யான்

டிஸ்க்ளைமர்: வயது வந்தோர்க்கு மட்டும். அதிகம் கெட்டவார்த்தைகளை கதையில் உபயோகித்திருக்கிறேன். விருப்பமில்லாதவர்கள் தவிர்த்துவிடவும்.

 

அல்லாஹூ அக்பரல்லா…..”
டிங்.. டிங்.. டிங்.. டிங்.. டிங்..
”பிதாசுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே…. ஆமென்”

அன்றாடங்காய்ச்சிகளுக்கான அலாரம் அடிக்க உறங்கும் மிருகம் விழித்திடத் தயாராகியிருந்தது. வாகன உறுமல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. மூன்றாவது மாடிக்கும் மேலாக ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த ஒரு அறையில் வெறும் கைலி மட்டும் அணிந்து தூங்கியும் புழுக்கத்தாலும் மேற்சொன்ன சத்தங்களாலும் ஐந்து மணிக்கே விழிப்பாகிவிடும் இந்தப் பெரு நகரம் அதன் புழுக்கத்தை, வெப்பத்தை உரிமையுடன் பகிர்ந்துகொள்ளும் பெருமை மிகு பேச்சிலர் ஜாதியர் நாங்கள்.

அரை லிட்டர் கொக்கக்கோலா பாட்டிலை சரிபாதியாக வெட்டி உண்டாக்கிய ஆஷ்ட்ரேயினுள் தேடி இரண்டு மூன்று பஃப்கள் தேறுமாறு ஒன்றைப் பொறுக்கியெடுத்தவாறே வெளியே வந்தேன். சேட்டன் கடை திறந்துவிட்டார். கரீம் பாய், சுக்கான், சில்ற மூவரும் தினசரிகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். தமிழ்சினிமாவின் ஆரம்பகாட்சிகளில் ஒன்றினை நினைவுறுத்தியது அது. மேலுமொரு துண்டு சிக்குமா என்று துழாவி காறியுமிழ்ந்து விட்டு உள்ளே வந்தேன்.

“டேய்.. “ எந்த ஒரு அனக்கமும் இல்லை. “டேய்.. நரி.. ரஞ்சித்தண்ணன் வரச்சொன்னாருல்ல.. அது இன்னிக்குத்தான். எந்திரி கெளம்பு”. ம்ஹூம். நரி எழுந்திரிப்பானில்லை. தலையணையை இரண்டு கால்களுக்கு நடுவில் சொருவியிருந்தான். எட்டி ஒரு உதை உதைத்துத்தான் எழுப்பவேண்டியதாயிற்று. “டேய்.. அண்ணந்தான் சொல்லி விட்டார்ல. இன்னிக்கு ஷூட்டிங் இருக்கு. வந்து எதுனா எல்ப் பண்ணுங்கடா. அப்பிடி கிப்பிடி வந்தாத்தான் நாலு பேர பாக்க முடியும்னுட்டு”. ஆஷ்ட்ரேயைத் தேடியவன் கோபத்தில் விட்டெறிந்துவிட்டு மறுபேச்சு பேசாமல் கிளம்பினான். “டேய் நாம்பாட்டுக்கு பேசிகிட்டிருக்கேன். எங்கடா கெளம்பிட்ட”. தலையணைக்குப் பின்னால் கிடந்த ஜட்டியை எடுத்து மாட்டிக்கொண்டே “அதான் இருக்குற எல்லாத்தையும் ஊ**ட்டல்ல. தா**. காலைல தம் போடலேன்னா எனக்கு பீ கூட வராதுன்னு தெரியும்ல்லடா கூ*. எச்ச சிகரெட்ட கூட மிச்சமில்லாம ஊ** வெச்சிருக்கான் பு**மவன்” செல்ஃபில் கிடந்த சில்லறைகளைப் பொறுக்கிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான் நரி.

எங்கள் அறை சாலிகிராமத்தின் உட்புறத் தெருக்களில் சாக்கடையை ஒட்டிய ஒரு வீட்டின் மாடி. ’காதல்’ படத்தில் பார்த்திருப்பீர்களே அதேபோலொரு புறாக்கூண்டு. வேறு வேலையற்று, களவாடி, சில சமயங்களில் லட்சியங்களோடும் வந்து சேர்ந்த ஒரு கூட்டம். நீங்கள் ஊகிக்கும் அதே வேலைதான். வேலையாம்.. அஹாஹா. கேட்டால் எதாலோ சிரிப்பார்கள். Form is temporary, Room is permanent. வந்து தங்கிப்போனவர்கள் பலர். இருந்தும் வருடங்களாக அறைக்கான முகவரியில் மாற்றமில்லை. ஊதாரிகள், தண்டச்சோறுங்க.. இன்னும் தெளிவாக, ஊரறிந்த தே**ப்பசங்க ரூம்.

“*த்தா ஒரு வார்த்த சொல்லிடக்கூடாதே.. *ம்மாலே சூ**க்கு மேல கோவம் வந்துரும். இவ்வளவு ரோஷப்** இருக்குறவன் எங்காச்சும் போய்த்தொலைக்க வேண்டியதுதான சனியன். நமக்குன்னு வந்து வாய்க்குது பாரு” வழக்கமான வார்த்தைகள் தான். வந்தவன் நேரே அறைக்குள் சென்று ஜட்டியையும் சட்டையையும் கழட்டி வீசிவிட்டு கைலியோடு வெளியே வந்தான். ”கண்டா*** முண்ட. தெனோம் கனவுல வந்து மூடேத்துறா. நான் எந்திரிக்கிறதுக்கு முந்தி என்னுத எளுப்பி உட்டுர்றா. தே**யா முண்ட” ராணியைப்பற்றிப் பேசிக்கொண்டே கைலியை இருக்கமாக தொடையிடுக்கில் சொருகி அமர்ந்தான்.

நெற்றியில் சுரீரென அடிக்கத் தொடங்கியிருந்தது வெயில். கோபத்தின் அதிகம் தடவை காறி உமிழ்ந்து கொண்டிருந்தவன் திடீரென பார்த்து திரும்பி மீண்டும் பார்த்தான். என்னருகில் இருந்தது ஒரு அலைபேசி. “டேய்.. என்னாடா திருட ஆரம்பிச்சுட்டியா? எவண்ட்ட இருந்து போட்ட?” கண்களில் ஆசைச்சுடர் மிளிர அருகில் வந்தான். “அட.. லூசுப்*** பத்து பதினஞ்சு தேறும்போல இருக்கே. வா சேகர்ட்ட சொன்னா வித்துறலாம்”. “வேண்டாம்டா. சார்ஜ் இல்லாம ஆப் ஆயிருக்கு. ரஞ்சித் அண்ணன்கிட்ட இதே மாதிரி போன்தான் இருந்துச்சு. சார்ஜ் போட்டு ஆன் பண்ணா ஃபோன தொலைச்சவன் போன் பண்ணுவான். குடுத்துடலாம்டா”. எங்கே கோபத்தில் விசிறியடித்து விடுவானோ என்று அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். ரெண்டடி தள்ளி நகர்ந்தவன் உரக்கச்சிரித்தான்.

“பார்றா.. நேர்மையா?.. லூசுக்கூ* ரெண்டுமாசம் வாடகை தரல. திங்குற சோத்துக்கு காசுமில்ல. இதுல நேர்மபு** ஒன்னுதான் கொறச்சல். இந்த மாசமும் வாடக தரலன்னா நடுரோட்டுல ஊ**ட்டு நிக்க வேண்டியது தான். தா**” உள்ளே சென்றவன் உடைந்து சிதறிக்கிடந்த அலைபேசியின் பாகங்களை ஒன்று சேர்த்தாற்போல் பிடித்துக் கொண்டே வந்தான். எப்படியும் சேகருக்குத்தான் கூப்பிடுவான். சேகர், எங்களூரில் எங்களுடன் படித்தவன்தான். சேகரின் அப்பா போஸ்ட்மேனாக இருந்ததால் கவுன்சிலர், எம்மெல்லே என்று எல்லோருடைய கையைக் காலைப் பிடித்து பிரசிடன்சி கல்லூரியில் மகனுக்கொரு சீட் வாங்கி படிக்க வைத்துவிட்டார். பீடைகள் ஒழிந்தாற்போல எங்களைப் பிரிந்த நேரமோ என்னவோ படித்து முடித்து அவங்கப்பன் கந்தசாமியை விட அதிக சம்பளத்தில் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். சிவப்பு பட்டனை கூடுமானவரையிலும் அழுத்திப் பிடித்துவிட்டு வசைமாரி பொழிந்து ஒரு எரிச்சலுடனேதான் சேகரை அழைத்தான்.

“டேய்.. நரி பேசறேண்டா. ஒரு போ….”
”இல்லடா நரி.. இந்த மாசம் கொஞ்சம் டைட்டு. ஈஎம்மை கட்டணும் கிரடிட் கார்டு சாரி மச்சான்”
”தே** பயலே.. உன்ட்ட பிச்சை கேக்கவாடா போன் பண்ணேன். போன் ஒண்ணு சிக்கிருக்குதுனு கூப்ட்டா.. *ம்மாலே. உன் காசு மசுரொன்னும் வேண்டாம்டா கூ*.” பாரபட்சமில்லாமல் அவனையும் வைது வைத்தான். சேகர் அப்படிப்பட்டவன் அல்லன் தான். முன்பெல்லாம் கேட்காமலேயே நிறைய செய்திருக்கிறான். எங்கள் அறையில் இருக்கும் பல சட்டை பேண்ட்டுகள் அவனுடையது தான். இப்போது தான் கொஞ்சம் மாறிப்போய்விட்டானோ என்று தோன்றுகிற மாதிரி நடந்துகொள்கிறான்.

