அனுஷ்கா புராணம்


தொடக்கமும் முடிவுமற்ற காதற்சமவெளியில், லோகங்கள் பல கடந்து நிலைத்திருக்கும் காதல் எனப்படும் மாயையில், அதன் சுழலில் சிக்குண்டு சிதறி சின்னபின்னமாகி மீண்டும் உருப்பெற்று அனுஷ்காயணம் எழுதுகிறேன். அன்பு, நட்பு, காதல், துவேஷம், குரோதம், துரோகம் என அன்பின் எல்லாப்பரிமாணங்களும் அனுஷ்கா. அனுஷ்காய நமஹ. வருடம் நூறு படங்கள் தமிழில் வருமாயின் 99 ஆஸ்காருக்குத் தகுதியானவைதான் போலும். அதற்கு சற்றும் சம்மந்தமில்லாமல் படம் எடுத்ததால் மொக்கை எனவும் குப்பை எனவும் புகழப்பெற்ற இரண்டாம் உலகம் கண்டேன். அனுஷ்கா என்னும் காதல் தீராப் பெரு நதியில் ஆழ்ந்து மூர்ச்சையாகி தேவதையாதீனமாய்க் கரையொதுங்கி சுவாசம் திரும்பப்பெற்றவனாய் எழுதுகிறேன், அப்படியே செத்திருக்கவேண்டும். யான் செய்த பிழை என்னவோ, பிழைத்துவிட்டேன்.

எங்கும் அனுஷ்கா எதிலும் அனுஷ்கா. படத்தில் ஒரு காட்சியில் காண்பவர் யாவரும் அனுஷ்காவாய்த் தோன்றுவர் ஆர்யாவுக்கு. கனவல்ல நிஜமது, நிஜ மது அனுஷ்கா. ஆர்யாவிடம் தன் காதலைச்சொல்லாமல் தோழி அதைச்  சொல்ல, அதை அவர் மறுக்க கண்ணீர் சிந்துவார், அப்போது ஜெயண்ட் வீலிலிருந்து கீழிறங்கும் போதான மனநிலையுடன் கண்கள் மூடி இருக்கையை இறுக்கப்பிடித்திருந்தேன். அனுஷ்கா. அணு அணுவாய் அல்ல ப்ரோட்டான் ப்ரோட்டானாய், நியூட்ரான் நியூட்ரானாய், எலக்ட்ரான் எலக்ட்ரானாய் ரசித்திருந்தேன் அனுஷ்காவை. இன்னும் சொல்லப்போனால் அதனினும் நுண்ணிய துகள்களாய். அனுஷ்கா என்பவள் பிராண வாயு. பிழைத்திருத்தல் கூட அவளால் தான். காரணம் காதல். எனதுடலில் முழுவதும் கலந்து எல்லா நரம்புகளிலும் தனக்கான இசையைத் தானே மீட்டிக்கொண்டிருக்கிறாள். நான் உயிர்த்திருத்தலை திரும்பத்திரும்ப உணர்த்துவதா யிருக்கிறதந்த இசை.

தனது காதல் மறுப்பில் கண் கலங்கி கண் துடைக்கக் கண் மை கொஞ்சம் நீளும். எனதாயுளை நீட்டியது அதுவாகக்கூட இருக்கலாம். அந்தக்கண்களோடே கேமராவைப்பார்க்கும் வேல்விழிப்பார்வையில் இருதயம் சுக்கு நூறாகியது. நூறும் நூறு இதயமாகி அனுஷ்கா அனுஷ்கா எனத்துடிதுடித்து மீண்டும் வேட்கையால் வெடித்துப் பல்லாயிரமாகியது. அணுப்பிளவை விட வேகமான செயலாகி இவ்வுலகை காதலால் நிரப்பியதது. முதலாம் உலகில் காதலால் மருகி, இரண்டாம் உலகில் துவேஷத்தால் கொன்று பிழைக்கவும் விடாமல், சாகவும் விடாமல் ஒரு பேரின்ப அவஸ்தையைத் தந்தவளவள். அனுஷ்கா. இப்போது இதய ஸ்வரத்தின் மீது கூட ஆத்திரமேற்படுகிறது.. அனுஷ்காவெனத் துடிக்காததால்.

