எனதருமை ஸாரா - 2

விடியும் முன்: http://sriarjunan.blogspot.in/2014/01/blog-post.html


அந்தி:

இப்படியாக இந்த வருடத்தின் காதலர்தினமும் கடந்துவிட்டது ஸாரா. உன்னை மட்டுமே நினைவுகூறத்தக்க ஓரிடத்தில் இந்நாளைக் கழித்துவிட்டேன். இப்போதெல்லாம் நீ கூறிச்சென்றபடி எப்போதும் என்னை ஒரு வேலையில் திணித்துக்கொண்டு தனிமை என்னை ஆக்கிரமித்துவிடாதபடி காத்துக் கொண்டிருக்கிறேன். சமீபகாலமாய் தினமும் காலையில் சாப்பிட்டு விடுகிறேன். எழுவது முதல் இரவாகி உன் நினைவுகளில் வீழ்வது வரை எல்லாம் அதுவாக நடக்கிறது ஸாரா. நீயில்லா இரவுகளின் முன் அதிகாலையிலேயே தூக்கம் தெளிந்து விடுகிறது. எனினும் உன் நினைவுகளைப் புணர்ந்தபடி கண்கள் ததும்பத் ததும்ப பொய்த்தூக்கத்தில் கிடப்பேன் ஸாரா. எழுந்ததும் உன்னை நினைக்காமல் வெறுமனே உறங்கிக்கொண்டிருந்ததாக என்னை ஆற்றுப்படுத்திக் கொள்வேன். எப்போதும் உறக்கத்திலிருப்பவனைப் போலிருக்கிறேன் என்று அனைவரும் சொல்லக் கேட்கின்றேன் ஸாரா. நீயில்லா இந்த உலகு மிகவும் வெளிச்சமானதாக இருக்கிறது ஸாரா. எனக்குத் தேவை இருள், காரிருள். என் கண்ணீரை யாரும் கண்டறியவியலா இருள். இருள் உண்மையில் ஒரு போதை ஸாரா. நேரம் செல்வதே தெரிவதில்லை இருளில். ஒவ்வொரு நாளும் அலுவலகம் செல்லும் போதும் விரைவில் அந்திவர வீடு திரும்பவே என்னை அவசரப்படுத்துகிறேன் ஸாரா. என் அறை தவிர வேறெங்கும் என்னால் சுவாசிக்க முடியவில்லை. எங்கும் மகிழ்ச்சி சிதறிக்கிடக்கிறது ஸாரா. அவை எதையும் மிதித்திடாமல் நடந்திட பழகிக்கொண்டேன் இப்போதெல்லாம். வீடு திரும்பியதும் அன்றைக்கானதாய் ஒரு அழுகையேனும் மீதமிருக்கும். அனைத்துக் கதவுகளையும் இறுக அணைத்து இருக்கும் அனைத்துப் போர்வைகளாலும் என்னை மூடி எனக்கான ஓர் இருளைக் கொணர்ந்து அங்கு உன்னைக் காண்பேன் ஸாரா. அந்த இருளில் தான் என் கண்ணீரை உன் உதடுகளால் உலரச்செய்கிறாய் நீ. இரவாக ஆக இருள் நீள நீள எனதறை முழுதும் நீ மட்டும்தான் நிறைந்திருப்பாய். அப்போது எங்கிருந்தோ எவ்வழியோ உள்ளே நுழையும் ஒரு மின்மினி என்னைப் பரிகசிப்பதாய் ஒளிர்கிறது ஸாரா. கையை நீட்டி நீட்டியும், கிடைத்த பொருட்களைத் தூக்கி வீசி வீசியும் அதனைத் துரத்துகிறேன். என்னை ஒப்புக்கொடுத்து அதன் முன் மண்டியிட்டு மன்றாடியபோதும் அது போக மறுத்து என் இதயத்தை அறுக்கிறது ஸாரா. ஓஓஓ வென்று கதறி ஓலமிட்டு போர்வைகளால் என்னை மூடிக்கொண்டபிறகும் அதனுள்ளும் வந்து என்னை இம்சித்துக் கொல்கிறது ஸாரா. நீ சொன்னால் அது கேட்கும். அதனைப் போகச்சொல் ஸாரா. அதனிடம் தயவு செய்து சொல்லி வை ஸாரா. எனக்கு இருள் வேண்டுமென்று.

