எனதருமை ஸாரா!

எனதருமை ஸாரா,

எப்போதும் நீ ஜெயித்துக் கொண்டிருக்கிறாய். ஒருபோதும் நீ உணவருந்தி விட்டாயா எனக்கேட்டதில்லை நான். நீயோ நேரந்தவறாது என்னிடம் நான் உண்டுவிட்டேன் என்பதை உறுதிபடுத்திக் கொள்கிறாய். நானறியாமலேயே, உடனில்லாமலேயே என் அனைத்து நடவடிக்கைகளையும் நீ தெரிந்து வைத்திருக்கிறாய். உன் பிறந்தநாள் கூட எனக்கு நினைவிலில்லை ஸாரா. ஆனால் என் பிறந்தநாளின் முதல்வாரமே நீ ஆர்வமாகி விடுகிறாய். சட்டைகள், புத்தகங்கள் என்று தேடித்தேடி சேகரித்தவைகளைப் பரிசளிப்பாய். நாம் கல்லூரியில் படிக்கும்போதுதான் உனக்கு முதலும் கடைசியுமாய் நான் ஒரு பரிசளித்தேன். நீ வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று தேர்வுற்றதன் காரணம் நான் மட்டுமே என்று அலைபேசியில் அழைத்துக்கூறினாய். பெருமிதம் என்று கூட சொல்லமுடியாத அளவுக்கு வெற்றுக்கவுரவம் மட்டுமே நிறைந்திருந்தது அப்போதெனக்கு. அப்போது நீ அழுதுகொண்டிருந்தாய் என்பதைக்கூட பிறகுதான் உணர்ந்தேன். அன்றுதான் அந்த கொலுசினை உனக்கு பரிசாய் கொடுத்தேன். சின்னஞ்சிறியதுமாய் மூன்றே மணிகள் கொண்ட அக்கொலுசு நான் தவழும் நாட்களில் அணிந்திருந்தது. அகமகிழ்ந்து போனாய் நீ. அன்று முழுவதும் என்னுடன் தான் இருந்தாய் நீ. அன்றையதினம் கோவிலில் எனது விரல்களால் குங்குமமிட்டுக் கொண்டாய். உனக்கு கண்களின் ஓரத்தில் துளிர்த்திருந்தது அப்போது.

எனக்கு எந்தத் தவிப்பின் போதும் தேவையாயிருக்கிறாய் நீ. என் பயத்தின், தவிப்பின், அழுகையின் பெரும் அதிர்வுகளை உன் விரல்களுக்குத்தான் கடத்திவிட்டிருந்தேன். உன் கைகள் மட்டுமே எந்தன் இளைப்பாறுதலாக இருந்தது அத்தருணங்களில். அந்தக் கணங்களிலெல்லாம் உன் கண்களில் நிறைந்திருக்கும் தாய்மை என்னை அச்சுறுத்தும். நீ இல்லா சமயங்களில் நினைத்து நினைத்து அழச்செய்யும். முதல்முறையாக அன்று அந்த மருத்குவமனையின் படுக்கையிலிருந்துதான் அதைச்சொன்னேன். நான் உனக்கானவனல்ல ஸாரா. கேட்டும் கேளாதவளாய் ஃப்ளாஸ்க்கிலிருந்து தேநீரை நிரப்பிக்கொண்டிருந்தாய். மீண்டுமொருமுறை உன் பெயரை உச்சரித்தபோதே என் நெற்றியில் இதழ் பதித்து கழுத்து வரையிலும் போர்வையைப் போர்த்தி விட்டிருந்தாய். உன் பெயரைச் சொல்லியவாறே உறங்கிப்போனேன். நீதான் எத்துணை இதமானவள்.

நாளைக்கு என்ன நாள் தெரியுமா? என்றுதான் உன் பிறந்தநாளை எனக்கு நினைவூட்டுகிறாய். அந்த மகிழ்ச்சியான நாள் முழுவதையும் என்னுடன்தான் கழிக்க விரும்புவாய். சாரதாஸிற்கோ சென்னை சில்க்ஸிற்கோ அழைத்துப்போய் கொட்டிக்கிடக்கும் துணிகளுள் ஒரு சுடிதாரையோ, சேலையையோ தேர்வுசெய்யச் சொல்லுவாய். நீயே அதற்கு பணம் செலுத்தியும் விடுவாய். அந்த நாட்களிலெல்லாம் எதேச்சையாய் பொருள் வாங்க வந்ததாய் காட்டிக்கொள்வாய். என் செல்ல அம்மு, உனக்கு சற்றும் பொருந்திப்போகாது அந்த நடிப்பு. அந்த கொலுசைத் தவிர, வேறு எப்போதும் எந்த ஒரு நல்ல நாளிலும் உனக்கு பரிசளித்தவன் அல்லன் யான்.

