கர்ணனின் கவசம் - கே. என். சிவராமன்


80களின் பிற்பாதியில் பிறந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். நமக்கு விவரம் தெரியும் வயதில்தான் விஷுவல் மீடியம் என்பது வேரூன்றி பரவத்துவங்கியிருந்தது. ஊருக்கொன்றோ இரண்டோ டிவிகள்தான் இருக்கும். ’ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்’க்கெல்லாம், ‘போ பாட்டி எப்பப்பாத்தாலும் இதையே சொல்ற.. போரடிக்குது’ என எஸ்ஸாகி டிவிப்பெட்டிகளைத் தேடி ஓடத்துவங்கியிருப்போம். அந்த வீட்டு பையனை நண்பனாக்கி, கிரிக்கெட்டில் முதல் பேட்டிங் கொடுத்து, அம்மா தரும் ‘பாக்கெட் மணி’, காட்டில் பொறுக்கிய எலந்தப்பழமெல்லாம் லஞ்சமாகக் கொடுத்து ஜன்னலிலிருந்து பார்க்கும் அளவுக்காவது ஒரு இடத்தை ‘ரிசர்வ்’ செய்திருப்போம்.

சக்திமான், கேப்டன் வ்யூம், சந்திரகாந்தா என தூரதர்ஷனிலிருந்தே மந்திரம் தந்திரம் ஸ்பேஸ் டெக்னாலஜி அமானுஷ்யமெல்லாம் என் டிஎன்ஏவோடு கலக்க ஆரம்பித்து விட்டது. சன்னின் அறிமுகத்துக்குப் பிறகு மர்மதேசம் (ராஜ் டிவி), மந்திரவாசல், ஷகலக பூம் பூம், மை டியர் குட்டிச்சாத்தான், பஞ்சமி, சிதம்பர ரகசியம், ருத்ரவீணை, மாயா மச்சீந்த்ரா (விஜய்) என எனது பால்யம் முழுவதுமே ஃபேண்டஸியாகத்தான் இருந்தது. பள்ளியில் நடந்த கதைப்போட்டிகளில் நான் எழுதிய கதை எழுதியவற்றில் எல்லாமே ஃபேண்டஸி இருந்தது. அதற்குப்பிறகு அரும்புமீசைப் பருவத்தில் பாடல்களின் மீதான மோகம் இதை அப்படியே அடித்து சாப்பிட்டு விட்டது. இருந்தும் டாவின்சி கோட், ட்ரெஷர் ஹண்ட் படமெல்லாம் பார்க்கும்போது என்னுள் அந்த ‘ஃபேண்டஸி குட்டிச்சாத்தான்’ விழித்துக்கொள்வான். கல்லூரி, வேலை இதெல்லாம் வந்தவுடன் புத்தகங்களின் அறிமுகம் இலக்கிய வாசிப்பிற்கு பாதை காட்டியது. இப்படியாக என்னுள் இருந்த அந்த ‘ஃபேண்டஸி குட்டிச்சாத்தான்’ அப்படியே தொலைந்து போனான்.

நண்பர்கள் நரேனும், லக்கியும் குங்குமத்தில் வெளியாகப்போகிறது அட்டகாசத் தொடர் ‘கர்ணனின் கவசம்’ என்ற ஃபேஸ்புக்கில் விளம்பரப்படுத்தியபோது அவ்வளவாக ஈர்க்கவில்லை. பொதுவாகவே வாரவாரம் வரும் தொடர்களை காத்திருந்து தேடிப்படிப்பவன் அல்லன் நான். 40 வாரங்கள் முடிந்து புத்தகமாக வரும்போது கர்ணன் ஒரு சின்ன அலையை ஏற்படுத்தினான். நண்பர் நா. ராஜூவும் குருஜி ஜ்யோவ்ராமும் பாரட்டி எழுதியிருந்தனர். புத்தகக்கண்காட்சிக்கு காத்திராமல் வாங்கினவனை ‘சண்டே ப்ளான்’கள் அனைத்தையும் தவிர்க்கச்சொல்லி ஒரு மூச்சில் படித்து முடிக்கச் செய்தது இந்தப் புத்தகம்.

‘கர்ணனின் கவசம்’ ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் – A Perfect Indian Fantasy story. எங்கேயோ தொலைந்துபோன என் ‘ஃபேண்டசி குட்டிச்சாத்தான்’னை ‘ஃபேண்டசி அசுரனாக’ திருப்பிக்கொடுத்திருக்கிறது இந்த புத்தகம். வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து பக்கத்துக்குப் பக்கம், பத்திக்குப் பத்தி ட்விஸ்ட் (தமிழ்ல என்னாங்க - திருப்பமா?). குருக்‌ஷேத்ரப் போரில் கர்ணன் தானமாய்க் கொடுத்த ‘கர்ணனின் கவசம்’ எங்கிருக்கிறது எனத் தேடி வருகின்றனர் இரு வெளிநாட்டவர். அதை ரகசியமாய் பாதுகாக்கும் ஒரு இயக்கமும், அதைக் கைப்பற்றிவிடத்துடிக்கும் ஒரு குழுவும் என மூன்று கோணங்களில் கதை நகர்கிறது.

