கடைசி சந்திப்பு

ஒரு மாலைப்பொழுதில்
மித வெளிச்ச இருளில்
மொஸார்ட்டின் சிம்பொனிகளுக்கு நடுவில்
ஆகச்சிறந்த தேநீரின் வாசத்தில்
நாங்களிருவரும் சந்தித்தோம்
அது
நண்பனுடனான இறுதி சந்திப்பு

என் கண்களை நோக்காமலேயே
பேசத்துவங்கினான்
நான் படிக்கும் புத்தகங்கள்
புரியவில்லை யென்றான்
நான் கேட்கும் இசையை
பிடிக்கவில்லை யென்றான்
மற்ற விஷயங்களிலும் என் ரசனையை
சந்தேகித்தான்.
எவ்வளவு சர்க்கரை சேர்த்தும்
தேநீர் மித மிஞ்சிக் கசந்தது

இனிமேலும் நாம் சந்தித்துக் கொள்ள
வேண்டாமென்றான்
குறுஞ்செய்திகளோ அலைபேசி அழைப்போ
தவிர்க்கச் சொன்னான்
என்னை வெறுப்பதாயுரைத்தான்
அத்துணை இரைச்சலான சிம்பொனியை
அதுவரையிலும் கேட்டிருக்கவில்லை

இதுவரையிலும் நான்
நேரமோ பணமோ செலவிட்டதேயில்லை
யென்று குற்றம் சுமத்தினான்.
நட்பின் காரணிகள் இவைமட்டும்தானா
எனக்கேட்க நினைத்து மௌனம் காத்தேன்
இருள் அதிகரித்துக் கொண்டிருந்தது

மேலும் தாமதிக்காமல் ஒரு தேவகணத்தில்
கைகுலுக்கி கையுதறி பிரிந்து சென்றான்
ஒரு நட்சத்திரத்தின் வீழ்ச்சியைப்
போலிருந்தது அந்த பிரிவு

அந்தப் பிரிவு மட்டும்
போதுமானதாக இருந்திருக்கும் அவனுக்கு
அன்றும் அதன் பிறகும்
எனக்குத்தான் தேவைப்பட்டார்கள்
பீத்தோவனும் தஸ்த்தாயேவ்ஸ்க்கியும்
கூடவே ஒரு மிடறு மதுவும்.

1 comment:

chinnapiyan said...

அடடே நம்ம வேதாளமா ! அருமை. வாழ்த்துக்கள் :)