உனக்கு மட்டும் எப்படி என்னிடம் சொல்ல அத்துணை விஷயங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. சாப்டியா என நான் கேட்பது கூட கடமைக்காகத்தான். உன்னிடம் பேச எதுவுமே இருப்பதில்லை எனக்கு. பலநேரங்களில் தொடர்ந்த உன் பேச்சு என்னை சலிப்புறச் செய்யும். சார்ஜ் தீர்ந்துடுச்சு என்று அலைபேசியை அணைத்து வைத்த போதெல்லாம் உன்னிடம் பொய்தான் சொல்லியிருந்தேன். அலைபேசியை திரும்ப உயிர்ப்பிக்கும்போது உன் குறுஞ்செய்திதான் முதலில் வரும். உன் உலகத்தையே அணைத்திருப்பாய் நீ அந்த இடைவெளிகளில். வெறுமையான பொழுதுகளில் கூட உனக்குள் என்னை நிரப்பிக்கொள்வாய் நீ. மூச்சுத்திணறும் எனக்கு.

மீண்டும் சொல்கிறேன் ஸாரா. நான் உனக்கு சற்றும் பொருத்தமில்லாதவன். எப்போதும் நீ ஜெயித்துக் கொண்டிருக்கிறாய். உன் அன்பு தொல்லையாக இருக்கிறதென்று பலமுறை உன்னை திட்டி தொடர்பைத் துண்டித்திருக்கிறேன். அத்தனை முறையும் 'நன்றாகத் தூங்கு' என்றுதான் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாய். ஒருமுறையேனும் கோபித்துக் கொண்டு என்னோடு பேசாமல் இருந்திருக்கலாம். எப்போதும் நீயே ஜெயித்துக் கொண்டிருக்கிறாய் ஸாரா. குற்றவுணர்ச்சி என்னைக் கொல்கிறது ஸாரா. ஸாரா.. ஸாரா.. ஸாரா..   நான் உனக்கு வேண்டாம் ஸாராஆஆஆ என்று உரக்கக் கதறிடத் தோன்றுகிறதெனக்கு. முடிவு செய்துவிட்டேன் ஸாரா. உன்னுடன் நான் இருக்கும் வரையிலும் நீதான் ஜெயித்துக் கொண்டிருப்பாய். நான் போகிறேன் ஸாரா. உன்னை விட்டு, நீ தேடி வரமுடியாத ஓரிடத்திற்கு. நீயில்லாத ஓரிடத்தில்தான் என் தோல்விகளை நான் உணர முடியும் ஸாரா. என் தோல்விகளில்தான், என் வேதனையில்தான் உன்னை முழுதாக உள்வாங்க முடியும் ஸாரா. என் பயத்தில்தான் உன் பெயரை எத்தனை அதிகமாய் உச்சரிக்கின்றேன் ஸாரா. நீ வேண்டும் ஸாரா எனக்கு. முன்னெப்போதும் இல்லா அளவிலா அன்போடு திரும்பவர நிச்சயித்திருக்கிறேன் ஸாரா. பிழைத்துக் கிடந்தால் நிச்சயம் வருவேன் ஸாரா. அதுவரையிலும் காத்திருப்பாயென்று எண்ணி என் பயணத்தைத் துவங்குகிறேன், நீ தந்த அந்த ஒற்றை முத்தத்தோடு மட்டும்.

விஷ்வா.

9 comments:

Nat Sriram said...

நல்லாருக்கு..Can relate to it too :)

ILA Raja said...

நல்லாயிருக்கு. நிறைய விசயங்க ஒத்துப்போகுது :)

// ஸாரா.. ஸாரா.. ஸாரா..//

கோபால்ல்ல். கோபால்ல்ல். ஞாபகம் வருவதைத் தடுக்க முடியவில்லை

Dhivya S said...

அருமை. வாழ்த்துகள் :)

இந்திரா said...

மீண்டுமொருமுறை வாசிக்கத்தூண்டிய பதிவு.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

மிகவும் அருமை.. பல முறை வாசித்ததேன். வாழ்த்துக்கள்..

Sasikala Jagannathan said...

nice... it make me to feel ....

Nasrudheen Shah said...

அழகு

Anonymous said...

Reading this post for the 10th time.. Awesome one.. வாழ்த்துக்கள் :))
Narumugai :))

ARUN PRASATH said...

azhgana kaathalin pirathipalipu....
yezhthukalagiya yethartha tharunangal..