பொன்னியின் செல்வன் ஆதித்ய கரிகாலன், குந்தவை, ரவிதாசன் முதல் மகாபாரதக் குந்தி கிருஷ்ணன், வியாசர், இந்திரன் என்று அட்டகாச கதாபாத்திர வடிவமைப்புகள். கவசத்துக்கான தேடலில் வரும் க்ராஃபீன், ஸோம்பி இன்னபிற அறிவியல் விளக்கங்கள், ஃபிபனோசி சீரிஸ், கணிதம், பௌதீகம், ரசாயனம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை ஆசிரியர். தொலைந்து போன சரஸ்வதி நதி, ஆதிச்சநல்லூர் ரகசியங்கள், திரிசங்கு சொர்க்கம் என்று பல அட்டகாச ‘உட்டாலக்கிடி கிரிகிரிகிரி’ மேஜிக்குகள் நம்மை கட்டிப்போட்டுவிடும். முழுதாய்த் தெரிந்துகொள்ளாமல் வேறெதிலும் கவனம் குவியவே இல்லை எனக்கு.
        
அந்த ரகசியத்தை அடைய விரும்புபவர்களுக்கு பாதை எப்படித் தெரிகிறது, சிற்பக்கலைகளின் முக்கியத்துவம், அதிலுள்ள சங்கேத மொழிகள், கோவில்களைப் பற்றியும், முன்னோர்கள் எழுதிய வேதங்கள், சாஸ்திரங்களின் உபயோகங்கள் புராண கதாபாத்திரங்கள் என இவையாவற்றையும் நேர்கோட்டில் இணைத்திருப்பது என்பது அசாத்திய வேலை. ரகசிய குழுவுக்குத் தலைவியான ‘ஆயி’ பற்றியும் இயற்கைக்காட்சிகள் பற்றிய விவரணைகளும் ’செம… செம’ மிக அருமை. கோவில்களும், சிற்பங்களும், அவர்கள் செல்லும் பாதைகளும் பிரம்மாண்டமாய் மனக்கண்ணுக்குள் விரிகிறது.

நாவலில் ஓரிடத்தில், குழந்தைப் பேறில்லாமல் இருக்கும் விஜயலட்சுமிக்கு குழந்தையாய்/ஆதரவாய் ஒருத்தி வருகிறாள். அவள் பெயர் ‘குந்தி’. ’ஆஸம்.. ஆஸம்’ என்று கத்தி விட்டேன் படிக்கும்போதே. இதுபோல பல ஆச்சர்ய ரகசியங்கள் புதைந்திருக்கின்றன. தேடிப்படியுங்கள். வாராந்திரத் தொடராக வெளிவந்ததால் வாசகர்கள் கதாபாத்திரங்களை மறந்துவிடக்கூடாது என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் பெரும்பாலும் எல்லோரையும் ஆஜராக்கியிருக்கிறார். நாவலாக்கிய சமயத்தில் இதை தவிர்த்திருக்கலாம். தனித்தனி அத்தியாயங்கள் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கும். கர்ணனைப் பற்றின நாவலை ‘சூரியன்’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. வாட்டே கோ-இன்ஸிடென்ஸ் இல்ல?


”ஹலோ.. டைரக்டர் செல்வராகவன் ஆபீசுங்களா? ஆயிரத்தில் ஒருவன் – பார்ட் 2 க்கு கதை கேட்டிருந்தீங்களே. ஒரு சூப்பர் கத மாட்டியிருக்கு.. ஆமா சார்.. நாவல் தான்”

நாவல் | கே. என் சிவராமன் | சூரியன் பதிப்பகம் | விலை ரூ. 200 | இணையத்தில் வாங்க

3 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Bravo!

amas said...

Super!! :-)

amas32

Sankar P said...

நான் சமீபத்தில் 6174 என்றொரு நூல் வாசித்தேன். மாயக்கற்பனை (பேன்டசி) கதைகள் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் தவறாமல் வாங்கிப் படிக்கவும். கிட்டத்தட்ட டாவின்சி கோட், நேசனல் டிரெசர் வகையைச் சேர்ந்த நூல்தான். அந்த நூலைப் படித்து முடித்தவுடன் எனக்கும் செல்வராகவன் நினைவுதான் வந்தது. ஆனால் நீங்கள் நினைத்தது போல அல்ல. "ஆயிரத்தில் ஒருவன் மாதிரி மொக்கையாக, முழுமை பெறாத கதையை படமாக எடுத்து விட்டு, ஊர் என்னை அங்கீகரிக்கவில்லை என்று புலம்புவதை விட இந்த மாதிரி நூல்களை படமாக்கலாம்" என்று நினைத்தேன்.

பிகு: செல்வராகவனை ஒரு திரைக்கதாசிரியராக இரசிப்பதை விட ஒரு பாடலாசிரியராகவும், மாறுதலான களங்களில் இயக்கும் இயக்குனராகவே நான் இரசிக்கிறேன்.