என்றும் வாசித்து தீர்த்திடவியலா இரு-இதழ் மட்டுமே கொண்ட புத்தகமவள். அவளின் காதலால் மூளையில் ஜனனமும், கோபப்பார்வையால் மனத்தினில் மரணமும் என இரு வேறு உணர்வுகளைத் தந்தவளவள். அப்பாவைப் பார்க்கப் போகவேண்டுமென நாயகன் சொல்ல, போ என்று சோல்லி போகவிடாமல் செய்யும் அந்த மூர்க்கத்தனமான காதல் காட்சிகளில் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சியாகித்தான் போனேன். இடைவேளையில் அனுஷ்காக்கள் சாக, வீரனென்று சொல்லப்பட அல்ல, அனுஷ்காவை மீண்டும் காண மலையேறிச்சாகு என சொல்லியிருந்தால் நிச்சயம் ஏறியிருப்பேன் எவரெஸ்டாயிருந்தாலும். அனுஷ்கா. இப்போது கூட மேலிருக்கும் எல்லா எழுத்துக்களும் தோரியமாகி, யுரேனியமாகித் தானே எரிபொருளாகி அனுஷ்காவுக்காக எரிந்து மீண்டும் ஃபீனிக்சாய் உயிர்த்தெழுந்து மீண்டும் எரிகின்றன காதலுக்காய். அனுஷ்கா, எந்தன் பர தேவதையே.. காதலே.. இதைத்தாண்டி காதலென இவ்வுலகில் வேறு எதுவுமில்லை. எதுவேனும் மிச்சமிருந்தாலும் அதுவும் நீயாகத்தான் இருப்பாய். நீ வாழி.

இனி செல்வா புராணம்.
செல்வராகவன். நண்பா, சகோதரா.. அருகிருந்தால் கட்டியணைத்துக் கதறிடத் தோன்றுகிறதெனக்கு. அத்துணை பிரம்மாண்டமாய் யோசித்து இங்கிருக்கும் சாதாரண வசதிகளால் உன் மன பிரம்மாண்டத்தை மொக்கையான CG யில் பார்க்கும்போது எவ்வளவு வலித்திருக்குமுனக்கு? உணர்கிறேன். பத்து மாதம் சுமந்து குழந்தையை ஊனமாய்ப் பெற்றவளின் வலியாகத்தானிருக்குமது. இது உனக்கான களமல்ல. உன் சுயம் தொலைத்து, கடைசியில் நீயும் கதைக்கு விளக்கம் கூறுபவனாகிப் போனாயே. ஒப்புக்கொடுத்தல்தான் எத்துணை ரணமானது. எதேனும் சாமி மலையிலேறி ஹாலிவுட்டிற்குச் சென்று தொலைய முடியுமெனில் தொலைந்து விடு நண்பா! ஒரு புத்தகத்தை வாசிக்கும் இன்பத்தை திரையில் காண்பதென்பது அபூர்வம். அது ஒரு ஆத்ம போதை. நன்றி எனும் ஒரு வார்த்தை போதாததற்கு. அன்பு மட்டுமே அதற்கு பதில்.

இரண்டாம் உலகத்தில்.
எல்லாம் எனக்கு சரிதான். லாஜிக் மிஸ்டேக் எனப்பட்டது ஒன்றுதான். அனுஷ்கா இருக்கும்போது வேறு யாரோ ஒருத்தியைக் கடவுளாகக் கும்பிட்டது மட்டும்தான்.

பொதுவாக.
செல்வாவை சைக்கோ என்பவர்களுக்கு ட்விட்டரிலிருந்து ஒரு பதில்.
”செல்வராகவன் சினிமா சைக்கோ, நாங்க செல்வராகவன் சைக்கோ.. இருந்துட்டுப் போறோமே”.

கார்க்கிக்காக.
அனுஷ்காவுக்காகவேனும் நிச்சயம் மகிழ்வீர்கள் என நம்புகிறேன் குரு.