவே இப்படைப்பின் பலம்! :-)

-மனோஜ் என்கிற @vandavaalam

thamizhparavai said...

நல்லா இருக்கு வண்ணநிழலன்...
எனக்குப் பிடித்திருந்தது....!

Jeeno said...

nice..bro.

Anonymous said...

நல்லதொரு கவிதை முயற்சி.

வஞ்சம் என்று ஒன்றை மனதில் வைத்து விட்டால், எதிராளி நம்மிடம் தஞ்சம் என்று நின்ற போதும் கொஞ்சமும் இரக்கமின்றி நஞ்சை வைக்கும் என்பதைச் சரியாகச் சொல்லியிருக்கிறாய்.

amas said...

நண்பன், விரோதி, நம்பிக் கழுத்தறுபடுபவன் என்று பலதரப்பட்டப் பாத்திரங்களை ஒரு பூனையின் வடிவத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள். நன்றாக உள்ளதது. தொடர்ந்து எழுதுங்கள்.

amas32

Anonymous said...

nalla irukkune...