குரல் தேவதை


பெண்களிடத்தே முதலில் ரசிக்கும் குழந்தைத்தனமெல்லாம் போகப்போக கிறுக்குத்தனமாகி விடுகிறது. இது நான் எப்போதோ எழுதிய ஒரு வாசகம். நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்களையெல்லாம் துர்பாக்கியவான்கள் என்பேன். குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே இருக்கமுடியாது. அதனால்தான் பெண்களுக்கு குழந்தைத்தனத்தை வைத்துப் படைத்திருக்கிறது இயற்கை! குழந்தைகள் முன் தோற்கும் யாவரும் பெண்களின் குழந்தைத்தனத்தை ரசித்தே செல்வர். என்னளவில் பெண்களுக்காக சொல்லி வைக்கப்பட்ட அச்சம் மடம் நாணம் மற்றும் இன்னபிற இவற்றில் என்னைக் கவர்வது அவர்களின் குழந்தைத்தனமே. இத்தகையர் நிச்சயம் கனிவுள்ளம் கொண்டவராகவே இருப்பர், பேச்சிலும் செயலிலும். தம் புன்னகையினாலோ துடுக்குத்தனத்தாலோ எத்தகைய சூழலிலும் மனதிலொரு வசந்தத்தை, ஒரு ரோஜாமொட்டின் வாசனையை ஏற்படுத்திச் செல்வர்.

பொதுவாகவே நான் இத்தகைய பெண்களின் ஆராதகன். ஒருபோதும் அவர்களை நெருங்கி எவ்விதத்திலும் அவர்களுக்கு இடையூறாக இருக்க விரும்பாதவன். தன்னைச்சுற்றிலும் அதிகப்படியான ஆண்களின் கூட்டம்,நண்பர்களாகவே இருந்தால் கூட, அது அவர்களின் இயல்பைப் பாதிக்கும். இத்தவறை எப்போதும் செய்ய விரும்பாதவன் நான். அவர்களின் முகம் பார்க்கும் தூரத்தில் குரல் கேட்கும் தூரத்தில் யாரோவாக இருந்தால் போதுமெனக்கு. ஆனால் எக்காரணத்திலும் அவர்களின் அந்த மழலை மொழியையோ செயலையோ தவறவிட விரும்பாதவன்.

இதுபற்றி கதைக்கும் பல நண்பர்களும் சொல்வது ஒன்றுதான். நிஜவாழ்க்கைக்கு ஒருபோதும் உதவாதிந்த குழந்தைத்தனம். சரியாகக்கூட இருக்கலாம். அந்த வார்த்தைகளைக் கேட்கும் பொழுதுகளின் நான் யாசிப்பது ஒன்றாகத்தான் இருக்கும். இவர்களுக்கு பெண்குழந்தைகளை கொடுத்தருளும் இயற்கையே! பிறகேனும் புரிந்துகொள்வார்கள் என்நிலையை. சட்டென்று மாறும் வானிலையை யாரேனும் உணர்ந்திருக்கிறீரா? ஏதோ ஒரு கடும்சொல்லால் பனித்த கண்களுடன் எதையோ பார்த்து புன்னகைத்து முந்தையதை மறந்த அந்த பொழுதுகளில் அனல்காற்றுடல் ஆலங்கட்டி பொழிந்தது எனக்கு. கொஞ்சம் முன் சென்று பார்த்தேன், இன்னொரு குழந்தை அந்தப் பெண்ணுக்கு பழிப்பு காட்டிக் கொண்டிருந்தது. நான் கண்ட அழகியல் காட்சிகளில் இதுவும் ஒன்று.

இத்தகைய தேவதைகள் சிலரை வாழ்க்கை ஒருமுறை மட்டுமே நம்மைக் கடக்க செய்து நினைவுகளைக் கொடுத்துச் செல்லும். இதற்கான வருத்தம் இருந்தாலும், காலஓட்டத்தில் இதுவும் ஒரு பகுதியே. எதோ ஒரு பயணத்தில் பேருந்தில் ஒரு கூட்ட நெரிசலில் அமர்திருக்கும் நம்மிடம் ஒரு குழந்தையையோ குட்டி தேவதையயோ கொடுத்து விடுவார்கள்.அக்குழந்தையை மடியில் வைத்திருக்கும் தருணம் உலகில் ஒரு பெருஞ்செல்வந்தனாக நம்மை உணரச்செய்யும். நிமிட முள் நொடி முள்ளின் வேகத்திலோடி பயணம் முடியும். அந்தப் பயணத்தில் எந்தத் தருணத்திலாவது அந்தக் குழந்தையின் ஒரு புன்னகையை வென்றிருப்பீர்களேயானால் உலகின் பெரும் அதிர்ஷ்டசாலி நீங்கள்தான். பயணம் முடிந்தாலும் அக்குழந்தையின் இளஞ்சூட்டை எக்காலத்திலும் மறக்க முடியாது.