”ஆ.. ஆமா.. அந்தத் தா** மவன் எங்கிருந்தோ திருடிட்டு வந்திருக்கான் போல. ஏதோ ஓ* ஓ* ம்பியே அந்த வெப்சைட்டு, அதுல வித்துக்குடுறா” தெரிந்தே தான் செய்கிறான். என்ன சொன்னாலும் நிச்சயம் அவன் கேட்கப்போவதில்லை. “டேய் நரி. கொஞ்சம் யோசிடா.. இதைத்தொலைச்சவனும் நம்மள மாதிரி பாவமா இருந்தா?” இருந்தும், எதையாவது சொல்லி அவன் மனதை மாற்றிவிடவேண்டும் என்றொரு நப்பாசை. “டீக்குடிக்க காசிருக்கா? இல்லைல்ல? நம்மள மாதிரி எவனுக்கும் இவ்வளவு காசுல போனு தேவையில்லடா” எப்படியாவது இவனை சமாதானப்படுத்திவிடவேண்டும் என்பதான தொணியில்தான் பேசினான்.

அன்று இருவருமே வேலைக்குப் போகவில்லை. ஷுட்டிங் கேன்சலாகி விட்டதென்று ரஞ்சித்தண்ணன் சொல்லி அனுப்பியிருந்தார். சுத்தமாக காசு இல்லாத நிலையிலும், ஷுட்டிங் கேன்சலாகியதாலும் இன்றைய சோற்றுக்கு வக்கற்றுத்தான் அமர்ந்திருந்தோம். இந்நிலை அந்த போனை எப்படியாவது விற்று விடவேண்டும் என்பதான அவன் குறிக்கோளை சாணை தீட்டியது. சேகருக்கு அடிக்கடி மிஸ்ட் கால் அடித்தும் அவன் திரும்ப கூப்பிடாதது நரியை இன்னமும் கோபமூட்டியது. எப்படியாவது அவனுக்குப் புரியவைத்து அவன் முடிவை மாற்றிவிடலாமென்று அருகில் போனாலே எரிந்து விழுந்தான். மதியம் எதேச்சையாய் அறைப்பக்கம் வந்த சேட்டு வாங்கிவந்த அரை பாட்டில் சாராயத்திலும் ஆந்திரா மீல்சிலும் அன்றைய நாளிறுதியை எட்டியாயிற்று.

“டேய். இன்னிக்கு ஃபுல்லா மீட்டிங்டா. சாவடிச்சுட்டாண்டா அந்த பு**மவன்” அந்திக்கருக்கலிலும் நரியின் முகம் பிரகாசித்ததைக் கண்டேன். சேகர் அழைத்திருந்தான். அவன் பேசிக்கொண்டிருக்க இவனும் உம் கொட்டிக்கொண்டிருந்தான். அவ்வப்போது பதில்களும்.
“…..”
”இல்லடா காலைல எங்கயோ போயிருக்கான். ரோட்டுல கெடந்துதேன்னு எடுத்துட்டு வந்திருக்கான் போல”
“…..”
“ஆமா. சாம்சங் தான். ஆன் பண்ணிப் பாக்கலடா. ஆன் பண்ணுனா மெசேஜ் போயி கண்டுபுடிச்சிருவாங்கன்னு சக்கர சொன்னான். சேட்டன் கடைல பேப்பர்ல பாத்தப்ப இதே மாதிரி போனு 26000 போட்டிருந்துச்சு. நம்பர் பாக்கல. கேலக்ஸின்னு எழுதிருந்துச்சு விளம்பரத்துல”
“….”
“ம்ம். சரி. பாத்துட்டு கூப்புடு. நானும் அதைய கழட்டி வெச்சுட்டு ஆன் பண்ணிப்பாக்குறேன். வெக்குறேன்”

”டேய்.. இங்க வா” போனேன். “எப்படியும் பன்னெண்டாயிரத்துல இருந்து பாஞ்சாயிரம் வரைக்கும் கெடைக்குமாம். வித்துட்டா வாடகைய குடுத்துறலாம். கடைக்கும் அமவுண்ட் செட்டில் பண்ணிறலாம். அப்பறம் இன்னொரு விசயம். எனக்கொரு 1200 எடுத்துக்குறேன். அந்தத்தே** முண்டய எப்படியாவது போட்றனும் இன்னிக்கு. ஒம்*லக்க காசு இல்லாத நாயின்னுன்னுட்டா அன்னிக்கு. இன்னிக்குப்போயி கூ**க்கிழிக்கிறேன் பாரு” கண்களை மூடி பெருமூச்செறிந்தான். அவன் விரும்பிப்பார்க்கும் புதுப்பேட்டையின் அந்த ஐந்து வினாடிகள் இமைத்திரையில் வந்து போயிருக்கும். “டேய் அதெல்லாம் வேண்டாம்டா. நாம இப்ப இருக்க நெலமைல அதெல்லாம் அவசியமா சொல்லு. அதும் கேவலம் பொம்பள சுகத்துக்காக.. தேவையில்லாத செலவுடா. கொஞ்சமாவது எடுத்து வெப்போம் டா. நாளப்பின்ன யூஸாகும்”. ஒருமுறை உற்றுப்பார்த்துவிட்டு “தா** போன விக்க விடமாட்டேன்ன? இப்பென்னாச்சு. கு** காயுதாக்கும்? பசின்னு வந்தா எல்லாம் செஞ்சுதாண்டா ஆகணும்”. நானறியாமலேயே அதற்கு சம்மதித்திருந்தேன். ”அப்பறம்.. என்ன சொன்ன என்ன சொன்ன.. கேவலம் பொம்பள சுகமா? ஒருத்தி அம்மணமா வந்து நின்னா கூட அய்யோ வேண்டாங்க்கான்னு சு**ய கசக்கிட்டு கண்ணமூடிக்கிற பொ** நாயி. உனக்கெங்கடா தெரியப்போகுது அதெல்லாம்”. அழுகை முட்டிக்கொண்டு நின்றது எனக்கு.

சிம்கார்டை எடுத்து உடைத்து எறிந்தபின் அந்த போனை சார்ஜ் போட்டு அதன் மாடலைப் பார்த்து சேகரிடம் சொன்னபின் அவன் அந்த வெப்சைட்டில் விளம்பரம் போட்டுவிட்டதாகவும் தொடர்புக்கு என் நம்பரைக் கொடுத்திருப்பதாகவும் கூறினான். அடுத்த நாள் விடியும் போதே வந்த அழைப்பில் ஒருவன் ஆங்கிலத்தில் பேச பதறியடித்து போனை அணைத்து வைத்திருந்தேன். பதட்டம் அதிகமாகிவிட்டிருந்தது எனக்கு. “நரி.. ஒருவேள வாங்குறவன் கண்டுபுடிச்சிட்டான்னா?” இதயத்துடிப்பு அதிகரித்திருந்தது எனக்கு. டைரக்டரைப்பற்றி கேவலமாக உடன் இருக்கும் லைட்மேன்களிடமும், கேண்டீன் சிறுவர்களிடமும் கூறும்போது அவர் அதை கேட்டிருப்பாரெனில் வருமே ஒரு உணர்வு. மூத்திரம் பெய்ய வேண்டும் போலிருந்தது எனக்கு.

“இப்ப என்னடா உன் பிரச்சின? என்னாத்த கண்டு பிடிப்பான் அப்படி?”
“இல்லடா இது நம்ம போன் இல்லன்னு கண்டு பிடிச்சுட்டான்னா.. ஒருவேள திருட்டு போன்னு நம்மள மாட்டி விட்டுட்டா?”
“மூணு வேள சோறு ஒழுங்கா கெடைக்கும். பாஞ்சு நாள் உள்ள இருந்துட்டு வந்தா ஒண்ணும் குடிமுழுகீறாது ராஜபரம்பரைக்கு” அவன் சொன்ன பதில் மேலும் திகிலூட்டியது. ஒருவேளை கம்பிகளுக்குப்பின் உட்கார நேருமோ?
“இப்ப என்னாத்துக்குடா பயிந்து சாகுற? அப்படி எதுவும் நடக்காது. அப்படியே நடந்தாலும் என் பேர சொல்லிரு. ஆமா. நாந்தான் பண்ணேன். கீழ கெடந்து எடுத்தேன். நாலு மாச வாடகை தரல சோத்துக்கே வக்கில்ல. அதான் வித்தேன்னு சொல்லி நான் உள்ள போறேன். போதுமா? தா** நீயெல்லாம் ஆம்பளைன்னு வெளிய சொல்லிக்காத. பொ**க்கூ*” அவன் திட்டியதெல்லாம் பெரிதில்லை. இருந்தாலும் அவன் இப்படி சொன்னது கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது.

மதியம் போல வெளியே கிளம்பியவன் என் நம்பரை அவனது உடைந்த செல்போனில் போட்டு எடுத்துப்போனான். “எவனாச்சும் கூப்பிடுவான். நீ சொதப்பிடுவ. நானே பேசிக்குறேன்”. இப்போது என் மனதிற்குள் வேறொரு பயம் குடிகொண்டிருந்தது. ஒருவேளை நானறியாமல் அந்த போனை அவன் விற்றுவிட்டால்? அந்த சாம்சங் போனை ரூமிலேயே வைத்துவிட்டுப் போகச்சொன்னால் அதற்கும் ஒரு பாடம் கெட்டவார்த்தை பேசுவான். எதற்கு வம்பு. போனால் போகிறது. அறை வாடகையாவது மிச்சமானால் சந்தோஷம் என்று விட்டுவிட்டேன். அவன் வெளியில் சென்று விட அன்று முழுவதும் எதுவோ மனதை அழுத்தும் ஒரு குற்ற உணர்வில் புரண்டு கொண்டிருந்தேன்.

இருட்டியபின்தான் வந்தான் நரி. வரும்போதே ஒரு முட்டை பரோட்டா பார்சலோடு வந்தவன் பேண்ட் பாக்கெட்டைத்தான் கண்கள் துழாவின. இன்னும் விற்கவில்லை. ஆசுவாசம். “டேய். அஷோக் நகர்ல இருந்து ஒருத்தன் கூப்டான். சங்கீதா ஹோட்டல்கிட்ட நாளைக்கு வரச்சொன்னான். பதனொரு மணிக்கு. இருக்குறதுலயே நல்ல சட்டையா தொவச்சு போட்ரு. நாளைக்கு போகணும்” என்றவன் பார்சலைக் கையில் திணித்துவிட்டு உள்ளே சென்றான். “டேய். ஏதும் பிரச்சினை ஆயிராதே?” லுங்கியை வாயில் கடித்திருந்தவன் எதையோ சொல்ல எத்தனித்து நிறுத்தி “அய்யே.. எப்பாப்பாரு ஓ* ஓ* ன்னு கிட்டு. அதான் சொன்னேன்ல அப்படி எதாச்சும் வந்தா நான் பாத்துக்குறேன்னு. லைஃப்னா ஒருத்தனையாவது நம்பணும்டா. அட்லீஸ்ட் உன்னை நீயேவாச்சும் நம்புடா கேனப்**”.

அடுத்தநாள் காலை பள்ளியில் வாங்கு சொல்வதற்கு முன்னமே விடிந்திருந்தது எனக்கு. காக்கிக்கனவுகள். புரண்டு புரண்டு படுத்ததில் பகல் வந்து விட்டது. கிளம்பியாகிவிட்டது. ”சேகர்ட்ட பைக் வாங்கிக்கலாமாடா” என்றதற்கு “வேணாம் எதாச்சும் பிரச்சினைன்னா தப்பாயிரும். அவனுக்கும் பிரச்சினை. பஸ்ல போயிரலாம்”. துவைத்துப்போட்ட டீஷர்ட்டையும் ஜீன்ஸையும் மாட்டிக்கொண்டேன். அறையைப் பூட்டிக் கிளம்பும்போதே ஒரு வித பதட்டம் பரவலானது. அதற்குத் தகுந்தாற்போல அவனும் வார்த்தைகளைக் கொட்டினான். “டேய். இது உன் போன். சரியா? நீதான் பேசணும். நான் எதாச்சும் பேசி அவன் எக்குத்தப்பா பேசிட்டானா அப்புறம் கைகலப்பாயிரும். வேணாம். நான் சப்போர்ட்டுக்கு இருக்கேன்”. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் தொடையிடுக்கில் இழுத்துப் பிடித்தது.

”ஹல்லோ.. சார்.. போன் கேட்டிருந்தீங்களே. சங்கீதா ஹோட்டல் கிட்ட வந்துட்டோம் சார்” ”…”
“ம்ம்.. சரி சார்” நரிதான் பேசினான். ஹோட்டலிலிருந்து வரும் மணம் வயிற்றிலடித்தது. ஐந்து நிமிடங்கள் பத்து நிமிடங்களாகியது. இன்னும் அவன் வந்த பாடில்லை. குருதிப்புனலின் வசனங்கள் நினைவுக்கு வந்தது. பயப்படாதவாறு நடித்துக் கொண்டிருந்தேன். பத்திருபது நிமிடங்களுக்குப் பிறகு வேறொரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அவன் என்னைப் பேசச்சொன்னான்.

“ஹலோ.. ஞாந்தான் பேசுறேன். நீங்க அப்படியே ஆ ஹோட்டலினு ஓப்போசிட் சைட்ல வர்ற ரோட்ல கூடி வாங்க அடுத்த சிக்னல்ல வெயிட் பண்றேன்” அவன் மலையாளத்தான் என்பது மட்டும் தெளிவாகியது எனக்கு. அடுத்த சிக்னலை அடைந்த போது அங்கு யாரும் இல்லை. நரி கொஞ்சம் கொஞ்சமாக டென்ஷனாக ஆரம்பித்திருந்தான். சிக்னல் தாண்டி 100 மீட்டர் தொலைவில் ஆல்டர் செய்யப்பட்ட ஒரு ஆர்எக்ஸ்100 ல் மஞ்சள் டீ ஷர்ட் அணிந்த ஒருவன் நின்றுகொண்டிருந்தான். எங்களையே பார்த்தவாறு அலைபேசி எடுத்து காதில் வைத்தான். என் அலைபேசி அடித்தது. “போஸ்.. இங்க பின்னாடி பாருங்க. ஹ்ம்ம் ஞான்தான். இங்க வாங்க” தமிழைக் கொலையாகக் கொன்று கொண்டிருந்தான்.

அவன் அருகில் செல்லச்செல்ல பதட்டம் கூடியவாறு இருந்தது. நரி எப்போதுமில்லாதவாறு பதட்டமின்றி ரொம்பச் சாதாரணமாகத் தெரிந்தான். அவன் வண்டியை ரேஸ் செய்தவாறே இருந்தான். ஒருவேளை போனைக் ”காட்டுங்க பாக்கலாம்” என்று சொல்லி வாங்கி பைக்கை ஓட்டிச் சென்றுவிட்டால்? குதர்க்கமாகத்தான் யோசனைகள் சென்றுகொண்டிருந்தது.

“ஹாய்.. ஞான் அபு” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். பதிலுக்கு நரியை பாபு என்றும் என்னை வசீ என்றும் அறிமுகப்படுத்தினேன். “பெரிய ராஜ தந்திரம்டா” என்பது போல நகைத்துவைத்தான் நரி. “போஸ்.. போன் வாங்குற ஆள் கடைல இரிக்கு. நாம பைக்ல போயிடலாம்” என்றான். நரியைப் பார்த்தேன். ம்ம்ம் என்பதான ஒலியுடன் வண்டியில் ஏற சைகை செய்தான். எங்கே செல்கிறோம் நாங்கள்? எங்காவது தெரியாத ஓரிடத்தில் வைத்து எங்களை அடித்து விட்டு போனை பிடுங்கிக்கொண்டால் என்ன செய்வது. ஊரான் பொருளுக்கு உடைமையுணர்வு வந்து சேர்ந்தது. அதற்குத் தகுந்தாற்போல சென்னையின் மத்தியப் பகுதியில் இருக்கும் அஷோக் நகரில் ஆள் மட்டுமே நுழையத் தக்க குறுகிய சந்து பொந்துகளிலெல்லாம் வண்டியை ஓட்டிச் சென்று ஒரு கடையில் நிறுத்தினான். இது இந்த ஏரியா என்று எங்களால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சுற்றி வந்தோம் அந்த இடத்திற்கு.

“போஸ் உள்ள வாங்க..” அழைத்துவிட்டு அவன் பாட்டுக்கு உள்ளே சென்றான். உள்ளே கேஷ் கவுண்ட்டர் போலிருந்த ஒரு இடத்தில் இருபது இருபத்தைந்து வயது மிக்க ஒருவன் அமர்ந்திருந்தான். “தா.. ஆளு வந்நு” என்றான் அவனிடம். சில மலையாள ரீமேக்குகளில் நானும் நரியும் வேலை செய்திருந்ததால் மலையாளம் காது வந்த கலையாகியிருந்தது. ”டா.. கொறச்சு வெள்ளம் கொடுக்க்” என்றொருவனை ஏவினான். “ம்ம் பறயு போஸ். இது வாங்கிட்டு எத்தன நாளாச்சு?”. “ஆறு மாசம்” “ஒரு வருஷம்” இரு வேறான பதில்கள். சொதப்பிவிட்டோம். எனக்கு ஓரிரு துளி சிறுநீர் உள்ளாடையை நனைத்திருந்தது. நரி சுதாரித்துக் கொண்டான். “டேய். நீ மான் கராத்தேவ வெச்சு சொல்ற. இந்த போன் வாங்குனது வருத்தப்படாத வாலிபர் சங்கம் வந்தப்ப. ஒரு வருஷத்துக்கிட்ட ஆச்சு”. இருவரையும் மாறி மாறிப் பார்த்தவன் போனை வாங்கிக்கொண்டு அதில் என்னென்னவோ ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான்.

”அது ஒண்ணுமில்ல. ஃப்ரண்ட் ஒருத்தன் சிங்கப்பூர்ல இருந்து வர்றான். புது ஃபோன் வாங்கிட்டு வரேன்னான். அதான் இதை விக்கிறோம்” என்று சொன்ன போது அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். நரி ஒரு நிமிஷம் என்று வெளியே அழைத்துப்போய் “வெளக்கம் குடுக்குறானாம். கேனப்**. கொஞ்ச நேரம் வாயயும் சூ**யும் மூடிகிட்டு இருடா தா**” என்று வைதான். பயம் இன்னும் அதிகரித்திருக்க முடிந்தவரை கேஷுவலாக உள்ளே வருவது போல் வந்தோம்.

”இந்தியன் ஃபோன் தானே?” என்று கேட்டதற்கு இருவருமே தலையசைத்து வைத்தோம். பின் கவரைக் கழட்டிவிட்டு என்னென்னவோ தேடி கம்ப்யூட்டரில் அடித்தவன் “டா.. தாய்வாந்த்த பீஸா இது” என்றான். இருவரும் பரஸ்பரம் புன்னகைத்துக்கொண்டனர். நாங்களிருவருமே அவன் சொன்னது புரியாதபோல் சுவற்றில் இருந்த படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

“ஞான் ஒந்நு ஷ்ரமிக்கட்டே டா”
“ம்ம். ஒந்நு ஞெட்டி நோக்கு கிட்டயது கிட்டட்டே”
“வரும் வரும்ங்றாங்க.. வர்றாப்ல தெரியலையே..” ஏதோ ஒரு படத்தின் போஸ்டரை பேப்பரில் பார்த்து நரி இந்த வார்த்தைகளை உதிர்த்தான். அவர்கள் பேசுவது எங்களுக்குப் புரிவதில்லை எனக் காட்டிக்கொள்வதில் முனைப்பாயிருந்தான். அப்போது மேலும் இரு குண்டர்கள் எங்கள் பின்னால் வந்து நின்றனர்.

”இது.. இது வந்நு இந்தியன் பீஸ் அல்லாட்டோ. இதேதோ த்தாய்வான்த்த பீஸா. ம்ம் பறஞ்சோளு.. எத்ரயெந்நால் தெரும்? எவிடெயா வாங்ஙியது?”
“என்ன.. அன்னிக்கே போன்ல கேட்டேன்ல வெலை ஓக்கேவான்னு. அப்ப சரின்னுட்டு இப்ப கொறைக்க சொன்னா எப்படி?”
“அது பறஞ்சா எப்படி.. புதியதே துபயி மார்க்கெட்ல பயினாயிரம் தான். பழைசுக்கு பந்த்ரண்டாயிரம் கூடுதலா.. பத்து எங்கில் எடுக்காம்”
“பூர்வீகால கேட்டோம் அங்கயே பத்துக்கு எடுத்துக்குறோம்ன்னாங்க.”
“ஷெரி.. ஃபைனல் ரெய்ட் பறயு. பின்னே சம்சாரிக்காம்”
“பன்னெண்டுக்கு கொறையாது. ஒரு ஸ்க்ராட்ச் கூட இல்ல”
“ஷெரி. ரெண்டாள்க்கும் வேண்டா.. பதினொந்நுன்ன முடிக்காம். ஓகேயல்லே?”
நரியும் அவனும் பேசிக்கொண்டார்கள். பதினோராயிரம். தள்ளிவிட்ருவோம்டா என்பதான முடிவில் இருந்தான் நரி.  ”ம்ம். ஒந்நும் கூடிப்போயில்ல.. நல்ல கண்டிஷனா..” அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

”போஸ்.. எதும் பிரச்சினை இல்லையே மொபைல்ல” சுத்தி சுத்தி மொபைலை பார்த்தவன் சந்தேகப்புன்னகையோடு கேட்டான். அவனுக்கு அந்த ஃபோன் மிகவும் பிடித்துவிட்டது என்பது அவன் புன்னகையிலேயே தெரிந்தது.

“சார்.. ஆறேழு வருசமா இதே நம்பர்தான். ஒரெ நம்பர்தான். எப்பவேணா கூப்பிடலாம், எதாச்சும் பிரச்சினைன்னா”. நான் அவ்வளவு உறுதியோடு ஒருவனுக்கு பதில்சொன்னது இதுவே முதல்முறை. பத்து ஆயிரம் ரூபாய்த் தாள்களும் மிச்சத்திற்கு நூறு ரூபாய்த்தாள்களுமாய் ஃபோனை கைமாற்றிக் கொண்டோம். எதேச்சயாய் நம் கதையைச் சொல்ல “என்னா கதை தம்பி.. நாளைக்கு ஆபீஸ்ல வந்து பாருங்க. இந்தப்படம் நாம பண்றோம்” என்றொரு உச்ச நட்சத்திரம் வாக்குச்சொன்னது போலிருந்தது ஃபோன் கை மாறியதும்.

காண்டம் வாங்கவேண்டும், சரக்கு வாங்கவேண்டும் என்றெல்லாம் காரணம் கூறி ஆயிரத்தி ஐநூறாகப் பிடுங்கிக்கொண்டான் நரி. அன்றிரவெல்லாம் உறக்கமேயில்லை. அத்தனை ஆயிரம் ரூபாய்த்தாள்களையும் ரம்மியாடுவது போல் பிடித்துக் கொண்டு அடிக்கடி முகர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தான் நரி. அளவுக்கு மீறியிருந்ததால் “ழேய்.. ழேய்…” என்று உளறிக்கொண்டிருந்தவன் அப்படியே தூங்கியும் போனான். இனி அவன் எப்படியும் சூரியன் நெற்றியில் சுடும்வரை எழுந்திருக்க மாட்டான். ஒரு மூலையில் அமர்ந்து எதையோ வெறித்தவாறிருந்தேன். அன்றைய தினத்தின் நினைவுகள் மலப்புழுக்களாய் உடலெங்கும் ஊர்ந்து கொண்டிருக்க தோன்றிய அசூயையின் உச்சத்தில் ”ஓஓஓ” வென்று வெறிக்கக் கத்திவிட்டேன். ஒரு முறை தலை முழுகினால் தேவலை என்றிருந்தது.

மணி எப்படியும் ஒன்றைத் தாண்டியிருக்கும். அன்றைய கஸ்டமர்களையெல்லாம் முடித்துவிட்டு அசதியில் தூங்கிப்போனவளுக்கு அந்த சிறு சத்தம் கூட பேரிடியாய்க் கேட்க திடுக்கிட்டு எழுந்தாள். “ங்கொ**ல.. நேரங்காலமில்ல. சு** எந்திரிச்சா போதுமே எந்நேரமானாலும் விரிச்சுக்கெடக்க ஒருத்தி வேணும். தா*லிங்க. யாரு?” எனக்கேட்டபடியே தாழை விலக்கினாள்.

“என்னாடா இந்த நேரத்துல.. அந்தத் தே***ப்பையன் வர சொன்னானா? ஏன் தே**க்குடிக்கு மகராசன் பு** அவுரு வரமாட்டாரோ?” நைட்டியில் இறங்கியிருந்த ஜிப்பை மேலிழுத்துவிட்டு தலையை அள்ளி முடிந்தபடி வாசலில் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்துக் கேட்டாள் ராணி.


கையில் சுருட்டி வைத்திருந்த இரண்டு ஆயிரம் ரூபாய்த்தாள்களை அவள் கையில் திணித்துவிட்டு உள்ளே நுழைந்தேன்.

--

3 comments:

குழந்தபையன் said...

ஓ மை காட்.. திஸ் மட்ச் பேட் வேர்ட்ஸ்.. நெவர் எக்ஸ்பெர்டட் ப்ரம் யூ :-/

Anonymous said...

நிறைய வகையான உணர்வுகள வெளிப்படுத்துற மாதிரி கதைமாந்தர்கள் அமைச்சிருக்கீங்க! எந்த இடத்துலையும் தொய்வில்லாத கதையோட்டம். ஒரு நல்ல குறும்படம் பாத்த அனுபவம் தந்துச்சு தம்பி. அருமை! :-)

Karna sakthi said...

சிட்டி ஆப் காட் படத்துல ஒரு வில்லன் கேரக்டர் வருமே....நரி அந்தளவு போகலன்னாலும் அந்த நினைவு வந்தது.... ஆசம் ப்ரோ...என்ன சொல்றதுன்னே தெரியல பின்னிட்ட போ.... பகிரென வேறெதும் முடிவு வந்து போகும்னு இல்லாம எதார்த்தமா ஒரு சிறுகதை எப்படி இருக்குமோ அப்படி இருக்கு பைதிவே எங்க மேன் ஒரு கெட்ட வார்தை கூட இல்ல எல்லாம் ஸ்டார் போட்டு மறச்சிட்ட அப்படியே போட்டிருக்கலாம்...
நிஜமா ரியோ தெருவுல ஒரு தமிழ்படம் பாத்தா மாதிரி இருந்தது.. செமயா இருக்கு கொண்டாடனும் உன்ன வாழ்த்துக்கள் மச்சி :)))