கற்றதும் பெற்றதும் – 2013


< Please Take Diversion.. சுய புலம்பல்/புராணம் ahead >

திரும்பிப் பார்த்தால் வழி நெடுக நான் முறித்து வைத்த மரக்கிளைகள் தான். எச்சரிக்கை, அனுபவக் குறிப்புகளாய். இதோ 2013 அனைவருக்கும் கைகுலுக்கி விடை சொல்லக் காத்திருக்கிறது. கடந்த வருடங்களில், இதுவேனும் என் தனிமையைப்போக்கிடாதா?, ஒரு பெண்ணின் அருகிருத்தலின் இன்பத்தை ஈந்திடாதா என்றெல்லாம் ஒரு நப்பாசையில் தான் வாசிப்பு பழக்கப்பட்டிருந்தது. ஆனால் இவ்வருடம் ஒரு பொழுதுபோக்கென்பதையும் தாண்டி வாசிப்பு என் உள்ளுணர்வுக்கு நிம்மதியை, போதையை, ஒரு மழலையின் மொழிதரும் மகிழ்ச்சிப்பெருக்கை உணரச்செய்வதாய் மாறியிருக்கிறது.

என் சுயத்தில் பல மாறுதல்களை உணர்கிறேன். எச்சரிக்கையுணர்வின் நெடி கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. தத்துவங்களை விரும்புபவனா யிருக்கிறேன். அனுபவத்தின் மீது மரியாதை கூடியிருக்கிறது. அடுத்தவர் மீதான கேலியைக் குறைத்திருக்கிறேன். யார் புண்பட்டால் எனக்கென்ன?, யாராவது புண்படவேண்டுமே, என்னால் யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பதான இம்மூன்றையும் முறையே கடந்ததில் ஒரு முதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

அகோரப்பசியுடன் ஒருவன் உண்பதைப்போல வருடத்தின் ஆரம்பத்தில் நிறையப் படித்தேன். உண்டவன் மயக்கத்தில் நேரங்காலம் தெரியாது உறங்குவதைப் போலத்தான் வருடத்தின் பிற்பாதி அமைந்திருந்தது எனக்கு. சில சொந்த விஷயங்களினாலும், வாசிக்கவே முடியாத அளவுக்கு உச்ச ஸ்தாயியில் அலறிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி இருக்கும் ஒரு வீட்டில் அடைபட்டு, வாசிப்பின் போதாமையை உணர்ந்த தருணங்களில் ஆறுதலாய் இருந்தவை நல்ல மலையாளப் படங்கள்தாம். அதென்னவோ மலையாளத்தைக் கேட்கும்போதெல்லாம் அத்துணை இன்பம்.

நட்பு வட்டத்தைச் சுருக்கியிருக்கிறேன். மேலே சொன்ன அந்த எச்சரிக்கையுணர்வு மட்டுமே முழுமுதற்காரணியாகி நிற்கிறது. இருந்தும் ஒரு சில நல்ல நண்பர்களைப் பெறாமல் இல்லை. எப்போதோ பட்டுச் சிவந்த துரோகத்தின் காயத்திற்கு களிம்பாக இருக்கிறார்கள். இந்த வருடத்தில் நான்கு சிறந்த நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். லதாமகன், அப்துல், செய்யாறு அருண், கார்கி மனோகரன். இவர்களுடனான உரையாடல்கள் எப்போதும் மகிழ்வைத் தருபவையாகவே இருக்கும். அதிலும் அப்துலும் அருணும் ரொம்பவே ஸ்பெஷல். அருண் இந்த வருடத்திலாவது எழுதத்துவங்க வேண்டும். வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் சிறந்த ஆட்டக்காரன் அருண். இந்த வருடத்தில் மறக்க முடியாத சந்திப்புகள், ஜில்லுடனான “பார்க் ரயில்வே ஸ்டேஷன்” சந்திப்புகள். எங்களுத்தெரிந்த இலக்கியத்தைப் பகிர்ந்துகொள்வோம். ஆனந்தமாக இருக்கும். நட்டுவும் கார்க்கியும் இதையெல்லாம் தாண்டி. எப்போதும் என்னுடனிருந்து என்னை இயக்கும் சக்திகள் என்று சொல்லலாம். இந்த புண்ணிய ஆத்மாக்களுக்கு நன்றிகள்.


2014ல் மலையாள வாசிப்பை அதிகரிக்க வேண்டும், ஃபிரெஞ்சு மொழி படிக்க வேண்டும், நிறைய சினிமாக்கள் பார்க்கவேண்டும், நாவல் என்ற பெயரில் ஒன்றை எழுத வேண்டும் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டியிருக்கிறேன். ஒரு நல்ல தோழி இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமோ என்றெல்லாம் மனம் யோசிக்கத் துவங்கியிருக்கிறது. இனிமேலும் வீட்டில் எழும் திருமணப்பேச்சுகளை திசைதிருப்புவதாய் இல்லை. அடுத்த வருடம் இதை மீண்டும் படிக்கும்போது என்னவெல்லாம் மாறியிருக்குமோ என்னவோ!

2 comments:

Sankar P said...

> விரும்புபவனா யிருக்கிறேன்

"விரும்புபவனாக ஆகியிருக்கிறேன்" என்றுதானே வரவேண்டும்.

> ஸ்தாயியில்

ஸ்தாயில் தானே ?

> எங்களுத்தெரிந்த

எங்களுக்குத் தெரிந்த

> நாவல் என்ற பெயரில் ஒன்றை எழுத வேண்டும்

நானும்

> இனிமேலும் வீட்டில் எழும் திருமணப்பேச்சுகளை திசைதிருப்புவதாய் இல்லை.

அப்படியென்றால் ஆரம்பியுங்கள் (வடிவேலு குரலில் படிக்கவும்). அவர் வீட்டில் போய் பெண்கேட்கச் சொல்ல வேண்டியதுதானே ;)

பிகு: பொதுவாய் இணையத்தில் நான் எனக்கு நேரில் தெரியாதவர்களின் பிழைகளைச் சுட்டிக்காட்டுவதில்லை. ஆனால் நீங்கள் எழுத்தாளர் ஆக விருப்பம் கொண்டவர் என்பதால் மேற்சொன்னவற்றைக் குறிப்பிட்டேன். பிடிக்கவில்லையென்றால் பின்னூட்டத்தைத் தாராளமாக நீக்கிக் கொள்ளுங்கள். கோபித்துக் கொள்ள மாட்டேன்.

வேதாளம் said...

நன்றி சங்கர் சார். சரி பண்ணிக்கிறேன்.