தோற்றத்திலல்ல, செய்கையிலல்ல குரலிலும் உண்டு தேவதைகள். அவர்களின் மொழி தரும் இன்பம் அலாதியானது.இன்பத்தின் யாழிசை அது. துன்பத்தின் நாளங்களை மரத்துப்போகச்செய்யும் விசையது. என்னை மிதக்கச்செய்த ஒரு எதிர் விசை. காதுவழி நுழைந்து உடலை சில்லென்றாக்கிய துயரப்பனி. என் நினைவுகளில் அழுந்தப் பதிந்து போன ஒரு அசரீரி. பிறந்த குழந்தையின் பாதங்களின் மென்மையைக் கொண்டிருந்தது அக்குரல். எழுதும் போது வார்த்தைகள் பிறக்கும், பேசும்போது சொற்கள் சாகும். அவள் பேச அவள் இசைத்த சொற்கள் சாகாவரம்பெற்றுத் திரிகின்றன அண்டவெளியில். எந்தன் ஒவ்வொரு அணுக்களிலும் பட்டு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது அந்த இசை.இனியொருமுறை நிகழாதுதான் இவ்வதிசயம். எனக்கான மோட்சத்தை அடைய, தேவதைகள் ரட்சிக்கும் விதிகளின் படி இதிலொரு நீட்சி உண்டாகுமெனில், மீண்டும் கேட்கவேண்டும் அக்குரலை. பேசக்கூட வேண்டும். முடிந்திராத ஒரு நீண்ட உரையாடலாக, எந்தன் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக கரையச்செய்து முடிவிலென்னை மரணிக்கச்செய்யும் ஒரு நீண்ட உரையாடலாக.

-- என்னை அழைத்துப் பேசிய ஒரு குரல் தேவதையின் நினைவாக!

9 comments:

Anonymous said...

கிரிடெட் கார்டு வோணுமான்னு போன் பண்ணுச்சே...

அந்தக் குரலா மச்சி?? :)

-காட்டுவாசி...

Anonymous said...எழுத்து - அழகு மச்சி...

Anonymous said...

செம மச்சி :))))))))))))

--
@kullabuji

குழந்தபையன் said...

எழுத்தாளராக நிரூபிக்கணும்ன்னு ரொம்ப முயற்சி பண்ணி போனதலைமுறை சொல்லாடல்கள் நிறைய உபயோகப்படுத்தி இருப்பதாய் எனக்கு தோணுது..
சாதாரண நடையில் இத எழதி இருந்தா இன்னும் மனசுக்கு நெருக்கமா இருந்திருக்கும்ன்னு தோனுச்சு..


அர்ஜுன் என்பதால் நேரடியா சொல்லிட்டேன்..

loganathan s said...

நல்ல தனித்துவமான எழுத்து..!!!
@குழந்தபையன் .. தல.. எங்கள் மனசுக்கு நல்ல நெருக்கமாகத்தான் இருக்கு.. சொல்லாடலில் எந்த தலைமுறை இருந்தால் என்ன..? அப்போ இந்தத் தலைமுறை தவிர்த்து எந்த சொல்லாடலும் உங்கள் மனசுக்கு நெருக்கமாக இருக்காதா..? இன்னும்மா அர்ஜுன் அவர்களை எழுத்தாளர் என்று ஏற்றுக்கொள்ளவில்லை..?

குழந்தபையன் said...

லோகநாதன்: அர்ஜுன் type பண்ணி அனுப்பித நான் இங்க போஸ்ட் பண்ணிட்டேன்.. இந்த மாதிரி நெகடிவ் கமெண்ட்ஸ் வாங்கினா தான் பெரிய எழுத்தாளராம் :P

துருவன் said...

எடுத்துக் கொண்ட கரு. . அதை வெளியாக்க பயன்பட்ட வார்த்தைகள் யாவையும் நலம். .
ஆயினும்,மகாசொர்கமாகிய குழந்தைகளை இரசிக்கும் தொழிலை பற்றி எழுதிவிட்டு அடுத்து வளர்ந்த பெண்களின் குழைந்தைத்தனத்தையும் சொன்னீர்கள். .
பெண்களிடத்தே உள்ள குழந்தைத்தனத்தையும்,குழந்தைகளூடே நாம் இரசிக்கும் சிறு விஷயங்களையும் ஒரு சேர இணைத்து ஒன்றிற்கு பிரிதொன்றை உவமையிடம் வகையில் கொஞ்சம் நிலை தவறியாதகவே தோன்றுகிறது. . இரண்டுக்குமான இணைப்பு வார்த்தைகள்,கட்டுரையை வழிநடத்தும் சொல்லாடல்களில் சரியான இடத்தில் திணிக்கப்படவில்லையோ என கருத தோன்றுகிறது. .
. .
ஆனால்,கரு இரண்டுமே பூமியில் சிறிது கணங்கள் சொர்க்க வாசனையை கொணரும் என்பது உணர்ச்சிப்பூர்வமாகவே சொல்லப்பட்டு,நினைவூட்ட முயல்கிறது. .

sornamithran said...

நன்று.கொஞ்சம் இங்கே வந்துகருத்து சொல்லுங்கள்

Anonymous said...

மனதுக்குள் பூக்கும் மகிழ்ச்சிப் பூக்களை எழுத்தில் காட்டிவிடத் துடிக்கும் உன்னுடைய உள்ளத்தைப் புரிந்து கொண்டேன்.

வாழ்க. வாழ்க. உன் விருப்பம் போல எல்லாம் இன்பமாய் அமைய முருகனை வேண்டுகிறேன். :)

அன்புடன்,
ஜிரா