காதலெனும் பெருங்கருணை

உணர்வு கொண்ட இயந்திரமென
என்னை நினைத்துக்கொள்கிறேன்

அதிகாலை
பத்து மணி தான்

Breakfast
வாயும் வயிறும் அறிந்ததேயில்லை

வேலை
வெறும் நேரக்கடத்தி

அலுவலகம்
ஒருவேளை உணவருந்த செய்யு(ல்லு)ம் உணவுக்கூடம்

நண்பர்கள்
மாசக்கடைசியின் புண்ணியாத்மாக்கள்

பெற்றோர்
தொலை தூர நலம் விரும்பிகள்

மொட்டைமாடி
நாதியற்ற ஓரிதயம் நிசப்தத்தின் பெருங்குரலில் ஓலமிடும் இடம்

சிகரெட்
இன்னும் பழக்கப்படாத வஸ்து

ஆல்கஹால்
பாலைவனத்தின் கானல் நீர்

மழை
எப்போதாவது வந்து Mixed-Feelings தருமொரு அதிசயம்

புத்தகங்கள்
நலம் விரும்பிகள்

கவிதை
எப்பொழுதும் கண்ணீர் எப்போதாவது அர்த்தமற்ற வெறுஞ்சிரிப்பு

இது தவிர எப்போதுமிருக்கும்
இன்னதென்று காரணமறியா
கொல்லப்படும் உணர்வு

எப்போதும் எதையும் திட்டமிட்டுச் செய்திராத
எந்தன் வாழ்வியலும்
இதுவாகத்தான் இருந்தது

உணர்வு கொண்ட இயந்திரமாகத்தான்
நானுமிருந்தேன்

இவை கூறும் ஏக்கம் ஏனையவை
எல்லாம் அந்த ஒரு கணத்தோடே
பொசுங்கிச் சாம்பலானது

காதலெனும் பெருங்கருணை கொண்ட
உனது கண்களென்னை தீண்டிய கணத்தோடே..