எங்கிருக்கிறாய் இப்போது நீ? என்னை இப்போதும் கூட நினைத்துக் கொள்கிறாயா ஸாரா? ஜீவிதாவை உனக்கு நினைவிருக்கிறதா ஸாரா? கதிரவனை உனக்கு நினைவிருக்கிறதா ஸாரா? நாஸ்தென்காவை? அமலா அக்காவை? நீ என் மடியில் கிடந்திருக்க கதிரவனையும் ஜீவிதாவையும் நாமாக உணர்ந்த அந்த நிமிடங்களை இப்போதும் நினைவு கூர்கிறேன் ஸாரா. ”என்னை ஜீவிதாவா நெனைச்சுக்க.. நீ விஷ்வா இல்ல. நீ கதிரவன்” என்று கரைந்து கரைந்து என்னை கட்டிக்கொண்டு முத்தங்களால் ஜீவிதாவின் பாவங்களைப் போக்கியதை இப்போது நினைத்தாலும் அழுகை முட்டிக்கொண்டு வருகிறது ஸாரா. நாஸ்தென்காவாகி நீ புழுவாகத் துடித்ததெல்லாம் என்னால் என்றைக்கும் மறக்கவியலாது ஸாரா. என்னைப் பிரிந்தால் நீ எப்பாடு படுவாய் என்றுணர்த்தினாயே ஸாரா. அந்த அழுகையில் நான் தந்த முத்தம் நான் உனக்களித்ததில் சிறந்த முத்தம். உன்னை சமாதானாப் படுத்த இரண்டு வாரங்களானது எனக்கு. இதுவரையிலும் உன்னை ஒரு முறைதான் கை நீட்டி அடித்திருக்கிறேன் ஸாரா. நினைவிருக்கிறதா ஸாரா? “என்னை திட்டேண்டா.. என் மேல கோவமே வராதா..” என்று பல சில்மிஷங்களிலும் முத்தங்களை மட்டுமே பரிசளித்தவன் அன்றுன்னை கோபம் தீர அடித்தேன். உன்னாலும் அந்த நாளை மறக்கமுடியாதுதான். இப்போதும் சொல்கிறேன். அன்றைக்கு நீ அமலா அக்காவைத் திட்டியது இன்னமும் எனக்கு வலிக்கிறது ஸாரா. ஏன் ஸாரா பொறாமைப் படுகிறாய். அவள் எனக்கு அக்கா. அம்மா. உனக்கும் எனக்குமான மகள். எனக்காகவேனும் அமலாவை ஏற்றுக்கொள் ஸாரா.

நீ போனதோடு எல்லாம் முடிந்து போனது ஸாரா. இப்போதெல்லாம் புத்தகத்தை கையிலேந்த முடியவில்லை ஸாரா. ஒரு கூரான கத்தியைக் கையிலேந்தியிருப்பதாய்த் தோன்றுகிறதெனக்கு. தூக்கி எறிந்துவிடுகிறேன். சில சமயங்களில் ஒரு கொடும் விஷப்பாம்பு என் கைகளில் ஊர்ந்து கொண்டிருப்பதாகவும் பிரம்மையாகிறது. உன் வார்த்தைகளுக்காக மட்டும்தான் தினமும் வாசிக்க முயல்கிறேன். புத்தகத்தைக் கையிலேந்தியிருக்கும்போது அதற்கும் எனக்கும் இடையில் நீயிப்பதாய் உணர்கிறேன். என்னை இறுக அணைத்தபடி என் பெயரை மெதுவாக என் காதுகளில் சொன்னபடி என் கன்னங்களை உன் கன்னங்களால் உரசியபடி என் காது மடல்களில் முத்தமிட்டபடி என் தோள்களில் உன் கண்ணீரைச் சிந்தியபடியிருக்கிறாய். புத்தகம் தானாக தன்னை விடுவித்துக் கொள்ள என் கைகள் உன்னை ஏந்திக் கொள்கின்றன ஸாரா.

நீயில்லாத் தனிமையில் உன்னை முழுதாக உணர்ந்துவிட்டேன் ஸாரா. மீண்டும் வா ஸாரா. ஒவ்வொரு முழிப்பும் மரணத்திற்கு சமானமாக வலிக்கிறதெனக்கு. உன் ஸ்பரிசத்தில் கண்விழிக்கும் நாளுக்காய் காத்திருக்கிறேன் ஸாரா. போதுமுன் பிரிவு.


வா!


No comments: