கற்றதும் பெற்றதும் – 2013


< Please Take Diversion.. சுய புலம்பல்/புராணம் ahead >

திரும்பிப் பார்த்தால் வழி நெடுக நான் முறித்து வைத்த மரக்கிளைகள் தான். எச்சரிக்கை, அனுபவக் குறிப்புகளாய். இதோ 2013 அனைவருக்கும் கைகுலுக்கி விடை சொல்லக் காத்திருக்கிறது. கடந்த வருடங்களில், இதுவேனும் என் தனிமையைப்போக்கிடாதா?, ஒரு பெண்ணின் அருகிருத்தலின் இன்பத்தை ஈந்திடாதா என்றெல்லாம் ஒரு நப்பாசையில் தான் வாசிப்பு பழக்கப்பட்டிருந்தது. ஆனால் இவ்வருடம் ஒரு பொழுதுபோக்கென்பதையும் தாண்டி வாசிப்பு என் உள்ளுணர்வுக்கு நிம்மதியை, போதையை, ஒரு மழலையின் மொழிதரும் மகிழ்ச்சிப்பெருக்கை உணரச்செய்வதாய் மாறியிருக்கிறது.

என் சுயத்தில் பல மாறுதல்களை உணர்கிறேன். எச்சரிக்கையுணர்வின் நெடி கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. தத்துவங்களை விரும்புபவனா யிருக்கிறேன். அனுபவத்தின் மீது மரியாதை கூடியிருக்கிறது. அடுத்தவர் மீதான கேலியைக் குறைத்திருக்கிறேன். யார் புண்பட்டால் எனக்கென்ன?, யாராவது புண்படவேண்டுமே, என்னால் யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பதான இம்மூன்றையும் முறையே கடந்ததில் ஒரு முதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

அகோரப்பசியுடன் ஒருவன் உண்பதைப்போல வருடத்தின் ஆரம்பத்தில் நிறையப் படித்தேன். உண்டவன் மயக்கத்தில் நேரங்காலம் தெரியாது உறங்குவதைப் போலத்தான் வருடத்தின் பிற்பாதி அமைந்திருந்தது எனக்கு. சில சொந்த விஷயங்களினாலும், வாசிக்கவே முடியாத அளவுக்கு உச்ச ஸ்தாயியில் அலறிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி இருக்கும் ஒரு வீட்டில் அடைபட்டு, வாசிப்பின் போதாமையை உணர்ந்த தருணங்களில் ஆறுதலாய் இருந்தவை நல்ல மலையாளப் படங்கள்தாம். அதென்னவோ மலையாளத்தைக் கேட்கும்போதெல்லாம் அத்துணை இன்பம்.

நட்பு வட்டத்தைச் சுருக்கியிருக்கிறேன். மேலே சொன்ன அந்த எச்சரிக்கையுணர்வு மட்டுமே முழுமுதற்காரணியாகி நிற்கிறது. இருந்தும் ஒரு சில நல்ல நண்பர்களைப் பெறாமல் இல்லை. எப்போதோ பட்டுச் சிவந்த துரோகத்தின் காயத்திற்கு களிம்பாக இருக்கிறார்கள். இந்த வருடத்தில் நான்கு சிறந்த நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். லதாமகன், அப்துல், செய்யாறு அருண், கார்கி மனோகரன். இவர்களுடனான உரையாடல்கள் எப்போதும் மகிழ்வைத் தருபவையாகவே இருக்கும். அதிலும் அப்துலும் அருணும் ரொம்பவே ஸ்பெஷல். அருண் இந்த வருடத்திலாவது எழுதத்துவங்க வேண்டும். வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் சிறந்த ஆட்டக்காரன் அருண். இந்த வருடத்தில் மறக்க முடியாத சந்திப்புகள், ஜில்லுடனான “பார்க் ரயில்வே ஸ்டேஷன்” சந்திப்புகள். எங்களுத்தெரிந்த இலக்கியத்தைப் பகிர்ந்துகொள்வோம். ஆனந்தமாக இருக்கும். நட்டுவும் கார்க்கியும் இதையெல்லாம் தாண்டி. எப்போதும் என்னுடனிருந்து என்னை இயக்கும் சக்திகள் என்று சொல்லலாம். இந்த புண்ணிய ஆத்மாக்களுக்கு நன்றிகள்.


2014ல் மலையாள வாசிப்பை அதிகரிக்க வேண்டும், ஃபிரெஞ்சு மொழி படிக்க வேண்டும், நிறைய சினிமாக்கள் பார்க்கவேண்டும், நாவல் என்ற பெயரில் ஒன்றை எழுத வேண்டும் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டியிருக்கிறேன். ஒரு நல்ல தோழி இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமோ என்றெல்லாம் மனம் யோசிக்கத் துவங்கியிருக்கிறது. இனிமேலும் வீட்டில் எழும் திருமணப்பேச்சுகளை திசைதிருப்புவதாய் இல்லை. அடுத்த வருடம் இதை மீண்டும் படிக்கும்போது என்னவெல்லாம் மாறியிருக்குமோ என்னவோ!

கர்ணனின் கவசம் - கே. என். சிவராமன்


80களின் பிற்பாதியில் பிறந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். நமக்கு விவரம் தெரியும் வயதில்தான் விஷுவல் மீடியம் என்பது வேரூன்றி பரவத்துவங்கியிருந்தது. ஊருக்கொன்றோ இரண்டோ டிவிகள்தான் இருக்கும். ’ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்’க்கெல்லாம், ‘போ பாட்டி எப்பப்பாத்தாலும் இதையே சொல்ற.. போரடிக்குது’ என எஸ்ஸாகி டிவிப்பெட்டிகளைத் தேடி ஓடத்துவங்கியிருப்போம். அந்த வீட்டு பையனை நண்பனாக்கி, கிரிக்கெட்டில் முதல் பேட்டிங் கொடுத்து, அம்மா தரும் ‘பாக்கெட் மணி’, காட்டில் பொறுக்கிய எலந்தப்பழமெல்லாம் லஞ்சமாகக் கொடுத்து ஜன்னலிலிருந்து பார்க்கும் அளவுக்காவது ஒரு இடத்தை ‘ரிசர்வ்’ செய்திருப்போம்.

சக்திமான், கேப்டன் வ்யூம், சந்திரகாந்தா என தூரதர்ஷனிலிருந்தே மந்திரம் தந்திரம் ஸ்பேஸ் டெக்னாலஜி அமானுஷ்யமெல்லாம் என் டிஎன்ஏவோடு கலக்க ஆரம்பித்து விட்டது. சன்னின் அறிமுகத்துக்குப் பிறகு மர்மதேசம் (ராஜ் டிவி), மந்திரவாசல், ஷகலக பூம் பூம், மை டியர் குட்டிச்சாத்தான், பஞ்சமி, சிதம்பர ரகசியம், ருத்ரவீணை, மாயா மச்சீந்த்ரா (விஜய்) என எனது பால்யம் முழுவதுமே ஃபேண்டஸியாகத்தான் இருந்தது. பள்ளியில் நடந்த கதைப்போட்டிகளில் நான் எழுதிய கதை எழுதியவற்றில் எல்லாமே ஃபேண்டஸி இருந்தது. அதற்குப்பிறகு அரும்புமீசைப் பருவத்தில் பாடல்களின் மீதான மோகம் இதை அப்படியே அடித்து சாப்பிட்டு விட்டது. இருந்தும் டாவின்சி கோட், ட்ரெஷர் ஹண்ட் படமெல்லாம் பார்க்கும்போது என்னுள் அந்த ‘ஃபேண்டஸி குட்டிச்சாத்தான்’ விழித்துக்கொள்வான். கல்லூரி, வேலை இதெல்லாம் வந்தவுடன் புத்தகங்களின் அறிமுகம் இலக்கிய வாசிப்பிற்கு பாதை காட்டியது. இப்படியாக என்னுள் இருந்த அந்த ‘ஃபேண்டஸி குட்டிச்சாத்தான்’ அப்படியே தொலைந்து போனான்.

நண்பர்கள் நரேனும், லக்கியும் குங்குமத்தில் வெளியாகப்போகிறது அட்டகாசத் தொடர் ‘கர்ணனின் கவசம்’ என்ற ஃபேஸ்புக்கில் விளம்பரப்படுத்தியபோது அவ்வளவாக ஈர்க்கவில்லை. பொதுவாகவே வாரவாரம் வரும் தொடர்களை காத்திருந்து தேடிப்படிப்பவன் அல்லன் நான். 40 வாரங்கள் முடிந்து புத்தகமாக வரும்போது கர்ணன் ஒரு சின்ன அலையை ஏற்படுத்தினான். நண்பர் நா. ராஜூவும் குருஜி ஜ்யோவ்ராமும் பாரட்டி எழுதியிருந்தனர். புத்தகக்கண்காட்சிக்கு காத்திராமல் வாங்கினவனை ‘சண்டே ப்ளான்’கள் அனைத்தையும் தவிர்க்கச்சொல்லி ஒரு மூச்சில் படித்து முடிக்கச் செய்தது இந்தப் புத்தகம்.

‘கர்ணனின் கவசம்’ ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் – A Perfect Indian Fantasy story. எங்கேயோ தொலைந்துபோன என் ‘ஃபேண்டசி குட்டிச்சாத்தான்’னை ‘ஃபேண்டசி அசுரனாக’ திருப்பிக்கொடுத்திருக்கிறது இந்த புத்தகம். வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து பக்கத்துக்குப் பக்கம், பத்திக்குப் பத்தி ட்விஸ்ட் (தமிழ்ல என்னாங்க - திருப்பமா?). குருக்‌ஷேத்ரப் போரில் கர்ணன் தானமாய்க் கொடுத்த ‘கர்ணனின் கவசம்’ எங்கிருக்கிறது எனத் தேடி வருகின்றனர் இரு வெளிநாட்டவர். அதை ரகசியமாய் பாதுகாக்கும் ஒரு இயக்கமும், அதைக் கைப்பற்றிவிடத்துடிக்கும் ஒரு குழுவும் என மூன்று கோணங்களில் கதை நகர்கிறது.

பொன்னியின் செல்வன் ஆதித்ய கரிகாலன், குந்தவை, ரவிதாசன் முதல் மகாபாரதக் குந்தி கிருஷ்ணன், வியாசர், இந்திரன் என்று அட்டகாச கதாபாத்திர வடிவமைப்புகள். கவசத்துக்கான தேடலில் வரும் க்ராஃபீன், ஸோம்பி இன்னபிற அறிவியல் விளக்கங்கள், ஃபிபனோசி சீரிஸ், கணிதம், பௌதீகம், ரசாயனம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை ஆசிரியர். தொலைந்து போன சரஸ்வதி நதி, ஆதிச்சநல்லூர் ரகசியங்கள், திரிசங்கு சொர்க்கம் என்று பல அட்டகாச ‘உட்டாலக்கிடி கிரிகிரிகிரி’ மேஜிக்குகள் நம்மை கட்டிப்போட்டுவிடும். முழுதாய்த் தெரிந்துகொள்ளாமல் வேறெதிலும் கவனம் குவியவே இல்லை எனக்கு.
        
அந்த ரகசியத்தை அடைய விரும்புபவர்களுக்கு பாதை எப்படித் தெரிகிறது, சிற்பக்கலைகளின் முக்கியத்துவம், அதிலுள்ள சங்கேத மொழிகள், கோவில்களைப் பற்றியும், முன்னோர்கள் எழுதிய வேதங்கள், சாஸ்திரங்களின் உபயோகங்கள் புராண கதாபாத்திரங்கள் என இவையாவற்றையும் நேர்கோட்டில் இணைத்திருப்பது என்பது அசாத்திய வேலை. ரகசிய குழுவுக்குத் தலைவியான ‘ஆயி’ பற்றியும் இயற்கைக்காட்சிகள் பற்றிய விவரணைகளும் ’செம… செம’ மிக அருமை. கோவில்களும், சிற்பங்களும், அவர்கள் செல்லும் பாதைகளும் பிரம்மாண்டமாய் மனக்கண்ணுக்குள் விரிகிறது.

நாவலில் ஓரிடத்தில், குழந்தைப் பேறில்லாமல் இருக்கும் விஜயலட்சுமிக்கு குழந்தையாய்/ஆதரவாய் ஒருத்தி வருகிறாள். அவள் பெயர் ‘குந்தி’. ’ஆஸம்.. ஆஸம்’ என்று கத்தி விட்டேன் படிக்கும்போதே. இதுபோல பல ஆச்சர்ய ரகசியங்கள் புதைந்திருக்கின்றன. தேடிப்படியுங்கள். வாராந்திரத் தொடராக வெளிவந்ததால் வாசகர்கள் கதாபாத்திரங்களை மறந்துவிடக்கூடாது என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் பெரும்பாலும் எல்லோரையும் ஆஜராக்கியிருக்கிறார். நாவலாக்கிய சமயத்தில் இதை தவிர்த்திருக்கலாம். தனித்தனி அத்தியாயங்கள் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கும். கர்ணனைப் பற்றின நாவலை ‘சூரியன்’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. வாட்டே கோ-இன்ஸிடென்ஸ் இல்ல?


”ஹலோ.. டைரக்டர் செல்வராகவன் ஆபீசுங்களா? ஆயிரத்தில் ஒருவன் – பார்ட் 2 க்கு கதை கேட்டிருந்தீங்களே. ஒரு சூப்பர் கத மாட்டியிருக்கு.. ஆமா சார்.. நாவல் தான்”

நாவல் | கே. என் சிவராமன் | சூரியன் பதிப்பகம் | விலை ரூ. 200 | இணையத்தில் வாங்க